
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க புதிய கருவியை வடிவமைத்திருக்கும் பெண்கள்
2016-ம் ஆண்டு முதல் ஆர்லாடி சொல்யூஷன்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள் ரஞ்சனா, ஆர்த்ரா, சாஞ்சி ஆகிய பொறியாளர்கள். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ‘ரேபேபி’ என்ற பெயரில் உலகின் முதல் ‘தொடலற்ற குழந்தைகளுக்கான மூச்சு மற்றும் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி'யை அறிமுகப்படுத்தியது.

இப்போது இந்தப் பெண்கள் மூவரும் இணைந்து `ரேலாடி ஸ்கோப்' என்ற புதிய கருவியை வடிவமைத்திருக்கிறார்கள். சிறிய ஐ.சி.யூ கண்காணிப்புக் கருவியான ‘ரேலாடி’ கருவி தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள நோயாளிகள் மூச்சுவிடுவதிலுள்ள சிக்கலை அளவிட்டு, ‘மைல்டு’ அல்லது ‘சிவியர்’ என்று வரிசைப்படுத்துகிறது. அதிக சிக்கலுள்ள நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இது வழிவகுக்கும். வீடுகளில் ‘ஹோம் க்வாரன்டீன்'னில் இருக்கும் நோயாளிகளைக் கண்காணிக்கவும் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவியைக்கொண்டு ஒரே நேரத்தில் ஒரு லட்சம் நோயாளிகள் வரை கண்காணிக்க முடியும். உலகின் எந்த மூலையிலிருந்தும் செயலி கொண்டு இந்தக் கருவியை இயக்க முடியும் என்பது கூடுதல் வசதி.
சரியான நேரத்தில் அவசியமான கண்டுபிடிப்பு!
கொரோனா காலத்தில் பணிக்குத் திரும்பும் மிஸ் இங்கிலாந்து!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 24 வயது பாஷா முகர்ஜி. நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இரண்டு மருத்துவப் பட்டங்கள் பெற்ற பாஷா, அங்குள்ள மருத்துவமனையில் பயிற்சி எடுத்துக்கொண்டே மாடலிங், ஃபேஷன் ஷோக்கள் என்று கலக்கிவந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக நீள் விடுப்பு எடுத்துக்கொண்டார். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதி திரட்ட உதவும் சாரிட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோதுதான் கொரோனா காரணமாக உலகே குழப்பத்தில் ஆழ்ந்தது. இங்கிலாந்தில் மருத்துவர்களின் தேவையை உணர்ந்த பாஷா, தன் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனே நாடு திரும்பினார். “மிஸ் இங்கிலாந்தாக இருந்துகொண்டே தேசிய ஆரோக்கிய மிஷனில் மருத்துவராகப் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. சக மருத்துவர்கள் உயிரைப் பணயம்வைத்து பணியாற்றுகையில், நான் அலங்கரித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தில் இருப்பது எப்படி முறையாகும்?” என்று கேட்கிறார் பாஷா.
உள்ளத்திலும் அழகி... உயர்ந்த அழகி!
நாடடங்கு காலத்தில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு நடவடிக்கைகள்
மார்ச் 24 முதல் மே 31 வரை மாநிலம் முழுக்க சுமார் 1.59 லட்சம் கர்ப்பிணிகளுக்குக் குழந்தைப்பேறு நிகழும் என்று தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் கணக்கிட்டுள்ளது. இதுவரை இவர்களில் 50,000 பெண்கள் குழந்தை பெற்றிருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக நாடடங்கு அமலில் இருப்பதால் கர்ப்பிணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தப் பெண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் பகிரப்பட்டுள்ளது. மாவட்டங்களிலுள்ள ஆரம்ப சுகாதார மையங் களுக்கு அனுப்பப்படும் இந்தப் பட்டியலின்படி கர்ப்பிணிகளை மாவட்ட தாய் சேய் நல அதிகாரிகள் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ முறையில் கண்காணிப்பர்.

“நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த அறிகுறிகள்கொண்ட கர்ப்பிணிகள், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பத்து நாள்களுக்கு முன்பே அவசர கால குழந்தைப்பேறு மற்றும் சேய்நல மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். ‘கன்டெயின்மென்ட் ஸோன்’களிலிருந்து கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆர்டி - பிசிஆர் சிகிச்சை தரப்படும். குழந்தைப்பேறுக்கான தனி வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு பிபிஈ அணிந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்” என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர, கர்ப்பிணிகளுக்கு உதவ ‘ஜனனி சிசு சுரக்ஷா கார்யகிரம்’ எனும் அவசர கால ஊர்திகளும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருமையான திட்டமிடல்... பாராட்டுகள்!
கொரோனாவால் தடைப்பட்ட திருமணத்தை மருத்துவமனையில் நடத்திய முதிய ஜோடி
சிங்கப்பூரைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி மே ஸ்வான். இவரைக் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 81 வயது முதியவர் டாம் இல்ஜாஸ்.
10 ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளம் மூலம் நண்பர்களான டாம், மே - இருவரும் தங்கள் சொந்த நாடுகளிலேயே வசித்து வந்தனர். அவ்வப்போது டாம் தன் காதலியைச் சந்திக்க சுவீடனிலிருந்து சிங்கப்பூர் வருவதுண்டு. அப்போது தங்களுக்குப் பிடித்த நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வதுண்டு. முதிய வயதில் இப்படி 13 மணி நேர விமானப் பயணம் செய்துதான் காதலியைப் பார்க்க வேண்டுமா, அவரை ஏன் திருமணம் செய்துகொண்டு இருவரும் ஒரே நாட்டில் வசிக்கக் கூடாது என்று டாமின் மகள் கேள்வியெழுப்ப, மேயிடம் திருமண விருப்பம் தெரிவித்தார் டாம்.

திருமணத்துக்கு ஒப்புக்கொண்ட மேயுடன் இணைந்து ஹோட்டல் ஒன்றையும் திருமணத்துக்குப் பதிவு செய்தார் டாம். துரதிர்ஷ்டவசமாக கொரோனா பரவ ஆரம்பிக்க, பாதுகாப்பு கருதி திருமணத்தைத் தள்ளிவைத்தது இந்த ஜோடி. ஆனால், திடீரென வாத நோயால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் படுத்த படுக்கையானார் மே. இதற்கு மேல் திருமணத்தைத் தள்ளிப்போடுவது சரியல்ல என்று உணர்ந்த டாம், மருத்துவமனை நிர்வாகத்திடம் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்க, அனுமதி கிடைத்தது.
சமீபத்தில் அலெக்சாண்டிரா மருத்துவமனை வளாகத்திலேயே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், திக்கித் திணறி தன் மண உறுதியைத் தெரிவித்து டாமை மணந்தார் மே. கொரோனா காரணமாகக் குறைந்த அளவிலான நண்பர்கள் மற்றும் மருத்துவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.
கலக்கும் கொரோனாவில் காதல் திருமணம்!
மூன்று வார கைக்குழந்தை... பணிக்குத் திரும்பிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஶ்ரீஜனா கும்மல்லா. சமீபத்தில் பேறுகால விடுப்பில் சென்ற ஶ்ரீஜனா, குழந்தை பிறந்து மூன்றே வாரங்களில் பணிக்குத் திரும்பியிருக்கிறார். 2013-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஶ்ரீஜனா, நாடே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, தான் விடுப்பில் இருப்பது சரியல்ல என்று கருதியதால் பணிக்குத் திரும்ப முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.

“காலையில் அலுவலகம் சென்று பணியாற்றினேன்; மாலையில் மருத்துவமனையில் மகன் பிறந்துவிட்டான். கொரோனாவால் இங்கு மோசமான சூழல் நிலவுகிறது. அதனால் முதல்வரிடம் நான் பணிக்குத் திரும்ப அனுமதி கோரினேன். நான் என் முடிவில் தெளிவாக இருக்கிறேனா என்று அவர் கேட்டார். தெளிவாகப் பதிலளித்ததும் பணிக்குத் திரும்ப எனக்கு அனுமதியளித்தார். மனிதாபிமான அடிப்படையிலும் இப்போது என் பணி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நேரத்தில்தான் நாம் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து ஒன்றிணைந்து நிற்க வேண்டும்” என்று ஶ்ரீஜனா கூறுகிறார்.
“பரபரப்புக்காகவும் பாராட்டுக்காகவும் நான் இதைச் செய்யவில்லை; என் கடமையை உணர்ந்தே செய்து கொண்டிருக்கிறேன்” என்று விடுப்பை மறுத்துவிட்டுப் பணியாற்றுவது பற்றிய எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதில் தருகிறார் ஶ்ரீஜனா.
மக்கள் பணியைத் தொடரும் புது அம்மாவுக்கு நம்வாழ்த்துகள்!
அவள் செய்திகள்

இசையமைப்பாளர் தாஜ் நூர் உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வுக்கான `உள்ளே போ' பாடலுக்கு நடனமாடி அசத்தியிருக்கிறார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குநரான கவிதா ராமு ஐ.ஏ.எஸ். வீட்டிலேயே நடனமாடி உருவாக்கப்பட்ட இந்த எளிய விழிப்புணர்வு வீடியோ, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ``கொரோனா காலத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருந்தாலும், அதன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு சத்து மாவு, முட்டை வழங்கி கொரோனா கணக்கெடுப்பும் செய்துவருகிறார்கள்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 92 வயது பாட்டியான பாத்திமா ஷேக்கும், அவரது மூன்று வயது பேத்தியான மைசரா ஷேக்கும் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்கள். ஏழு மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பாத்திமா முழு உடல்நலம் பெற்றதில் மகிழ்ச்சி என்று சிகிச்சையளித்த சிம்பயாசிஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வீடற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மகளிருக்கென சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்தப்பட்டுவரும் ‘பெட்டர் வேர்ல்டு ஷெல்டர்’ ஹோமிலுள்ள பெண்கள் மாநகராட்சியிடம் துணி பெற்றுக்கொண்டு, மீள் பயன்பாடு செய்யக்கூடிய துணி மாஸ்க்குகளைத் தயாரித்து சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஹோமின் இயக்குநரான டாக்டர் ஐஸ்வர்யா ராவ், “நாங்கள் நேரடியாகக் களத்தில் இல்லை; ஆனால், எங்களால் இயன்ற உதவிகளைக் களப் பணியாளர்களுக்குச் செய்கிறோம்” என்று கூறுகிறார்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டதையடுத்து பொதுமக்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்துவருகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட 85 வயது மூதாட்டியான தையல்நாயகி, தன் முழு மாத முதியோர் ஓய்வூதியத் தொகையான 3,500 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார். ஊரடங்கு காலத்திலும் நேரில் சென்று சட்டப்பேரவையில் அவர் பணமாக நிதியை அளிக்க, அதை வங்கிக் காசோலையாக மாற்றித் தருமாறு சொல்லி அனுப்பிவிட்டனர் அதிகாரிகள்.

அமெரிக்காவின் கனெக்டிகட் நகரின் சவுத் விண்ட்சர் மருத்துவமனையில் மைசூரு நகரைச் சேர்ந்த உமா மதுசூதனன் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கொரோனா வார்டில் சிறப்புப் பணியாற்றும் உமாவுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரது வீட்டின் முன் 100 கார்கள், காவல்துறை ஜீப்கள், தீயணைப்பு வண்டி களோடு வரிசையாக ஊர்வலம் சென்று, ஹாரன் அடித்து, பதாகைகள் ஏந்தி நன்றி தெரிவித்தார்கள்.

கொரோனா விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை எழுதி, மெட்டமைத்து வைரலாக்கி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. `பீர் தேகே சபை தூர் தாகோ' என்ற இந்தப் பாடல், `அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும், கூட்டம் கூடாமல் விலகி இருப்போம்' என்ற கருத்தை முன்வைக்கிறது. பிரபல இசையமைப்பாளர் இந்திரனில் சென் இந்தப் பாடலுக்கு இசையமைத்துப்பாடியுள்ளார்.