லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நியூ நார்மல் வாழ்க்கை நிச்சயம் அழகாகும்! - ஐஸ்வர்யா மணிவண்ணன்

 ஐஸ்வர்யா மணிவண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா மணிவண்ணன்

ஆயிரத்தில் ஒருத்தி

லாக் டௌன் நாள்களில் அரங்கேறியிருக்கும் வித்தியாச முயற்சிகளில் ஒன்று ‘வெர்ச்சுவல் பாரத்’ - ஆயிரம் டாக்குமென்ட்டரிகளின் அணிவகுப்பு.

இந்தியாவின் பாரம்பர்யம், இசை, இலக்கியம், நடனம் எனப் பல துறைகளைப் பற்றிய பயணத் தொகுப்பு. இயக்குநர் பரத்பாலாவின் இந்த நவீன முயற்சியில் ஆயிரத்தில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது சிலம்பம்.

இதன் நாயகி ஐஸ்வர்யா மணிவண்ணன். நிஜமான சிலம்பக் கலைஞர். அவள் விகடனின் சாதனைப் பெண்களில் ஒருவராக விருது பெற்றவர்.

நவீன யுகத்துப் பெண்ணான ஐஸ்வர்யா, கைத்தறிச் சேலையில் சிலம்பத்துடன் மேடை ஏறினால் அரங்கம் அதிரும். ஆயிரத்தில் ஒருத்தியாக இந்த புராஜெக்ட்டுக்குள் வந்தது, இதில் தனது பங்கு, தன் சிலம்பக் கனவுகள் என எல்லாம் பேசுகிறார்.

``கைத்தறிச் சேலையில் நான் சிலம்பமாடும் வீடியோவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான் ஃபிலிம் மேக்கர் பரத்பாலாவின் குழுவினர் என்னைத் தொடர்புகொண்டார்கள். நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண் நான். நவீன வாழ்க்கைமுறைக்குப் பழகினவள். ஆனாலும், நம்முடைய பாரம்பர்ய அடையாளமான சிலம்பக் கலையில் ஈடுபட்டிருக்கிறது அவங்களுக்குப் பிடிச்சிருந்ததாம். காணாமல் போன, போயிட்டிருக்கிற எத்தனையோ பாரம்பர்யக் கலைகளில் சிலம்பமும் சேர்ந்துடாம இருக்க நான் எடுக்கிற முயற்சிகளும் விழிப்புணர்வு வேலைகளும் அவங்களைக் கவர்ந்திருக்கு. அப்படித்தான் நான் இதுக்குள்ளே வந்தேன்’’ - அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா.

‘’இந்த டாக்குமென்ட்டரி, சிலம்பத்தின் பயணம் பற்றிப் பேசும்னு சொல்லலாம். ஒரு தற்காப்புக் கலையாக, இது ஆசியா முழுக்க டிராவல் பண்ணி வந்திருக்கு. ஆண்களுக்கான கலையாகப் பார்க்கப்பட்ட இது, இன்றைக்குப் பெண்களுக்கும் சாத்தியமாயிருக்கு.

நியூ நார்மல் வாழ்க்கை நிச்சயம்
அழகாகும்! - ஐஸ்வர்யா மணிவண்ணன்

என் வாழ்க்கையில இந்தக் கலை வந்த கதை, இது எனக்குள்ளே ஏற்படுத்தின மாற்றங்கள் பற்றியும் நான் பேசியிருக்கேன். 3,000 ஆண்டுகளுக்கு முன்பு நம் மண்ணில் இருந்த கலையைக் கத்துக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. அதைப் பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்தற பொறுப்பும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோக வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறதா நினைக்கிறேன்’’ - அக்கறையோடு சொல்பவரின் அடையாளமே சிலம்பம் ஆடும்போது அணிகிற கைத்தறிச் சேலைதான். ஒருபக்கம் தனக்குப் பிடித்த கலை... கூடவே அதைவிட அதிகம் பிடித்த கைத்தறி சேலை என இரண்டு துறைகளையும் வளர்க்கும் ஐஸ்வர்யா, மஹிஷா ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட் ஸுக்கான ஸ்டூடியோ நடத்துகிறார்.

‘`24 வயசுல நான் சிலம்பம் கத்துக்க வந்தபோது நான் மட்டும்தான் பெண். இந்த ஏழு வருஷங்களில் ஒட்டுமொத்தமாவே சிலம்பம் கத்துக்கிறவங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. குறிப்பா பெண்களோட எண்ணிக்கை வியக்கவைக்கிற அளவுக்கு அதிகரிச்சிருக்கு’’ - சிலாகிப்பவருக்கு, அந்த எண்ணிக்கை கூடியதில் முக்கியப் பங்கு உண்டு. காரணம், அவரின் வைரல் வீடியோக்கள். இப்போது கூடுதலாக ‘வெர்ச்சுவல் பாரத்’ டாக்குமென்ட்டரி!

‘`இந்த டாக்குமென்ட்டரி லாக் டௌன் டைம்ல ரிலீஸாச்சு. அதைப் பார்த்துட்டு நிறைய பேர் இன்ஸ்பையராகி, சிலம்பம் கத்துக்க ஆர்வமானதா சொன்னாங்க. நாலு வயசுலேருந்து எழுபது ப்ளஸ் வயசுல உள்ளவங்க வரை இதுல அடக்கம்.

ஸ்டூடியோ இருக்கிறதால எனக்கு சிலம்பத்துக்கான ரெகுலர் பயிற்சி வகுப்புகள் எடுக்க நேரம் கிடைக்கிறதில்லை. ஆனா, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிலம்பம் வொர்க்‌ஷாப்ஸ் நடத்தறேன். என்னுடைய முந்தைய வீடியோக்களைப் பார்த்தவங்க, அதுல இன்ஸ்பையராகி, தங்கள் மகள்களுக்கு சிலம்பம் கத்துக்கொடுக்க ஆசைப்படறதா சொன்னாங்க. லாக் டௌன் நாள்களில் நிறைய பேர் லைவ் கிளாஸ் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க.

வாழ்க்கையில சில விஷயங்களை மிஸ் பண்ணிடக் கூடாது. சிலம்பமும் அப்படித்தான். ட்ரை பண்ணிப் பாருங்க...

மற்ற ஸ்போர்ட்ஸோடு ஒப்பிடும்போது, சிலம்பம் பண்ண பெரிய, பிரத்யேக இடமெல்லாம் தேவையே இல்லை. வீட்டு மொட்டை மாடிகூட போதும். எல்லார் வீடுகளிலும் பைப், குச்சி, தடி, ஸ்கிரீன் மாட்டற ராடுனு ஏதாவது இருக்கும். அதைவெச்சு யார் வேணாலும் சிலம்பம் பண்ணலாம். அப்படி அவங்கவங்க வீட்டுல இருக்கிற பொருள்களை வெச்சு சிலம்பம் பண்ற எளிமையான, அடிப்படையான டெக்னிக்ஸை மட்டும் கத்துக்கொடுத்தேன். .

ஆரம்பத்துல ஃபன்னா பண்ண ஆரம்பிச்சவங்க, லாக் டௌனுக்குப் பிறகு இதை முறையா கத்துக்கற அளவுக்கு ஆர்வமாயிருக்கிறதா சொல்றாங்க. அதுதான் சிலம்பத்தின் ஸ்பெஷல். அது வெறும் தற்காப்புக்கான விஷயம் மட்டுமல்ல; மனசை அமைதிப்படுத்தற ஒரு கலை. உடல், மன உறுதிக்கான பயிற்சியும்கூட. சிலம்பம் பண்ண ஆரம்பிச்சவங்களுக்கு லாக் டௌன் நாள்கள் நிச்சயம் ஸ்ட்ரெஸ்ஃப்ரீயா இருந்திருக்கும்னு நம்பலாம்’’ - ஆர்வம் உண்டாக்குகிறவர், மீண்டும் டாக்குமென்ட்டரி பேச்சுக்குத் திரும்புகிறார்.

நியூ நார்மல் வாழ்க்கை நிச்சயம்
அழகாகும்! - ஐஸ்வர்யா மணிவண்ணன்

``சிலம்பத்தின் பயணம், அதன் மாற்றம், வளர்ச்சி, மாடர்னான பின்னணியில வளர்ந்த பெண்ணாலயும் சிலம்பம் பண்ண முடியும்னு மத்தவங்களுக்கு ஏற்படுத்தின இன்ஸ்பிரேஷன், லாக் டௌன் நாள்களில் பாசிட்டிவிட்டி, பெண் சக்தியைப் பேசற 1085-வது திருக்குறளை எடுத்துப் பாடலாக்கி னதுன்னு இந்த டாக்குமென்ட்டரி பத்திச் சொல்ல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு.

லாக் டௌன்ல எல்லாரும் மனசளவிலும் உடலளவிலும் நிறைய மாற்றங்களைப் பார்த்திட்டிருக்கோம். உடலியக்கமே இல்லாம இருக்கோம். சிலம்பம் உடலுக்கு மட்டுமல்லாம, மனசுக்கும் உற்சாகம் தரும். என் லாக் டௌன் நாள்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வெச்சிருக்கிறது என் சிலம்பக் கலைதான்.

இதுவரை ட்ரை பண்ணாதவங்க, இந்த வீடியோவைப் பாருங்க. சிலம்பத்தின்மேல உங்களையும் அறியாம ஒரு காதல் பிறக்கும். ஃபிட்னஸ் பின்னணி, பெரிய இட வசதி, வயது வரம்புன்னு எதுவும் தடையில்லை. வாழ்க்கையில சில விஷயங்களை மிஸ் பண்ணிடக் கூடாது. சிலம்பமும் அப்படித் தான். ட்ரை பண்ணிப் பாருங்க... நியூ நார்மல் வாழ்க்கையை நிச்சயம் அழகாக்கும் சிலம்பம்’’- நம்பிக்கை தருகிறார்.

நாளை அழகாகட்டும், நமதாகட்டும்!