
முதல் முதலாக...

1977-ம் ஆண்டு, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் `காந்திய கொள்கை'யின் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம், மது விலக்கு, அகிம்சை போன்ற ஏழு தலைப்புகளில் கதை எழுத அறிவிப்பு வெளியிட்டிருந்தது. திருச்சி வானொலி நிலையம் அருகில் எங்கள் வீடு இருந்தது என்பதால், அந்த அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டதும் பெரும் மகிழ்வடைந்தேன்.

வானொலிக்காக பலமுறை சிறுவர் கதைகள் எழுதி அனுப்பினாலும், அவை எதுவும் ஒளிபரப்பானதில்லை. ஆனாலும், மனம் தளராமல் ‘பெண்கள் முன்னேற்றம்’ தலைப்பில் கதை எழுதி அனுப்பினேன். 200 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் என்னுடைய கதையைத் தேர்ந்தெடுத்து 1,500 ரூபாய் மற்றும் காந்திய புத்தகங்களைப் பரிசாக அளித்தார்கள். இன்று சிறுகதைத் தொகுப்பு, திருக்குறள் கதைகள் என என் நூல்கள் வெளிவந்திருந்தாலும்கூட, அன்று நான் வாங்கிய பரிசை மறக்க முடியவில்லை!
உஷா முத்துராமன் மதுரை - 6