Published:Updated:

திருச்சி ஹேங்கவுட்: உற்சாகக் குளியல், படகுக்குழாம், பூங்கா... முக்கொம்பிற்கு இத்தனை சிறப்புகளா?!

திருச்சி முக்கொம்பு

முக்கொம்பு செல்லும் வழியின் இடப்புறத்தில் சிறு சிறு கால்வாய்களும், கூடவே பச்சைப் பசேலென வயல்வெளிகளும் நம் கண்ணைப் பசுமையாக்க, வலப்புறத்தில் காவேரியும் சேர்ந்து நம்மை வசீகரித்தன.

திருச்சி ஹேங்கவுட்: உற்சாகக் குளியல், படகுக்குழாம், பூங்கா... முக்கொம்பிற்கு இத்தனை சிறப்புகளா?!

முக்கொம்பு செல்லும் வழியின் இடப்புறத்தில் சிறு சிறு கால்வாய்களும், கூடவே பச்சைப் பசேலென வயல்வெளிகளும் நம் கண்ணைப் பசுமையாக்க, வலப்புறத்தில் காவேரியும் சேர்ந்து நம்மை வசீகரித்தன.

Published:Updated:
திருச்சி முக்கொம்பு
"குழந்தைகளுடன் சின்ன பட்ஜெட்ல மனசுக்கு நிறைவா ஒருநாள் டூர் போகணும்னு முடிவு செஞ்சீங்கன்னா, திருச்சி ’முக்கொம்பு’வை மறக்காதீங்க” என்கிறார்கள் முக்கொம்பைச் சுற்றிப்பார்த்த சுற்றுலாப் பயணிகள். அப்படி என்னதான் இருக்கிறது முக்கொம்பில்?! வாங்க ஒரு விசிட் போவோம்.
திருச்சி முக்கொம்பு
திருச்சி முக்கொம்பு

திருச்சியின் பெருமைகளைப் பற்றிச் சொல்லும்போது, காவேரியைப் பற்றி எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்? தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் காவேரி, கர்நாடகாவிலிருந்து ஓடிவந்து திருச்சியில் இருக்கும் ’முக்கொம்பு’ என்னும் அழகிய இடத்தில்தான் மூன்றாகப் பிரிந்து டெல்டா மாவட்டங்களை வளம் அடையச் செய்கிறது.

திருச்சி முக்கொம்பு
திருச்சி முக்கொம்பு

மூன்றாகப் பிரியும் இடத்தில் அணைக்கட்டுடன், சிறுவர்கள் விளையாடவும், கூடி மகிழவும், பெரியவர்கள் ரிலாக்ஸ் செய்யவும் படகுக் குழாமுடன் கூடிய பூங்காவை உருவாக்கி வைக்க, எதனுடனும் ஒப்பிட முடியாத அளவில் இயற்கையுடன் இணைந்த சுற்றுலாத் தலமாக முக்கொம்பு தற்போது மாறியிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதிகாரிகளின் கெடுபிடியும் கொஞ்சம் அதிகமாக உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயற்கை, வரலாறு, நீர்வளம், அழகு... கூடவே மனதை லேசாக்கும் இந்த இடத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான செலவும் மிகக்குறைவு என்பதால் திருச்சியின் மிக முக்கியமான இடங்களில் தவிர்க்க முடியாத ஓர் இடமாகத் திகழ்கிறது முக்கொம்பு. ஒரு சில சுற்றுலாத் தலங்களில் குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே மக்கள் கூட்டம் இருக்கும், ஆனால், முக்கொம்புச் சுற்றுலாத் தலத்திற்கோ ஆண்டு முழுவதும் சீசன்தான். திருச்சியில் வசிப்பவர்களோ, திருச்சிக்கு வருபவர்களோ யாராக இருந்தாலும் முக்கொம்பு சுற்றுலாத் தலத்தை ரசிக்காமல் செல்ல மாட்டார்கள்.

முக்கொம்பு
முக்கொம்பு
திருச்சி முக்கொம்பு
திருச்சி முக்கொம்பு

அப்படிப் பலரும் ரசித்த முக்கொம்பை நாமும் ரசிக்கலாம் என ஒரு முற்பகல் நேரத்தில் நண்பர்களுடன் கிளம்பினோம். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சுற்றுலாத் தலத்திற்கு, நாம் செல்லும் வழியின் இடப்புறத்தில் சிறு சிறு கால்வாய்களும், கூடவே பச்சைப் பசேலென வயல்வெளிகளும் நம் கண்ணைப் பசுமையாக்க, வலப்புறத்தில் காவேரியும் சேர்ந்து நம்மை வசீகரித்தன.

அதே வசீகரத்துடன் முக்கொம்பின் நுழைவுவாயிலுக்குள் நுழைய, மனம் இலகுவாக ஆரம்பித்ததை உணர முடிந்தது. வலப்புறம் கேளிக்கை விளையாட்டுப் பகுதியும், இடப்புறம் பசுமையுடன் போர்த்திய பூங்காவும் நம்மை வரவேற்றன. நாம் சென்ற நேரம் இயற்கையும் நம்முடைய மகிழ்ச்சியில் பங்கு கொள்ள நினைத்ததோ என்னவோ, காலச் சூழ்நிலையை அழகாக்கிக்கொண்டிருந்தது.

குழந்தைகள் - திருச்சி முக்கொம்பு
குழந்தைகள் - திருச்சி முக்கொம்பு

வெகு நாள்களுக்குப் பின் கூட்டமும் சற்று அதிகரித்து இருந்தது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்பட்ட தண்ணீர், இந்த முக்கொம்பு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது ஒருபுறமும், மதகுகளின் வழியே உபரி நீர் வெளியேறும் காட்சி இன்னொருபுறமும் என, ஒரு ரம்மியமான சூழ்நிலை நிலவியது.

பெரும் வரலாற்றைக் கொண்ட முக்கொம்பில் கொள்ளிடமாகப் பிரியும் காவேரி ஆற்றின் மீது மக்கள் பாலமாகப் பயன்படுத்தி வந்த இந்த அணைக்கட்டு, கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைய, அதன் கட்டுமானப் பணிகளும் நடந்து கொண்டிருந்தது.

திருச்சி முக்கொம்பு குளியல்
திருச்சி முக்கொம்பு குளியல்
பெண்கள்
பெண்கள்

அனைத்தையும் ரசித்துக்கொண்டே பூங்காவிற்குள் நுழைந்தோம். அணையின் நுழைவிலேயே ஒரு பூங்கா இருக்கிறது. பூங்காவில் படகுக் குழாம், ராட்டினம், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கூடவே தீனிகளுக்கும், உணவிற்கும் கடைகள் இருப்பதால் உள்நுழையும் நாம் எந்தவிதக் கவலையும் இல்லாமல் முக்கொம்பின் ரம்மியத்தை ரசிக்க ஆரம்பித்தோம்.

சில இடங்களில் காவேரியில் குளிப்பதற்கு எனப் பாதுகாப்புடன் கூடிய இடங்களை அரசு ஏற்படுத்திக்கொடுத்திருப்பதால், நீரில் இறங்க வேண்டும் என்ற நம் ஆசையைக் கட்டுப்படுத்தாமல் நண்பர்களுடன் நீரில் இறங்கி விளையாட ஆரம்பித்தோம்.

திருச்சி முக்கொம்பு
திருச்சி முக்கொம்பு

காவேரியின் குளுமையும், நண்பர்களின் கொண்டாட்டமும் என முக்கொம்பின் நீர் விளையாட்டு, அதனை அனுபவித்தவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிடும் என்பதே உண்மையான ஒன்றாகும். ஆற்றில் விளையாடிவிட்டுக் கரையேறினால் ஏற்படும் பசிக்கு ஏற்ற உணவைச் சாப்பிட்டுவிட்டு, கேளிக்கைப் பூங்காவில் உலாவ ஆரம்பித்தோம்.

ஒருபுறம் நீர் விளையாட்டு, மறுபுறம் ராட்டினம், ஊஞ்சல் என அனைத்திலும் விளையாடிக் களைத்துப்போகையில் மாங்காய், அன்னாசி, நாவல் பழம் எனச் சாப்பிட்ட மனசுடன் சேர்ந்து, உடலும் லேசானதை உணர முடிந்தது. லேசான மனதுடன் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு, பூங்காவின் முடிவில் தொடங்கும் பாலத்தில் நடக்க ஆரம்பித்தோம்.

திருச்சி முக்கொம்பு பூங்கா
திருச்சி முக்கொம்பு பூங்கா

பாலத்தின் ஒருபுறம் தேக்கி வைத்த நீரில் சூரியனின் முகம் பட்டுப் பிரகாசிக்க, மற்றொரு புறமோ தும்பைப் பூவின் வெள்ளை நிறத்தில் நீர் மதகுகளிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. ஓவியம் போன்ற இந்தக் காட்சியமைப்பினை மனதில் அப்படியே பதிய வைத்துக்கொண்டு பாலத்தில் நடந்து திரும்பினோம்.

திரும்பி நுழைவாயில் அருகே வருகையில் பூங்காவில் அங்கங்கே குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினர் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளைக் குழந்தைகளுடன் சேர்த்து உண்ணும் காட்சியைப் பார்க்க நாம் நம் பால்ய காலத்திற்கே சென்று கொண்டிருந்தோம்.

திருச்சி முக்கொம்பு
திருச்சி முக்கொம்பு

தொடர்ந்து குழந்தைகளுடன் வந்திருந்த லதா என்பவரிடம் பேசினோம். ”நாங்க குளித்தலைக்குப் பக்கத்துல இருக்குற கிராமத்துல இருந்து இங்க வந்திருக்கோம். முன்னாடியெல்லாம் அடிக்கடி வருவோம். இப்போ கொரோனாவால ரொம்ப நாளுக்குப் பிறகு வந்திருக்கோம். இங்க வந்தாலே குழந்தைங்களுக்கு மட்டுமல்லாம எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாகிடும்.

முக்கொம்புன்னு நினைச்சாலே எங்க பக்கத்து வீட்டுல எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணிட்டு இதுபோல சாப்பாடெல்லாம் ரெடி பண்ணிட்டு வந்துடுவோம். எல்லாருமே சேர்ந்து காவேரித் தண்ணியில குளிச்சிட்டு ஒண்ணா இங்கே இருக்குற பூங்காவுல குழந்தைகளோட விளையாடிக்கிட்டு நேரம் போறதே தெரியாம இங்க இருப்போம்.

குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள்
குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள்

நாங்க எல்லாம் தினமும் வேலைக்குப் போனாதான் குடும்பத்தை நடத்த முடியுங்கிறதனால பொதுவா எங்கயும் வெளில போக முடியாத சூழ்நிலைதான் இருக்கும், அப்படியான சூழ்நிலையில முக்கொம்புதான் எங்களுக்கான பொழுதுபோக்கு, சந்தோசம் எல்லாமே” எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

திருச்சியில் இருப்பவர்களும், திருச்சிக்கு வருபவர்களும் மிஸ் பண்ணக்கூடாத இடம் இந்த முக்கொம்பு. நீங்களும் ஒருமுறை போய் வாங்க!