Published:Updated:

திருச்சி ஹேங்கவுட்: வனமெங்கும் மூலிகை வாசம், மனதிற்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும் கோரையாறு அருவி!

கோரையாறு அருவி

அந்தச் சாலையில் செல்லும்போதே அருவி விழும் ஓசை நம்மைச் சந்தோஷப்படுத்த, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மலையிலிருந்து அருவிக்குச் செல்லும், மலைப்பகுதியில் கீழ் நோக்கி இறங்கினோம்.

திருச்சி ஹேங்கவுட்: வனமெங்கும் மூலிகை வாசம், மனதிற்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும் கோரையாறு அருவி!

அந்தச் சாலையில் செல்லும்போதே அருவி விழும் ஓசை நம்மைச் சந்தோஷப்படுத்த, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மலையிலிருந்து அருவிக்குச் செல்லும், மலைப்பகுதியில் கீழ் நோக்கி இறங்கினோம்.

Published:Updated:
கோரையாறு அருவி
திருச்சியில் இருக்கும் பலரும் பச்சைமலையைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால், 'கோரையாறு அருவி'யை பற்றி பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அருவியைப் பற்றித் தெரிந்தவர்கள் ஒரே வார்த்தையில் கூறுவது, 'சொர்க்கம்' என்பதுதான்.
கோரையாறு அருவி
கோரையாறு அருவி

பெரிதாக எந்த ஆரவாரமும் இல்லாமல், மலையின் மீது சிறிய ட்ரக்கிங் பாதை, தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஓடை, அதைத்தாண்டி அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள்... அதன்மேல் ஏறி, மறுபுறம் இறங்கினால், கருங்கல்லின் மேலிருந்து 50 அடிக்கும் அதிகமான ஆழமுள்ள ஒரு குளத்தில் அழகாக விழுந்து கொண்டிருக்கும் ஒரு அருவி, அதைத் தேடி வருபவர்களைப் பரவசப்படுத்தி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோரையாறு அருவி
கோரையாறு அருவி

இதை கேள்விப்பட்ட நாம் உடனே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் தன் பசுமை கரங்களால் திருச்சி, சேலம், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களை அணைத்தபடி உள்ள பச்சைமலையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனியாகவோ, இரண்டு பேராகவே செல்வது அவ்வளவு சரியானது இல்லை எனக் கூற, நண்பர்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினோம். திருச்சியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பெரம்பலூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கோரையாறு அருவி. நாம் திருச்சியிலிருந்து, துறையூர் வழியாக மூலக்காடு சென்று, அங்கிருந்து மேலே ஏற ஆரம்பித்தோம்.

கோரையாறு அருவி
கோரையாறு அருவி

பெரிதளவில் கட்டடங்கள் இல்லாமல், சுற்றி முழுக்க முழுக்க இயற்கையில் லயித்தப்படியும், மூலிகைக் கலந்த காற்றை சுவாசித்தபடியும் நம்முடைய பயணம் தொடங்கியது. ஏற்கெனவே வெயிலின் ஆயிரம் கரங்கள் நம்மைத் தீண்டாத வண்ணம் மேகங்கள் சூரியனை மறைத்திருக்க, எந்த மாசும் இல்லாத மேகக்கூட்டங்கள் நம் முகத்தை உரசிச் சென்றது புது விதமான அனுபவத்தைக் கொடுத்தது.

அனைத்தையும் அனுபவித்துக்கொண்டே மேலே ஏற ஏற மலையின் அழகும், அதனின் அமைப்பும் நம்மை வசீகரித்துக் கொண்டே இருந்தது. ஆங்காங்கே சிறு குறு கிராமங்களில் மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் இருந்தாலும், மண் வீடு, நெல் சேமித்து வைக்கும் தானியக்குதிர், முந்திரித் தோட்டங்கள், மலை ஆடுகள், மலைவாழ் மக்களுக்கான பள்ளிக்கூடம் எனக் கண்களுக்கு விருந்தளிக்க ஆயிரம் விஷயங்கள் பச்சைமலையில் கொட்டிக் கிடக்கின்றன.

கோரையாறு அருவி
கோரையாறு அருவி

ரசித்து கொண்டே 'புத்தூர்' என்னும் கிராமத்திற்கு வந்தடைந்தோம். பெரிய ஆலமரம், அதன் கீழ் திண்ணை, அதில் அமர்ந்து பேசும் முதியவர்கள் என அக்மார்க் கிராமத்தின் வாழ்க்கை கண்முன்னே காட்சியாய் விரிந்தது அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அங்கிருந்துதான் நாம் அருவிக்குச் செல்ல வேண்டும் என்பதால், சிறிது இளைப்பாறிவிட்டு அருவியை நோக்கிக் கிளம்பினோம்.

கிட்டதட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு மொத்தச் சாலையும் குண்டும், குழியுமாக இருந்தது. அந்தச் சாலையில் செல்லும்போதே அருவி விழும் ஓசை நம்மைச் சந்தோஷப்படுத்த, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மலையிலிருந்து அருவிக்குச் செல்லும் மலைப்பகுதியில் கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தோம். கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், அருவியைக் காணும் ஆவலால் அனைத்தும் மறந்துபோனது. 500 மீட்டருக்கும் குறைவான தூரமே இருந்தாலும், அந்த மாதிரியான ஒரு ட்ரெக்கிங் அனுபவம் நமக்கு வேறெங்கும் கிடைக்காது.

கோரையாறு
கோரையாறு

கீழிறங்கிப் பார்த்தால் காட்டாறாகச் செல்லும் ஓடையின் அழகும், அதனின் சத்தமும், மரமும் கொடியும் என வேற லெவல், அடி தூளாக இருந்தது. சொல்ல வார்த்தைகளே இல்லாமல் அப்படி ஓர் இடம்... அருமையான அனுபவம்! கால் மூட்டு வரைக்கும் மட்டுமே இருக்கும் நீரில் பத்தடி தூரம் நடந்து நிமிர்ந்து பார்த்தால் அழகிய படிக்கட்டுடன் மேலே செல்வதற்கான வழி இருந்தது.

கோரையாறு
கோரையாறு

மேலே ஏற ஏற ஆர்வம் கொப்பளிக்க 50 படிக்கட்டுகளில் ஏறி மற்றுமொரு 50 படிக்கட்டுகளில் இறங்கினால் அந்த வெள்ளை மழை ஒரே இடத்தில் கரும்பாறைகளின் இடையில் பெய்து கொண்டிருந்தது.

பொறுமையாகப் பாறைகளைக் கடந்து அருவியின் அருகே சென்றால் 50 ஆடி ஆழமுள்ள குளத்தில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது. ஆசையும், மூலிகையின் வாசமும் யாரைவிட்டது? நண்பர்களுடன் இணைந்து அருவியில் குளிக்கக் குளிக்க நீரின் குளிர்ச்சியில் மனதும், உடலும் குளிர்ச்சியாகிக் கொண்டிருந்தது.

கோரையாறு
கோரையாறு

நேரம் கடக்கக் கடக்க போதுமென்றே மனது சொல்லாமல் இருக்க, அறிவு நாம் செல்ல வேண்டிய தூரத்தையும், அதனின் வழிகளையும் உணர்த்தியதால், விருப்பமே இல்லாமல் திரும்பினோம். இது போன்ற அனுபவம் வேறு எங்கும் உணரவே முடியாது என்பதால் மொத்த அனுபவத்தையும் நம்முடைய போட்டோகிரபர் கேமராவில் பதிவுசெய்துகொள்ள, அங்கிருந்து நாம் கிளம்பினோம்.

அருவிக்கு நண்பர்களுடன் வந்திருந்த மணியிடம் பேசினோம், ”எனக்கு இந்த மலை அடிவாரத்தில் உள்ள கீரம்பூர்தான் சொந்த ஊரு. எனக்கு 35 வயசாவுது. ஆனா, இங்க வந்தாலே வயசு 16 மாதிரி மாறிடும். சுத்தி மரம் செடியோட, பாறைகள்ல வர இந்த தண்ணியில விளையாடுற போது கிடைக்கிற அனுபவமே வேற மாதிரி இருக்கும்.

இளைஞர்கள்
இளைஞர்கள்

சந்தோஷமும், என்ஜாயும் சேந்து கிடைக்கும். அதுவும் பிரெண்ட்ஸ்கூட வந்தா நேரம் போறதே தெரியாது. முன்னாடியெல்லாம் குடும்பத்தோட இங்க வருவோம். ஆனா, பாதை சரியில்லாதனால் இப்போ கூட்டிட்டு வர முடில. மீன்குழம்பும், சாப்பாடும் எடுத்துட்டு வந்து அருவில குளிச்சிட்டு, சாப்பிட்டுட்டு கிளம்புனா வீட்டுக்கு போற வரைக்கும் அவ்ளோ நிம்மதியா இருக்கும்" என முடித்தார்.

ஆபத்தான நிலையில் பாதைகள்
ஆபத்தான நிலையில் பாதைகள்

கண்டதும் கொண்டாடக் கூடிய இந்த இடத்தை அடைவது அவ்வளவு சுலபமில்லை. பாதுகாப்பில்லாத, சிதிலமடைந்த பாதைகள், மது அருந்திவிட்டுத் தூக்கி எறியப்படும் பாட்டில்கள் எனச் சில கசப்பான சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

திருச்சி மாநகரைத் தாண்டினால் இருக்கக் கூடிய மிக முக்கிய சுற்றுலாத் தலமான இந்த கோரையாரைக் குறைகள் இல்லாமல் மேம்படுத்தினால் இன்னும் அருமையான இடமாக, குடும்பத்துடன் ஒரு நாளை கழிக்கக்கூடிய இடமாக மாறும் என்பதை ஐயமில்லை என்கிறார்கள் இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.