சில பொருள்களின் மீது கொண்ட விருப்பத்தால், அவற்றை மட்டும் சிலர் அதிகமாக வாங்கிக் குவிப்பதுண்டு. துணிகள், நகைகள் என அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இந்தப் பொருள்கள் வேறுபடும்.
அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான ரோச்செல் பர்க் (Rochelle Burke) என்ற பெண், க்ராக்ஸ் (Crocs) வகை காலணி மீது கொண்ட விருப்பத்தால், தன்னுடைய பதின்ம வயதில் இருந்து, இவ்வகை காலணிகளைச் சேகரித்து வந்துள்ளார்.

சுமார் 20 வருடங்களாக, இவ்வகை காலணிகளைச் சேகரிக்க ஆரம்பித்தவரிடம், தற்போது 450 ஜோடி காலணிகள் வரை உள்ளன. ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் க்ராக்ஸை வாங்கியுள்ளார். 2000-ம் ஆண்டில் இவர் வாங்கிய முதல் க்ராக்ஸின் விலை 14 டாலர். அதிகப்படியாக 588 டாலர் வரை, க்ராக்ஸின் விலை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வீங்கிய மூட்டுகளால் அவதிப்படுவதால், க்ராக்ஸ் காலணிகள் அணிவது நன்றாக இருக்கிறது என்கிறார். தினமும் தனது மருத்துவ வேலையிலும், பண்டிகை நாள்களிலும்கூட க்ராக்ஸை அணிகிறார்.
அதிசயமாக ரோச்செல் மட்டும் இவ்வாறு காலணிகளைச் சேர்க்கவில்லை. இவரின் தாயும் 300 வகையான காலணிகளை வைத்துள்ளார்.

இது குறித்து ரோச்செல் பர்க் கூறுகையில், ``க்ராக்ஸ் அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களிடம் அதிக எண்ணிக்கையில் க்ராக்ஸ் இருக்க வாய்ப்பில்லை. முதலில் நான் ஒரு ஜோடி க்ராக்ஸை முயற்சி செய்து பார்த்தேன். அவை சுத்தமாகவும், பராமரிக்க எளிதாகவும், அணிந்துகொள்ள வசதியாக இருப்பதும் எனக்குப் பிடித்துவிட்டது.
என்னிடம் 365 ஜோடி க்ராக்ஸ் இருந்தபோது, வருடத்தின் ஒவ்வொரு நாளும் அணிய காலணிகள் இருந்தன. க்ராக்ஸ் அணிந்து இருக்கும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். இது என்னுடைய அடக்கமான, துடிப்பான மற்றும் நிறைவான குணத்தின் பிரதிப்பலிப்பாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.