லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மாஸ்க், சானிட்டைசர்களை மாவட்டத்திலேயே தயாரிக்கும் ஆட்சியர்!

கொரோனா நோய்த் தொற்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த மாநிலத்தின் சாகர் மாவட்ட ஆட்சியர் பிரீதி மைதில் நாயக். நோய் பற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியதுமே, தேவையான மாஸ்க் மற்றும் சானிட்டைசர்களை மாவட்ட மக்களே தயாரித்துப் பயன்படுத்தும் அவசியத்தை உணர்ந்தார். அவற்றைத் தயாரிக்கும் பணிகளை முடுக்கிவிட்டார். சாகர் மாவட்ட மத்திய சிறைத்துறைக்குத் தகவல் அனுப்பியவர், அங்கு துணியாலான மாஸ்க் தயாரிக்கும் பணியை விரைவுபடுத்தினார். 55 சிறைக்கைதிகள் போதிய தொலைவில் அமரவைக்கப்பட்டு, துணி மாஸ்க் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

பிரீதி மைதில் நாயக்
பிரீதி மைதில் நாயக்

நாளொன்றுக்கு 1000 மாஸ்க் வீதம் கிட்டத்தட்ட 10,000 மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு, தலா 10 ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகத்துக்கு ரெட் கிராஸ் மூலம் விற்கப்பட்டன. இவை காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றோருக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் தலா பத்து ரூபாய்க்கு இந்த மாஸ்க்குகள் விற்கப்படுகின்றன. இதுபோலவே தியோரி பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் இந்த மாஸ்க்குகளைத் தயாரித்து வருகிறார்கள்.

சாகரிலுள்ள உள்நாட்டு மது உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுடன் இணைந்து மாவட்ட மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி ஆல்கஹால் சானிட்டைசர் தயாரிக்கப்பட்டது. 300 லிட்டர் சானிட்டைசர் இது போல தயாரிக்கப்பட்டு மருத்துவ, தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “எங்கள் மாவட்டத்தில் சானிட்டைசர் மற்றும் மாஸ்க்குகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. மருத்துவமனைகள், ராணுவ மருத்துவ மையம், காவல் துறைக்கு இவற்றை வழங்கியுள்ளோம்” என்று அறிவித்துள்ளார் பிரீதி.

மக்கள் கலெக்டருக்கு ஒரு சபாஷ்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலியிலிருந்து இந்தியர்களை அழைத்துவந்த விமானி!

பெரும்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியிலிருந்து 263 இந்தியர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்து வர முயற்சி செய்தது இந்தியா. இவர்களில் பலர் இந்திய வெளியுறவுத்துறை பணியாளர்கள். இவர்களை அழைத்துவர போயிங் 777 ஜம்போ ஜெட் ஒன்று தயாரானது. அதன் தலைமை விமானியாகப் பறந்தவர் விமானி சுவாதி ராவல்.

சுவாதி ராவல்
சுவாதி ராவல்

ஏற்கனவே மகளிர் தினமான மார்ச் 8 அன்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்குப் பறந்த `நிறுத்தமில்லா அனைத்துப் பெண்கள் விமானக்குழு' விமானத்தை இயக்கி, பிரதமர் மோடியிடம் பாராட்டைப் பெற்றவர் சுவாதி. ஐந்து வயது மகனுக்குத் தாயான சுவாதி, இந்திய விமானப் படையில் சேர்ந்து போர் விமானியாகும் ஆவல் கொண்டிருந்தார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானங் களைப் பெண் விமானிகள் இயக்கும் சூழல் இல்லாத காரணத்தால், ‘கமர்ஷியல் பைலட்’ லைசன்ஸ் பெற்று விமான ஓட்டியாக தன் பணியைத் தொடங்கியவர் சுவாதி. துணிச்சலுடன் கொரோனாவின் இப்போதைய ‘எபிசென்டரான’ இத்தாலியில் விமானத்தைத் தரையிறக்கி, அங்கிருந்த இந்தியர்களைப் பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் சுவாதி.

அசாத்திய துணிச்சல்காரிக்கு நம் பாராட்டுகள்!

