லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் விலக்கு

நாடடங்கின் நான்காவது கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் சமீபத்தில் 50 சதவிகிதம் இளம் பணியாளர்களைக்கொண்டு இயங்க அரசு அனுமதித்தது.

மத்திய அரசு பிறப்பித்த இந்த ஆணையில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகங் களுக்கு நேரில் வருவதில் இருந்து விலக்கு அளிப்பதாக அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

வருகைப் பதிவேட்டிலிருந்தும் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாடடங்குக்கு முன்பு பிற தொடர் நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கும் அலுவலகங்களுக்கு வர விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சை தந்துகொண்டிருக்கும் மருத்துவர்களிடமிருந்து சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று பிரிவினரையும் ‘ரோஸ்டர்’ பணிப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் ஆணை தெரிவிக்கிறது.

நல்ல முன்னெடுப்பு!

சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் பரிசு

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கனகா. அவர் சகோதரர் கோகுல். இவர்கள் சைக்கிள் வாங்கும் ஆசையில் சிறுகச் சிறுக சேமித்துவைத்திருந்த பணத்தை முதல்வர் கொரோனா நிதிக்கு வழங்கியுள்ளனர்.

நாகை மாவட்டம் காமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்த பூமாலை என்பவர் `ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அமைப்புடன் சேர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் கையை இழந்தவர் பூமாலை. தந்தை செய்யும் பணிகளை அருகிலிருந்து கவனித்து வந்தார் 10 வயதான அவர் மகள் கனகா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

அரசின் செயல்பாடுகளைத் தொலைக்காட்சியில் பார்த்து வந்த கனகா, முதல்வரின் கொரோனா நிதிக்கு சைக்கிள் வாங்குவதற்காக சேமித்துவைத்திருந்த தன் பணத்தைத் தர விரும்புவதாக தன் தந்தையிடம் தெரிவித்தார். மகளின் ஆசைக்கிணங்க, தன் குடும்பத்துடன் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீண் நாயர் அவர்களைச் சந்தித்த பூமாலை, தன் குழந்தை களின் சேமிப்பான 2,210 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

தகவலறிந்த மாவட்டக் காவல்துறை இயக்குநர் டாக்டர் பிரதீப் ஃபிலிப், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருடன் இணைந்து கனகாவுக்கும் அவர் சகோதரர் கோகுலுக்கும் சைக்கிள்களைப் பரிசளித்து அசத்திவிட்டார்கள்.

காவல்துறையினர் நம் நண்பர்களே!

சாலையோரம் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தி வைத்த தன்னார்வலர்கள்

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் கொரோனா நோய் காரணமாக ஆதரவின்றி சாலையோரங்களில் சுற்றித்திரிபவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் தங்க இடமும் அளிக்கும் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த மாத இறுதியில் தன்னார்வலர்கள் சிலர் மதுரை மாவட்ட எல்லையோர கிராமங்களில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநலம் குன்றிய கர்ப்பிணி ஒருவரை மீட்டு இந்த முகாமுக்கு அழைத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணை அவர் கணவர் கைவிட, தான் வசித்து வந்த கோவை, பழநி எனச் சுற்றியவர், மனநல பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார்.

ஆதரவற்ற சாலையோரம் கர்ப்பிணியாக மீட்கப்பட்டவர், வளைகாப்பு செய்துகொள்ள வேண்டும் என்ற தன் ஆசையைச் சொல்ல, முகாமுக்கு உதவிவரும் தன்னார்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து புத்தாடை வாங்கித் தந்து அவரை அலங்கரித்து, முகாமிலுள்ள 55 பெண்களுடன் சேர்ந்து வளையல் அணிவித்து சிறப்பாகக் கொண்டாடிவிட்டார்கள்.

