Published:Updated:

மதுரை அருகே `வாலிநோக்கம்' பீச்... மீன் குழம்பு தோசையும், குருவிரொட்டியும் ரெடி! Long Drive போலாமா-3

நட்சத்திர மீன்கள் வரும் வாலிநோக்கம்... அரியமான் எனும் அந்தமான்! | மதுரைக்குப் பக்கத்தில்... கடற்கரை ஸ்டே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘கடலும் கடல் சார்ந்த இடத்துக்கும் ஒரு ட்ரிப் அடிச்சு ரொம்ப நாளாச்சு...’ என்று ரொம்ப நாட்களாகவே மூளையில் பல்பு எரிந்து கொண்டே இருந்தது. அதுவும் இந்த லாங் டிரைவுக்கு மலிவான ஒரு ட்ரிப்பில் நச்சென ஓர் இடத்தைக் கண்டுபிடித்து, உங்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். வாலிநோக்கம் சிக்கியது. ராமேஸ்வரம் தெரியும்; குந்துகால்கூடத் தெரியும்; தனுஷ்கோடி தெரியும்; ஆனால், வாலிநோக்கம் யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாலிநோக்கம், வெள்ளையர்கள் காலத்தில் பெரிய இண்டஸ்ட்ரியல் பகுதியாக இருந்தது. வேலைக்கு ஆகாத கப்பல்களை உடைக்கும் இடமாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்புகூட இது ரொம்பப் பிரபலம்தான். இப்போதுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்குப் பிரபலமாகி விட்டது வாலிநோக்கம். ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதாம்.

வாலிநோக்கம் பறவைப் பார்வையில்...
வாலிநோக்கம் பறவைப் பார்வையில்...

வாலிநோக்கத்தில் ஓர் அற்புதமான கன்டெய்னர் ரெஸார்ட் இருப்பதாகவும், சுத்தமான பதநீர் இறக்குமதி, கடல் ஆமைகள், நண்டுகள் எல்லாம் கரை ஒதுங்கும் கடற்கரை எனவும் கேள்விப்பட்டு வண்டியைக் கிளப்பினோம்.

வாலிநோக்கம் மணல்திட்டு என்பதால், முதலில் இசுஸூ எனும் 4 வீல் டிரைவ் ஆஃப்ரோடரைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். கடைசி நேர மாறுதலில் சாதாரண ஃப்ரன்ட் வீல் டிரைவ் சான்ட்ரோவைக் கிளப்பிக் கொண்டு போனேன். (இசுசூவில் இருந்து சான்ட்ரோ... குட் டிரான்ஸ்ஃபர்மேஷன்)

வாலிநோக்கம்
வாலிநோக்கம்

மதுரைக்காரர்கள் என்றால், வாலிநோக்கம் ஒரு நாள் தங்கிவிட்டு வர அற்புதமான இடம். எனவே, மதுரையில் இருந்துதான் வண்டியை எடுப்பதாக ஸ்கெட்ச் போடப்பட்டது. காலையில் கிளம்புவதாகத்தான் திட்டம். தாமதமாகக் கிளம்பியது வசதியாகப் போனது. சுள்ளென உரைக்காத ஒரு மதிய வேளையில், மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டாவை விழுங்க வாய்ப்பு கிடைத்தது. செமிப்பதற்காக, ஜில்லென ஒரு ஃபுல்ஜார் இஞ்சி சோடாவை அடித்துவிட்டு வாலிநோக்கத்துக்கு சான்ட்ரோவை விரட்டினேன்.

வாலிநோக்கத்துக்கு மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாகவும் போகலாம். தூத்துக்குடி, விருதுநகர் பைபாஸ் பிடித்து சாயல்குடி வழியாகவும் ஒரு ரூட் சொல்லியது கூகுள். ஆனால், புகைப்பட நிபுணர் ராமநாதபுரத்தில் ரெடியாக இருப்பதாக லைவ் லொக்கேஷன் அனுப்பினார். ராமநாதபுரம் வழிதான் தேர்ந்தெடுத்தோம்.

