Published:Updated:

6 ஏக்கரில் கனடாவில் தனித் தீவு... ரூ.19 லட்சம் பரிசு! - இந்திய வம்சாவளி இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்

துபாயில் நடந்த ஒரு போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவருக்கு ஒரு தீவு பரிசாகக் கிடைத்துள்ளது.

Brendan Lopes
Brendan Lopes

போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான பிரண்டன், தனது குடும்பத்தினருடன் துபாயில் வசித்து வருகிறார். துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் என்.பி.டி வங்கியின் ஒரு பிரிவான டிஜிட்டல் ஒன்லி லைஃப் ஸ்டைல் பேங்க் ( Digital only lifestyle Bank) கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில்தான் பிரண்டன் லோப்பஸ் ஒரு தீவைப் பரிசாக வென்றுள்ளார்.

தீவு
தீவு

கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே உள்ள ஹாஸ்பாயின்ட் தீவு, பிரண்டனுக்கு பரிசாகக் கிடைத்துள்ளது. அத்துடன், முதல் பரிசாக ஒரு லட்சம் திர்ஹாம்களை வென்றுள்ளார். இந்தத் தீவு, சுமார் 6 ஏக்கர் பரப்பளவுகொண்டது. அதாவது, 5 கால்பந்து மைதானத்தின் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தத் தீவு, சுமார் 50,000 முதல் 10,000 டாலர் மதிப்புகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியை 'கலீஜ் டைம்ஸ்' வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள பிரண்டன் லோப்பஸ், “எனக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை. எனது பெற்றோருடன்தான் வசித்துவருகிறேன். இப்போது, நான் ஒரு தீவுக்கு சொந்தக்காரன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்குக் கிடைத்துள்ள இந்தப் பரிசுத்தொகையைக்கொண்டு, எனது உறவினர்களுக்கு ஏதாவது உதவிசெய்ய வேண்டும். அந்தத் தீவைக்கொண்டு என்ன செய்யப்போகிறேன் என சத்தியமாக எனக்கு எதுவும் தெரியவில்லை.

எனக்கு 27 வயதுதான் ஆகிறது. என் வயதில் உள்ளவர்கள், இந்தத் தீவைக்கொண்டு என்ன செய்வார்கள் என எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலான நேரங்களில், என் வீட்டில் உள்ள அறையே முழுவதுமாக என்னிடம் இருந்ததில்லை. அந்தத் தீவை சென்று பார்த்துவிட்டு, அதன்பின் என்ன செய்வது என முடிவு செய்ய வேண்டும். ஆனால், என் வீட்டில் உள்ளவர்கள் ஏற்கெனவே நிறைய ஐடியாக்களை வைத்துள்ளனர். எங்கள் வீட்டு திருமணங்களை தீவில் நடத்தலாம் எனக் கூறிவருகின்றனர். ஏனெனில், இந்தியத் திருமணங்கள் பிரமாண்டமானதாக இருக்கும். எனவே, அவர்கள் அவ்வாறு கூறிவருகின்றனர். அந்தத் தீவைப் பெயர் மாற்றம் செய்ய சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பதுகுறித்து எனக்குத் தெரியாது. நான், 'துபாய்' என்று பெயர் வைக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.