`மாயக்கண்ணாடி' படத்தில் எல்.ஐ.சி-யில் முகவராகச் சேர்ந்திருக்கும் சேரன் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் பாலிசி எடுக்கச் சொல்லும் காட்சி!
``எல்.ஐ.சி ஏஜென்டா இருக்கேன் அண்ணாச்சி. நீங்க ஒரு பாலிசி எடுக்கணும்.”
``எல்.ஐ.சினா என்ன?“
``நீங்க இதுல பணம் போட்டா, நீங்க செத்ததுக்கு அப்புறம் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். இது ஒரு மாதிரி சேமிப்பு அண்ணாச்சி” என்பார் சேரன்.

இந்த வசனத்துடன் அக்காட்சியை கட் பண்ணிவிட்டு நாம் கட்டுரைக்குள் போகலாம். மக்களின் மத்தியில் உலவும் நம்பிக்கை இதுதான். ஆயுள் காப்பீடு என்பது ஒரு சேமிப்பு அல்லது முதலீடு என்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இந்தப் புரிந்துணர்வு சரியா, தவறா? ஆயுள் காப்பீடு என்பது என்ன? ராஜி மற்றும் வதனாவின் வாழ்க்கை மூலமாகப் பதில் பார்க்க முயல்வோமா..?
ராஜி எடுத்த பாலிசி..!
`அவள் ஒரு தொடர் கதை' சுஜாதா போல குடும்பத்தைச் சுமந்தவள் ராஜி. Bread winner of the family எனும் பதத்துக்குச் சொந்தக்காரி. அதாவது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர். தந்தை இல்லா குடும்பத்தை தனியார் பள்ளி ஒன்றில் டீச்சர் வேலை பார்த்து அவள் சம்பாதித்த பணம்தான் காத்தது. சில வருடங்களுக்கு முன் பள்ளிச் சுற்றுலா போனபோது ஏற்பட்ட சாலை விபத்தில் அவள் உயிரிழக்க, அவளது இழப்பு மற்றும் மீதமிருக்கும் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவளின் அம்மா திகைத்து நின்றார். அப்போது, ராஜி எடுத்திருந்த டெர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் அவர்கள் குடும்பத்துக்கு வந்து சேர்ந்தது 25 லட்சம் ரூபாய்.
`ஒவ்வொரு மாசமும் இதுக்காக அவ காசு கட்டுன போதெல்லாம், `இது அநாவசிய செலவுதானே? இதனால எந்தப் பலனும் கிடைக்காதில்ல? அதே பணத்தை சீட்டு கட்டலாம்ல?'னு நான் சொன்னேன். அப்போவெல்லாம், `இது சேமிப்பு இல்லம்மா. இது ஒரு வாட்ச்மேன் மாதிரி. ஆள் இல்லாத வீட்டை வாட்ச்மேன் பார்த்துக்குற மாதிரி. வருஷத்துக்கு 5,475 ரூபாயானு ப்ரீமிய பணத்தை மொத்தமா பார்த்தாதான்மா மலைப்பா இருக்கும். ஒரு நாளைக்கு வெறும் 15 ரூபாதான்னு நெனச்சுக்கோ. பெரும் சுமையா தெரியாது. ஒருவேளை எனக்கு ஏதேனும் ஆச்சுன்னா இதன் மூலம் வரும் தொகை / வருமானம் குடும்பத்துக்காக சம்பாதிக்கிற நான் இல்லாமல் போனாலும் நம்ம குடும்பத்தைக் காக்கும்'னு சொன்னா. `கடைசில அவ சொன்ன மாதிரியே ஆகிடுச்சு’ என்று வெடித்து அழுதார் ராஜியின் அம்மா.

ராஜியை போலல்லாது வதனா ஒரு ஹோம் மேக்கர். அரசுப் பணியில் இருந்த கணவர், 2 குழந்தைகள் என நிறைவான வாழ்வு. அவளின் சித்தப்பா ஒரு இன்ஷூரன்ஸ் முகவர். அவர் சொன்னார் என எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 35 ஆண்டுக்கான 25 லட்ச ரூபாய் மதிப்புடைய ஆயுள் காப்பீட்டை கணவரின் பெயரில் எடுத்தாள். அதற்கு அவர்கள் ஒரு வருடத்திற்கு கட்டிய ப்ரீமியத் தொகை 72,171 ரூபாய்.
இது ராஜி கட்டிய ப்ரீமியத்தைவிட ஏறக்குறைய 15 மடங்கு அதிகம். சில வருடங்களுக்குப் பின் மாரடைப்பில் எதிர்பாராமல் அவளின் கணவர் இறந்தபொழுது கைக்கு வந்து சேர்ந்தது 25 லட்ச ரூபாய். கூடவே சிறிதளவு வட்டி. 10+ ஆண்டுக்காலமாக அவளின் கணவர் கட்டிய ப்ரீமியம் கிட்டத்தட்ட 9 லட்ச ரூபாய். ஆனால் இதேபோன்று 25 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டை எடுத்த ராஜி, அதுவரையிலும் மொத்தமாகக் கட்டிய தொகை சில ஆயிரங்களைத் தாண்டாது.

ராஜி செய்ததும், வதனா உள்ளிட்ட நம்முள் பலரும் செய்யாமல் விடுவதும் எது தெரியுமா? ஆயுள் காப்பீடு தேர்வு செய்யும்போது டெர்ம் ப்ளான் சிறந்ததா, அல்லது டிரடிஷனல் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சிறந்ததா என்று யோசிக்காமல், ஏஜென்ட் விற்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியை `இதுதான் சிறந்தது’ என நம்பி எடுப்பது. முதலில் ஆயுள் காப்பீடு என்பது ஒரு சேமிப்போ முதலீடோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆயுள் காப்பீடு என்பது என்ன ?
குடும்பத்தின் வருவாயை ஈட்டும் நபர் எதிர்பாராவிதமாக இறக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் குடும்பத்திற்கு ஏற்படும் நிதி சுமைகள் மற்றும் சவால்களை சமாளிக்க செய்யும் மாற்று ஏற்பாடே ஆயுள் காப்பீடு.
யாருக்கெல்லாம் காப்பீடு அவசியம்?
யாரின் வருமானத்தை குடும்பம் சார்ந்து இருக்கிறதோ, எவர் ஒருவரின் இறப்பு பொருளாதார ரீதியில் குடும்பத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்குமோ, எவர் ஒருவரின் இழப்பால் ஒரு குடும்பம் ஸ்தம்பித்து நிற்குமோ அவர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு அவசியம். சுருக்கமாகச் சொல்வதென்றால் குடும்பத்திற்காக வருமானம் ஈட்டும் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு கட்டாயம் இருக்க வேண்டும்.
டெர்ம் இன்ஷூரன்ஸ், பிற இன்ஷூரன்ஸ்... சில விளக்கங்கள்!
எப்போதுமே இன்ஷூரன்ஸையும் முதலீட்டையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்ளாமல், இன்ஷூரன்ஸை தனியாகவும், முதலீட்டை தனியாகவும் தேர்வு செய்வது முக்கியம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டுபவர்களுக்கானது. ஏனெனில், ஒருவரின் வருமானத்தை அடிப்படையாக வைத்தே இவ்வகை இன்ஷூரன்ஸ் திட்டத்திற்கான தகுதியும் கவரேஜ் தொகையும், அதற்கான ப்ரீமியமும் கணக்கிடப்படுகிறது.

டெர்ம் பிளானைப் பொறுத்தவரை, நாம் செலுத்தும் ப்ரீமியம் காப்பீடுக்கு மட்டுமே செல்வதால், இதில் எந்த விதமான முதிர்வுத் தொகையும் இருக்காது. ஆனால் ப்ரீமியம் ரிட்டர்ன் பாலிசிகளில் நாம் செலுத்தும் ப்ரீமியத்தில் ஒரு பகுதி காப்பீட்டுக்காகவும், மற்றொரு பகுதி முதலீட்டுக்காகவும் பிரிக்கப்படுவதால், பாலிசி முடியும்போது நாம் அதுவரையிலும் செலுத்திய ப்ரீமியத்தை வட்டியுடன் திருப்பித் தருகின்றனர். இவ்வகையான பாலிசிகளின் ப்ரீமியம், டெர்ம் பாலிசிகளைவிட மிக அதிகமாக இருக்கும்.
ஆகவே, ப்ரீமியம் ரிட்டர்ன், எண்டோவ்மென்ட் பாலிசிகளைத் தவிர்த்து ஆயுள் காப்பீடு என வரும்போது டெர்ம் பாலிசி எடுப்பதே சிறந்தது.
டெர்ம் இன்ஷூரன்ஸ்... அம்சங்கள்.
1. டெர்ம் இன்ஷூரன்ஸ் என்பது பாலிசிதாரரின் இறப்புக்குப் பிறகு, அவரை சார்ந்தவர்களை வந்தடையும் நிதி என எல்லோரும் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டம்.
2. இதற்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட ஆண்டுகள் வரையிலும், அல்லது ஒரே தவணையிலும் ப்ரீமியம் கட்டலாம்.
3. பாலிசிதாரர் பாலிசி காலத்தில் இறக்கும்பட்சத்தில் குடும்பத்தினருக்கு இழப்பீடாக அவர் காப்பீடு செய்திருந்த பணம் சென்றடையும்.
4. ஒருவேளை பாலிசிதாரர் பாலிசி காலத்திற்குப் பிறகும் வாழும் பட்சத்தில் இந்த டெர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் முதிர்வுத் தொகை என எதுவும் கிடைக்காது. இந்தக் காரணத்தினாலேயே டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதில் பெரும்பான்மை மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இன்னும் சுலபமாக இதை விளக்க வேண்டும் எனில், நாம் மேலே பார்த்த உதாரணத்தையே எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ராஜிக்கு அசம்பாவிதம் ஏதும் நேராத பட்சத்தில் அவளுக்கும் அக்குடும்பத்திற்கும் காப்பீட்டு காலம் முடிந்த பிறகு எந்தவிதமான பலனும் வந்தடைந்து இருக்காது. அதே நேரம், ஆயுள் காப்பீட்டு காலத்திற்கு உட்பட்டு வதனாவின் கணவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காவிடின் கட்டிய தொகைக்கு சுமார் 5 % வருமானம் போன்ற ஒரு தொகை வந்து சேரும்.
மற்ற பாலிசிகளுடன் அதாவது, யூலிப் , மணி பேக், எண்டோவ்மென்ட் பாலிசிகளின் ப்ரீமியங்களுடன் ஒப்பிடும்போது டெர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் மிகவும் குறைவு. மிகக் குறைவான ப்ரீமியம் என்பதால் டெர்ம் இன்ஷூரன்ஸை அனைவராலும் வாங்க முடியும். ஆனால், `போட்ட முதலுக்கு மோசம் வந்துவிடக்கூடாது' என்ற மனநிலை உடையவர்களாலும், `வருஷா வருஷம் நான் கட்டும் பணம் ஏதேனும் ஒரு வகையில் திரும்பி கிடைக்க வேண்டாமா?' என கேள்வி கேட்பவர்களாலும்தான் அந்த மனநிலையிலிருந்து வெளியேறி டெர்ம் பாலிசியைத் தேர்வு செய்ய முடிவதில்லை.

ராஜியைப் போல் `நான் இல்லாதபோது என் குடும்பம் என்ன செய்யும்?’ என்ற தெளிவுடன் யோசிக்கும் பட்சத்தில், `என் மறைவிற்குப் பிறகு தேவையான தொகை கிடைத்து என் குடும்பம் எவ்வித பொருளாதாரச் சுமையுமில்லாமல் இருக்க வேண்டுமெனில் டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே சரி’ என்ற முடிவுக்கு வர இயலும்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
* எந்த வகை காப்பீடாக இருந்தாலும் உங்களின் தேவை என்ன என்பதைத் தெளிவாக தீர்மானியுங்கள்.
* டேர்ம் இன்ஷூரன்ஸை குறைந்த வயதில் எடுக்கும்போது கட்ட வேண்டிய ப்ரீமியம் குறைவு. அதனால் முடிந்த வரையிலும் 30 வயதை எட்டும்போதே பாலிசி எடுப்பது நல்லது.
* மற்ற டிரெடிஷனல் காப்பீட்டுத் திட்டங்களைப்போல் அல்லாமல் டெர்ம் இன்ஷூரன்ஸை குறைந்த ப்ரீமியத்தில் வாங்க முடியும்.
* டெர்ம் இன்ஷூரன்ஸை வாங்க ஏஜென்ட்டுகள் அவசியமில்லை. இணையதளம் மூலமாக நாமே நேரடியாக வாங்கலாம். இன்னும் சொல்லப்போனால் இணையதளம் வழியாக வாங்கும்போது நாம் கட்டும் ப்ரீமியத்திலிருந்து ஏஜென்ட்டுக்குக் கமிஷன் என்று ஒரு தொகை தனியாகப் போகாது. இந்தக் கட்டுரையை எழுதும்போது ஹெச்.டி.எஃப்.சி-ன் டெர்ம் பாலிசி ஒன்றை ஆன்லைனில் வாங்க முயன்றேன். செலுத்தப்பட வேண்டிய ப்ரீமியத் தொகையில் 5.5% தள்ளுபடி கிடைத்தது. இந்த வகையில் பாலிசி வாங்கும் போது லாபம் நமக்கே.

* டெர்ம் இன்ஷூரன்ஸுக்கு செலுத்தும் ப்ரீமியத்துக்கு வரிவிலக்கு உண்டு. அதோடு, பாலிசிதாரர் இறந்த பிறகு இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் குடும்பத்தினர் அல்லது வாரிசுதாரர் பெறும் இழப்பீட்டுப் பணத்துக்கு வருமான வரி கிடையாது.
* குறைந்த வருமானம் உள்ளவராக இருந்தாலும், சம்பளம் அதிகமாக இருந்தாலும் அதிக தொகைக்கு டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம். இப்போது இருக்கும் பணவீக்க விகிதத்தை கணக்கிட்டால் சில லட்ச ரூபாய் மதிப்புடைய டெர்ம் இன்ஷூரன்ஸ் எதிர்காலத்துக்குப் போதுமானதாக இருக்காது.
* எனவே, டெர்ம் இன்ஷூரன்ஸ் தொகையைத் தேர்ந்தெடுக்கும்போது தற்போதைய சம்பளம், பணவீக்க அளவு மற்றும் எதிர்காலக் குடும்பத் தேவையை நினைவில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பாலிசிதாரரின் ஆண்டு வருமானத்தைவிட குறைவான மதிப்புடைய டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்குபவர்களும் உண்டு. ஆனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால், குடும்பம் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அத்தொகை போதுமானதாக இருக்குமா என யோசித்துப் பார்த்த பின் பாலிசி வாங்குவது நல்லது.
* பொதுவாக, ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப்போல, 10 – 15 மடங்குத் தொகைக்கு பாலிசி எடுப்பது சரியாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

* டெர்ம் ப்ளானுடன் `ரைடர்' என்பது உண்டு. அதாவது, விபத்தால் உண்டாகும் மரணம், குறிப்பிட்ட சில உபாதைகள், உடல் பாகங்களின் தற்காலிக/நிரந்தரச் செயலிழப்பு போன்றவற்றுக்கான `ரைடர்'களை பெறலாம். இவ்வகை `ரைடர்'களைப் பொறுத்தவரை ப்ரீமியம் சற்று குறைவாகவும், இதன் மூலம் கிடைக்கும் காப்பீட்டுப் பணம் அதிகமாகவும் இருக்கும்.
இவை அனைத்தையும்விட டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்....
பாலிசி எடுப்பவர் தனக்கிருக்கும் உடல்நலப் பிரச்னைகள் மற்றும் சில (கெட்ட) பழக்கங்களை மறைக்கக் கூடாது. ஏனெனில் ஒருவரின் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தை நிர்ணயிக்க அவருடைய வயது, ஆண்டு வருமானம், அவர் செய்யும் தொழில் இத்துடன் அவருக்கு இருக்கும் புகைப்பழக்கம்/மதுப்பழக்கம் அல்லது உடல் தொடர்பான உபாதைகள் போன்றவை முக்கியப் பரிசீலனையில் இருப்பவை. பாலிசி எடுக்கும்போது இவற்றை மறைக்கும்பட்சத்தில் இதை காரணமாகக் சொல்லி இன்ஷுரன்ஸ் க்ளைம் மறுக்கப்படலாம் என்பதால் கவனம்.
ஆயுள் காப்பீடு... முடிவை ஆராய்ந்து எடுப்போம்!