தாய்க்கு மகன் எழுதிய வாழ்த்து!

மும்பை பொரிவாலியில் வசிக்கும் பிரசாத் கஜரேகர் என்ற இளைஞர், 30 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தன் தாய் அஞ்சலியைப் பாராட்டி வாழ்த்து ஒன்றை தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அஞ்சலி, பிரசாத் கஜரேகர்
அஞ்சலி, பிரசாத் கஜரேகர்

“ஒவ்வொரு அவசரநிலையின்போதும் ஒவ்வொரு பணியாளர் முன்னின்று மக்களைக் காப்பதுண்டு. நாமோ அவர்களது பணியைப் பாராட்டுவதேயில்லை. இந்த முறை மருத்துவப் பணியாளர்கள். இரண்டு நாள்களுக்குமுன் இரவு உணவின்போது அம்மா வெகு சாதாரணமாக அடுத்த நாள் முதல் தான் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் மருத்துவமனை, க்வாரன்டீன் மருத்துவமனையாகப் போவதாகவும், தான் இனி அங்கேயே தங்கிக்கொள்ளப் போவதாகவும் சொன்னார். அவரின் முதிய வயதை, நலிந்த உடல்நிலையைச் சுட்டிக்காட்டி வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தினேன். `நாட்டுக்குப் பேரிடர் ஒன்று வரும்போது நாங்களின்றி யார் துணை நிற்பது? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பணியில் சேரும்போது இதையெல்லாம் எதிர்பார்த்தே தான் சேர்ந்தோம்' என்று சொன்னார். அவரை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்தச் சூழலில் நாட்டுடன் துணை நிற்போம்; நம் பணியை முழு ஈடுபாட்டோடு செய்வோம். இனி வரும் காலம் நாம் இந்த ஆபத்து காலத்தில் எப்படி இருந்தோம் என்பதைக் கொண்டே அமையும்.”

அஞ்சலிகளுக்கு நம் அன்பும் ஆதரவும்!

அமைப்பு சாரா மற்றும் கூலித் தொழிலாளிகளுக்கு நிதி திரட்டும் சானியா மிர்சா!

லகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நோயை பெரும்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் துரித கதியில் கடும் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வீட்டுக்குள் முடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தினக்கூலி பெறும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளார்.

சானியா மிர்சா
சானியா மிர்சா

கூலித் தொழிலாளர்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கவிருப்பதாக தன் சமூக வலைதளங் களில் வீடியோ வெளியிட்டிருக்கும் சானியா, `சஃபா ஃபவுண்டேஷன்' மூலம் இந்த மக்களுக்கு உதவ இருப்பதாகக்கூறி, நிதியுதவியும் வழங்கியிருக்கிறார்.

“உலகமே பெரும் சிக்கலைச் சந்திக்கும் இந்த வேளையில் வீடுகளுக்குள் அமைதியாக அமர்ந்துகொண்டு இந்த நிலை மாறும் என்று காத்திருக்கும் வசதியும் வாய்ப்பும் இருக்கும் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள்தாம். ஆனால், இந்த வசதிகளின்றி அவதியுறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை நாம் செய்ய வேண்டும். சஃபா அமைப்போடு இணைந்து பணியாற்றும் நானும் நண்பர்கள் சிலரும் இதுபோன்ற குடும்பங்களுக்கு எங்களாலான சிறு உதவியைச் செய்கிறோம்” என்று அந்தக் காணொலியில் கூறியிருக்கிறார்.

கொடுத்து மகிழ்வதே மாபெரும் மகிழ்ச்சி!

முதியவர்களுக்கு உதவும் `கேர்மாங்கர்ஸ் இந்தியா' அமைப்பைத் தொடங்கிய பெண்!

பெங்களூரு மாநகரைச் சேர்ந்த 38 வயது டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர் மஹிதா நாகராஜ். சமீபத்தில் மஹிதாவைத் தொடர்புகொண்ட இங்கிலாந்தில் வசிக்கும் தோழி, வயது முதிர்ந்த தன் பெற்றோர் யார் உதவியும் இன்றி கோரமங்களா பகுதியில் தனியே வசிப்பதாகவும், நோய்த்தொற்று காலத்தில் வெளியே முதியவர்கள் வருவது சரியல்ல என்பதால், போதிய உணவுப்பொருள்கள் இன்றி தவிப்பதாகவும் தெரிவித்து, உதவ முடியுமா என்றும் கேட்டார். உடனே ஒப்புக்கொண்ட மஹிதா, முதிர்ந்த அந்தத் தம்பதிக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்று வழங்கினார். அடுத்து அமெரிக்காவிலிருக்கும் தோழி ஒருவர் தன் பெற்றோருக்கு உதவ முடியுமா என்று கேட்க, அவர்கள் வீட்டுக்கும் சென்று தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கிச்சென்று தரும் பணியை நிறைவேற்றினார் மஹிதா.

மஹிதா நாகராஜ்
மஹிதா நாகராஜ்

ஏன் இந்தப் பணியை தன்னார்வலர்களுடன் சேர்ந்து அமைப்பாகச் செய்யக் கூடாது என்று எண்ணிய மஹிதா, ஃபேஸ்புக்கில் CaremongersIndia என்ற பக்கத்தைத் தொடங்கினார். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், டெல்லி, நொய்டா, உத்தரகண்ட், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம் எனப் பல இடங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் இன்று இந்தப் பக்கத்தில் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அந்தந்தப் பகுதிகளில் உதவி தேவைப்படுபவர்கள் இந்தப் பக்கத்தை அணுகி அவர்களிடம் உதவி பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் கை கோத்து உடன் நடப்போம்!

அவள் செய்திகள்

அல்மா கிளாரா கார்சினி
அல்மா கிளாரா கார்சினி

இத்தாலியின் ஃபனாவ் நகரைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி அல்மா கிளாரா கார்சினி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்குப்பின் பூரண குணமடைந்த அல்மா அவருடைய மருத்துவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை ஊடகங்களிடம் பகிர்ந்தார் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் துணைத்தலைவர். “நல்ல மருத்துவர்கள் நன்றாகக் கவனித்துக்கொண்டதால் மட்டுமே நான் உடல்நலம் பெற்று வீடு திரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் அல்மா.

ஆதிரா எல்சா ஜான்சன்
ஆதிரா எல்சா ஜான்சன்

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆதிரா எல்சா ஜான்சன் என்ற இளம்பெண் மருந்துகளுக்கு அடங்காத காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வெளியிடங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ள முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி வாழும் ஆதிரா, சமீபத்தில் தன் முகநூல் பதிவு ஒன்றில், “இப்போது சில நாள்களாக கொரோனாவால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் புலம்புவதைப் பார்க்கிறேன். ஆண்டுக்கணக்காக காச நோய் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெளியுலகையே பார்க்காமல் ஒரே அறையில் வாழ்ந்தும் இறந்தும் போகிறார்கள். அவர்கள் மேல் இனியாவது கருணை கொள்ளுங்கள்” என்று எழுதியிருக்கிறார்.

ஷிரின் ராத் ருஹனி
ஷிரின் ராத் ருஹனி

இரான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஷிரின் ராத் ருஹனி. கோவிட்-19 வைரஸால் ஆயிரக்கணக்கானவர்கள் இரானில் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வரும் சூழலில், அங்கு ஏற்கெனவே அமலில் உள்ள பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருள்கள், கருவிகள் மற்றும் மருத்துவர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் ஷிரின் தொடர்ச்சியாக கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். அவருக்கும் துரதிர்ஷ்டவசமாக நோய்த் தொற்று ஏற்பட, அந்த நிலையிலும், ஒரு கையில் ஐ.வி மூலம் மருந்துகள், குளூகோஸை ஏற்றிக்கொண்டே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். சிகிச்சை பலனின்றி சமீபத்தில் இறந்துபோனார் ஷிரின். கையில் மாட்டிய டிரிப்புடன் அவர் சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வலைதளங்களில் பகிர்ந்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவருகின்றனர்.

 கிரண் மஜும்தார் ஷா
கிரண் மஜும்தார் ஷா

இந்தியாவின் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான பயோகானின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா. கிரண் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உடனடியாக கோவிட்-19 நோய்த் தொற்றைக் கண்டறியக்கூடிய எதிர்பொருள் (ஆன்டிபாடி) சார்ந்த டெஸ்ட் ஒன்றை துரித அடிப்படையில் அவரது ‘சின்ஜீன்’ நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் அது சந்தைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். நோய்த் தொற்று உள்ளதா, அப்படி இருக்கிறது என்றால் என்ன நிலையில் இருக்கிறது, நீங்கள் மீண்டிருக்கிறீர்களா என்ற மூன்றையும் சொல்லிவிடக்கூடியவை இந்த எதிர்பொருள் டெஸ்டுகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிர்பயா
நிர்பயா

`நிர்பயா' வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் தண்டனையை நிறைவேற்ற இயலாதபடி தொடர்ந்து முட்டுக்கட்டையை எதிர்த்தரப்பு ஏற்படுத்தி வந்தது. தூக்குக்கான நாள் குறிக்கப்பட்ட பின்பும் குற்றவாளி பவன் குப்தாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், குற்றம் நடந்தபோது பவன் ‘மைனர்’ என்றும் அவருக்குத் தூக்கு வழங்கப்பட்டது செல்லாது என்றும் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த ஆறு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றத்தின் தீவிரத்தைக் கணக்கில்கொண்டு கோரிக்கையைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்து, தண்டனையை உறுதி செய்தது. சமீபத்தில் டெல்லி திஹார் சிறையில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். தன் மகளுக்கு ஒரு வழியாக நீதி கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார் நிர்பயாவின் தாய் ஜோதி.

கிரண் மஜும்தார் ஷா, சோஹோவின் ராதா வேம்பு
கிரண் மஜும்தார் ஷா, சோஹோவின் ராதா வேம்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹுருன் ஆய்வு மையம் ஒவ்வோர் ஆண்டும் உலகின் மிகச் சிறந்த ‘செல்ஃப்-மேட்’ பில்லியனர்கள் பட்டியல் ஒன்றை வெளியிடுவதுண்டு. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உலகின் டாப் 100 பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் கிரண் மஜும்தார் ஷா (67 வயது) 34-வது இடத்தையும், சோஹோவின் ராதா வேம்பு (45 வயது) 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் கிரணின் மொத்த மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள் என்றும், ராதாவின் நிகர மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

திருமணம்
திருமணம்

`இந்தியா மனிதவள மேம்பாடு சர்வே' சமீபத்தில் வெளியிட்ட முடிவுகளின்படி, படித்த பெண்கள் தங்களைவிட குறைவான படிப்புடைய ஆண்களைத் திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. 1970-களில் தன்னைவிட குறைவாகப் படித்த ஆண்களை 10 சதவிகிதம் பெண்களே திருமணம் செய்து கொண்டனர். 2000-களில் இந்த அளவு 30 சதவிகிதம் என்று அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் சொந்தங்களுக்குள் நடைபெறும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் 20 சதவிகிதம் இதுபோல அதிகம் படித்த பெண்கள் தங்களைவிட குறைவாகப் படித்த ஆண்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று இந்தக் கணக்கீட்டை ஒட்டி ஆய்வு செய்துவரும் மேரிலாண்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

டென்னிஸ்
டென்னிஸ்

சானியா மிர்சா, அங்கிதா ராய்னா, ருதுஜா பொசாலெ ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் டென்னிஸ் குழு சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டிகளுக்கான `பிளே-ஆஃப்' போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். ஆசிய / ஓசியானா குவாலிஃபயர் முதல் கட்டப் போட்டிகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. உஸ்பெகிஸ்தான், தைவான், தென் கொரியா, இந்தோனேசியா அணிகளைத் தொடர்ச்சியாகத் தோற்கடித்து இந்த இடத்தைப் பிடித்துள்ளனர் இந்திய வீராங்கனைகள். ஃபெட்-கோப்பை மகளிர் பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாட இந்தியா தகுதி பெற்றிருப்பது இதுவே முதன்முறை.