Published:Updated:

தொடங்குகிறது ரயில் சேவை... பாதுகாப்பான பயணத்துக்கு என்ன செய்ய வேண்டும்? #ExpertOpinon

ரயில் சேவை
ரயில் சேவை

ஊரடங்கு முடிந்தவுடன் அனைவரும் ஒரே நேரத்தில் பயணிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவசியத் தேவை உள்ளவர்கள் மட்டும் முதலில் பயணிக்க வேண்டும்.

'கொரோனாவோடு வாழ்வோம்' என்ற கருத்தாக்கத்துக்குள் நாடே நுழையத் தயாராகிவிட்டது. ஊரடங்கு முடிவடைவதற்கு முன்பே பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. இந்த நிலையில், ரயில் சேவையும் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கவுள்ளது. அதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது.

Train
Train
Representational Image

இந்த நிலையில் விகடனின் கொரோனா அப்டேட்ஸ் என்ற சிறப்புப் பக்கத்தில் வாசகர் சி.கிரிநாதன், ஊரடங்கு முடிந்த பின்பு ரயில் பயணம் செய்யும்போது கூட்ட நெரிசலில் பாதுகாப்பாக நோய்த்தொற்று ஏற்படாமல் பயணம் செய்ய முடியுமா? இதுபோன்ற தருணங்களில் பயணிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். வாசகரின் கேள்விக்குப் பதிலளிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சித்ரா.

``ஊரடங்கு நிறைவடைந்த பின்பும் சரி, அதற்கு முன்பாகவே ரயிலில் பயணிக்க நேர்ந்தாலும் சரி, கூட்ட நெரிசலைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் அவசியம். ரயிலில் ஒரு பயணிக்கும் மற்றவருக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும்.

தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா
தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா

ஊரடங்கு முடிந்தவுடன் அனைவரும் ஒரே நேரத்தில் பயணிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவசியத் தேவை உள்ளவர்கள் மட்டும் முதலில் பயணிக்க வேண்டும். விசேஷங்கள், விழாக்களுக்காகச் செல்பவர்கள் ரயில் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.

ரயில் பயணத்தின்போது கழிவறை, கை கழுவும் இடம் ஆகியவற்றை உபயோகித்தபின் நன்றாக சோப் போட்டு கைகளைக் கழுவ வேண்டும். பயணத்தின்போது குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை கைகளைக் கழுவ வேண்டும். பயணத்தின்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கண், மூக்கு, வாய் பகுதியில் வைக்கக் கூடாது. நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் உடல்நலம் சரியாகும்வரை பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.


 ரயில் நிலையம்
ரயில் நிலையம்

மின்சார ரயில், மெட்ரோ ரயிலிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு ரயில்வே போக்குவரத்துத் துறை ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அனைவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க, நிறுவனங்கள் அலுவலக வேலை நேரத்தை மாற்றி அமைக்கலாம். இன்னும் சில நாள்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை பார்ப்பதை நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இதுபோன்ற மாறுதல்கள் ஏற்படுவதற்கு தனிமனிதன் மட்டுமன்றி அரசு, நிறுவனங்கள் மற்றும் அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் தேவை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு