Published:Updated:

ரஞ்சன்குடி கோட்டை சிறப்புகள்: வழிபாட்டு மண்டபம், தண்டனைக் கிணறு, தூக்குமேடை! | திருச்சி ஹேங்அவுட்

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை

இரு மதத்தவர்கள் தொடர்புடைய விஷயங்கள் இக்கோட்டையில் நிறைய இருப்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராக உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழங்கால நினைவுச் சின்னமாக விளங்கும் துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் வரலாற்றைப் பற்றி தங்களது குழந்தைகளுக்குத் தெரிய வைக்க மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கிறார்கள். நம்மை ஆண்ட மன்னர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக அழைத்துவரும் இடமாக மாறிவருகிறது இக்கோட்டை. கொரோனா ஊரடங்கால் தற்போது களையிழந்து காணப்படுகிறது.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH
இக்கோட்டையை நாமும் சுற்றிப் பார்க்கலாமா? வாருங்கள் போகலாம்!
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'ரஞ்சன்குடி கோட்டை'. இக்கோட்டை, பல போர்கள் நடந்த சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். அத்தோடு மட்டுமில்லாமல், இக்கோட்டையின் பெயரைக் கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.

சுமார் 1,600 வருடம் பழைமையான இக்கோட்டையைப் பிற்கால பாண்டிய மன்னின் வம்சாவளியில் வந்த 'தூங்கானை மறவன்' என்ற பாண்டிய மன்னன் கட்டினார். பாண்டியனின் சின்னமான மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதே அதற்குச் சாட்சி. இக்கோட்டையைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக அக்காலத்தில் அகழியும், மதிற்சுவர்களும் சுமார் 57.5 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. தூங்கானை மறவன் மன்னன், (குஷ்டம்) நோய்வாய்ப்பட்டதால், இந்தக் கோட்டையின் வேலைப்பாடுகள் முடிவு பெறாமல் இருந்தது. அந்த நிலையில், தூங்கானை மறவனும் இறந்துவிட, அவரின் உடல், இக்கோட்டையிலே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH

சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், போஜலர்கள், விஜய நகர மன்னர்கள், நாயக்கர்கள் ஆகிய மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். ஆனால், அம்மன்னர்கள் கோயில் கட்டுவதில் ஆர்வம் காட்டியவர்கள், இக்கோட்டையைச் சீரமைக்கவில்லை. அதன் பின்னர், 1680-ல் இஸ்லாமியர்களின் படையெடுப்பில், இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்கள். பிறகு முதல் நாவப் டெல்லி முகமதுகான், இந்தக் கோட்டையைச் சீரமைத்துக் கட்ட ஆரம்பித்தார். அவருடைய சமாதியும் இந்தக் கோட்டையில்தான் உள்ளது. அதன்பிறகு, அடுத்தடுத்து இஸ்லாமியர்களே, இக்கோட்டையை ஆட்சி செய்தனர்.

பின்னர், இக்கோட்டை 1733-ல், 'ஆற்காட்டு நவாப் தோஸ்த்தலி'யின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பின் தோஸ்த்தலி, 1735-ல் அவருடைய மகன் சப்தர் அலிக்கு இக்கோட்டையின் பொறுப்பைக் கொடுத்தார். சப்தர் அலிதான் முற்றுப்பெறாமல் இருந்த இக்கோட்டையின் வேலைகளைச் செய்து முடித்தார். முகமது அலி இக்கோட்டையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, அவருக்கும் தோஸ்த்தலியின் மருமகனான சந்தா சாகிப்பிற்கும் 1751-ல் போர் நடைபெற்றது.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH

பிறகு, 1751ல் இக்கோட்டையில் 'வால்கண்டா' என்ற பெரியதொரு போரும் நடந்தது. இப்போரில் இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் இக்கோட்டையின் வடப்புறத்திலுள்ள 'சப்தர் ஜங்மகான்' என்ற பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன. இப்போர், நடைபெற்ற போது இக்கோட்டைச் சேதமடைந்தது. இப்போரில் முகமது அலியின் படை வெற்றி பெற்றது.

முகமது அலியின் ஓய்வு பெற்ற பிறகு, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது இக்கோட்டை. அதன் பின்னர், 1946 -ல், 'இந்தியத் தொல்லியல் துறை'யின் கட்டுப்பாட்டுக்கு வந்தது இக்கோட்டை. பிறகு 1947-ல் இந்தியா, சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை இந்தியத் தொல்லியல் துறை காட்டுப்பாட்டியே உள்ளது. "வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள இக்கோட்டையைத் தமிழக அரசும், சுற்றுலாத்துறையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மக்களுக்காகப் புதிது புதிதாக சுற்றுலாத்தலங்களை உருவாக்கும் அரசுகள், நம்மை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆவணமாக இருக்கும் இக்கோட்டை மீட்க வேண்டும்" என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH

இக்கோட்டையின் அமைப்பு மற்றும் அதன் சிறப்புகள்:

இக்கோட்டையின் மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள் கொண்டவையாக வெவ்வேறு உயரத்தில் உள்ளன. மேலிருந்து பார்க்கும்போது இக்கோட்டை, 'அரைக்கோள' வடிவத்தில் இருக்கும். கோட்டையின் வெளிப்புறத்தில் மதில் சுவர்களை ஒட்டி அகழிகள் இருக்கின்றன. அகழிக்குத் தேவையான தண்ணீர் அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH

இக்கோட்டையின் முதல் தளத்தில், 'வழிபாட்டு மண்டபம்' உள்ளது. அம்மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானைப் பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு சிறு சிற்பங்களும் உள்ளன. அதேபோல், இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்துவதற்காகப் பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவர்கள் தொடர்புடைய விஷயங்கள் இக்கோட்டையில் நிறைய இருப்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராக உள்ளது.

இக்கோட்டையில் உள்ள மண்டபத்தின் அருகில் சுரங்கப்பாதை உள்ளது. போர்கள் உச்சக்கட்டம் அடையும்போது மன்னர்கள் தப்பிச் செல்வதற்காகச் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்திலிருந்து நகரின் மையப்பகுதிக்கும், ஊரின் எல்லைக்கும், செல்வதற்குச் சுரங்கப்பாதைகள் உள்ளன. இதை தற்பொழுது தொல்லியல்துறை மூடிவைத்துள்ளார்கள்.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH
அதேபோல் இக்கோட்டையில் 'தண்டனைக் கிணறு' ஒன்று உள்ளது. அக்காலத்தில் குற்றம் செய்த ஆண்களும்,பெண்களும் உயிரிழக்கும் வரை தண்டனை கிணற்றில் போட்டுவிடுவார்களாம். இதனை வரலாற்று ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இக்கோட்டையில் தற்காப்பு வழியும் உள்ளது. இவை மட்டும் இல்லாமல் கொடிமேடை, பீரங்கி மேடை, வெடிமருந்து கிடங்கு ஆகியவை மேல் கோட்டையில் அமைந்துள்ளன. கீழ்க் கோட்டையில் நுழைவுவாயிலுக்கு அருகில் ஒரு மண்டபம், எதிர்புறம் தண்டனை கிணறு, பள்ளிவாசல் ஆகியவை உள்ளன. இதற்குத் தென்புறத்தில் வட்ட வடிவமான மூன்று தடயங்களும், தற்காப்பு வழியும் உள்ளன.

திருச்சி ஹேங்அவுட்: காணக் கண் கோடி வேண்டும்! திருச்சி வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் என்ன ஸ்பெஷல்?

உட்கோட்டையில் இரண்டு குளமும், முரசு மேடை, பள்ளிவாசல், உப்பள பாத்திகள் உள்ளன. காலப்போக்கில் உப்பள பாத்திகள் எல்லாம் மண்மூடிப்போய் அழிந்துள்ளன. இந்தக் கோட்டையில் குடிநீர் கிணறு மற்றும் கூடுதலாக 9 கிணறுகளும் உள்ளன. இவற்றில் உள்ள கிணறுகள் அனைத்தும் மண்மூடிக் காணப்படுகின்றன. மழைநீர் சேகரிப்பு குளமும் இங்குள்ளது. இக்கோட்டையைப் பற்றிய கல்வெட்டு வாலிகண்டாபுரத்தில் உள்ள வாலிஸ்வரன் ஆலயத்தில் உள்ளது.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH

இக்கோட்டைத் திருச்சியின் அருகில் அமைந்திருப்பதால் ராஜ்ஜியத்துக்குத் தேவையான படைக்கலன்கள் இந்தக் கோட்டையிலிருந்துதான் சென்றிருக்க வேண்டும். வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக ரஞ்சன்குடி கோட்டை இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையைப் பற்றி நம்முடைய குழந்தைகளும் தெரிந்துகொண்டால் நல்லது.

ரஞ்சன்குடி கோட்டை
ரஞ்சன்குடி கோட்டை
DIXITH

எப்படிச் செல்வது?

திருச்சியிலும் பெரம்பலூரிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. மேற்படி விடுதிகளிலிருந்து கோட்டைக்குச் செல்லலாம். திருச்சியிலிருந்து பேருந்தில் செல்லவேண்டும் என்றால் போய்வரக் குறைந்தது ரூ.200 இருந்தாலே போதுமானது. பெரம்பலூரிலிருந்து கோட்டைக்குச் சரிவரப் பேருந்து போக்குவரத்து இல்லாததால் டூவிலரிலோ, காரிலோ சென்று வருவது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு