Published:Updated:

வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் ஊர்சுற்றிகள்... லாக்டௌன் காலத்தில் என்ன செய்கிறார்கள்?

ஊர்சுற்றிகள்

வீட்டில் அடைபட்டு இருக்கும் ஊர் சுற்றிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தோம்.

வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் ஊர்சுற்றிகள்... லாக்டௌன் காலத்தில் என்ன செய்கிறார்கள்?

வீட்டில் அடைபட்டு இருக்கும் ஊர் சுற்றிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தோம்.

Published:Updated:
ஊர்சுற்றிகள்

பயணம் என்பது விவரிக்கமுடியாத நுட்பம். இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி உண்டு. பயணிகளின் வாழ்க்கை தொடங்கும் இடம் சாலைதான். இப்போது அதற்கு வழியின்றி, வீட்டில் அடைபட்டு இருக்கும் ஊர் சுற்றிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தோம்.

சாலை
சாலை

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மீனாட்சி, இதுவரை 70 நாடுகளில் கால் பதித்துள்ளார். பயணத் தாகத்தோடு கோவையில் காரை ஸ்டார்ட் செய்தால் நிற்கும் இடம் லண்டனாகவோ, ரஷ்யாவாகவோதான் இருக்கும். அவ்வளவு தூரம் அசராமல் பயணம்செய்யும் மீனாட்சிக்குச் சாலையின் மீது அவ்வளவு பிரியம். தற்போது அனைத்துத் தொழில்களும் முடங்கியிருக்கும் நிலையில் வீட்டில் இருக்கும் நேரத்திலும் அடுத்த கார் பயணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீனாட்சி - சீனப் பெருஞ்சுவரில்
மீனாட்சி - சீனப் பெருஞ்சுவரில்

``கார் எடுத்துக்கொண்டு டிரைவிங் கிளம்பும் அந்த உணர்வை இந்த க்வாரன்டைனில் நிறையவே இழந்திருக்கிறேன். பயணத்தில் மொழியைத் தாண்டி மனுஷனுக்கும் மனுஷனுக்கும் ஒரு கனெக்ட் இருக்கும். அது ரொம்ப அழகா இருக்கும். இந்த க்வாரன்டைனில் அதை மிஸ் பண்ணுகிறேன்." என்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
லாத்வியாவில்
லாத்வியாவில்
22 நாடுகளைக் கடந்து செல்லவேண்டிய பயணம்

மீனாட்சியின் பயணத்தில் அவருக்குக் கிடைத்த நம்பிக்கை மனிதர்கள்தான். ``ஒரு முறை கோவையிலிருந்து லண்டனுக்கு காரில் சென்றுகொண்டிருந்தோம். எல்லாமே சரியாகத் திட்டமிட்டும், தாய்லாந்து பார்டரில் பர்மிட் இல்லை என்று சொல்லி நிறுத்திவிட்டார்கள். 22 நாடுகளைக் கடந்து செல்லவேண்டிய பயணம் அது. இரண்டாவது நாட்டைத் தாண்டுவதற்குள்ளேயே முடங்கிவிட்டோம். எங்களிடம் எல்லா பர்மிட்டும் இருந்தது. நாங்கள் கிளம்பும் வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. தாய்லாந்து செல்வதற்குள் அங்கே புதுச் சட்டம் ஒன்றை இயற்றி பர்மிட் முறையை மாற்றிவிட்டார்கள். அதனால், நாங்கள் வைத்திருந்த பர்மிட் செல்லுபடியாகவில்லை. மூன்று நாள்கள் தாய்லாந்திலிருந்து வெளியேற முடியாமல் கஷ்டப்பட்டபோது நிறைய நண்பர்கள்தான் உதவிசெய்தார்கள். தாய்லாந்தைச் சரியான நேரத்தில் தாண்டவில்லை என்றால், மற்ற நாடுகளுக்கான அனைத்து விசாவும் காலாவதியாகியிருக்கும். ஒவ்வொரு முறையும் நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்குப் பெரிய நம்பிக்கை தருகிறார்கள்." என்றபடி நம்பிக்கை மொழிகளைப் பகிர்கிறார் மீனாட்சி.

மாஸ்கோ நகரில்
மாஸ்கோ நகரில்

இந்தியா முழுவதையும் சுற்றிவிட்டு இப்போது வீட்டில் ரெஸ்ட் என்ற பெயரில் வீட்டில் இருந்தபடியே Zoho நிறுவனத்துக்குப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் ஹர்ஷவர்தன். சென்னையில் இருந்தாலும் எப்போதும் இமயமலை தன்னைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது என்கிறார். இந்திய ராணுவத்துடன் இமயத்தில் மலை ஏறுதல் பயிற்சி பெற்றவர் ஹர்ஷா. கடைசியாக 19,700 அடி உயரச் சிகரத்தை ஏறிவிட்டுத் திரும்பும்போது ஒரு பனிப்புயலில் சிக்கிக்கொண்ட கதையை விவரித்தார்.

ஹர்ஷவர்தன்
ஹர்ஷவர்தன்

``இந்த வருஷம் stok kangri மலையில் செம பனி. கடைசியாக மலை உச்சிக்குச் சென்று வந்தது நாங்கள்தான். அதிக பனி காரணமா இப்போது யாரையும் விடுகிறது இல்லை. வெறும் 6,500 ரூபாய்தான் செலவு செய்தோம். 6 நாள் ஆகியது மலை ஏறிவிட்டுத் திரும்புவதற்கு. எடை எடுத்துக்கொள்ளக்கூடாது என கேமரா போன்ற எந்த விஷயங்களையும் எடுத்துக்கொள்ளவில்லை. லாரியிலும், நடந்தும்தான் சென்றோம். பேஸ் கேம்ப்பில் இருந்து உச்சிக்குச் செல்லும் வழியில் பயங்கரமான பனி. வழக்கமாக இரவு வந்துவிட்டால் பனி எல்லாம் பாறை போல கடினமாகிவிடும். ஆனா, இந்த முறை அப்படியே மெத்மெத்துனுதான் இருந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைத்தபிறகும் காலை, தோண்டி வெளியே எடுக்கவேண்டும். இடுப்பு வரை பணியில் நடப்பது சாதாரண விஷயம் இல்லை. 10 ஸ்டெப் எடுத்து வைத்தால் ரெஸ்ட் தேவைப்படும். மலை ஏற வந்திருந்த 25 நபர்களில் நாங்களும், ஜெர்மனியிலிருந்து வந்திருந்த ஒரு சிலருமே உச்சிக்குச் சென்று வந்தோம். மலை ஏறும்போது கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள். பாதிப்பேருக்கு மேல் திரும்பிச் சென்றுவிடுவார்கள். இந்தமுறை பல சவால்கள். மலை உச்சியைத் தொட்டவுடன் பனிப் புயல் வந்ததால் அங்கேயே மாட்டிக்கொண்டோம். எது காற்று, எது மலை என்றே தெரியாது. மொத்தமும் வெள்ளையாக இருக்கும். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். திரும்பிச் செல்வது பெரிய காரியம் இல்லை என்று தைரியத்தை மட்டும் விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் பத்திரமாக வந்துசேர்ந்தோம்." என்கிறார் ஹர்ஷா.

ஸ்டாக் கங்ரி சிகரத்தில்
ஸ்டாக் கங்ரி சிகரத்தில்

இப்போது அடுத்து kang yatse சிகரத்துக்குச் செல்ல திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். கொரோனா இருக்கிறதோ இல்லையோ, பயணம் இல்லையென்றால் மனசும், உடலும் நோயாளியாகிவிடும். உறுதியும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்துவிடும். கொரோனா முடிந்தாலும் பயணத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவே முடியாது என்கிறார்.

இமயமலை ட்ரெக்கிங்
இமயமலை ட்ரெக்கிங்

இரண்டு நாளில் இந்தியாவின் கடைசி கிராமத்திலிருந்து உங்களால் சென்னைக்கு வரமுடியுமா?

`என்னுடைய கடைசிப் பயணத்தில் நான் அப்படித்தான் வந்தேன்' என்று மிரட்சியைக் கிளப்பினார் பூங்கதிர்வேலன். தமிழ்நாட்டிலிருந்து பல ஆண்டுகளாக எண்டியூரன்ஸ் பயணம் மேற்கொள்பவர். பிரபலமான `Iron Butt' சாகசத்தை முடித்திருக்கும் பைக்கர். க்வாரன்டைனுக்கு முன்னாள் 5 நாள் லீவு எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து உத்தரகாண்டுக்கு டீ குடிக்கச் சென்றிருக்கிறார். அதுவும் இந்தியாவின் கடைசி கிராமம் எனப்படும் மனா கிராமத்திற்கு.

பூங்கதிர்வேலன்
பூங்கதிர்வேலன்

``பத்ரிநாத்தில் இந்தியாவின் கடைசி டீக்கடை என்று சொல்லப்படும் ஒரு கடை இருக்கு. அங்க போய் டீ குடிச்சிட்டு வருவதுதான் திட்டம். வழியில் ஏகப்பட்ட சவால்கள். பனி அதிகம் என்பதால் நிலச்சரிவுகள் இந்த முறை ரொம்பவே அதிகமா இருந்தது. முதல் நாளே ஹைதராபாத் தாண்டிட்டோம். ஆனால், மத்தியபிரதேஷ் பார்டர் கிட்ட பயங்கரமான பூச்சி தொல்லை. ஹெல்மெட்டை ரெண்டு நிமிஷம் மூடினா அவ்வளவுதான் பூச்சியாயிடும். ரோட்டைப் பார்க்கவே முடியாது. ரோடு முழுக்க எந்தக் கடையும் இல்லை. ரொம்ப தூரம் பயணிச்சு ஒரு தாபாவைக் கண்டுபிடிச்சு சாப்பிட்டு ஒரு இடத்துல டென்ட் போட்டு தங்கிட்டோம். டெல்லியில்-ஹிரிதுவார் ரூட்டில் ரோடு வேலை நடந்துட்டு இருக்குறதால் ஊருக்குள்ள புகுந்துதான் போனாம். டெல்லிக்குப் பிறகு பாதி தூரம் ஆஃப்ரோடுலதான். நாங்கள் பிளான் பண்ணதை விட டைம் ரொம்ப அதிகமாயிடுச்சு. 3 நாள் ஆச்சு அந்தக் கடைக்குப்போக. அப்புறம் இமயமலையிலேயே ஒரு இடத்துல தங்கிட்டு கடைசி நாள் கீழ வந்து மத்திய பிரதேஷ்ல ஒரு இடத்துல தங்கினோம்.

இந்தியாவின் கடைசி தேநீர்க் கடை
இந்தியாவின் கடைசி தேநீர்க் கடை

காலையில் எழுந்து சென்னை எவ்வளவு தூரம்னு பாக்குறப்போ 21 மணிநேரம் டிராவல் பண்ணணும்னு கூகுள் காட்டுச்சு. வெயில் மழை எதுவும் பார்க்கலையே. அன்னைக்கு நைட்டு எப்புடியோ 18 மணிநேரம் தொடர்ந்து ரைடிங். சென்னைக்கு வந்துட்டோம்" என்றார்.

பூங்கதிர்வேலனுக்குத் தன் பயணம் பல நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறதாம்.

பத்ரிநாத் செல்லும் வழியில் நிலச்சரிவு
பத்ரிநாத் செல்லும் வழியில் நிலச்சரிவு
நம்பிக்கை கொடுத்த ஒரு லைட் பல்பு

``ஒரு முறை சிக்கிம்மில் இருக்கும் ஜீரோ பாயின்ட் போய்கிட்டு இருந்தோம். திடீர்னு வெப்பம் 10 நிமிஷத்தில் மைனஸ் டிகிரிக்குப் போயிடுச்சு. கிளவுஸ், ஜாக்கெட்டைக்கூட எடுக்க முடியலை. சுத்தி இருட்டுதான் வேற எதுவும் இல்லை. எதுவும் செய்யமுடியாமல் பைக்கை நிறுத்தியப்போ ஒரு நொடி ஒரு வெளிச்சம் ஒரு இடத்தில் இருந்து வந்துபோச்சு. ரெண்டு செக்கெண்டுதான் அந்த வெளிச்சம். அங்க ஏதோ இருக்கு, எப்படியும் உசுரு பொழச்சிருவோம்னு நம்பிக்கையில பைக்கை ஸ்டார்ட் பண்ணி அந்த இடத்துக்குப் போனேன். பைக்கை அப்படியே போட்டுட்டு வீட்டுக் கதவை முரட்டுத்தனமா தட்டினோன். ஒரு பெரியவர் வந்தார். என்னை எதுவுமே கேட்கவில்லை. என் முகத்தைப் பார்த்தார். நெருப்பு பத்த வெச்சு குளிர் காயச் சொன்னார். டீ போட்டுக்கொடுத்தார். நான் குளிர் காஞ்சிட்டு உட்கார்ந்து இருக்கப்போ அவர் மகன் சொன்னான். என் அப்பா முதல் முதலா  டீ போட்டிருக்கார்னு" நெகிழ்ச்சியும், நம்பிக்கையுமான தருணங்கள் வாழ்க்கையில் எப்போதுமே தேவை என்கிறார் பூங்கதிர்வேலன்.

சிக்கிம்மில் உதவியவர்
சிக்கிம்மில் உதவியவர்

மூவருமே ஒரே மனதாக சொன்ன விஷயம் இதுதான். க்வாரன்டைன் நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் அடைபட்டிருக்கும் அனைத்துப் பறவைகளுக்கும், அவர்களின் பயணமே ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளது. கடல் தாண்டும் பறவைகளுக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி வர நம்மிடம் இருக்கும் மூலதனங்களில் சிறந்தது நம்பிக்கைதான்.