‘தல’ தோனியைக் குழப்புவதற்கு ஒரு கேள்வியைக் கேட்டால் போதும்; ‘கிரிக்கெட் பிடிக்குமா… பைக்ஸ் பிடிக்குமா’ என்று கேட்டால்… தோனி ஒரு நிமிடம் யோசிப்பார். அந்தளவுக்கு கிரிக்கெட்டுக்கு இணையாக பைக்குகளையும் நேசிப்பவர் தோனி. பேட்டிங்கில் மட்டுமில்லை; பைக்கிங்கிலும்… (அதாங்க பைக்கை வாங்கிக் குவிக்கிறது!) அவர் செஞ்சுரி அடித்திருக்கிறார்.
ஆம், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகள் தோனியின் கராஜில் வீற்றிருக்கின்றன. கவாஸாகி நின்ஜா H2, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், கான்ஃபெடரேட் X132 ஹெல்கேட் என்று இதில் பல சூப்பர் பைக்குகளும் அடங்கும்.
ஆனாலும், 2 ஸ்ட்ரோக் பைக்குகளும்… அதன் ‘தட் தட்’ பீட்டும்தான் தோனிக்கு ரொம்பவும் இஷ்டம்போல! அதிலும் யமஹா RD350 மீது தோனிக்குத் தனிப் பிரியம். காரணம், இதுதான் அவர் வாங்கிய முதல் பைக்கும்கூட! ஏற்கெனவே அவரிடம் யமஹா ஆர்எக்ஸ் 100, RD350, யெஸ்டி, பிஎஸ்ஏ, நார்டன் வின்டேஜ் என்று பல ‘டர்ர்ர்புர்ர்’ 2 ஸ்ட்ரோக் பைக்குகள் இருக்கும் நேரத்தில்… இந்த வாரம் புதிதாக ஒரு கஸ்டமைஸ் செய்யப்பட்ட யமஹா RD350 LC–யை இறக்கியிருக்கிறார் தோனி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள Blue Smoke Customs எனும் பைக் ரீ–மாடிஃபிகேஷன் சென்டரில் ரெடியான பைக். இது பைக்குகளை கஸ்டமைஸ்டு செய்யும் ஒரு வொர்க்ஷாப். இந்த வொர்க்ஷாப்பில் இருந்து ஏற்கெனவே ஒன்றிரண்டு பைக்குகளை வாங்கியிருக்கிறாராம் தோனி. இந்த யமஹா RD350 LC –யை ஏற்கெனவே ஆர்டர் செய்திருந்தாராம். இந்த ஆண்டு தனது 41–வது பிறந்த நாளின்போது லண்டனில் இருந்த அவர், தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்ததும், முதல் வேலையாக பைக்கை டெலிவரி எடுத்திருக்கிறாராம்.
ஏன் தோனிக்கு, யமஹா RD350 மீது இவ்வளவு காதல்னு பார்க்கலாம்.
முழுக்க முழுக்க மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தில் – டூயல்டோனில் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது இந்த RD350. இதற்குக் காரணம், இந்த கலர்தான் 1980–களில் ஒரிஜினலாக வந்த கலர் தீம். வழக்கமாக தோனியின் பைக்குகளில், பெட்ரோல் டேங்க்கில் அவரது ஜெர்ஸி எண் 7 என்பது பொறிக்கப்பட்டிருக்கும். 7 என்பது தோனியின் பிறந்த தினம் மட்டுமில்லை; இதுதான் அவருக்கு ராசியான நம்பரும் கூடவாம். இதிலும் அப்படித்தான் கஸ்டமைஸ் செய்யப்பட்டது என்றாலும், யமஹா RD350–ன் ஒரிஜினாலிட்டி மாறாமல் இதை ரெடி செய்திருக்கிறார்கள். அதே வட்ட வடிவ ரெட்ரோ ஸ்டைல் ஹெல்லைட்ஸ், சதுர வடிவ டெயில் லேம்ப், வட்ட வடிவ இரட்டைக் குடுவை அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஜினுக்கு பிளாக்ட்–அவுட் ஃபினிஷ் என்று இந்த யமஹா RD350-யைப் பார்த்தால் எல்லோருக்குமே பிடிக்கும்.

