Published:Updated:

இந்தியா விரைவில் பெண்கள் நிறைந்த நாடாக மாறும்! |முதுமை ஒரு பூங்காற்று #MyVikatan

Senior Citizen
News
Senior Citizen

திருமணம் ஆகாத முதியவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்த முதியவர்களின் (60 வயதிற்கு மேல்) பாதுகாப்புக்காக முதியோர் திருமணங்கள் அதிகம் நடைபெறக்கூடும். இதனால் முதியவர்களுக்கென்று தனியாகத் திருமண தகவல் மையங்கள் அதிகம் தோன்றக்கூடும்.

இந்தியா விரைவில் பெண்கள் நிறைந்த நாடாக மாறும்! |முதுமை ஒரு பூங்காற்று #MyVikatan

திருமணம் ஆகாத முதியவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்த முதியவர்களின் (60 வயதிற்கு மேல்) பாதுகாப்புக்காக முதியோர் திருமணங்கள் அதிகம் நடைபெறக்கூடும். இதனால் முதியவர்களுக்கென்று தனியாகத் திருமண தகவல் மையங்கள் அதிகம் தோன்றக்கூடும்.

Published:Updated:
Senior Citizen
News
Senior Citizen

உலக மொத்தப் பரப்பளவில் இந்தியாவின் அளவு சுமார் 2.4 சதவிகிதமே! ஆனால் மக்கள் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியவின் மக்கட் தொகை சுமார் 16% சதவிகிதத்திற்கு மேல் உள்ளன! இந்தியா, பெரும் அளவில் முதியோர்களைக் கொண்ட உலகளவில் இரண்டாவது நாடாக விளங்குகிறது. 2013 ஆம் ஆண்டு 10 கோடியாக இருந்த இந்தியாவின் முதியோர் தொகை 2030 ஆம் ஆண்டு 19.8 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களில் 53.7% கிராமப் புறங்களில் வசிக்கிறார்கள். மேலும் 13.7% முதியவர்கள் தனியாக வசிக்கிறார்கள். முதியோர் மக்கள் தொகையில் பெண்களே அதிகம் (51%). இவர்களுள் 80 வயதுக்கு மேலுள்ளோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பெண்கள் நிறைந்த நாடு

தற்பொழுது நம் நாட்டில் மொத்த ஜனத்தொகையில் இளைஞர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் 1925 லிருந்து 1950 வரை இளைஞர்களின் ஐனத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 1950 க்கு பிறகு நம் நாடு முதியோர்கள் நிறைந்த பாரதமாக இருந்தது. அக்கால கட்டத்தில் வயதான ஆண்களை விட, வயதான பெண்கள் சுமார் 18 கோடி அதிகமாக இருப்பார்கள் அதாவது இன்னமும் 30 ஆண்களுக்குப் பிறகும் இந்தியா வயதான பெண்கள் அதிகமுள்ள நாடாக விளங்கும் என்று கணக்கிடப்படுகிறது

பெண்களின் ஆயுட்காலம் நீடிப்பதற்கு அவர்களுடைய ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் ஒரு முக்கிய காரணம்.

பெண்கள் அதிக ஆண்டு வாழக் காரணங்கள்

⦁ மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்தக் குழாய் சார்ந்த நோய்கள் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றன.

⦁ விபத்தில் மரணம் அடைபவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம். உ.ம்.: தொழிற்சாலை, சாலை விபத்து.

⦁ மன இறுக்கம் போன்ற மனநோய்கள் ஆண்களுக்கு அதிகம். அதனால் உடல் நலம் பாதிப்படைகிறது.

⦁ மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் போன்ற தீய பழக்கங்கள் ஆண்களின் ஆயுட்காலத்தை வெகுவாகக் குறைக்கின்றன.

⦁ சமீப காலத்தில் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோய் ஆண்களை அதிகம் பாதித்து மரணத்தை விளைவிக்கிறது.

⦁ பெண்களின் ஆயுட்காலம் நீடிப்பதற்கு அவர்களுடைய ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் ஒரு முக்கிய காரணமாகும்.

பெண்கள் அதிக நாட்கள் வாழ்வதால் விதவையர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

ஆண்களை இழந்த பெண்கள் 71%

பெண்களை இழந்த ஆண்கள் 29%

அதன் விளைவுகள்

வறுமை

கணவனை இழந்த பெண்களை மிகவும் பாதிப்பது வறுமை தான். கணவன் ஏதோ ஒரு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் வேளையில் அவருடைய மரணம் மனைவியை பெரிதும் பாதிக்கிறது. திடீரென வருமானம் நின்றுவிடுகிறது. சிறு சேமிப்பை வைத்து எவ்வளவு நாட்கள் தள்ள முடியும். கூட்டுக்குடும்பம் குறைந்கு வரும் நிலையில், மகனோ அல்லது மகளிடமிருந்தோ அதிகம் எதிர்பார்க்க முடியாது. வறுமை, கிராமத்தில் உள்ள விதவைகளைத் தான் அதிகம் பாதிக்கிறது. இதற்காக அரசு வயது முதிர்ந்த விதவையர்களுக்கென்று தனியாக ஒரு நல வாரியம் அமைத்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

தனிமை

வருங்காலத்தில் கூட்டுக்குடும்பம் என்றால் என்ன, என்று கேட்கும் ஒரு நிலை உருவாகும். கூட்டுக்குடும்பம் சிதறுவதால் முதியவர்கள் தனித்து விடப்படுகிறார்கள். மகன் வேலை தேடி வெளியூர் சென்றவிடுகிறான், மகள் திருமணம் முடித்து வேறு ஊர் செல்ல வேண்டியதாகிறது. வயது முதிர்வின் காரணமாக பெரியவரால் வெளியே எங்கேயும் செல்ல முடியாது. மூட்டுவலி போன்ற பல பிரச்சனைகளால் வெளியே செல்வது முடக்கப்படுகிறது. பல கிராமங்களில் இளைஞர்கள் இல்லாத வீடுகள் தான் அதிகம் காணப்படுகிறது. இவர்களின் தனிமையைப் போக்க நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பகல் நேர பராமரிப்பு மையம் (Day Care Centre) பிற்காலத்தில் தேவைப்படலாம்.

Senior Citizen
Senior Citizen

குழந்தைப் பேறு இல்லாத வயதான பெண்கள்

குழந்தைப் பேறு இல்லாத பெண்களின் நிலை இன்னமும் பரிதாபத்துக்குரியது. கணவருக்கும் வயதாகிவிட்டது அவரால் வேலைக்குச் சென்று சம்பாதிக்க முடியவில்லை. அதனால் வருமானம் குறையும். குழந்தைகள் இருந்திருந்தால் மகனோ அல்லது மகளோ ஓரளவிற்கு முதியவரின் குடும்பத்திற்கு உதவுவார்கள். குழந்தைப்பேறு இல்லாத கணவனை இழந்தவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். கணவனை இழந்த நிலையில் ஏற்படும் தனிமையோடு, குழந்தைப்பேறு இல்லாத நிலையில் ஏற்படும் தனிமையும் சேர்ந்து அவர்களது வாழ்க்கை ஒரு நரகமாக மாறிவிடுகிறது. இத்தகைய பெண்களுக்கு அரசாங்கம் பகுதி நேர வேலை வாய்ப்பு அளித்து உதவலாம்.

விவாகரத்து செய்து கொண்ட பெண்கள்

ஆண்களை விட பெண்கள்தாம் அதிகம் பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். இவர்களின் நிதி வசதி மற்றும் குடும்பப் பொறுப்பு, அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு பெரும் சுமையாக இருக்கும். காலம் செல்ல செல்ல ஆண் துணையில்லாமல் பெண்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு உதவ மனநல ஆலோசகர்கள் தேவைப்படலாம்.

இனி உழைத்துச் சம்பாதிக்கும் ஆண்வர்க்கம் குறையும். அவர்களை நம்பி இருக்கும் பெண்கள் போதிய நிதிவசதியின்றி தனிமையில் வாழும் ஒரு சூழ்நிலை தற்பொழுது உருவாகிக்கொண்டு வருகிறது.

முதிர்கன்னிகள்

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் முதிர்கன்னிகள், வருங்காலத்தில் நிறைய பேர் இருப்பார்கள். இவர்களின் பெற்றோர்களுக்கு இது ஒரு பெரும் சுமையாக இருக்கும். இத்தகைய முதிர் கன்னிகளை கடைசி வரை காப்பாற்றும் பொறுப்பு வயதான பெற்றோர்களின் தலையில் விழுகிறது. முதியவர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இதுவும் ஒரு முக்கியப் பிரச்னையாக பின்னாளில் வர வாய்ப்பு அதிகமாகியுள்ளது. திருமணம் ஆகாத முதியவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்த முதியவர்கள் (60 வயதிற்கு மேல்) தங்களின் பாதுகாப்புக்காக முதியோர் திருமணங்கள் அதிகம் நடைபெறக்கூடும். இதனால் முதியவர்களுக்கு என்று தனியாக திருமண தகவல் மையங்கள் அதிகம் தோன்றக்கூடும்.

பெண்கள் அதிக நாள் வாழ்வதால், விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகும். உழைத்துச் சம்பாதிக்கும் ஆண்வர்க்கம் குறையும். அவர்களை நம்பி இருக்கும் பெண்கள் போதிய நிதிவசதியின்றி தனிமையில் வாழும் ஒரு சூழ்நிலை தற்பொழுது உருவாகிக்கொண்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலை முதுமைக்காலத்திற்கு ஏற்றதுமல்ல. சமுதாயத்திற்கும் நல்லதுமல்ல.

- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

முதியோர் நல மருத்துவர்

டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை-600 017