Published:Updated:

மாய நகரம் ஆஸ்லோவில் ஒரு நாள்! - வாசகி பகிர்வு #MyVikatan

Rinnozah Krishnakumar
Rinnozah Krishnakumar ( oslo )

இதுவரை நான் வாழ்ந்த / சென்று வந்த நாடுகளில் என்னை மிகவும் ஈர்த்தது ஸ்கேன்டிநேவிய நாடுகளே (Scandinavian countries)!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அழகு, அறிவியல் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என இவை எல்லாவற்றையும் தாண்டி, ஏதோ ஒரு தனித்துவம் (speciality) இந்த நாடுகளில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

நீண்ட நாள்களாகவே இந்த Scandinavian நாடுகளைப்பற்றி தனித்தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தாலும் அதை எழுத்தில் மாற்ற சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. போன வாரம் ஆஸ்லோ சென்று வந்ததிலிருந்து ஒஸ்லோவைப் பற்றியாவது முதலில் எழுதிவிட வேண்டுமென நினைத்திருந்தேன்.

oslo
oslo

இதற்குமுன் நார்வேயில் வேறு சில பகுதிகளுக்குச் சென்றிருந்தாலும் இம்முறை ஆஸ்லோ பயணம் கொஞ்சம் Special ஆக இருந்தது. இலங்கையின் உள்நாட்டு யுத்த காலகட்டத்தில் வாழ்ந்த, என்னைப் போன்றவர்களுக்கு ஆஸ்லோ என்றாலே எரிக் சோல்ஹைமும் (oslo erik solheim) ஆஸ்லோ உடன்படிக்கையும்தான் உடனடியாக நினைவுக்கு வரும். அதனாலேயோ என்னவோ இம்முறை ஆஸ்லோ சென்றபோது பழைய நினைவுகளும் மறைந்த சொந்தங்களும் கண்முன் வந்து சென்றது.

ஒரு காலத்தில், ஆஸ்லோ என்றாலே ஒரு பிரமிப்பும் மரியாதையும் மனதில் வந்து ஒட்டிக்கொள்ளும். இத்தனை நாடுகள் இருக்கும் போதிலும் இவர்கள் மட்டும் இங்கு தலையிட்டு நாட்டுப் பிரச்னைக்கு மத்தியஸ்தமான முறையில் பல விஷயங்களை முன்னெடுத்துச் செல்கின்றார்களே என எப்போதும் ஆச்சர்யப்படுவேன். அப்போதெல்லாம் என்றாவது ஒருநாள் ஆஸ்லோ செல்ல வேண்டும், என எண்ணியிருக்கிறேன்.

oslo
oslo

டென்மார்க்கிலிருந்து cruise ship மூலம் இம்முறை ஆஸ்லோ நோக்கிச் சென்றேன். 16 மணிநேர பயணம். ஆஸ்லோவை நெருங்க நெருங்க அதன் அமைதியான அழகு ஆராதனை செய்து வரவேற்கும்! Baltic கடலின் அலைகள் மனதை அள்ளிச் செல்லும். திரும்புமிடமெல்லாம் செல்வத்தின் செழிப்பு செறுக்குடன் மின்னுகிறது. இங்கு வாழும் மக்களும்கூட மிகவும் மகத்தானவர்களாக உள்ளனர். பணக்கார பகட்டு ஏதுமின்றி மிகவும் பண்பானவர்களாகப் பழகுகின்றனர்.

நார்வே தலைநகரம் ஆஸ்லோ, 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரம். இது உலகின் மிகப்பெரிய தலைநகரங்களில் ஒன்றாகும். ஆனால், அதன் மக்கள் தொகை வெறும் 7,00,000 மட்டுமே. ஏனெனில், அதன் பரப்பளவின் பெரும்பகுதி காடுகளாக உள்ளன.

oslo
oslo

1624-ம் ஆண்டில் ஆஸ்லோ தீ விபத்தால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மறுமலர்ச்சியின், தீவிரமான புதுப்பித்தல் மற்றும் மேம்பட்ட நகரத் திட்டத்தைத் தொடர்ந்து, முற்றிலும் புதிய நகரம் உருவாக்கப்பட்டு கிறிஸ்டியானியா என்று பெயரிடப்பட்டது. 1814-ம் ஆண்டில் நார்வே ஸ்வீடனுடன் ஒன்றிணைந்ததுடன் கிறிஸ்டியானியா வலுவான பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை அடைந்தது. 1905-ம் ஆண்டில் ஸ்வீடனுடனான தொழிற்சங்கம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நார்வே அதன் சுதந்திரத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஆஸ்லோ என்ற அசல் பெயரை 1924-ல் மீண்டும் பெற்றது.

நகரத்தின் மையம் ஆஸ்லோஃப்ஜோர்டுக்கு (Oslofjord) அருகில் உள்ளது. மக்கள் குடியிருப்புப் பகுதிகள் பசுமையான மலைகளூடாகப் பரவியிருக்கின்றன. நார்வேயின் இந்தப் பகுதியில் துருவ கரடிகள் (polar bears) இல்லை என்றாலும் காடுகளில் ஓநாய்கள் மற்றும் மூஸ் எனப்படும் மானினங்கள் உள்ளன (wolves and moose). இங்கு கோடைக்காலம் மிகக் குறுகியது என்றாலும் இனிமையாது.

oslo
oslo

எனினும் நான் தற்போது சென்றது winter என்றபடியால் மைனஸ் டிகிரி உறைபனியில் உடம்பு மரத்துப்போனாலும் ஆஸ்லோவின் ஒய்யாரமான அழகில் உள்ளம் உருகித்தான் போனது! முதல் நாள் பொழிந்த பனிமழையின் எச்சம் இன்னும் மிச்சமிருந்தது அங்கங்கே பஞ்சுக்கூட்டம்போல குவிந்து கிடந்த பனித்திட்டுகளில்... பார்க்குமிடமெல்லாம் இலைகளை இழந்த மரக்கிளைகளில் குருவிக் கூட்டங்கள் கூடுகட்டி, டிசம்பர் மாத கூடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.

ஐரோப்பாவின் சிறந்த கிறிஸ்துமஸ் சந்தைகள் ஜெர்மனியில் உள்ளன என்று பரவலான கருத்துள்ளது! ஆனால், ஸ்காண்டிநேவியா கிறிஸ்துமஸின் தாய்நாடு அல்லவா? பனிக்காலத்தில் எப்போதும் பனி (snow) இருக்கும்! Santa Claus வட துருவத்தில் (North pole) ஸ்வால்பார்டுக்கு மிக அருகில் வாழ்கிறார் என்ற கருத்தும் உள்ளது. ஆகையால் கிறிஸ்மஸ் சந்தைகளுக்கு வருகை தருவது டிசம்பர் மாதம் ஆஸ்லோவில் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸுக்கு முந்தைய வாரங்களில், ஒவ்வொரு நாளும் கிறிஸ்துமஸ் சந்தைகள் நடக்கின்றன.

oslo
oslo

நார்வே கிறிஸ்துமஸ் சந்தைகளில் விளக்குகள், பாரம்பர்ய நார்வே குளிர்கால உடைகள் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்ஸ், கையுறைகள் அல்லது சாக்ஸ், பாரம்பர்ய சுவையான உணவு வகைகள் மற்றும் wine ஆகியவற்றால் நிரம்பியுள்ளன.

வெண்பஞ்சு போன்ற பனி, வண்ணமயமான தேவதை விளக்குகள், மர வீடுகளில் ஒளிரும் தீச்சுடர்கள், ஒரு மந்தமான அமைதி, கிறிஸ்துமஸ் சந்தைகள் மற்றும் சூடான சுவைநிறைந்த நோர்டிக் உணவு ஆகியவற்றின் கலவையில் குளிர்காலத்தில் ஆஸ்லோ ஒரு அழகிய ரம்யமான மந்திர நகரம்.

ஆஸ்லோ
ஆஸ்லோ

ஸ்காண்டிநேவிய நாடுகள் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது! அதிலும் நார்வே, World’s riches country என்ற புகழாரத்தையும் தன்னகத்தே சூடிக்கொள்கிறது. அது உண்மையில் உண்மையா என்று வரலாற்று ரீதியாகப் பார்த்தால், நார்வே எப்போதும் ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கின் ஏழை உறவினராகவே ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி என்னுடைய டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே நண்பர்கள் பல சுவாரஸ்யமான விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்துகொள்வதால் நார்வேயைப் பற்றிய எனது புரிதலும் அறிதலும் ஏற்கெனவே எனக்கிருந்த ஆவலின் உந்துதலால் பலமடங்கானது.

நார்வே இத்துணை செல்வவளம் மிகுந்த நாடாகப் பரிணாமமடைய முதலாவது காரணமாக அதன் புவியியல் அமைப்பைச் சொல்லலாம். அதாவது, அதன் ஏராளமான நிலப்பரப்பு, கடற்கரை மற்றும் நீர்நிலைகளுடன் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையே உள்ளது. பூமியில் அது அமையப்பெற்றுள்ள நிலைப்பாடும் நார்வேக்கு பல வழிகளில் பயனளிக்கிறது. இந்நாடு இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அது சூழ்ந்த கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலிய வளம் நார்வேயை செல்வச் செழிப்பில் குளிக்க வைத்துள்ளது.

மாய நகரம் ஆஸ்லோவில் ஒரு நாள்! - வாசகி பகிர்வு #MyVikatan

நார்வேஜியன் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வளைதளத்தின் புள்ளி விவரப்படி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, நார்வேயின் மதிப்பு உருவாக்கத்தில் சுமார் 23% ஆகும் எனக் குறிப்பிடுகிறது! இது உற்பத்தித் துறையைவிட இரண்டு மடங்கு அதிகம்.

இத்துணை பிரம்மிப்பும் பிரமாண்டமும் நிறைந்த இந்த magical பூமியை இம்மியளவும் குறையா பிரம்மிப்புடன் சுற்றிப்பார்த்து முடிக்க இத்தனை நாள்கள் போதுமென வரையறை செய்யவே முடியாது! பார்க்கப் பார்க்க தெவிட்டாத அழகில் குழையக் குழைய நனைந்து கரைந்து, சிறு வயதில் பிரம்மிப்போடு படித்த ஓர் இடத்தை இன்று நேரில் சென்று பார்வையிடக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லி வீடு திரும்பினேன்!

- றின்னோஸா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு