
வித்தியாசம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளையில் மலர் சந்தை பிரசித்தி பெற்ற ஒன்று.
அப்படிப்பட்ட மலர் சந்தைக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று ‘மாணிக்க மாலை’. தோவாளையில் தயாராகி திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை ஐந்து தலைமுறைகளாக செய்துவருகிறார்கள் வனிதாஶ்ரீ குடும்பத்தினர்.
தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டே மாணிக்க மாலை தயாரிப்பில் அசத்தும் வனிதாஶ்ரீயிடம் பேசினோம்.

‘`எங்கள் முன்னோரான லட்சுமணன் பண்டாரம் கூடை பின்னுகிற முறையில் பூக்களைப் பின்ன முயன்றாராம். அப்படி வந்ததுதான் இந்த மாணிக்க மாலை. அந்தச் சூட்சுமத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் அவர் மருமகளும் எங்கள் பூட்டியுமான சண்முகத்தம்மாள். அதன்பிறகு, என் தாத்தா மாடசாமி பண்டாரம், அப்பா முத்தும் பெருமாள், அம்மா தமிழரசி, நான், இப்போது என் பிள்ளைகள் என்று ஆறு தலைமுறைகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம். இதற்காகவே பல விருதுகளை வாங்கியிருக்கிறார்கள் எங்கள் முன்னோர்’’ என்கிற வனிதாஶ்ரீ, மாணிக்க மாலையின் பெயர்க் காரணம் சொல்கிறார்.
``திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு மாணிக்க மாலையை அனுப்பினது எங்க பூட்டி ஆச்சி சண்முகத்தம்மாள்தான். அதை திருவிதாங்கூர் மகாராஜா பார்த்து ‘இது என்ன வித்தியாசமான மாலையா இருக்கு. தங்க நகைக்கு மேல மாணிக்கத்தைப் பொதிஞ்சு வெச்சது போல இருக்கே... இது என்ன மாணிக்க மாலையா’ எனக் கேட்டிருக்கிறார். அன்றிலிருந்து பூமாலைக்கு `மாணிக்க மாலை’ எனப் பெயர் வந்தது.

பத்மநாப சுவாமி கோயிலில் வருஷத்துக்கு இரண்டு முறை பத்து நாள்கள் திருவிழா நடக்கும். அப்போது பல்லக்கில் சுவாமி எழுந்தருளலின் போது ‘மாணிக்க மாலை'யை அணிவிப்பது வழக்கம். மூன்று பல்லக்குகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் மாலைகளை அனுப்பி வைப்பார்கள். இப்போதும் உற்சவ மூர்த்திக்கு நாங்கள் கட்டி அனுப்பும் மாலைகளே சாத்தப்படுகின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருப்பதி, திருச்செந்தூர் கோயில்களுக்கும் மாணிக்க மாலை கட்டிக் கொடுத்து வருகிறோம்’’ என்கிறவர் மாலை கட்டும் விதத்தை விளக்குகிறார்.
``வெள்ளை, சிவப்பு, பச்சை நிறங்களை மட்டுமே மாணிக்க மாலைக்குப் பயன்படுத்து வோம். வெள்ளை அரளிப்பூ, சிவப்பு அரளிப்பூ, பச்சை நிறத்துக்காக நொச்சி இலைகளைப் பயன்படுத்தி நான்கு சம்பா நார்களால் கோப்போம். இது பார்ப்பதற்கு பட்டையாகப் பாய் விரித்தது போல இருக்கும். இங்குள்ள பூக்கள் நிறம் சற்று மங்கலாக இருக்கும். சேலத்தில் இருந்து வரும் அரளி பூக்களின் நிறம் அடர்த்தியாக இருக்கும். அதனால் மாணிக்க மாலைக்காக சேலத்தில் இருந்து அரளிப்பூக்கள் வரவழைக்கிறோம். சாதாரண பூமாலைகள் உருண்டையாக இருக்கும். பூக்களை மடித்து வைத்துக் கட்டுவதால் மாணிக்க மாலை பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். தோரண வாயில்களில் தொங்கவிடும் நிலை மாலை, கொத்து மாலை என இதில் நிறைய வகைகள் உண்டு.

மாணிக்க மாலையின் ஒரு பகளம் (ஒரு முழம்) கட்டி முடிக்க 20 நிமிடங்கள் ஆகும். ஐந்து, ஏழு, ஒன்பது, அதிகபட்சம் 35 பகளம் என்ற எண்ணிக்கையில் தனித்தனியாகக் கட்டி, பின்னர் அதைப் பக்கவாட்டு வாக்கில் நூல் மூலம் ஒன்றாக இணைப்போம். சின்ன மாலை கட்டவே நான்கு மணி நேரம் ஆகும். அதனால் ஒரு சின்ன மாலையை 400 ரூபாய்க்கு விற்கிறோம். திருமண மேடை அலங்காரம் போன்றவற்றுக்கு மாலைகளின் அளவு, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு பணம் வாங்குகிறோம். பெரிய ஆர்டர்களுக்கு மாலைகள் கட்ட 24 மணி நேரம் ஆகும்'' என்கிற வனிதாஶ்ரீ, பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். மாணிக்க மாலை தயாரிப்புக்காகப் பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறார்.
``எங்களின் புது முயற்சியாக மண மக்களுக்காக மாணிக்க கல்யாண மாலை தயாரிக்கிறோம். மணமேடை, மண்டபத்தின் சுவர்கள், மணப்பெண்ணுக்கான நகைகள் என அனைத்தையும் மாணிக்க மாலையில் தயாரிக்கிறோம்'' என்கிறவர், தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்.
``மாணிக்க மாலை பற்றி அறிந்துகொண்ட முகேஷ் அம்பானி, தன் வீட்டுப் பூஜை அலங்காரத்துக்காக எங்களை அழைத்திருந்தார். அவர் வீட்டுக்கே சென்று மூன்று நாள்கள் தங்கியிருந்து தூண் மற்றும் மண்டபத்துக்கு பார்டர் அலங்காரம் செய்துகொடுத்தோம்.
இந்திய பிரதமரும் சீன அதிபரும் மாமல்ல புரத்தில் சந்தித்தபோது, அங்கு இடம்பெற்ற ஏழு கலைகளில் ஒன்றாக மாணிக்க மாலை இடம்பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மாணிக்க மாலைகளைப் பார்த்துவிட்டு, `இந்திய கலாசாரத்தில் பூ மிக முக்கியமானது. இந்த மாலை தேசிய விருது பெற்றது' என்று சீன அதிபரிடம் கூறிப் பெருமிதப்பட்டார்’’ என்கிற வனிதாஶ்ரீக்கு வருங்காலத்தில் திருமண ஆர்டர் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது.