தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மைசூரு நகரின் முதல் இஸ்லாமியப் பெண் மேயர்

158 ஆண்டு தொன்மையான மைசூரு நகர மாநகராட்சி, முதல் இஸ்லாமியப் பெண் மேயரைத் தேர்ந்தெடுத்துள்ளது. 31 வயதான தஸ்னீம், நகரின் மிக இளம் வயது மேயருமாவார். தையற்கலைஞரான முனாவர் பாஷா, இல்லத்தரசியான தஹ்சீன் பானுவின் மகளான தஸ்னீம் மைசூருவின் மீனா பஜார் பகுதியில் வாழ்ந்துவருகிறார். மீனா பஜார் வார்டில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் மாநகராட்சி உறுப்பினராகவும் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் மகளிர் வார்டாக மீனா பஜார் வார்டு மாற்றப்பட்ட பின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தஸ்னீம் வென்றார். நகரின் மகாராணி பெண்கள் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற தஸ்னீம், தொண்டர்களிடம் பழகும் பாங்கு மற்றும் மக்கள் பிரச்னைகளில் முழுவீச்சில் இறங்கிப் பணியாற்றுவது போன்ற தலைமைப் பண்புகளால் இந்தத் தேர்தலில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

தஸ்னீம்
தஸ்னீம்

‘மிக சுத்தமான நகரம்’ என்ற இடத்தை மைசூரு மாநகராட்சி பிடிக்க தன்னால் இயன்றதைச் செய்யப் போவதாக தஸ்னீம் அறிவித்திருக்கிறார். “2019-ம் ஆண்டின் தரப் பட்டியலில் நாட்டின் மூன்றாவது சுத்தமான நகரம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது, மைசூரு நகரம். விரைவில் பட்டியலில் முதலிடத்தை மைசூரு நகரம் பிடிக்க முயற்சி செய்வோம். இப்போதைக்கு அதுதான் என் முதல் பணி” என்று தஸ்னீம் கூறியுள்ளார்.

இது தவிர நகருக்குத் தடையில்லா குடிநீர் மற்றும் மின்சாரம் கிடைக்க முயற்சி செய்யவிருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி இடையே நேரடி தகவல் பரிமாற்ற வழிமுறைகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் இரு குழந்தைகள் தஸ்னீமுக்கு உள்ளனர்.

சபாஷ் தஸ்னீம்!

14 வயதில் துப்பாக்கி பிடித்து விடுதலைப் போரில் நின்ற லட்சுமி

மீபத்தில் சென்னையில் ‘கலர்ஸ் ஆஃப் குளோரி’ என்ற அமைப்பு நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழாவில் 92 வயதான லட்சுமி கிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டார். 70 ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் 14 வயதான மாணவியாக எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த லட்சுமி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவில் சேர்ந்தார். “ரைபிளை எப்படிக் கையாண்டேன் என்று இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது; என்னை விட இரண்டு மடங்கு அளவில் பெரிய துப்பாக்கி அது” என்று சொல்லும் லட்சுமி, நேதாஜியின் முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்.

லட்சுமி கிருஷ்ணன்
லட்சுமி கிருஷ்ணன்

முதன்முறை ‘கேம்பு’க்குச் சென்றவர், அதன்பின் திரும்பவில்லை. அவரது வாழ்க்கை இனி அங்கேதான் என்று முடிவெடுத்தார். அவருடன் 100 சிறுமிகளும் இளம்பெண்களும் பயிற்சி பெற்றார்கள் என்று நினைவுகூர்ந்தவர், அவர்களை போஸ் சந்தித்து, அவர்களில் யார் போர்க்களத்துக்குப் போகத் தயார் என்று வினவியதையும், தான் முதல் ஆளாக கைகளை உயர்த்தியதையும் விவரித்தார். “இப்போது குழந்தைகளால் அதிக அழுத்தத்துக்கு ஆளாவதாகப் பெற்றோர் வருந்துகிறார்கள். உண்மையில் அப்போதைய அழுத்தம்தான் அதிகம். படைக்குச் செல்லும் குழந்தைகள் திரும்புவார்களா, மாட்டார்களா என்று பெற்றோர் அச்சத்துடன் வாழ்ந்த காலம் அது” என்று லட்சுமி விடுதலைப் போராட்டக் காலத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.

துப்பாக்கி தூக்கிய துணிச்சல் பெண்!

விண்வெளி செல்லவிருக்கும் முதல் இந்தியப் பெண் ரோபோ

ந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, `வியோம் மித்ரா' என்ற பெண் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில் வியோம் மித்ரா ரோபோ முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி செல்லும் வீரர்களுக்கு உதவியாக இந்த ரோபோ செயலாற்றும். அவர்களுடன் தொடர்பிலிருந்து பேசி, கேள்விகளுக்குப் பதிலும் சொல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்குச் செல்லவிருக்கும் முதல் இயந்திரப் பெண்மணி, இந்த ரோபோதான்! கால்களற்ற இந்த ரோபோவால் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அசைய முடியும்.

பெண் ரோபோ
பெண் ரோபோ

விண்கலங்களின் உள்ளே ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களை சரியாகக் கணக்கிட்டு தகவல் தரக்கூடிய இந்த ரோபோ, புறப்பாடு மற்றும் தரை இறங்கும்போது அதற்கேற்றவாறு அமரக்கூடியது. தனக்கு இடப்படும் ஆணையைச் சரியாக உள்வாங்கி செயலாற்றக்கூடிய இந்த ரோபோ, பெங்களூரில் நடைபெற்ற ஆய்வரங்கு ஒன்றில் அனைவரையும் கவர்ந்தது. ஆய்வரங்கில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்,

“2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன்னோட்டமாக இந்த ரோபோ விண்ணில் ஏவப்படும்” என்று தெரிவித்தார். டிசம்பர் 2020 மற்றும் ஜூலை 2021 மாதங்களில் நடக்கவிருக்கும் ஆளில்லாத மிஷன்களில் இந்த ரோபோ விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பூம் பூம் ரோபோ!

‘செய்லிங்’ உலகக் கோப்பையில் பதக்கம் வென்றிருக்கும் இந்தியாவின் முதல் பெண்!

மீபத்தில் நடைபெற்ற ஹெம்பெல் உலகக் கோப்பை பாய்மரக்கப்பல் செலுத்தும் போட்டியில் சென்னைப் பெண் நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். 2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஆசியப் போட்டிகளில் பங்கேற்ற நேத்ரா, இப்போது ஸ்பெயின் நாட்டின் அருகிலுள்ள கேனரி தீவுகளில் பயிற்சி பெற்றுவருகிறார். “உலகின் தலைசிறந்த பாய்மரக்கப்பல் செலுத்தும் வீரர்களான வசிலியா, எப்ரு போலத் ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபடுவது என்னை மேம்படுத்தியிருக்கிறது. போட்டியின் இறுதி நாளில் என்னுடன் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் சொன்ன பின்பே நான் பதக்கம் வென்றேன் என்பது தெரியும். ஆனால், என்னுடன் பங்கேற்ற இந்திய வீராங்கனையும் தோழியுமான மடில்டா தல்லூரி வெற்றி பெறவில்லை என்பதால் நான் கொண்டாட்ட மனநிலையில் இல்லை” என்று நேத்ரா கூறினார்.

நேத்ரா குமணன்
நேத்ரா குமணன்

ஐ.டி நிறுவனம் ஒன்றை சென்னையில் நடத்தி வரும் நேத்ராவின் தந்தை குமணன், இந்த வெற்றியினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை நேத்ரா பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2018 ஆசியப் போட்டிகளில் நான்காவது இடத்தைப் பிடித்த நேத்ரா, கடும் அழுத்தம் காரணமாக அதில் தன்னால் சரிவர விளையாட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். வரும் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள 21 வயதான நேத்ரா, சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பொறியியல் பயின்று வருகிறார்.

மேலைக்கடல் முழுதும் கப்பல் விடும் பெண்!

பத்மபூஷண் விருது பெறும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்!

மீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் பட்டியலில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் பெயர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. 94 வயதிலும், `உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும்' என்கிற கருத்துடன் போராடி வருபவர் கிருஷ்ணம்மாள். தன் ‘லாஃப்டி’ அமைப்பின்மூலம் தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் நிலமற்ற மக்களின் குரலாக நிமிர்ந்துநின்று நிலச்சுவான்தார்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துபவர். காந்திய நெறிமுறைகளை இந்தக் காலத்தில் கடைப்பிடிப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு, நம் கண்முன் இருக்கும் உயிர்ப்பான ஆதாரம் இவர். கணவர் சங்கரலிங்கம் ஜெகநாதனுடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், சத்தியாகிரகப் போராட்டம் மூலம் வினோபா பாவே முன்னெடுத்த ‘பூதான இயக்கம்’ போன்ற போராட்டங்களில் கிருஷ்ணம்மாள் கலந்துகொண்டார்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

1968-ம் ஆண்டு 42 தலித் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணியைக் கண்டு கலங்கிய தம்பதி, அன்றைய தஞ்சை மாவட்டத்தில் தங்கியிருந்து போராட முடிவெடுத்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றும் டெல்டா மாவட்டங்களின் போராட்ட முகமாக கிருஷ்ணம்மாள் முன் நிற்கிறார். கிட்டத்தட்ட 13,000 குடும்பங்களுக்கு 13,000 ஏக்கர் வேளாண் நிலம் கிடைக்க உதவியிருக்கிறார். லாஃப்டி அமைப்பு மூலம் வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பாய் முடைதல், நெசவு, தச்சு வேலை என கைத்தொழில் பழக்கித் தருகிறார். தலித் பெண் குழந்தைகளுக்குக் கணினிப் பயிற்சி, சுனாமிக்குப் பின்னான புனர்வாழ்வு, கடலோரச் சுற்றுச்சூழல் மேம்பாடு என்று பல தளங்களில் இன்றும் பணியாற்றிவரும் கிருஷ்ணம்மாளுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்திருக்கிறது.

பூ(மித்)தாய்க்கு வாழ்த்துகள்!

அவள் செய்திகள்

மிஷைல்
மிஷைல்

‘பிகமிங்’ என்கிற தன் சுயசரிதை ஆடியோ நூலுக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷைல், கிராமி விருது வென்றிருக்கிறார். லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது இந்த நூல்.

கோதாவரி தத்தா
கோதாவரி தத்தா

ன் அழகிய மதுபானி ஓவியங்களுக்காக 2019-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் 93 வயதான கோதாவரி தத்தா. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கோதாவரி, மிதிலையின் ஓவியக்கலையைக் கடந்த 35 ஆண்டுகளாக 55,000 பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்!

சுனிதா மூர்ஜே பிரபு
சுனிதா மூர்ஜே பிரபு

14 ரூபாயில் கொசுவிரட்டும் மருந்தை பருத்தித் துணிகளில் சாயம் போல தோய்த்து எடுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்கு பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. மங்களூரைச் சேர்ந்த 16 வயது மாணவியான சுனிதா மூர்ஜே பிரபு தன் கண்டுபிடிப்புக்கென இந்த விருதை பிரதமர் மோடியிடமிருந்து பெற்றார்.

புனே நகரிலுள்ள `திரிஷ்டிஸ்ரீ அத்யாயம் பிரபோத் கேந்த்ரா' என்ற அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி முடித்திருக்கும் `பெண்களின் நிலை' என்ற கணக்கெடுப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் 44.8 சதவிகிதம் பெண்கள் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் என்றும், 10 சதவிகிதம் பெண்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

29 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 70,000 பெண்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஷப்னா சுலைமான்
ஷப்னா சுலைமான்

ணிச்சேரி ராஜேந்திரன் என்ற யானையைக் கட்டுப்படுத்தும் பாகனாக பயிற்சி எடுத்துவருகிறார் ஷப்னா சுலைமான் என்ற இஸ்லாமியப் பெண்மணி. மருத்துவரான ஷப்னாவின் தாத்தா சர்க்கஸ் உரிமையாளர். அதன் காரணமாக விலங்குகள் மேல் அதீத ஈடுபாடுகொண்ட ஷப்னா, பணியிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்து, யானையைப் பழக்கி வருகிறார். இதன் மூலம் கேரளத்தின் முதல் இஸ்லாமியப் பெண் யானைப் பாகன் என்ற பெருமையைப் பெறுகிறார் ஷப்னா.

24 வாரங்கள் வரையிலும் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே 20 வாரங்கள் வரை பெண்கள் கருக்கலைப்பு செய்யலாம் என்றிருந்த சட்டம் இப்போது மாற்றப்பட்டுள்ளது. விருப்பமில்லாத பிள்ளைப்பேறு, பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இந்தத் திருத்தம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும், பெண்ணுக்கு அவள் உடல் மீதான உரிமையை இந்தத் திருத்தம் நிலைநாட்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.