Published:Updated:

ஏன் இத்தனை விமர்சனங்கள்? - ஐடி இளைஞர்களின் மறுபக்கம்! #MyVikatan

Representational Image
Representational Image

பிரபல பேச்சாளர் முதல் திண்ணையில் உட்கார்ந்து புரளி பேசும் கிழவி வரை ஒரு ஏளனமான குரலில் இந்தப் பிள்ளைகளை விமர்சிப்பது அதிகமாகிவிட்டது.

அலாவுதீனுக்கு கிடைத்த அற்புத விளக்காய் இந்தியாவுக்கு கிடைத்தது கணினியும் கணினி சார்ந்த தொழில்நுட்ப வேலைகளும். இது கடந்த 20+ ஆண்டுகளாக இந்திய வேலை வாய்ப்பு ஏஜென்சிகளிடம் வயப்படாமல், பல பட்டதாரி இளைஞர்கள் `வறுமையின் நிறம் சிகப்பு' கமல்ஹாசன்களாய் சுற்றித்திரியாமல் பார்த்துக்கொண்டது. சில பேரால் மிகைப்படுத்தியும் (OVERRATED), பல பேரால் குறைத்து மதிப்பிட்டும் (UNDERRATED) பேசப்படும் இந்தத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா? பிரபல பேச்சாளர் முதல் திண்ணையில் உட்கார்ந்து புரளி பேசும் கிழவி வரை ஓர் ஏளனமான குரலில் இந்தப் பிள்ளைகளை விமர்சிப்பது அதிகமாகிவிட்டது. ஐடி-ன்னாலே அப்படித்தான் என்று பொதுவாக சில கடினமான குற்றச்சாட்டுகளை சுலபமாக முன் வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஆட்டமும், அமர்க்களமும், டேட்டிங்கும் அவுட்டிங்ம், பார்ட்டியும் லூட்டியும், பணத்திமிரும் ஒழுங்கீனமும் ஒன்றாக இவர்களைக் குத்தகைக்கு எடுத்ததுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டுள்ளனர்.

Representational Image
Representational Image

ஐந்து நாள்கள் அவசர அவசரமாக ஒரு இயந்திரம்போல கிளம்பி பல போக்குவரத்து நெரிசலை முந்தியடித்து ஊர் தாண்டி இருக்கும் அலுவலகம் சேர்ந்து ஆயிரம் ஈ-மெயில்களைப் படித்து நூறு போன் கால்களில் பரிச்சயமில்லாத மொழியை உன்னிப்பாக கவனித்து, சென்ற நாள் வேலையை ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து, இந்த நாள் வேலையை அஜெண்டாவாக அரங்கேற்றி அரண்டு போயிருக்கும் மனம் இரண்டு நாள்கள் பீச் காற்றை சுவாசிக்க செல்லுமாயின் அதில் எந்தத் தவறும் இல்லை. இவர்கள் அனைவரும் டிஸ்கோவுக்கும், கும்மாளத்துக்கும் செல்வதாக நீங்கள் நினைத்திருந்தால் சற்று உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். எப்போதும் தொலைக்காட்சித் தொடரில் மூழ்கி இருக்கும் மற்றவர்கள் முன் சனி, ஞாயிறுகளில் பல அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு கணினியும், கணக்கும் புகட்டி, பல ஏரிகளை தூர்வாரி, பல சாலைகளை சுத்தம் செய்து, பல சுவர்களை ஒப்பனை செய்து, நீங்கள் பீச்சில் போடும் குப்பைகளை அகற்றி சிறிதேனும் இந்தச் சமூகத்துக்காக மெனக்கெடுபவர்கள் இந்த ஐடி பிள்ளைகள்தான்.

பொறுப்பில்லாத பசங்கன்னு பகீரங்க குற்றத்தை ஏற்கும் இந்த பிள்ளைகள்தான் மாதம் தவறாமல் வருமான வரி கட்டும், வருடம் தவறாமல் ஐடி returns பதிவு செய்யும் பொறுப்பான குடிமகன்கள். ஐடி வேலையைத் துறந்து விவசாயம் செய்ய வந்த இளைஞர்களைப் பற்றி அடிக்கடி நாளிதழ்களில் செய்திகளை பார்க்கிறோம். அடுத்த ஒரு பொதுவான குற்றச்சாட்டுக் கும்பலாக பார்ட்டி செய்வது என்று. மன்னிக்கவும். வெளியிலிருந்து பார்க்கும் சிலரால் இதை ஆழமாகப் புரிந்துகொள்ள இயலாது. ஒவ்வொரு காலாண்டுக்கும் அல்ல ஒவ்வொரு மாதத்துக்கும் அல்ல ஒரு வருடத்துக்கும் இந்தப் பிள்ளைகள் உழைத்து பெரு லாபம் ஈட்டிக்கொடுக்குமாயின் அவர்களது கிளைன்ட்ஸ் கொடுக்கும் ஒரு மிகச்சிறிய தொகையை இவர்கள் ஒரு ரெஸ்ட்டாரன்ட் சென்று சாப்பிட்டு வருகிறார்கள். அம்மாவின் கைப்பக்குவதில் 21 ஆண்டுகள் சுவையாய் சாப்பிட்டுப் பழகிய நாக்கு நகரத்தின் மெஸ்களிலும், ஹாஸ்டல்களிலும் வேகாததைத் தின்று செத்துப்போயிருக்கும். அது ஒரு நாள் போகும் இந்த காஸ்டலி ரெஸ்ட்டாரன்ட் சாப்பாட்டுக்காக பல நாள்கள் பட்டினி இருந்திருப்பதைப் பெரும்பாலானோர் புரிந்திருக்க இயலாது.

தங்கள் கனவை தொலைத்தாவது இந்தப்பிள்ளைகள் தன் பெற்றோர் கனவை, குடும்பத்தின் கனவை, உடன்பிறந்தோர் கனவை நிறைவேற்றி வைப்பது அழகினும் அழகு.

``இந்த ஐடி பசங்க தான்பா வீடு விலையை ஏற்றி விட்டது’’. இந்த குற்றச்சாட்டை ஒட்டுமொத்த சமூகமும் எப்படி இவர்கள் மீது வைக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. எந்த ஒரு ஐடி இளைஞனும் எங்களிடம் மிக அதிகமா பணம் இருக்கிறது. நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறுவதில்லை. ஐடி என்றாலே பணப்புழக்கம் அதிகமா இருக்குமென்று ஒரு மாயையை இன்னமும் நினைத்துக்கொண்டு பிஸ்கட் முதல் வீடு வரை 10 சதவிகிதம் விலையை ஏற்றி கூறச்செய்து பழக்கப்படுத்தியது ஒட்டுமொத்த சமூகம்தான். தி.நகரில் 10 ரூபாய் விற்கும் டீ OMR இல் 20 ரூபாய் விற்குமாயின், இந்தப் பிள்ளைகள் ஒரு டீக்காக தி.நகர் செல்ல இயலாது. அந்த 20 ரூபாய் தேநீர்தான் அருந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்படி இந்தப் பழியையும் ஏற்றுக்கொண்டு, பல இ.எம்.ஐ-களில் சிக்கித்தவிக்கும் இவர்களது மனக்குமுறல் வெளியில் கேட்க வாய்ப்பில்லை.

இந்த ஐடி பசங்க காசை வீணா கரியா செலவழிக்குறானுங்கப்பான்னு சொல்பவர்களுக்கு கரியைப் பூசுவதைப்போல் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது. நீங்கள் வெளிப்புறமான தோற்றத்தை பார்த்தது போதும் சற்று உள் சென்று பாருங்கள். தங்கள் கனவை தொலைத்தாவது இந்தப்பிள்ளைகள் தன் பெற்றோர் கனவை, குடும்பத்தின் கனவை, உடன்பிறந்தோர் கனவை நிறைவேற்றி வைப்பது அழகினும் அழகு. கூட ஒரு 500 ரூபாய் கிடைப்பதற்காக விடியற்காலை பணிக்கும், கூட ஓர் ஆயிரம் கிடைப்பதற்காக இரவுப்பணிக்கும் செல்லும் எத்தனையோ இளைஞர்களை அடையாளம் காட்ட முடியும். தன் நலன், உடல் மனம் சுழற்சி மாறுபடும் என்று தெரிந்தும் இவர்கள் ஷிப்ட்களில் வேலை செய்து காசை ஈட்டுவதை கும்மாளத்துக்குத்தான் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. தன் வருமானத்தால் கவரிங் நகையே அணிந்திருந்த தன் அன்னைக்கு நாலு தங்க வளையல் செய்து, தான் படிக்க முடியாத நல்ல கோர்ஸை தன் தம்பியை படிக்க வைத்து, தங்கையின் திருமணத்தை விமரிசையாக செய்து முடித்து , தன் திருமணத்துக்குப் பணம் சேர்த்து, அப்பாவின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றி கடன்களை மீட்டு குடும்பத்தோடு சிறியதாய் ஒரு விமானப் பயணம் செய்து மற்றவர்கள் சிரிப்பில் இந்தப்பிள்ளைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கடந்த கால நினைவுகளைத் தொடர முடியாமல், வருங்கால வேலையின் உறுதித்தன்மையை யூகிக்க முடியாமல் அன்றாடம் பிளான் பி ஒன்றை வைத்தே பயணப்பட பழகியவர்கள் இவர்கள்.

வீட்டின் பொருளாதார வசதியை மேம்படுத்த கையில் இருக்கும் வேலையைத் தூக்கி எறியாமல், தன் கனவுகளையும் சுமந்தபடியே என்றாவது ஒரு நாள் நல்ல பேச்சாளராக, புகைப்படக் கலைஞராக, நடன இயக்குநராக, பாடகராக வந்துவிடமாட்டோமா என்று தங்கள் இளமைக் காலத்தை அதிகப்படியாகவே இந்த தலைமுறை வருத்திக்கொண்டு உழைத்து வருகிறது. கடந்த கால நினைவுகளைத் தொடர முடியாமல், வருங்கால வேலையின் உறுதித்தன்மையை யூகிக்க முடியாமல் அன்றாடம் பிளான் பி ஒன்றை வைத்தே பயணப்பட பழகியவர்கள் இவர்கள். அப்பாடா வேலை கிடைத்துவிட்டது என்று ஓய்வாக இங்கே அமர்ந்துவிடமுடியாது. அன்றாடம் புது விஷயங்களைப் படித்துக்கொண்டே இருக்க வேண்டிய துறை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். இல்லையென்றால் இவர்கள் இடத்தை வேறொரு ரோபோ பிடித்துவிடும்.

முந்தியடித்துக்கொண்டு தீபாவளிக்கு ஊருக்குச் செல்வது முதல் காலைக்கடன் வரை இவர்களுக்கு எல்லாமே சவாலாகிப்போன காலமாகிவிட்டது. இந்த டிஜிட்டல் யுகத்திலும். இந்தியாவில் இருந்தாலும் இந்திய நேரத்தை மறந்து வேலை செய்பவர்கள் ஏராளம். புயல், பூகம்பம், வெயில், வெள்ளம் என்று எதுவும் இவர்களுக்கு விதிவிலக்கல்ல.

24 மணி நேரமும் ஏசி அறையில் அமர்ந்திருந்தாலும் உறவுகளை விட்டு, ஊரை விட்டு, விழாக்களை விட்டு இவர்களது நாள்கள் ஏதோ ஒரு வெம்மையிலேயே அதிக புழுக்கத்துடன் நகர்த்தப்படுகிறது. ஆயிரங்கள் கையில் புழங்கினாலும் மனதளவில் ஒரு ஒளிமிகுந்த லட்சியப் பொருளைத் தேடி இவர்கள் பிச்சைக்காரர்கள் போலத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

அதிகபட்சம் நல்ல ஹோட்டலில் சாப்பாடு, தினம் நான்கு மீம்ஸ்கள். வாரம் ஒரு சினிமா, விழா அன்று சொந்த ஊர் பயணம், நண்பர் கல்யாணம் அன்று சின்னதாக ஒரு ட்ரிப் என்று இவ்வளவுதான் இவர்களுக்கு மிஞ்சிய மகிழ்ச்சி தருணங்கள். ஆனாலும் தங்கள் புலம்பலை வெளியே பாடாமல், கண்ணீரை காண்பிக்காமல், சோகத்தை ஒளித்து ஒரு புன்முறுவலோடு பல கனவுகளைத் தொலைத்து, தன் குடும்பத்துக்காகவும், ஏன் இந்த நாட்டுக்காகவும் பொருளை ஈட்டித்தரும் தேனீக்களாக உற்சாகத்தோடு வலம் வந்துகொண்டிருப்பதில் இவர்கள் வல்லவர்கள். இதை வெளியில் இருந்து பார்க்கும் கண்களால் அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள இயலாது.

ஒவ்வொரு விடியற்காலையும் இவர்கள் EMI-களோடு ப்ரோக்ராம் செய்யப்பட்ட சிட்டி ரோபோவாக எழுந்து இயங்க வேண்டிய சூழல். இதே பணியை பழித்துப் பேசும் கூட்டம்தான் இன்னொருபுறம் வரன் தேடும்போது இந்த வேலைதான் வேண்டும் அதுவும் விசாவோடு வேண்டும் என்று அடம்பிடித்தும் கொண்டிருக்கிறது!

-நாக சரஸ்வதி

ஏன் இத்தனை விமர்சனங்கள்? - ஐடி இளைஞர்களின் மறுபக்கம்! #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு