Published:Updated:

`நீங்கள்தான் முதல் வகுப்பில் பயணிக்க வேண்டும்!' - மூதாட்டி - இளைஞரால் நெகிழ்ந்த விமான பணிப்பெண்கள்

நடப்பதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த விமான பணிப்பெண்கள் மனம் நெகிழ்ந்தனர். மூதாட்டியைத் தாய்போல கவனித்துக்கொண்டனர்.

மூதாட்டியுடன் ஜேக் மற்றும் பணிப்பெண்கள்
மூதாட்டியுடன் ஜேக் மற்றும் பணிப்பெண்கள்

கடந்த இரு நாள்களுக்கு முன், நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு புறப்பட விர்ஜின் அட்லாண்டிக் விமானம் ஒன்று தயாராக இருந்தது. வயலெட் ஏலிசன் என்ற 88 வயது மூதாட்டியும் லண்டன் செல்ல எகானமி கிளாஸ் டிக்கெட் எடுத்திருந்தார். லண்டனில் வசிக்கும் மகளைக் காண இந்த வயதிலும் வயலெட் விமானப் பயணத்துக்குத் தயாராக இருந்தார். லண்டனுக்குச் செல்ல சுமார் 8 மணி நேரம் பயணிக்க வேண்டும். வயதானவர்கள் எகானமி கிளாஸில் நீண்ட நேரம் அமர்ந்து பயணிப்பது சற்று சிரமமான விஷயம் அதே விமானத்தில் லண்டன் செல்ல ஜேக் லிட்டில்ஜான் என்ற இளைஞரும் தன் தாய் மற்றும் சகோதரியுடன் ஏறினார்.

முதல் வகுப்பு இருக்கையில் வயவெட் ஏலிசன்
முதல் வகுப்பு இருக்கையில் வயவெட் ஏலிசன்

வயதான மூதாட்டி ஒருவர் எகானமி கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் லிட்டில் ஜான் துணுக்குற்றார். லிட்டில் ஜான் யோசிக்கவே இல்லை. நேராக மூதாட்டியிடம் சென்றார். ''எக்ஸ்கியூஸ் மீ நீங்கள் பிசினஸ் கிளாஸில் பயணிக்கிறீர்களா?'' என்று மூதாட்டியிடம் கேட்டார். மூதாட்டியோ... 'என்ன விளையாடுகிறீர்களா..! என்கிற தொணியில் ஜானை நோக்கினார். 'உண்மையில்தான் நீங்கள் முதல் வகுப்பில்தான் பயணிக்கத் தகுதியானவர்' என்று கூறி மூதாட்டியைத் தன் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார்.

``நீங்க யாரு... வீட்ல யாருமில்ல" - கொள்ளையனைத் தடுத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

நடப்பதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த விமான பணிப்பெண்கள் மனம் நெகிழ்ந்தனர். மூதாட்டியைத் தாய்போல கவனித்துக் கொண்டனர். முதல் வகுப்புக்குரிய உணவு, பானங்கள், படுக்கை அனைத்தும் மூதாட்டிக்கு வழங்கி அவரை நெகிழ வைத்தனர். மூதாட்டியின் இருக்கையில் அமர்ந்து ஜான் லண்டன் பயணித்தார். லண்டனுக்கு விமானம் சென்றடைந்ததும் வயலெட் இருக்கைக்குச் சென்ற ஜான் அவரைப் பத்திரமாக வாசலுக்கு அழைத்து வந்தார். இருவரையும் சூழ்ந்துகொண்ட விமான பணிப் பெண்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். விமான பணிப் பெண் ஏமி என்பவர் விமானத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

வயலெட் மற்றும் ஜேக்
வயலெட் மற்றும் ஜேக்

``எத்தனையோ முறை விமானத்தில் சென்றிருக்கிறேன். கால்பந்து வீரர்கள், சூப்பர் மாடல்கள், ஹாலிவுட் ஸ்டார்கள் இவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால், என்னை வியக்க வைத்த பயணிகள் இவர்கள் இருவரும்தான்'' என்று தன் பதிவில் ஏமி கூறியிருந்தார். ஏமியின் பதிவு வைரலானதையடுத்து, லைக்குகள் குவிந்தன. ``எங்கள் விமானத்தில் நடந்த அழகிய அன்பு நிறைந்த கதை இது'' என்று விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பெருமிதப்பட்டுள்ளது. வயலெட்டுக்கு வாழ்நாள் முழுவதும் லண்டன் - நியூயார்க் மார்க்கத்தில் இலவசமாக முதல் வகுப்பு டிக்கெட் வழங்குவது குறித்தும் விர்ஜின் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.