ஒருபுறம் இயற்கை சீரழிவுகளும், உயிரினங்களும் அழிந்து வந்தாலும், மறுபுறம் அதை மீட்டெடுக்க சில மனிதர்கள் அயராது போராடி வருகிறார்கள். அப்படி தங்களுடைய தொடர் உழைப்பால் போராடி, சூழலியல் மாற்றத்தை ஏற்படுத்தும் மனிதர்களை அங்கீகரிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், ஆண்டுதோறும் `சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ (Champions of the Earth) என்ற விருதை வழங்கி வருகிறது.

2022-ம் ஆண்டின் `சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருதுக்கு அஸ்ஸாமைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளரான பூர்ணிமா தேவி பர்மன் (Purnima Devi Barman) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு நவம்பர் 22 செவ்வாய்க்கிழமையன்று வெளியானது.
அதாவது, ஹர்கிலா என்று அஸ்ஸாமில் பரவலாக அறியப்படும், நாரை இனத்தைச் சேர்ந்த பறவை இனம், அழிந்து வரும் நிலையில் உள்ளது. இதை அழிவிலிருந்து காக்கத் தொடர்ந்து போராடி வருகிறார் பர்மன். இதற்காக `ஹர்கிலா ஆர்மி’ என்ற பெண்களின் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்தக் குழுவில் உள்ள பெண்கள் ஹர்கிலா பறவையின் உருவம் பொறிக்கப்பட்ட ஜவுளிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தங்கள் பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்கிறார்கள். பறவையின் முட்டைகளை குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாத்து பராமரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகளின் இவ்விருது பல பிரிவுகளில் வழங்கப்பட்டாலும், ஹர்கிலா ஆர்மியை வழிநடத்தி வருவதற்காகத் `தொழில்முனைவோரின் பார்வை’ (Entrepreneurial Vision) என்ற பிரிவில் பர்மனுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது குறித்து பூர்ணிமா தேவி பர்மன் தெரிவிக்கையில், ``தாயின் மடியில் வீட்டிலேயே சிறந்த கல்வி தொடங்கும் என்பதால், இந்த விருதைப் பூமித் தாய் மற்றும் கிரகத்தின் அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். அதோடு இப்பறவை இனத்தை அழியாமல் பாதுகாக்கும் ஆர்வலர்கள் அனைவருமே தாய்மார்கள் மற்றும் குடும்பப் பெண்கள். எங்களின் வழியில் பல சவால்கள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு சமூக இயக்கத்தை உருவாக்கியுள்ளோம். அதை நாங்கள் தொடர்ந்து மக்களின் உதவியுடன் முன்னெடுப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
வாழ்த்துகள் ஹர்கிலா ஆர்மி..!