
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
முழு ஊதியத்தையும் கொரோனா நிதிக்கு வழங்கிய துப்புரவுப் பணியாளர்!
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷனில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிவருபவர் அலிவேலு. சமீபத்தில் அமைச்சர் கே.டி.ராமராவ் அலுவலகத்திலிருந்து அலிவேலுவைத் தொடர்புகொண்ட அவரின் செயலர், அமைச்சரைச் சந்திக்க அலிவேலுவுக்கு அழைப்பு விடுத்தார்.
சில நாள்களுக்கு முன் அலிவேலு தன் ஒரு மாத முழு ஊதியத்தையும் முதலமைச்சர் கொரோனா நிதிக்கு வழங்க ஆசைப்படுவதாக அவர் கணவர் ஶ்ரீசைலம் யாதவ் தன் ட்விட்டர் கணக்கில் பதிந்திருந்தார். காய்கறிச் சந்தையில் தினக்கூலியாகப் பணியாற்றுபவர் யாதவ். இந்தத் தகவலைக் கண்ட அமைச்சர் கே.டி.ராமராவ், அலிவேலுவைச் சந்திக்க ஆவல் கொண்டார். ஹைதராபாத்தின் மலக்பேட் பகுதியில் துப்புரவுப் பணியாளராகக் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார் அலிவேலு.

தன் கணவருடன் அமைச்சரை அலிவேலு சந்தித்து 10,000 ரூபாய்க்கான காசோலையை நேரில் வழங்கினார். அவருக்கு ஏதேனும் உதவி தேவையா என்ற அமைச்சரின் கேள்விக்கு, எதுவும் தேவையில்லை என்று மறுத்திருக்கிறார். “உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நோயைப் போக்கும் நடவடிக்கைகளில் பல மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் கொரோனாவை வெல்வோம்” என்று கூறுகிறார் அலிவேலு.
வறுமையிலும் பிறர்க்குதவும் நல்ல மனம் வாழ்க!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெண்களின் பிளாஸ்மா தானம்!
டெல்லியில் கோவிட்-19 நோயால் தாக்கப்பட்ட தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற பெண்கள், முழு குணமடைந்திருக்கிறார்கள். இப்போது டெல்லி நரேலா பகுதியிலுள்ள தனிமை வார்டு ஒன்றில் இருக்கும் இந்தப் பெண்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முழு குணமடைந்துவிட்டதாக முடிவுகள் வந்துள்ளன.
“ஏற்கெனவே இவர்களில் ஏழு பெண்கள் தங்கள் பிளாஸ்மாவை கொரோனா நோய் தக்கியவர்களுக்கு சிகிச்சையளிக்க தானமளித்திருக்கிறார்கள். இன்னும் பலர் தரத் தயாராக இருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவருமே தென்னிந்தியர்கள்” என்று கூறியிருக்கிறார், மாவட்ட நிர்வாகத்தால் இந்த தானத்தை மேற்பார்வை யிட நியமிக்கப்பட்டிருந்த தன்னார்வலர்.

இவர்கள் தவிர நரேலா மற்றும் சுல்தான்புரி பகுதிகளி லுள்ள கோவிட்-19 கேம்புகளில் தங்கியிருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த பெண்களும் தங்கள் பிளாஸ்மாவைத் தர முன்வந்ததாகவும், அதை அரசு மறுத்திருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிளாஸ்மா சேகரிப்புப் பணியைச் செய்ய டாக்டர் முகமது ஷோயப் அலியை அரசு அனுமதித்துள்ளது. “மலேசியா, அல்ஜீரியா, ஃபிஜி போன்ற நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் பிளாஸ்மா தர முன்வந்தும், நாங்கள் அனுமதிக்கவில்லை. இதுவரை ஜமாத்தைச் சேர்ந்த 100 பேர் பிளாஸ்மா தானம் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
தானத்தில் சிறந்த லேட்டஸ்ட் தானம்!
மக்களுக்கு அவசரப் பொருள்களை தானே சுமந்து சென்று தரும் சட்டமன்ற உறுப்பினர்!
தெலங்கானா மாநிலம் முலுகு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீதக்கா என்று அழைக்கப்படும் தனஶ்ரீ அனசுயா. நாடடங்கு சட்டம் அமலில் இருக்கும் கடந்த 40 நாள்களாகத் தன் தொகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு அவசரப் பொருள்களையும் உணவையும் தன் தோளிலும் தலையிலும் சுமந்து சென்று வழங்குகிறார் இவர்.

275 குடியிருப்புகளுக்கு, ரேஷன் பொருள்களைக் காடுகளுக்குள் சுற்றித் திரிந்து வழங்கிவருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாகக் கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சீதக்கா, ஒரு காலத்தில் முலுகு பகுதியைக் கலக்கிய மாவோயிஸ்ட். 11 ஆண்டுகள் தலைமறைவு வாழ்ந்தவர், 2004-ம் ஆண்டு சரணடைந்தார். 2009-ம் ஆண்டு, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மீண்டும் 2018-ம் ஆண்டு, முலுகு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். தினமும் காலை 8 மணிக்கு நிவாரணப் பொருள்களுடன் கிளம்பி, தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் பயணிக்கிறார். ரேஷன் கார்டுகள் கிடைக்கப்பெறாத ஆதிவாசி மக்களுக்கு உதவவே இவ்வாறு பொருள்களைத் தூக்கிச்செல்வதாக சீதக்கா சொல்கிறார். சட்டக்கல்வி பயின்ற சீதக்கா, இப்போது ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்புக்கான ஆய்விலும் ஈடுபட்டிருக்கிறார்.
மக்களின் எம்.எல்.ஏ!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னேற்றக் குழுவின் அம்பயர்களாக இந்தியப் பெண்கள்!
ஜனனி நாராயணன், விருந்தா ரதி ஆகிய இரு இந்திய வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரபல கிரிக்கெட் அம்பயரான டெனிஸ் பர்ன்ஸ் இதை வரவேற்று, அவர்கள் இருவருக்கும் ஆதரவு அளித்துவந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் பாராட்டியிருக்கிறார். பர்ன்ஸ், கடந்த பத்தாண்டுகளாக இந்திய அம்பயர்களுடன் பணியாற்றிவருகிறார்.

“இந்திய அம்பயர்களின் ‘புதிய அலை'யாக இந்தப் பெண்கள் இருவரையும் காண்கிறேன். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற புதிய அம்பயர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் இந்த இரு பெண்களுடனும் பணியாற்றியிருக்கிறேன். பத்து ஆண்டுகள் இந்திய அம்பயர்களுக்குப் பயிற்சியளித்திருக்கிறேன். இந்தக் குழுவினரின் ஈடுபாடும் ஆர்வமும் பணி நேர்மையும் பாராட்டவேண்டியவை” என்று குழுவில் அம்பயர்களாக இடம்பெற்றிருக்கும் இந்தப் பெண்களைப் பாராட்டியிருக்கிறார் பர்ன்ஸ்.
இப்போது மூன்றாவது அம்பயர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஜனனி, “நிறைய விஷயங்களை நான் புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இனிவரும் போட்டிகளில் எனக்கு இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
சாதிக்கப் போகும் அம்பயர்களுக்கு நம் வாழ்த்துகள்!
எங்கள் கதையின் முடிவு - கணவருக்கு விடைகொடுத்த நீது கபூர்
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ரத்தப் புற்றுநோய் தாக்கி சிகிச்சை பலனளிக்காமல் சமீபத்தில் காலமானார். அவரது மனைவியான நீது கபூர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் ரிஷியின் படத்தைப் பகிர்ந்து, `எங்கள் கதையின் முடிவு' என்று எழுதியிருந்தார்.
67 வயதான ரிஷிக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது இரண்டாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டிருந்தது. சிகிச்சைக்கென அமெரிக்கா, ஐரோப்பா என இரு கண்டங்களுக்கும் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக அவர் பயணம் செய்துவந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஓராண்டு சிகிச்சைக்குப்பின் ரிஷி, நாடு திரும்பியிருந்தார்.

1974-ம் ஆண்டு, ‘செஹ்ரிலா இன்சான்’ திரைப்படத்தில் நடிக்கும்போது முதன்முறையாக ரிஷியும் அப்போது நடிகையாக இருந்த நீதுவும் சந்தித்துக்கொண்டார்கள். 1980-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் ஜோடியாகப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
நீது பகிர்ந்திருக்கும் கபூர் குடும்பத்தின் செய்தி ஒன்றில், “இறுதிவரை மருத்துவமனை ஊழியர்களையும் மருத்துவர்களையும் மகிழ்வித்து வந்தார். அவரது மகிழ்ச்சியை எந்தச் சூழலிலும் கைவிடவில்லை. அவரை நினைவுகூர்பவர்கள் யாராக இருந்தாலும் அவரது புன்னகைகளுக்காக நினைவுகொள்ள வேண்டுமே தவிர, அவரது கண்ணீருக்காக அல்ல” என்று கூறப்பட்டிருக்கிறது.
மற்றொரு கதையின் தொடக்கம் இது, நீது!
அவள் செய்திகள்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி சவிதா கோவிந்த், குடியரசுத் தலைவர் எஸ்டேட்டிலுள்ள சக்தி ஹாட்டில் அமர்ந்து முகக்கவசங்கள் தைத்து வருகிறார். டெல்லி நகர்ப்புற வீட்டுவசதி வாரியத்தின் ஹோம்களுக்கு இவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக ஏறியிருந்தாலும், இன்னும் ஓர் இட்லியை ஒரு ரூபாய் என்ற பழைய விலைக்கே விற்பனை செய்துவருகிறார் 85 வயதான கமலாத்தாள். கோவை மாவட்டம் ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியில் வசிக்கும் கமலாத்தாள் பாட்டி கடந்த 30 ஆண்டுகளாக ஓர் இட்லி ஒரு ரூபாய் என்று விற்றுவருகிறார்.

இந்தியப் பெண்ணான சீதல் ஜியோ, தன் மகள்களான கேத்தரின் (4), கிளேர் (7) ஆகிய இருவருடனும் பஹ்ரைன் நாட்டில் வசித்து வருகிறார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள் மேல் ஈடுபாடு கொண்டவர், லாக் டெளன் காலத்தில் தன் மகள்கள் இருவரையும் ரவிவர்மாவின் பிரபல ஓவியங்களின் மாடல்கள் போல அலங்கரித்து புகைப்படங்கள் எடுத்து தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் வசிக்கும் 98 வயது மூதாட்டி குருதேவ் கௌர் தலிவால். தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முகக்கவசங்களைத் தன் தையல் இயந்திரம் மூலம் தயாரித்து வருகிறார். கௌர் வசிக்கும் பகுதிகளிலுள்ள காய்கறி வியாபாரிகள், சிறு வணிகர்கள் போன்றவர்களுக்கு இந்தக் கவசங்களை இலவசமாக வழங்குவதாக கௌரின் மருமகள் தெரிவித்துள்ளார். ஒரு கண்ணில் பார்வைக் குறைபாட்டுடன் மாஸ்க்குகள் தைத்துக் கொண்டிருக்கும் கௌரை, பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பாராட்டியிருக்கிறார்.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, ஃபெடரேஷன் கோப்பை ஹார்ட் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். ஆசிய / ஓசியானா நாடுகளிலிருந்து விளையாடிவரும் வீராங்கனைகளுக்கான பிரிவில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்தியர் இவரே!
திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் புவனேஸ்வரி, அண்மையில் உதயசூரியன் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த கலைவாணி என்ற நிறைமாதக் கர்ப்பிணியைக் கண்டார். தாமதிக்காமல் தன் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சேர்த்து உதவினார். புவனேஸ்வரியை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜி.சுப்புலட்சுமி அழைத்துப் பாராட்டினார்.

செவ்வாய்க் கிரகத்துக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்ப உள்ள ரோவர் கருவிக்கு, அமெரிக்கா வாழ் இந்தியப் பெண்ணான 17 வயது வனீசா ருபானி பரிந்துரை செய்த `இன்ஜின்யூட்டி' என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் 28000 கே-12 வகுப்பு மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்தப் பெயர் பரிந்துரைப் போட்டிகளில் முதலிடம் பெற்று தேர்வாகியிருக்கிறது வனீசாவின் இன்ஜின்யூட்டி!