Published:Updated:

திருச்சி உலா: ஒரே பாறையில் அமைந்த கோட்டை; மதநல்லினக்க தலங்கள்... நாமக்கல் கோட்டையின் கம்பீர வரலாறு!

நாமக்கல் கோட்டை ( நா.ராஜமுருகன் )

400 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோட்டை, இந்த மலைக்குன்றில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மன்னன் திப்புசுல்தான், இந்தக் கோட்டையை ஆங்கிலேயரை மறைந்திருந்து எதிர்த்து போரிட பயன்படுத்தினார் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

திருச்சி உலா: ஒரே பாறையில் அமைந்த கோட்டை; மதநல்லினக்க தலங்கள்... நாமக்கல் கோட்டையின் கம்பீர வரலாறு!

400 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோட்டை, இந்த மலைக்குன்றில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மன்னன் திப்புசுல்தான், இந்தக் கோட்டையை ஆங்கிலேயரை மறைந்திருந்து எதிர்த்து போரிட பயன்படுத்தினார் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

Published:Updated:
நாமக்கல் கோட்டை ( நா.ராஜமுருகன் )
திருச்சியில் இருந்து பயணித்த இரண்டு மணி நேரத்தில் நாமக்கல்லை அடைந்துவிடலாம். நாமக்கல் பேருந்து நிலையத்தை அடைந்ததும், நம்மை அண்ணாந்து பார்க்க வைத்து, சிலிர்ப்பூட்டுவது அருகில் உள்ள ஒரே பாறை (மலைக்குன்று) உச்சியில் அமைக்கப்பட்ட கோட்டைதான். சுற்றிலும் சமதளமாக இருக்க, அங்குள்ள ஒரு பாறையின் உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது அந்தக் கோட்டை.
நாமக்கல் கோட்டை
நாமக்கல் கோட்டை
நா.ராஜமுருகன்

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு, ஆங்கிலேயரோடு போர்புரிய மறைந்திருந்து தாக்கப் பயன்படுத்திய இடம் என்று இந்தக் கோட்டையின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஒரு வரலாற்று தொன்மை புதைந்து கிடக்கிறது. இந்த மலைக்கோட்டையை சிற்றரசன் ஒருவர் அமைத்தாலும், கோட்டை அமைந்துள்ள மலைக்குன்று உருவான பின்னணியாக, ஓர் ஆன்மிக கதையை முன்மொழிகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலம் இருந்தாலும், நாமக்கல் நகரின் மையத்தில் இருக்கும் இந்தக் கோட்டைதான், நாமக்கல் நகரவாசிகளுக்கு வீக்எண்ட் ஹேங்அவுட் ஸ்பாட்டாக பரிமளிக்கிறது. வார இறுதியில் குடும்பத்தோடு இந்தக் கோட்டை மீது ஏறி, ரிலாக்ஸ் செய்துகொள்கிறார்கள் இங்குள்ள மக்கள். இந்த மலைக்கோட்டையின் மீது ஏறி நின்று, கண்களை எட்டுத்திக்கும் சுழற்றினால், நாமக்கல் நகரெங்கும் முளைத்துக் கிடக்கும் கட்டடக் காடுகள் கண்களைக் கவர்கின்றன. அதை தாண்டி, தூரத்தில் தெரியும் கொல்லிமலையின் வனப்பையும், பிரமாண்டத்தையும் கண்களுக்கு விருந்தாக்கிகொள்ள முடிகிறது. அதோடு, நான்கு பக்கமிருந்தும் சிலுசிலுவென்று காற்று வந்து மேனியைத் தழுவ, அப்போது நாம் அடைவது சொல்லொண்ணா ஓர் ஏகாந்த நிலை.

தூரத்தில் தெரியும் மலை
தூரத்தில் தெரியும் மலை
நா.ராஜமுருகன்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 1.36 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன இந்த மலைக்குன்று உள்ளது. இந்த மலைக்குன்றின் உயரம் 75 மீட்டர் (246 அடி). முற்காலத்தில் வைணவ கோயில்கள் அமைந்த மலைகளில் நாமங்களை பெரிதாக இடும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. அந்த வகையில், நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலைக்குன்றிலும், நாமம் பெரியதாக இடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதனால்தான் ஆரைக்கல் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நகர், பிற்காலத்தில் நாமக்கல் என்ற பெயர் பெற்று விளங்கியதாகச் சொல்கிறார்கள். அதேபோல், இந்தக் கோட்டை அமைந்துள்ள மலைக்குன்று குறித்து ஆன்மிக ரீதியிலும் இங்குள்ள மக்களிடம் சில நம்பிக்கைகள் இருக்கின்றன. ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து கொண்டு இலங்கைக்குச் செல்லும் வழியில் நாமக்கல் வந்தார். அப்போது அவருக்கு சாலக்கிராமம் கிடைக்க பெற்றார். சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்விக கல். அப்போது, ‘உனக்கு கிடைக்க பெற்றதை எந்த இடத்தில் வைக்கிறாயோ, அந்த இடம் மலையாக மாறிவிடும்’ என்ற அசரீரி வார்த்தை கேட்டது.

பிரமாண்ட குளம்
பிரமாண்ட குளம்
நா.ராஜமுருகன்

இந்தத் தலத்திற்கு ஆஞ்சநேயர் வந்தபோது, சந்தியாவந்தனம் செய்வதற்காக கமலாய குளத்தில் இறங்கினார். அப்போது, சாலக்கிராமத்தை எப்படி கீழே வைப்பது என்று யோசித்தபோது, அங்கு மகாலட்சுமி தவம் செய்து கொண்டு இருப்பதை கண்டார். மகாலட்சுமியிடம் தான் தியானம் செய்யும் வரை சாலக்கிராமத்தை கீழே வைத்துவிடாமல் கையிலேயே வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நேரம் அதிகமாகவே, 'ஆஞ்சநேயர் மறந்துவிட்டார்' என நினைத்து மகாலட்சுமி சாலக்கிராமத்தை கீழே வைத்து விட்டார்.

சந்தியாவந்தனம் முடித்து வந்து பார்த்தபோது தனக்கு முன்பு பெரிய மலை உருவாகி இருப்பதை ஆஞ்சநேயர் கண்டார் என்றும், அதனால் அப்படி உருவான அந்த மலையே நாமகிரி மலை என்றும் இதன் தல வரலாறு கூறுகிறது. இத்தகைய மலைக்குன்றின் மீதுதான் 1623 - ஆம் ஆண்டு நாமக்கல் பகுதியை ஆண்ட சிற்றரசனான ராமச்சந்திர நாயக்கரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. 400 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோட்டை, இந்த மலைக்குன்றில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மன்னன் திப்பு சுல்தான், இந்தக் கோட்டையை ஆங்கிலேயரை மறைந்திருந்து எதிர்த்து போரிட பயன்படுத்தினார் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

மதநல்லினக்க தர்கா
மதநல்லினக்க தர்கா
நா.ராஜமுருகன்
சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட இந்தக் கோட்டையின் மதில் சுவரில் உள்ள துளையில் துப்பாக்கியை வைத்து, கீழ் சாலையில் செல்பவர்களைக் குறிவைத்து சுடும் அளவுக்கு மதில்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கீழிருந்து மலைக்கோட்டை உச்சிவரை செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் படிகளில் ஏறிசெல்ல வசதியாக, இரும்பு கைப்பிடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மலையின் கிழக்குபுறம் அரங்கநாதர் கோயிலும், மேற்குபுறம் நரசிம்மர் கோயிலும் உள்ளன. மலையைக் குடைந்து கட்டப்பட்ட குடவறை கோயில்களான இவை, கி.பி. 784-ம் ஆண்டு குணசீலன் என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது. இதேபோல், மலையின் உச்சியில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்றும், தர்கா ஒன்றும் உள்ளது. மதநல்லினக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த ஆன்மிக தலங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக, நாமக்கல் நகர மக்கள் சொல்லி பூரிக்கிறார்கள். அதோடு, கல் ஸ்தூபி ஒன்றும், யாழி உருவம் ஒன்றும் உள்ளது. கோட்டை அமைந்துள்ள மலைக்குன்றின் அடிவாரத்திலேயே பெரிய அளவில் கோட்டையோடு தொடர்புடைய கமலாலய குளம் ஒன்று உள்ளது. அதேபோல், கோட்டை அமைந்துள்ள இந்த மலைக்குன்றின் மீது சிறிய அளவில் குளம்போல் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் இருப்பது, அங்கு செல்லும் பயணிகளுக்குக் குளுமையைக் கொடுக்கிறது.

 யாழி உருவம்
யாழி உருவம்
நா.ராஜமுருகன்

விசேஷ நாள்களில் ஏராளமான பக்தர்களும் இங்கு வந்து செல்வது உண்டு. இந்தக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள குளக்கரை திடலில் கடந்த 1933-ம் ஆண்டு நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பேசினார் என்ற பெருமையும் இந்த மலைக்குன்றின் அடிவாரத்துக்கு உண்டு. அதோடு, நாமக்கல்லில் பிரசித்தப்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலும் இந்தக் கோட்டைக்கு எதிரேதான் உள்ளது. இந்தக் கோட்டையை சுற்றிப்பார்க்க வருபவர்கள் அருகில் உள்ள ஆஞ்சநேயரையும் வழிப்பட்டுச் செல்லலாம்.

பெரிதாகச் செலவில்லாமல் வரலாறு, ஆன்மிகம், மனப்புத்துணர்வு பெறும் சுற்றுலா தலம் என்று ஒரே நேரத்தில் மூன்று விதமான அனுபவங்களை அள்ளித்தரும் சுற்றுலாவாக நாமக்கல் கோட்டை பயணத்தை நாம் மாற்றிக்கொள்ள முடியும்.