Published:Updated:

``இந்த வயசுலேயும் அப்பா எங்களுக்காக வேலைக்குப் போயிக்கிட்டு இருக்காரு..." | ஜன்னலோரக் கதைகள் - 11

பெண்
News
பெண்

``வாழ்க்கை போன போக்குல வாழ்ந்துகிட்டு இருந்தோம். சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம இருந்துச்சே தவிர, திருப்தியா வாழல. திடீர்னு ஒரு விபத்து..."

Published:Updated:

``இந்த வயசுலேயும் அப்பா எங்களுக்காக வேலைக்குப் போயிக்கிட்டு இருக்காரு..." | ஜன்னலோரக் கதைகள் - 11

``வாழ்க்கை போன போக்குல வாழ்ந்துகிட்டு இருந்தோம். சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம இருந்துச்சே தவிர, திருப்தியா வாழல. திடீர்னு ஒரு விபத்து..."

பெண்
News
பெண்

மதுரையில் இருந்து சென்னை புறப்படும் வைகை ரயில். ரயிலில் கூட்டம் குறைவாக இருந்தது. எனக்கு அருகிலிருந்த இருக்கையையும் சேர்த்து கொஞ்சம் வசதியாக உட்கார்ந்து கொண்டேன். சிலமணி நேர பயணத்துக்குப் பின், ரயில் திருச்சியில் நின்றது. தூக்கத்தில் இருந்த என்னை, `கொஞ்சம் தள்ளுங்க' என்ற குரல் எழுப்பியது. எழுந்து பார்த்தபோது, ஒரு பெண் இரண்டு மூன்று கட்டைப் பைகளுடன் நின்று கொண்டிருந்தார். பார்த்ததுமே பழகிய முகம் போல் தெரிந்தது. அவரும் என்னை உற்றுப் பார்த்தார். கூட்டம் அதிகமாகவே, நான் சட்டென்று எழுந்து என் சீட்டில் மட்டும் அமர்ந்துகொண்டேன்.

ரயில்
ரயில்

ஒருவரையொருவர் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டோம். நீண்ட யோசனைக்குப் பின் சட்டென்று நினைவுக்கு வந்தது, அவர் என்னுடன் பத்தாம் வகுப்பு படித்த தோழி என்பது. அடுத்த சில நிமிடங்களில் அவள் பள்ளியில் முதல் ரேங்க் வாங்கியது, அவள் அமர்ந்து படிக்கும் இடம், மற்றவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது... எல்லாமே மனதுக்குள் திரையாக விரிந்தன. நீங்க `தேவி தானே' என்றேன். 'ஆமா உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்குனு யோசிச்சுட்டு இருந்தேன்' என அவள் சொல்லும்போதே, என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

`பத்தாம் வகுப்புக்குப் பிறகு நீ வேற ஸ்கூலுக்குப் போனதால அடையாளம் தெரியல' என்று கண்களை விரித்தாள். படிப்பு தொடங்கி, குடும்பம் வரை பேசத் தொடங்கினோம். `உனக்குக் கல்யாணம் ஆகிருச்சா' என நான் கேட்க, சட்டென்று அமைதியானாள். `எதும் தப்பா கேட்டுட்டேனா, சாரி' என்றேன். கண்களை வேறு பக்கம் திருப்பி `அதெல்லாம் இல்ல... ஊருக்கே தெரியும், உனக்குத் தெரியுறதுல என்ன இருக்கு' என்றபடி பேச்சைத் தொடர்ந்தாள்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

``ப்ளஸ் டூ படிக்கும்போது நம்ம ஸ்கூல்ல படிச்ச முருகனை காதலிச்சேன். ஸ்கூல் முடிச்சு எங்க ஊர்ல இருந்த டெலிபோன்பூத்ல வேலைக்குச் சேர்ந்தேன். 3,000 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அவன் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தான். அவனுக்கு வேலை கிடைச்சதும் வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறதுனு எங்க பிளான். தினமும் நான் வேலை பார்க்குற கடைக்கு அவன் வந்துருவான். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்போம். அப்படி ஒருநாள் பேசிக்கிட்டு இருந்தபோது எங்க அண்ணன் பார்த்துட்டான். வேலையை விட்டு நிப்பாட்டி, எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த வயசுல எனக்கு காதல்தான் முக்கியமா இருந்துச்சு. எதிர்காலம்பத்தியெல்லாம் ரெண்டு பேருமே யோசிக்கல. வெளியூருக்கு வந்து 20 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வேறவேற சாதினு ரெண்டு பேர் வீட்லயும் சேர்த்துக்கல. அவன் படிப்பும் பாதில நின்னுபோச்சு. ரெண்டு பேரும் கிடைக்கிற வேலைக்குப் போயிட்டு இருந்தோம். காசுக்கு கஷ்டப்படும்போது தான் வாழ்க்கைன்னா என்னங்கிறதே புரிஞ்சது. இதுக்கு நடுவுல எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு. வாழ்க்கை போன போக்குல வாழ்ந்துகிட்டு இருந்தோம். சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம இருந்துச்சே தவிர திருப்தியா வாழல. திடீர்னு ஒரு விபத்து. அதுல முருகனுக்கு தலையில அடிபட்டுருச்சு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம் காப்பாத்த முடியல. அவ்வளவுதான் 23 வயசுல மொத்த வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு...'' என்ற அவளின் கையை இறுகப் பிடித்துக்கொண்டேன். அப்போதுதான் அவளின் ஆடை, ஆபரணங்களைக் கவனித்தேன். தோல் உரிந்த வெள்ளை கம்மல், சில இடங்களில் ஓட்டைகள் இருந்த சேலை, ரப்பர் செருப்பு என அவளின் தோற்றம் மனதை கலங்கச் செய்தது. `இப்போ எங்கயும் வேலைக்குப் போறியா?' என்று கேட்டேன். ஆம், என்பது போல் தலையை அசைத்து மூக்கை முந்தானையில் சிந்திக்கொண்டாள்.

பெண் குழந்தை
பெண் குழந்தை

``இப்போ புள்ளைய வீட்டுல விட்டுட்டு சித்தாள் வேலைக்குப் போயிட்டு இருக்கேன். அவன் போனதுக்கு அப்புறம் ஒரு வருஷம் புள்ளைய வெச்சுக்கிட்டு தனியாத்தான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். வயக்காட்டு வேலைக்குப் போயிக்கிட்டு இருந்தேன். சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் என் தம்பி வந்து அப்பா வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்துட்டான். என்னால வீட்ல இருக்க எல்லாருக்கும் கஷ்டம். நானும் என் மகளும் எங்க அம்மா வீட்ல இருக்கிறதுனால என் தம்பிக்கு யாரும் பொண்ணு தரல. அண்ணி கோவிச்சுக்கிட்டு அவங்க வீட்டுக்கே போயிட்டாங்க. இந்த வயசிலேயும், அப்பா எங்களுக்காக வேலைக்குப் போயிட்டு இருக்காரு. என் மகள் கல்யாணத்துக்கு நகை சேர்க்கணுமாம்.

படிச்சுருந்தா எதாவது நல்ல வேலைக்குப் போயிருக்கலாம். படிக்காததுனால வீட்டு வேலை, கூலி வேலை, கட்டட வேலை செய்றேன். வேலைக்குப் போற இடத்துல ஆம்பளைங்க கொடுக்குற டார்ச்சர் தாங்க முடியல. `அதான் வீட்டுக்காரன் இல்லைல என்கூட வந்து இரு'னு ஓப்பனாவே கேட்டுருக்காங்க. அதனாலயே நிறைய வேலை மாறிட்டேன். சில கம்பெனில வேணும்னே நைட் ஷிஃப்ட் வேலை தருவாங்க. தப்பா நடந்துக்க பார்ப்பாங்க. இப்படி டெய்லி டெய்லி எத்தனையோ கஷ்டம். எல்லாத்தையும் குழந்தைக்காகப் பொறுத்துக்கிட்டு வேலைக்குப் போயிட்டு வந்தா, அக்கம் பக்கத்துல இருக்குறவங்க, `என்ன பண்றாளோ?', `எப்படி சம்பாதிக்கிறாளோ'னு காதுபடவே பேசுவாங்க. என்னை பேசுனாகூட பரவாயில்ல. `பொறந்ததுமே அப்பன முழுங்கிருச்சுனு என் மகளையும் பேசுறதுதான் கஷ்டமா இருக்கும்.

