
பெண் டைரி - ஒரு வாசகியின் கடிதம்
எங்களுக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றன. கணவர் ஜூஸ் கடை வைத்திருக்கிறார். நான் இல்லத்தரசி. எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். வருமானத்துக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் வாழ்க்கை. இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள் என என் கணவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர்.
என் கணவரின் மூத்த அண்ணனுக்குச் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது. காலம் கடந்து சிகிச்சையை ஆரம்பித்ததால், அது சிறுநீரகச் செயலிழப்பில் முடிந்தது. இப்போது அவர் டயாலிசிஸ் செய்துவருகிறார். அவர் மிகவும் வசதியானவர். அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அவர் தன் உடன்பிறந்தவர்கள் நான்கு பேரிடமும், தனக்கு யாராவது ஒருவர் சிறுநீரக தானம் செய்யச் சொல்லி வேண்டினார். சகோதரிகள் இருவரும், ‘என் கணவர் அனுமதிக்கமாட்டார்’ என்றார்கள். என் கணவரின் இரண்டாவது அண்ணன் இதய நோயாளி என்பதால் அவரும் மறுத்துவிட்டார். இறுதியாக, என் கணவரிடம் வந்து நின்றார் அவரின் மூத்த அண்ணன். கணவரும் சம்மதித்தார்.

என் கணவர் சிறுநீரக தானம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே வேண்டாம் என்று மறுத்தேன். என் கணவரின் அண்ணனும், அவர் மனைவியும் என்னிடம் பலமுறை வந்து பேசினார்கள். என்னையும் என் கணவரையும் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர், ரத்த உறவுகளுக்குள் மேற்கொள்ளப்படும் சிறுநீரக தானம், மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றியெல்லாம் விரிவாக விளக்கி, ‘தைரியமா பண்ணுங்க, அண்ணன், தம்பி ரெண்டு பேரும் நல்லாருப்பாங்க’ என்றார்.
மேலும், என் கணவரின் அண்ணனும் அண்ணியும், அவர்களது இரண்டு வீடுகளில் ஒரு வீட்டை என் கணவர் பெயருக்கு எழுதிக்கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனாலும் நான் உடன்படவில்லை. ‘என் கணவர் தினமும் ஜூஸ் கடையில உழைச்சாதான் எங்களுக்கு வாழ்க்கை ஓடும். அறுவை சிகிச்சை, அதன் விளைவா அவருக்கு ஏதேனும் பிரச்னை, சிறுநீரக தானம் கொடுக்குறதுல இருக்குற ரிஸ்க்னு இதெல்லாம் எனக்கு பயமா இருக்கு. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. நீங்க உறுப்பு தானம் பெறப் பதிவு செய்துவைத்து அதன் மூலம் சிறுநீரகம் பெற்று அறுவை சிகிச்சை செஞ்சுக்கோங்க’ என்று நான் உறுதியாகக் கூறிவிட்டேன். ஆனாலும், அவர்கள் விட்டபாடில்லை.

இதற்கிடையில் என் கணவர், தன் அண்ணனுக்குச் சிறுநீரக தானம் வழங்க ஆரம்பம் முதலே தயாராகத்தான் இருக்கிறார். ‘அவர் மூத்த அண்ணனா மட்டுமில்ல... எங்க எல்லாருக்கும் அப்பா ஸ்தானத்துல இருந்து நல்லது கெட்டது பார்த்திருக்கார். அவருக்கு இதைச் செய்ய வேண்டியது நம்ம கடமையும்தான். கூடவே நான் ஜூஸ் கடையில ஆயுளுக்கும் சம்பாதிச்சாலும், வர்றதுக்கும் வயித்துக்குமே சரியாப்போகும். அண்ணன் தர்றேன்னு சொல்ற வீடு பல லட்சங்கள் மதிப்புள்ளது. நம்ம ரெண்டு பொண்ணுங்க படிப்பு, கல்யாணம்னு எல்லாத்தையும் அதை வித்து முடிச்சுடலாம். அதுக்காக இந்த முடிவு எடுக்கிறேன்னு இல்ல. ஒரு தம்பியா அண்ணனுக்கு இதை நான் செய்யாம விட்டு, நாளைக்கு அவருக்கு ஏதாச்சும் ஆகிட்டா அந்தக் குற்றவுணர்வு ஆயுளுக்கும் என்னை விடாது. நான் தைரியமா இருக்கேன், நீயும் தைரியமா இரு, நல்லதே நடக்கும்’ என்று முழுமனதுடன் அறுவை சிகிசைக்குத் தயாராகிவருகிறார்.
எனக்கு அச்சமும் குழப்பமும் தீர்ந்தபாடில்லை. நான் மறுப்பது சரியா, கணவரின் முடிவு சரியா?
(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்)