இப்படி சிலரால்தான் மனிதம் வாழ்கிறது!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டிய இந்தியச் சிறுமி ஸ்ரவ்யா

அமெரிக்காவில் கோவிட்-19 நோயை விரட்ட கடும் முயற்சியில் இறங்கியுள்ள அந்நாட்டின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல முன்னெடுப்புகளை பொதுமக்கள் செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் வசித்து வரும் விஜய் ரெட்டி அன்னப்பரெட்டி என்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரின் மகளான 10 வயது சிறுமி ஸ்ரவ்யா. மேரிலாண்டு பகுதியைச் சேர்ந்த லாரா மட்னி மற்றும் லைலா கான் ஆகிய இருவருடனும் இணைந்து 100 பெட்டிகள் குக்கீஸை கொரோனா ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கியிருக்கிறார் ஸ்ரவ்யா. கைகளால் செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகளையும் இந்தச் சிறுமிகள் செய்து பரிசளித்திருக்கிறார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

இவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டியுள்ளார். கொரோனாவை ஒழிக்க தொடர்ந்து கடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்குப் பக்கபலமாக ஸ்கவுட் இயக்கத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமிகள் பணியாற்றிவருவது தனக்கு பெரும் மகிழ்வைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.

“ஒவ்வொருவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை எங்கள் குழு நம்பியது. எங்கள் சிறிய பணி ஆயிரக் கணக்கானோருக்கு ஊக்கமளித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஸ்ரவ்யா கூறியுள்ளார்.

விளையும் பயிர்!

கொரோனாவுக்கு சிகிச்சை தர ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவர்

ப்பிரிக்காவின் டிஜிபோதி நகரில் மருத்துவராக மூன்று மாதங்களுக்கு முன் பணியைத் தொடங்கிய இந்திய மருத்துவர் டாக்டர் திவ்யா சிங். இந்திய வெளிநாட்டு சேவையில் பணியாற்றும் தன் கணவருடன் ஆப்பிரிக்கா சென்றவர், இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்ததை அறிந்ததும் நாடு திரும்பினார். ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பை முடித்திருக்கும் திவ்யா, மும்பை தாராவி பகுதியில் சிகிச்சை அளிக்க தன்னார்வலர்கள் வேண்டும் என்ற அறிவிப்பு வந்ததும் தன் பணியை அங்கு தொடங்கினார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த மாதம் முழுக்க அந்தப் பகுதியில் வீடுவீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் பிற கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களைப் பரிசோதிக்கும் பணியை மேலும் 10 மருத்துவர்களுடன் இணைந்து செய்துவருகிறார். பி.பி.இ. எனப்படும் பாதுகாப்புக் கவச உடைகளின் போதாமையைப் போக்க, மும்பை சர்ஜிக்கல் சொசைட்டி அமைப்புடன் இணைந்து பொதுமக்களிடம் நிதி வசூலித்து தேவைப்படும் மருத்துவர்களுக்கு வழங்கியும் வருகிறார்.

`ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு இருக்கும்போது அங்கிருந்து இங்கு வந்து பணியாற்றுவது ஏன்' என்று கேட்பவர்களுக்கு திவ்யா பதிலளிக்கிறார். “இது என் கடமை; படித்து முடித்து ஓராண்டு பணி செய்திருந் தாலும், சமூகத்துக்குப் பணி செய்கிறோம் என்று முடிவெடுத்துவிட்டால், திரும்பிப் பார்க்கவே கூடாது” என்கிறார்.

சமூகப் போராளிக்கு நம் வாழ்த்தும் அன்பும்!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார் 50 வயதான லாலி கோபிநாத். அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்தனர். அவரது இதயம் 27 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொச்சி லிசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு காவல்துறை ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 40 நிமிடங்களில் இந்த சாதனையை திருவனந்தபுரம் சங்குமுகம் துணை கமிஷனரான ஐஸ்வரியா தோங்க்ரே ஐ.பி.எஸ் செய்து முடித்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜசிந்தாவின் கொரோனாவுக்கு எதிரான தெளிவான நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடு காரணமாக நியூசிலாந்தில் சமீபத்தில் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் பதிவாகவில்லை.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

க்னோ நகரில் வசித்துவரும் 17 வயதான மாற்றுத்திறனாளி வீராங்கனை பலக் கோலி, டோக்கியோ் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தயாரிப்புகள் செய்து வருகிறார். நாடடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே நகரின் வெளியே வீட்டு வசதி சொசைட்டி ஒன்றில் ஃப்ளாட் ஒன்றை வாடகைக்கு ஒப்பந்தம் செய்தவர், அதன் மைதானத்தில் ஒளிவிளக்குகள் ஏற்பாடு செய்து இரவுகளிலும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாடடங்கு காரணமாகப் பயிற்சி தடைப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்ததாகவும், எப்படியாவது இந்தியாவுக்கு பதக்கம் வாங்கிவருவதே தன் லட்சியம் என்றும் பலக் கூறுகிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

முன்னாள் பிரபஞ்ச அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், கடந்த 2014-ம் ஆண்டு, அடிசன்ஸ் நோயால் தாக்கப்பட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதாகவும், இப்போது முழு உடல்நலம் பெற்றுவிட்ட தாகவும் தகவல் வெளியிட்டிருக்கிறார். உடலின் அட்ரீனலின் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத காரணத்தால் வரும் இந்த நோய், உடல் உறுப்புகள் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கக் கூடியது. நுன்சாகு என்ற ஜப்பானிய வீர விளையாட்டுக் கருவியைக்கொண்டு தொடர்ச்சியாக செய்துவந்த தியானத்தால் நோயிலிருந்து மீண்டிருக்கிறார் சுஷ்மிதா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மால்கள் மற்றும் திரையரங்குகள் தொடர்ச்சியாக நாடடங்கில் மூடப்பட்டிருப்பதால், சினிமா தயாரிப்பு முழுக்க முடங்கியிருக்கிறது. எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படங்கள் வாங்குவாரில்லாமல் ஒதுக்கப்பட்டிருக்கும் வேளையில், நடிகை வித்யா பாலன் நடித்திருக்கும் கணித மேதை `சகுந்தலா தேவி' பற்றிய வாழ்க்கைச் சித்திரப்படம், அமேசான் பிரைமில் விரைவில் வெளியிடப்படவுள்ளது. “இந்தக் கடும் சூழலிலும், இத்திரைப்படம் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி” என்று ட்விட்டரில் எழுதியிருக்கிறார் வித்யா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

நாடடங்கு காரணமாக வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில், வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்து உடல்நலம் பேணுவது குறித்த விழிப்புணர்வு காணொலி ஒன்றை விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வீடுகளில் நாம் பயன்படுத்தும் கார்பெட்டுகள், குப்பிகள், படிக்கட்டுகள் என்று எல்லாவற்றையும் உடற்பயிற்சிக்குப் பயன்படுத்துவது எப்படி என்று விளக்கியிருக்கிறார். “இந்த மோசமான காலகட்டத்தில் நம்மை உறுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாடகை ரிக்‌ஷா ஓட்டுநரின் மகளான 15 வயது ஜோதி, தன் தந்தையுடன் டெல்லியில் வசித்துவந்தார். கடும் பண நெருக்கடி காரணமாக, சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார்கள் தந்தையும் மகளும். கையிலிருந்த 500 ரூபாய்க்கு பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிய ஜோதி, பில்லியனில் உடல்நலமில்லாத தன் தந்தையை அமர்த்தி, 1200 கிலோமீட்டர் தூரம் கடந்து தன் சொந்த ஊரை அடைந்தார். “வழி நெடுக வேலை இழந்த தொழிலாளர்கள் ஹைவேக்களில் நடந்து சென்றுகொண்டிருந்ததால், பாதுகாப்பு பற்றிய எந்தக் கவலையுமின்றி, பயணம் செய்தோம்” என்கிறார் ஜோதி.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மெரிக்காவின் டென்வர் நகரில் வசித்துவரும் 92 வயது மூதாட்டியான கார்னேலியா வெர்டென்ஸ்டீன், தன்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்திலும், ஃபேஸ்டைம் மூலம் பியானோ வகுப்புகள் எடுத்துவருகிறார். நாஜி ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்குத் தப்பிய கார்னேலியா, கடந்த 50 ஆண்டுகளாக இடைவிடாது பியானோ வகுப்புகள் எடுத்துவருகிறார்.