பெண் குழந்தை
பெண் குழந்தை

எல்லாத்தையும் தாண்டி ஒருத்தன் காதலிக்கிறதா சொன்னான். என் குழந்தையை நல்லா பார்த்துக்கிறதா வாக்கும் கொடுத்தான். ஒரு கட்டதுல எனக்கும் பிடிச்சு பழக ஆரம்பிச்சேன். கடைசில வீட்டுல ஏத்துக்க மாட்டாங்கனு சொல்லிட்டுப் போயிட்டான். அதுல மனசு நொறுங்கிப்போச்சு. அதுக்கு அப்புறம் வீட்ல எத்தனயோ முறை ரெண்டாவது கல்யாணம் பத்தி பேசுனாங்க. சில பேர் பொண்ணு பார்க்கக்கூட வந்தாங்க. ஆனா, யாருமே என் பொண்ணை ஏத்துக்க தயாரா இல்ல. இப்போ அவளுக்கு 10 வயசு ஆகிருச்சு. இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா வர்றவங்க அவகிட்ட எப்படி நடந்துப்பாங்கனு பயமா இருக்கு. அதுனால கல்யாண ஆசையெல்லாம் விட்டுட்டு புள்ளைக்காக வாழ ஆரம்பிச்சுட்டேன்.

இப்பகூட என் மக ஏதோ விளையாட்டு போட்டிக்கு செலக்ட் ஆகி இருக்கு. சென்னையிலதான் போட்டி நடக்குது. அதான் அக்கம் பக்கத்துல கடன வாங்கி அவளை கூட்டிக்கிட்டு வந்துருக்கேன். அந்த ஜன்னல் சீட்டுல உட்கார்ந்துருக்கு பாரு'' என்று மகளை கைகாட்டினாள். மெலிந்த தேகத்துடன் பாவாடை சட்டையில் அமர்ந்திருந்தாள் அந்தக் குழந்தை. இப்போகூட `கடன் வாங்கி சென்னைக்கு போகணுமா'னு நிறைய பேர் கேட்டாங்க. ``என் தலையெழுத்துதான் இப்படியிருக்கு. என் மகளாவது நல்லா வரணும்ல'' என்று சொல்லும் கண்களில் அவ்வளவு அன்பு. மகளை அழைத்து, `என்கூட படிச்சபுள்ள சென்னையில வேல பாக்குதாம். நீ போறியா உன்ன நல்லா பார்த்துக்கும்'னு என்னை கைகாட்ட, `நீயே நல்லாதான பார்த்துக்குற' என்று மகள் அம்மாவின் கைகளைப் பிடித்தாள்.

பெண் குழந்தை
பெண் குழந்தை

உண்மையில் பெண் என்பவள் பலவீனமானவள் அல்ல. அவள் மனதால் நூறு ஆண்களுக்கு இணையானவள். பெண்களின் உலகம் எப்போதும் மற்றவர்களுக்காக இயங்கத் தயாராக இருக்கும். ஆனால், பெண் என்பதால் அவள் எதிர்கொள்ளும் அடக்குமுறையும், வன்கொடுமையும்தான் அவர்களுக்கான சிறையாக இருக்கிறது. அந்தச் சிறையை உடைக்க நாம் கொடுக்க வேண்டியது சுதந்திரம் அல்ல... கல்வி. ஆணுக்கு இணையாக உழைக்கத் தயாராக இருக்கும் பெண் இனத்துக்கு நாம் கொடுக்கும் பரிசு கல்வி மட்டுமே.

கல்வி மட்டுமே அவர்களை மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவர்களாக அல்லாமல், தனித்து இயங்கச் செய்யும். திருமணம், குடும்பம், சமூகம் என்று அவர்களின் கல்வியைப் பறிக்காமல் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போம். சிங்கிள் மதரோ, கணவனை இழந்தவரோ, திருமணமாகாதவரோ, திருமணமானவரோ ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆயிரம் கனவுகளும், தேவைகளும் இருக்கின்றன. அவளை ஏளனமாகவோ, பலவீனமாகவோ, போகப்பொருளாகவோ பார்க்காமல் தோள் கொடுங்கள். அவர்களின் கனவுகளும் நனவாகட்டும்!