இதன் டேங்க்கை மட்டும் கொஞ்சம் காலத்துக்கு ஏற்ப மாடர்னாக மாற்றச் சொல்லியிருக்கலாம் தோனி. அதனால்தான் இந்த டேங்க் RD350–யைப் போல் இல்லாமல், முக்கோண வடிவ பேனல்களுடன் இருந்தது. சீட்டும் ஸ்போர்ட்டியாக… அப்படியே பின் பக்கம் Inclined ஆக… அதாவது ஸ்போர்ட்டி பைக்குகளில் இருப்பதுபோல் கொஞ்சம் ஏற்றமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
மற்றபடி இந்த பைக்கின் இன்ஜினில் கை வைக்கப்படவில்லை. அதே 350 சிசி லிக்விட் இன்ஜின்தான் என்றாலும், கூடுதல் பெர்ஃபாமன்ஸுக்காக சில ஆஃப்டர் மார்க்கெட் உதிரி பாகங்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

Lectron கார்புரேட்டர், V Force 4 Reed வால்வ் சிஸ்டம், Uni ஏர் ஃபில்டர், NGK எனும் வெறித்தனமான ஸ்பார்க் பிளக், Metmachex அலுமினியம் ஸ்விங் ஆர்ம், சிலிகோன் ரேடியேட்டர் கூலன்ட் ஹோஸ் என்று பைக்கின் மெக்கானிக்கல் அம்சங்களில் எக்கச்சக்க மாற்றம். ரெகுலரான RD350–ல் இருப்பது ஏர்கூல்டு இன்ஜின். அரசாங்கத்தின் எமிஷன் நார்ம்ஸுக்காக இந்த RD350 LC-ல் இருப்பது லிக்விட் கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டது. அதனால், இதன் பெர்ஃபாமன்ஸ் நிச்சயம் RD350–யைவிட ஸ்மூத்தாக இருக்கும். லிக்விட் கூல்டு இன்ஜின் என்பதால், மாசு வெளியேற்றமும் குறைவாக இருக்கும். யமஹா RD350–ன் எக்ஸாஸ்ட் பீட் தோனிக்கு மட்டுமில்லை; பைக் பிரியர்கள் எவருக்கும் பிடிக்கும். இதில் JL ட்வின் எக்ஸாஸ்ட் பொருத்தியிருக்கிறார்கள். ஆக்ஸிலரேஷனின் போதே ‘பட் பட்’ என குட்டி ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுபோல அதிரும் இந்த எக்ஸாஸ்ட்.
யமஹா RD350 பைக்கை ஒரு பக்கா 80’ஸ் கிட் பைக் என்று சொல்லலாம். காரணம், 1980–ல் இருந்து 1983 வரை.. வெறும் 4 ஆண்டுகள்தான் இந்த யமஹா RD350 LC தயாரிப்பில் இருந்தது. அதன் பிறகு புகை மாசுக் கட்டுப்பாடு, புதுப் புது தொழில்நுட்பங்கள் போன்ற வரவால்… RD350 LC–யை நிறுத்தியது யமஹா. அதற்குப் பதிலாக RZ350, RD350LC II and RD350 YPVS என்று பல பைக்குகள் வந்தன.

நம் நாட்டில் பலரது கனவு பைக்காக இருந்த இந்த டூவீலர், இந்தியாவில் லாஞ்ச் செய்யப்படவில்லை என்பதுதான் ஹைலைட். இதை நம் ஊரில் ஓட்ட வேண்டும் என்றால், இறக்குமதி செய்துதான் வாங்க வேண்டும். அதனாலேயே RD350 LC என்பது தனவான்களின் பைக்காக இருந்தது. இப்போது தோனியின் பைக்காக உலா வருகிறது யமஹா RD350 LC. பெர்ஃபாமன்ஸில் இந்த RD350 எப்படி என்பதை, என்போன்ற 80’ஸ் கிட்ஸைக் கேட்டால் தெரியும். இதன் பவர் 49 bhp. இது இப்போதையே கேடிஎம் 390 டியூக்கைவிட அதிகம் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கினால்… ஜிவ்வென எகிறும் இந்த RD350. இதன் டாப் ஸ்பீடு 140 கிமீ–க்கு மேல்... இது ஓடாது... பறக்கும்.
இப்போ சொல்லுங்க… இப்படிப்பட்ட பைக்கை தோனிக்குப் பிடிக்காம இருக்குமா?