
ராஜலட்சுமி
அளந்துவைத்ததுபோன்ற பர்ஃபெக்ட் உடல்வாகு யாருக்கும் சாத்தியமில்லை. பருமனானவர்களுக்கு ஒல்லியானவர்களைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கலாம். உயரம் குறைவான வர்கள், உயரமானவர்களைப் பார்த்து ஏங்குவதும், உயரமானவர்கள் கொஞ்சம் குட்டையாகப் பிறந் திருக்கலாமோ என நினைப்பதும் சகஜம்தான்.

உங்கள் உடல்வாகு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... அந்த இயல்புடன் உங்களை கம்பீரமாகக் காட்டுவதில் உங்கள் உடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. எப்படிப்பட்ட உடல்வாகுக்கு எப்படி உடை அணிய வேண்டும் என்கிற ஆலோசனைகளை இந்த இதழில் ஆங்காங்கே தந்திருக்கிறார் பிரபலங்களின் காஸ்டியூம் டிசைனர் சாரா விஜயகுமார்.

உயரமானவர்களுக்கு...
உயரமானவர்களுக்கு அதுவே ஒரு வரம். எந்த உடையிலும் கம்பீரமாகத் தெரிவார்கள். லாங் டிரஸ், அனார்கலி, கவுன், லாங் ஷ்ரக் உடன் கூடிய டிரேப் ஸ்கர்ட் போன்றவை இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். உடலின் மேல் பகுதி கால்களைவிட நீளமாக இருந்தால் க்ராப் டாப், ஹை வெயிஸ்ட் ஸ்கர்ட் அல்லது முட்டிக்கு மேலே உள்ளதுபோன்ற உடைகளை அணிய லாம். அதுவே கால்களின் நீளம் அதிகம் என்றால், லாங் டாப் அல்லது முட்டிக்குக் கீழே நீளும் டாப் அணியலாம்.
உயரத்தைக் குறைத்துக்காட்ட நினைத்தால் பிளவுஸ் அண்டு ஸ்கர்ட் போன்ற இரண்டு பாகங்களைக்கொண்ட உடைகளை அணியலாம். இரண்டும் வேறு வேறு டிசைன் மற்றும் நிறங்களில் இருக்கட்டும். உயரம் அதிகமானவர்கள் உடைகளுக்கு மேல் பெல்ட் அணியலாம்.

உயரம் குறைவானவர்களுக்கு...
உயர குறைவை ஒரு குறையாக நினைக்காமல் உங்களை முதலில் நேசிக்கப் பழகுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். எந்த உடையை அணிந்தால் உங்கள் தன்னம்பிக்கை லெவல் அதிகரிக் குமோ அத்தகைய உடைகளை அணியுங்கள். லாங் டிரஸ் எனப்படும் உடைகளையும், தரையில் புரளும் நீளமுள்ள உடைகளையும் அணிவதைத் தவிர்த்துவிடுங்கள்.
டாப் ஒரு கலரிலும் கீழே அணிகிற பாட்டம் உடை வேறொரு கலரிலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட இருவேறு நிறங்கள் உங்கள் உயரத்தை இன்னும் குறைத்துக் காட்டும்.
படுக்கைவாட்டில் கோடுகள் போட்ட உடைகளைத் தவிர்த்து நீளவாக்கில் கோடுகள் போட்டவற்றை அணிவதன் மூலம் உங்கள் உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்டலாம். உங்களுக்கு வசதியாக இருக்குமென்றால் ஹீல்ஸ் வைத்த காலணிகளை அணியலாம்.
இரண்டு பீஸ் உடைகளைவிடவும் ஒரே பீஸ் உடைகள் உங்கள் உயரத்தைக் கூட்டிக் காட்டும். உதாரணத்துக்கு ஜீன்ஸ் - டாப், சேலை - பிளவுஸ் போன்றவை உடலைப் பிரித்துக்காட்டும் என்பதால் உயரத்தை கவனிக்க வைக்கும்.

ஒல்லியானவர்களுக்கு...
ஒல்லியான உடல்வாகு என்பது பலரும் ஏங்கும் விஷயம். ஆனால். ஒல்லியான உடல்வாகு கொண்ட பலரும் அதை நினைத்து வருந்துவதும் தாழ்வுமனப்பான்மை கொள்வதும் நடக்கிறது.
ஒல்லியானவர்களுக்கும் எல்லா உடைகளும் அம்சமாகப் பொருந்தும். ஆனாலும், அதில் திருப்தியில்லை, கொஞ்சம் பூசினாற்போல தெரியலாம் என நினைப்பவர்கள் லேயர்கள் வைத்த உடைகளை அணியலாம்.
ஸ்கர்ட், பிளவுஸ், கூடவே ஒரு ஷ்ரக் அணியலாம். கால்கள் தெரியும்படியான உடைகளை அணியக் கூச்சப்படுவோர், லாங் டிரஸ் அணியலாம். ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸில் கால்கள் குச்சிபோலத் தெரியும் என நினைத்தால், லேயர்கள் வைத்த அல்லது திக்கான லைனிங் கொடுத்த ஸ்கர்ட் அணியலாம்.
ஒல்லியான கைகளைக் காட்டுவதில் தயக்கமில்லை என்றால் பெல் ஸ்லீவ்ஸ், ஜூலியட் ஸ்லீவ்ஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். எம்ப்ராய்டரி, ரஃபிள் மாதிரி அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடைகளை அணியலாம். படுக்கைக் கோடுகள் போட்ட உடைகளில் உடல் சற்று பூசினாற்போல தெரியும். கழுத்தெலும்பு மற்றும் மெலிந்த தோள்பட்டைகளைக் காட்டும்படியான ஆஃப் ஷோல்டர் உடைகளைத் தவிர்க்கவும்.

பருமனானவர்களுக்கு...
ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்றால் கறுப்பு, நேவி ப்ளூ, டார்க் பிரவுன், மெரூன் போன்ற டார்க் நிற உடைகளைத் தேர்வு செய்யவும்.
ரொம்பவும் கனமான மெட்டீரியல் உடை களையும், கஞ்சிபோட்டதுபோல உறுதியாக நிற்கும் படியான மெட்டீரியல் உடைகளையும் தவிருங்கள். உதாரணத்துக்கு கம்பளி போன்ற மெட்டீரியல், லெதர் ஜாக்கெட், ரா சில்க், ஆர்கன்ஸா போன்ற மெட்டீரியல்கள் உங்களை இன்னும் பருமனாகக் காட்டக்கூடியவை.
கிரேப், ஷிஃபான், ஜார்ஜெட், சாஃப்ட் காட்டன் போன்ற மெட்டீரியல்கள் பெஸ்ட்.அதாவது, உடலோடு ஒட்டிக்கொள்ளும்படியான மெட்டீரியல்களில் உடைகளைத் தேர்ந்தெடுக்கவும். நிறைய லேயர்கள், ஃப்ரில் வைத்த உடைகள் வேண்டாம். பஃப் ஸ்லீவ்களையும் ரஃபிள்களையும் தவிர்க்கவும்.
கேன்கேன் பேட்டர்ன் மற்றும் ஆடம்பர எம்ப் ராய்டரி செய்யப்பட்ட உடைகளும் பருமனாகக் காட்டும் என்பதால் அவற்றையும் தவிர்க்கவும். பேகி ஸ்டைல் உடைகளைத் தவிர்க்கவும். சரியான ஃபிட்டிங் உடைகள் பருமனானவர்களுக்கு ஏற்றவை. ஆனால், அவை ரொம்பவும் டைட்டாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். கார்டிகன் அல்லது மெல்லிய ஷ்ரக் அணிவதன் மூலம் பருமனான கைப்பகுதியை மறைக்கலாம். வித்தியாச மான ஜுவல்லரி அணிவதன் மூலம் மற்றவரின் பார்வையைத் திசைத் திருப்பலாம்.

அடிக்கடி உடல் எடையில் மாற்றங்களைச் சந்திப்பவர்களுக்கு...
சிலருக்கு திடீரென உடல் எடை கூடும், திடீரென குறையும். ஆறு மாதங்களுக்கு முன்பு வாங்கிய உடை இப்போது பொருந்தாமலிருக்கும். இவர்கள் ரொம்பவும் தளர்வாக இல்லாமலும் உடலைக் கவ்விப்பிடிக்கும் டைட் ஃபிட்டிங்கில் இல்லாமலும் இரண்டுக்கும் இடையிலான சைஸில் உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
வேண்டுமென்றால் டைட் ஃபிட்டிங்கில் சில, தளர்வான ஃபிட்டிங்கில் சில என இரண்டிலும் உடைகள் வைத்துக்கொள்ளலாம். உடல் பருமனின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப அவற்றில் ஒன்றை அணியலாம்.
ஸ்லீவ் பகுதிகள் தளர்வாகவும், இடுப்புக் குக் கீழுள்ள உடையின் பகுதி ஃப்ளோ ஆகும்படியும் தேர்வு செய்யலாம். பெரும்பாலும் கைகள் மற்றும் தொடைப் பகுதியில்தான் சதை போடும். எனவே, ஃப்ளோ ஆகும்படியான உடை அணியும்போது அது வெளியே தெரியாமல் மறைக்க முடியும்.
பருமன் குறைந்திருக்கும் போது ஜீன்ஸும் டைட் லெகின்ஸும் அணியலாம். எடை கூடும்போது லூசான ஸ்லீவுடன்கூடிய சுடி, குர்தி, ஃப்ளோ வைத்த டிரேப் டிரஸ், லாங் டிரஸ் போன்றவற்றுக்கு மாறலாம்.