அரியமான் பீச்
அரியமான் பீச்
சவுக்கு மர நிழல், கடல் குளியல், கொண்டாட்ட உணவுகள்... அரியமான் கடற்கரையை மிஸ் பண்ணாதீங்க மதுரையன்ஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாலிநோக்கம் உப்பளம்
வாலிநோக்கம் உப்பளம்

ராமநாதபுரத்தில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு, புகைப்பட நிபுணரையும் ஏற்றிக் கொண்டு வாலிநோக்கம் பறந்தோம். இன்னும் 47 கிமீதான் எனச் சொன்னது நேவிகேஷன். தூத்துக்குடி போகும் வழியில் இடதுபக்கம் திரும்பினால் வாலிநோக்கம். இங்கே தங்குவதற்கு இடங்கள் கிடைக்காது. இங்கே இருக்கும் ஒரே ஒரு ஆப்ஷன் Hidden Paradise எனும் கன்டெய்னர் ரெஸார்ட். முன்கூட்டியே புக் செய்ய வேண்டும். என்ன, `Hidden Paradise'க்குத்தான் எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. இருட்டத் துவங்கிவிட்டதால், வழி கண்டுபிடிப்பதும் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

ரெஸார்ட் ஊழியர்தான் போன் செய்து, 'இங்கிட்டுத் திரும்புங்க; அங்குட்டுப் போகாதீங்க' என்று ராமநாதபுரம் தமிழில் வழி சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு வழியாக மையிருட்டில் Hidden Paradise வந்து விட்டோம். கடற்கரை ஓரமாக இரண்டு கன்டெய்னர்களை தங்கும் காட்டேஜ் ஆக்கியிருந்தார்கள். சான்ட்ரோ, ஒரு 2 வீல் டிரைவ் என்பதால், கேட் பக்கத்திலேயே பார்க் செய்துவிட்டோம். கன்டெய்னர் பக்கத்திலேயே போக 4 வீல் டிரைவ் கார்களால் மட்டும்தான் முடியும்!

அழகான விஷயம் இரவில் அமானுஷ்யமாகத்தான் இருக்கும் என்பார்கள். அது உண்மைதான்போல. இரவில் கடலலைச் சத்தம் அமானுஷ்ய அழகாய் இருந்தது. த்ரில்லிங் பார்ட்டிகளுக்கு இந்த கடற்கரை காட்டேஜ் செமயாகப் பிடிக்கும்.

வாலிநோக்கம்  ரெஸார்ட்
வாலிநோக்கம் ரெஸார்ட்
Magesh M
வாலிநோக்கம் பீச்
வாலிநோக்கம் பீச்

பெளர்ணமியாக இருந்தால், இந்த அனுபவம் வேற லெவலில் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மொபைல் டார்ச்சில் கன்டெய்னர் ஜன்னல் வழியாக கடலலையைப் பார்த்தது செமயான முட்டாள்தனம். (நிலா வெளிச்சத்தில் யாராவது கடலலை பார்த்த அனுபவம் இருந்தால்... ப்ளீஸ் கமென்ட்டுங்களேன்!) இனிமேல் எங்குட்டுப் படம் எடுக்க என்று கேமராவை பேக் செய்துவிட்டு, அலைச்சத்தத்தைக் கேட்டபடி தூங்க ஆரம்பித்து விட்டார் புகைப்பட நிபுணர்.

காட்டேஜ் கண்ணாடி வழியாக, கடற்கரைச் சூரியன்தான் மஞ்சள் வெயிலில் எங்களை எழுப்பிவிட்டது. கூடவே கடலலைச் சத்தத்தோடு, மீன் பிடிப் படகுகளின் சத்தமும். அற்புதமான வியூ. ஆள் அரவமே இல்லாத மஞ்சள் வெயில் கடல் மணலில் எதை நினைத்துக் கொண்டு வாக்கிங் போனாலும், சந்தோஷம் அப்பிக் கொள்ளும் மனதில்.

இந்த வாலிநோக்கம் கடற்கரையில்தான் ஜெல்லி ஃபிஷ், கடல் ஆமைகள், இகுவானா எனும் உடும்பு வகையைச் சேர்ந்த அரிய வகை உயிரினங்கள் மார்னிங் வாக்கிங் வருமாம். சிலர் நட்சத்திர மீன்கள், ஆக்டோபஸ், கடற்குதிரை எல்லாம் பார்த்ததாகவும் சொன்னார்கள். ஏற்கெனவே இங்கு தங்கியவர்களிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல் இது. ‘‘ஓவர் பில்ட்அப் மாதிரி தெரியும். இங்கே டால்பின்களெல்லாம் என் கேமராவில் அடக்கியிருக்கேன். வாலிநோக்கத்துக்கு வரம் இந்தக் கடற்கரை’’ என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார், இந்த ரெஸார்ட் உரிமையாளர் அருண். இதைக் கேட்டதும் `Sea Life Photographer' ஆக அவதாரம் எடுத்து, அதிகாலையிலேயே கேமராவை ரெடி செய்துவிட்டார் நமது புகைப்பட நிபுணர். ஆனால், நண்டுகள்கூட நம் கண்ணில் படவிரும்பவில்லை. மணல் வளையில் பதுங்கிக் கொண்டன. சில ஜெல்லி ஃபிஷ்கள் மட்டும் கரையோரம் தரிசனம் தந்துவிட்டு, புகைப்படம் எடுப்பதற்குள் மறுபடியும் கடலுக்குள் மிதக்க ஆரம்பித்தன.

வாலிநோக்கம்
வாலிநோக்கம்
வாலிநோக்கம்
வாலிநோக்கம்

அதிகாலையில் இருந்தே மீன் பிடிப் படகுகளால் பிஸியாகி இருந்தது வாலிநோக்கம் கடற்கரை. கடலலை, மஞ்சள் சூரியன், அலையாடும் படகுகள், கோவணத்தில் இருந்த அழகான மீனவர்கள்... எதையும் விடவில்லை நமது புகைப்படக் கலைஞர். நமக்கு ரெஸார்ட் வான்கோழிகள் மட்டும்தான் ஃப்ரெண்டு ஆகியிருந்தன.

வாலிநோக்கம் பனைமரம்
வாலிநோக்கம் பனைமரம்

வாலிநோக்கத்தில் இன்னொரு சிறப்பு – சுத்தமான பதநீர். பனை மரங்கள் சூழ் காட்டேஜுக்குப் பக்கத்தில் 72 வயது இளைஞரான முனுசாமி, 30 அடி உயர பனை மரத்தில் ஜர்ரென ஏறி, பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார். ஆன் தி ஸ்பாட்டில் பனை மட்டையில் பதநீர் அருந்தியது புத்திசாலித்தனமான சாய்ஸ். கருப்பட்டிக்கு மட்டும்தான் பதநீர். வெளியே விக்க மாட்டோம் என்றார் முனுசாமி. காசு கொடுத்தாலும், வாங்கி காளி சாமிக்குப் படைத்து விட்டார். இங்கே ஒரு கிலோ சுத்தமான பதநீர் கருப்பட்டி 200 ரூபாய்க்கு பர்ச்சேஸ் பண்ணலாம். இவர்களிடம் 200 ரூபாய்க்கு வாங்கி, வெளியே கிலோ 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் வியாபாரிகள். ஆனால், இப்போ ஸ்டாக் இல்லைங்களே என்று கை விரித்து விட்டார் முனுசாமித் தாத்தா.

வாலிநோக்கம் இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் பெயர் பெற்று விட்டது. 'சதுரங்க வேட்டை' படத்தில் நடிகர் இளவரசுவின் வீடு வருமே; அது இங்கேதான் என்று ஓர் இடத்தைக் காட்டினார்கள். வாலிநோக்கத்தில் பனை மரமேற்றத்துக்குப் பிறகு, மீன் ஏலம்தான் முக்கியத் தொழில். ராமநாதபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு இங்கிருந்துதான் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காட்டேஜில் இருந்து 1 கிமீ சென்றால், கடற்கரையிலேயே ஏலம் செம சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது.

வாலிநோக்கம் மீன்பிடி தொழில்
வாலிநோக்கம் மீன்பிடி தொழில்
வலையில் சிக்கிய ஆக்டோபஸ்
வலையில் சிக்கிய ஆக்டோபஸ்

கெலங்கான், பைலட், முயல், மத்தி, விலாங்கு, பட்டர் ஃபிஷ், கிலங்கான் என்று வெரைட்டியான மீன்கள் ஏலம் போய்க் கொண்டிருந்தன. ‘‘கிங்கு –150.. 250... 280... 350...’’ என்று ஜரூராக நடந்து கொண்டிருந்தது ஏலம். மீன்களுக்குச் செல்லமாகப் பட்டப் பெயரெல்லாம் வைத்துக் கூப்பிட்டார்கள். பேய் என்றால் ஆக்டோபஸ்; கிங் என்றால் சுறா மீன், வாலு என்றால் திருக்கை மீன் என்று வெரைட்டியாகப் பெயர் வைத்து அழைத்தார்கள். எட்டு கால் பேய் ஒன்று 350 ரூபாய்க்கு ஏலம் போனது.

