விவாகரத்துக்குப் பிறகான வாழ்வு, அதுவரை இல்லாத ஒரு புதிய மனிதரை உருவாக்கும். அழுகை, கோபம், ஆதங்கம், சமூகத்தின் இகழ்ச்சி என பல இடங்களில் மனம் வெறுத்துப் போகும். இவர்கள் பாரங்களைச் சுமந்து, வலி தாங்கியே பயணிக்க வேண்டுமா என்ன?
அதன் பிறகு வாழ்வில்லையா... விவாகரத்தானவர்கள் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியற்றவர்களா...? அப்படியெல்லாம் இல்லை, அதன்பின் வாழ்வுண்டு, வளர்ச்சியும் உண்டு என இதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள், தமக்கான பாதையை வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

விவாகரத்துக்குப் பிறகு தனக்கான வாழ்வை பூரணமாக வாழ்வதாக, 4- வது ஆண்டு விவகாரத்து நாளைக் கொண்டாடும் பெண்ணின் சமூக வலைதளப் பதிவுகள் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றன.
சாஸ்வதி சிவா என்ற அந்தப் பெண், தன்னுடைய விவாகரத்தால், பல சவால்களைச் சந்தித்தாலும், தன்னுடைய வாழ்க்கை எவ்வாறு மகிழ்ச்சியானதாக மாறியது என்பதை, தேநீர் குடிக்கும் புகைப்படத்தோடு லிங்க்டுஇன் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், `4 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றேன். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை என்னுடைய சுதந்திர நாளாகக் கொண்டாடுகிறேன். இது எனக்கு மிகவும் முக்கியமான நாள். கடந்த 1460 நாள்களில், ஒவ்வொரு நாளும் வாழ்வின் மகத்தான நன்றியை உணராமல் ஒருநாள் கூட இருந்ததில்லை.
தொழில்ரீதியாக என்னுடைய சொந்த நிறுவனத்தை நடத்தினேன். விவாகரத்தான பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பிற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆன்லைனில் பேசினேன்.
பொருளாதார ரீதியாக என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். மும்பையில் இருந்து பெங்களூருக்குச் சென்று அங்கு அழகிய வீட்டை அமைத்தேன். `டிவோர்ஸ் இஸ் நார்மல்' (Divorce is Normal) என்ற புத்தகத்தை எழுதினேன்.

கடந்த 4 ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த பல வாய்ப்புகளில் சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய முடிந்தது. வாழ்வின் வரைபடத்தை நான் கற்பனை செய்ததில்லை. திட்டமிடப்படாத புதிரான பாதை அழகிய முடிவுகளைத் தருகிறது.
மிகவும் இருண்டதாகவும், நிச்சயமற்றதாகவும் தோன்றிய காலங்களிலிருந்து, இப்போது எதார்த்தத்தின் சிறந்த பிடியில் இருக்கிறேன். இந்தச் சுதந்திரத்தை நான் ஒரு கணம் கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து குறித்தான நெகட்டிவ் பார்வையை முறித்து, நேர்மறையாக தனது வாழ்வினை அமைத்துக் கொண்டவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.