Published:Updated:

ட்விட்டரை கலர்ஃபுல்லாக்கும் புடவை டிரெண்ட்! #SareeTwitter

ஆ.சாந்தி கணேஷ்

சுசானே பெர்னெட் என்கிற ஜெர்மன் நடிகையும் விதவிதமாக புடவைகட்டிய படங்களைப் பதிவேற்றி அசத்தி வருகிறார்!

#SareeTwitter
#SareeTwitter

கடந்த மூன்று நாள்களாக ட்விட்டர் பக்கம், செம கலர்ஃபுல்லாக இருக்கிறது. டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கிற பெண்கள் எல்லோரும், பட்டு, காட்டன், ஷிபான், சிந்தடிக் என்று விதவிதமாக புடவைகட்டி, தங்கள் பக்கத்தில் #SareeTwitter என்ற ஹேஷ்டேகில் தங்கள் புகைப்படங்களைப் பதிந்துவருகிறார்கள்.

நடிகை திவ்யா
நடிகை திவ்யா

டீன் ஏஜ் பெண்கள், தங்கள் அம்மாக்களின் புடவையைக் கட்டி புகைப்படம் எடுத்து பதிவேற்ற, புடவைகட்ட நேரமில்லாத பெண்கள் ஏற்கெனவே புடவைகட்டி எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி இந்தப் புடவைகட்டும் டிரெண்ட் வைபவத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

நடிகை கஸ்தூரியும் கிரேப் மெட்டீரியல் புடவைகட்டி செம கேஷூவல் லுக்கில் அசத்தியிருக்கிறார். நடிகை திவ்யா பந்தனாஸின் ஃபேன் கிளப் ட்விட்டர் பக்கம், திவ்யாவின் புடவைகட்டிய படத்தைப் பதிவிட்டு, 'இவரைவிட புடவையில் அழகாகத் தெரிபவர் யார்' என்று, மற்ற பெண்களை ஜாலி கேலி செய்திருக்கிறது. ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள், 'ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராய் புடவை அணிந்துதான் சென்றார். வாட் எ லேடி' என்று சிலாகித்திருக்கிறார்கள்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

திரைத்துறையைத் தாண்டி பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் செலிபிரிட்டிகள் தங்களுடைய புடவைப்படங்களைப் பதிவிட்டு வருகிற அதே நேரத்தில், சில பெண்கள் தாங்கள் குழந்தையாக இருந்தபோது புடவைகட்டி எடுத்த படத்தைப்போட்டு 'நான் அப்பவே #SareeTwitter தெரியுமா' என்று ஃபன் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர், 'எல்லா சந்தோஷங்களும் பெண்களுக்கு மட்டும்தானா' என்று கேட்டு, தங்கள் ஆண் குழந்தைக்கு அழகாக புடவைகட்டி, அந்தப் படத்தைப் பதிவேற்றி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் இப்படிப் புதுப்புது டிரெண்ட் அடிக்கடி நிகழ்கிற ஒன்றுதான். இந்த #SareeTwitter-ன் ஆரம்பம் எதுவென்று பார்த்தால், ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் சிலர் அழகழகான ஜிமிக்கி கம்மல்களைப் போட்ட தங்கள் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றி #Jhumka Twitter என்ற டிரெண்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ஜிமிக்கியில் ஆரம்பித்த இந்த டிரெண்ட், தற்போது புடவையில் வந்து கலர்ஃபுல்லாக நிற்கிறது. ஆண்கள் தங்கள் பங்குக்கு #VeshtiTwitter என ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

ஜெர்மன் நடிகை
ஜெர்மன் நடிகை

வயதான பாட்டிகளும் என்ஜாய் செய்துவரும் இந்த டிரெண்டில், இந்தியாவில் வசிக்கிற 'சுசானே பெர்னெட்' என்கிற ஜெர்மன் நடிகையும் தன்னுடைய விதவிதமாகப் புடவைகட்டிய படங்களை பதிவேற்றி அசத்தி வருகிறார். என்னிடம் புடவைகட்டிய புகைப்படங்கள் எதுவும் இல்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள் பெண்கள் சிலர். ஆண்களில் சிலர், 'நாங்களும் #KurtaTwitter, #SafaTwitter (ராஜஸ்தானில் அணிகிற ஒருவகை தலைப்பாகை) செய்வோம்ல' என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள். எது எப்படியோ, சமூகம் சந்தோஷமாக இருந்தால் சரி!