வாலிநோக்கம் கடலைச் சுற்றி எக்கச்சக்க தீவுகளைச் சொன்னார்கள். யானைப் பாறைத் தீவு, நல்ல தண்ணித் தீவு, உப்புத் தண்ணித் தீவு, சல்லித் தீவு, முயல் தீவு, அப்பா தீவு.. என்று சரியான தீபகற்பம்தான் வாலிநோக்கம். ஆனால், இந்தத் தீவுகள் கடல் பாதுகாப்பு வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால், பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. மீன் பிடிக்கப் போகும்போது, மீனவர்கள் மட்டும் காற்று- மழை - புயல் என்றால், இந்தத் தீவுகளில் ஒதுங்கிக் கொள்ளலலாம். அவர்களுக்குக்கூட முறையான அனுமதி வேண்டும். வாலிநோக்கத்தில் பவளப்பாறையும் உண்டென்று சொன்னார்கள். நமது ரெஸார்ட்டில் இருந்தே பவளப்பாறைத் தீவைப் பார்க்கலாம் என்று ஓர் பொத்தாம் பொதுவாக ஓர் இடத்தில் கையைக் காட்டினார்கள். லாங் ஷாட்டிலேயே எல்லா தீவுகளையும் ரசித்துக் கொண்டோம்.

கடற்கரை டூர் என்றால், மீன் உணவு இல்லாமலா? மீன் குழம்புத் தோசையை முடித்துவிட்டு, வாலிநோக்கத்தை விட்டுக் கிளம்ப மனசே இல்லை.

பவளப்பாறைத் தீவு
பவளப்பாறைத் தீவு
அரியமான் மீன் ஃப்ரை
அரியமான் மீன் ஃப்ரை
அரியமான்
அரியமான்

ராமேஸ்வரம் அல்லது ராமநாதபுரம் வருபவர்களுக்கு வாலிநோக்கம் தவிர, இன்னொரு சிறப்பான ஸ்பாட் உண்டு. அரியமான் என்றொரு பீச், செம பரபரப்பான கடற்கரைச் சுற்றுலாத் தலம். சென்னை மெரீனா பீச், திருச்செந்தூர், தூத்துக்குடி, கடலூர் பீச் மாதிரி எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது அரியமான். ராமநாதபுரத்தில் இருந்து 27 கிமீ தொலைவில், ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஒரு சாலை பிரியும். சைன் போர்டு இருப்பதால், அலைய வேண்டியதில்லை.

கடற்கரைக்குப் பக்கத்திலேயே `Joe's Beach Shack' என்றொரு ரெஸார்ட் இருக்கிறது. வீக் எண்ட்டில் ட்ரிப் அடிக்கும் பேச்சுலர்கள், குடும்பத்தினர்களுக்கு சரியான ஆப்ஷன் இது. இங்கேயும் கன்டெய்னர் ஸ்டேதான். ஒவ்வொரு கன்டெய்னரையும் ரூம்களாக்கி, நீமோ, டோரி என கார்ட்டூன் பெயர்களாக்கி இருந்தனர். தோட்டத்தில் வாக்கிங் போகும்போது, மயில்களெல்லாம் நம்முடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொண்டது செம இன்ட்ரஸ்டிங்.

அரியமான் ரெஸார்ட்
அரியமான் ரெஸார்ட்
அரியமான் சவுக்குத் தீவு
அரியமான் சவுக்குத் தீவு
மதுரை அருகே `வாலிநோக்கம்' பீச்... மீன் குழம்பு தோசையும், குருவிரொட்டியும் ரெடி! Long Drive போலாமா-3

சில இடங்களில் அலை அதிகம் வரும் என்றார்கள்; சில இடங்களில் அலையே வராது; தைரியமா குளிங்க என்றார்கள். ஆனால், எல்லா இடத்திலும் யாரோ ஒருவர் கடற்கரையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தனர். கடற்கரைக் குளியல் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக தனியார் அருவி, நீச்சல் குளமெல்லாம் கட்டி வைத்திருந்தார்கள். 30 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கட்டணம் உண்டு.

அரியமான் கடற்கரையில் கிராமத்து ஸ்டைலில் சுக்குக் காபி, பருத்திப் பால், தேநீர், குச்சி ஐஸ், குருவி ரொட்டி, கமர்கட் எல்லாம் ஜரூராக சேல்ஸ் ஆகிக் கொண்டிருந்தன. குச்சி ஐஸைச் சுவைத்தபடி ஏகப்பட்ட இளசுகள், சிறுசுகள், வயதானவர்கள் என்று அரியமான் மணலில் நின்றபடி அந்தமானில் இருப்பதைப்போல் ஃபீல் செய்து கொண்டிருந்தார்கள்.

பல விஷயங்களை அடிக்கடி பார்ப்போம்; ஆனால் அதில் சில விஷயங்கள் முதல் தடவை பார்ப்பதுபோல் என்றுமே வியப்பாகத்தான் இருக்கும். அரியமான் கடற்கரையும், வாலிநோக்கம் கடலும் அப்படித்தான்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு