Published:Updated:

``ஒரு மாசம்கூட யூரின் டெஸ்டுக்கான கிட் வாங்காம இருந்ததே இல்ல" |ஜன்னலோரக் கதைகள் - 9

குழந்தை
News
குழந்தை

நானும் குழந்தை பெத்துக்குற மனநிலைக்கு வந்துட்டேன். ஆனா, அதுக்கு அப்புறம் ஒரு மாசம்கூட யூரின் டெஸ்டுக்கான கிட் வாங்காம இருந்ததே இல்ல. அதுல டபுள் கோடு வந்துறாதான்னு எத்தனையோ முறை ஏங்கியிருக்கேன்.

Published:Updated:

``ஒரு மாசம்கூட யூரின் டெஸ்டுக்கான கிட் வாங்காம இருந்ததே இல்ல" |ஜன்னலோரக் கதைகள் - 9

நானும் குழந்தை பெத்துக்குற மனநிலைக்கு வந்துட்டேன். ஆனா, அதுக்கு அப்புறம் ஒரு மாசம்கூட யூரின் டெஸ்டுக்கான கிட் வாங்காம இருந்ததே இல்ல. அதுல டபுள் கோடு வந்துறாதான்னு எத்தனையோ முறை ஏங்கியிருக்கேன்.

குழந்தை
News
குழந்தை

சென்னை எக்மோர் ரயில் நிலையம். மகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஜன்னல் சீட்டை, மகள் ஆக்கிரமித்துக்கொண்டாள். மழையைக் காரணம் காட்டி, அவளை நடு சீட்டில் அமர்த்தி சாப்பாடு ஊட்டினேன். சிறிது நேரத்தில் எங்கள் சீட்டுக்கு அருகே ஒரு பெண் வந்தார். மேல் தளவாடத்தில் பைகளை அடுக்கிவிட்டு, தனக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டார். என் மகள் அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டு, மூன்று முறை பார்த்தாள். சிரிப்பை எதிர்பார்த்தாள் போலும். ஆனால், அந்தப் பெண்ணிடம் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

வைகை எக்ஸ்பிரஸ்
வைகை எக்ஸ்பிரஸ்

நாங்கள் இருவரும் வழக்கம்போல் பேசி, சிரித்து பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தோம். விளையாடும்போது குழந்தையின் கை அந்தப் பெண்ணின் மீது தெரியாமல் பட்டுவிட்டது. `உச்' என்ற சத்தத்துடன் லேசாக உடலை அசைத்து நகர்ந்து கொண்டாள். நாங்கள் ஏதோ ஒரு அசௌகர்யத்தை அந்தப் பெண்ணுக்கு கொடுக்கிறோம் என்பது புரிந்து அமைதியானோம். சிறிது நேரத்தில் என் மகள் சிப்ஸ் பாக்கெட்டை பிரித்தாள். முதல் இரண்டு சிப்ஸை அவசரமாகத் தின்றவள், மூன்றாவது துண்டு சிப்ஸை கையில் எடுத்து தனக்கு அருகில் இருந்த அந்தப் பெண்ணிடம் நீட்டினாள்.

அந்தப் பெண் எப்படி ரியாக்ட் செய்வார் என்று தெரியாமல் பதற்றமானேன். லேசாகச் சிரித்து `நீங்க சாப்பிடுங்க தங்கம்' என்றாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. `பரவாயில்ல எடுத்துக்கோங்க' என நான் கட்டாயப்படுத்தவே ஒரு துண்டு சிப்ஸை கையில் எடுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் மகள் தூங்கினாள். குழந்தை தூங்குவதை அந்தப் பெண் திரும்பிப் பார்ப்பதை நான் கவனித்தேன். நான் பார்த்ததைக் கவனித்தவள், `உங்க பொண்ணு க்யூட்' என்று குழந்தையின் தலையை சிறிய பயத்துடன் வருடிக்கொடுத்தாள். `அப்புறம் ஏன் ஃபர்ஸ்ட் கோபப்பட்டீங்க? உங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? நாங்க கூடுதலா தொல்லை பண்ணிட்டோமா?' என்று மனதில் பட்டதை வெளிப்படையாகக் கேட்டேன். `எல்லாம் பயம்தான். எனக்கும் இப்படியொரு குழந்தை இருக்கணும்னு ஆசை. ஆனா, அதுக்கு இந்த உடம்பு கொடுத்து வைக்கல' என்றபடி அவர் ஏக்கப் பெருமூச்சு விட்டு சீட்டில் சாய்ந்தார்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

`கவலைப்படாதீங்க, கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு கல்யாணமாகி 15 வருஷம் கழிச்சுகூட குழந்தை பொறந்திருக்கு' என்றதும், `அந்த நம்பிக்கையோடதான் நானும் இருக்கேன். ஆனா, என்னை சுத்தி இருக்கிறவங்க, கேள்வி கேட்டே என்னை மனஅழுத்தத்துல தள்ளுறாங்க. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு' என்றார். சிறிய தயக்கத்துடன் `ஹாஸ்பிட்டல் போனீங்களா?' என்றேன்.

ஆம், என்பது போல் தலையை அசைத்தவர், ``கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆச்சு. மாமா பையனைதான் கல்யாணம் பண்ணேன். கல்யாணம் ஆன முதல் மாசமே தேதி தள்ளிப்போச்சு. ஆனா, எங்களுக்கு வாழ்க்கையில இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகணும்னு தோணுச்சு. அதனால் டாக்டர்கிட்ட போனோம். முதல் குழந்தையைக் கலைக்கக் கூடாதுனு டாக்டர் திட்டி வீட்டுக்கு அனுப்பி வெச்சாங்க. ஆரம்பத்துல விருப்பம் இல்லைனாலும், டாக்டர்கிட்ட போயிட்டு வந்த பிறகு, அந்தக் குழந்தையை பெத்தெடுக்கப் போறோம்னு எனக்கும் மைண்ட் செட் ஆயிருச்சு. ஆனா, 15 நாள்ல குழந்தைதானா கலைஞ்சுருச்சு. அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்னு முடிவுக்கு வந்துட்டோம்.

தாய்மை
தாய்மை

ஆனா, சில மாசத்திலேயே, `தேதி தள்ளிப்போயிருக்கா'னு வீட்ல கேட்க ஆரம்பிச்சாங்க. திடீர்னு ஒருநாள் எங்க மாமியாருக்கு உடம்பு முடியலைனு சொன்னாங்க. நான்தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனேன். அங்க போன பிறகுதான் தெரிஞ்சது என்னை செக்-அப் பண்றதுக்காக பொய் சொல்லி டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்திருக்காங்கனு. எதுவும் பேசாம வீட்டுக்கு வந்துட்டேன். வீட்ல சண்ட போட்டு, ரெண்டு வாரம் யார்கிட்டயும் பேசல. ஆரம்பத்துல கோபம் இருந்துச்சு. ஆனா, அதுக்கு அப்புறம் வீட்ல இருந்த ஒவ்வொருத்தரும் அவங்க தரப்பு நியாயத்தை எடுத்து வெச்சாங்க. அவங்களுக்கான ஆசை, எதிர்பார்ப்பை என்னாலும் புரிஞ்சுக்க முடிஞ்சது.

நானும் குழந்தை பெத்துக்குற மனநிலைக்கு வந்துட்டேன். ஆனா, அதுக்கு அப்புறம் ஒரு மாசம்கூட யூரின் டெஸ்டுக்கான கிட் வாங்காம இருந்ததே இல்ல. அதுல டபுள் கோடு வந்துறாதான்னு எத்தனையோ முறை ஏங்கியிருக்கேன். டெஸ்ட் தப்பா இருக்கும்னு ரெண்டு டைம்கூட டெஸ்ட் எடுத்துப் பார்த்துருக்கேன். கரு உருவாகல. ரெண்டு வருஷம் வரை குழந்தை பெத்துக்குற ஐடியா இல்லைனு சொல்லி வீட்டை சமாளிச்சோம். ரெண்டு வருஷத்துக்கு மேல சமாளிக்க முடியல. ட்ரீட்மென்ட் போனா குழந்தை பெத்துக்க முடியும்னு நம்பிக்கை இருக்கவே, வீட்ல சொன்னோம். ஆரம்பத்துல எல்லாரும் நம்பிக்கையாதான் பேசுனாங்க. ஆனா, மாசம் போகப்போக அவங்களோட நம்பிக்கை எல்லாம் குறைஞ்சு போச்சு. எனக்கான மரியாதையும் குறைஞ்சது.

குழந்தை
குழந்தை

என் கொழுந்தனுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. அந்தக் குழந்தைகளை நான் தூக்குறதுகூட, அந்தக் குழந்தைகளோட பாட்டி தாத்தா விரும்புறது இல்ல. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க நல்லது கெட்டதுக்கு வீட்ல வந்து கூப்பிடுவாங்க. நான் அங்கதான் இருப்பேன். சிலர் என்னை திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. சிலர் விருப்பம் இல்லாம, `நீயும் வந்துரு'ன்னு சொல்லணுமேனு சொல்லிட்டுப் போவாங்க. போற இடத்துலேயும் நிறைய அவமானங்களை சந்திச்சுருக்கேன்.

எனக்குத்தான் குழந்தையில்ல, குழந்தை பெத்துக்கப் போறவங்களோட சந்தோஷத்தை ஷேர் பண்ணிப்போம்னு வளைகாப்பு வீட்டுக்குப் போனா, ராசி இல்லாதவனு  சொல்லி அசிங்கப்படுத்துவாங்க. குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் குழந்தையைப் பார்க்கப் போனா, கண்ணு பட்டுரும்னு குழந்தையைத் தூக்க விடமாட்டாங்க. கல்யாணம், பூஜைனு எல்லா இடத்துல இருந்தும் ஒதுக்க ஆரம்பிச்சாங்க. இப்போ பயத்துல நானே ஒதுங்கிக்கிறேன்.

மகப்பேறு காலம்
மகப்பேறு காலம்

சிலநேரம், நான் மாசமா இருக்க மாதிரி நினைச்சு வயித்துக்குள்ள துப்பட்டாவை சுருட்டி வெச்சு, வளையல் எல்லாம் போட்டு கண்ணாடி முன்னாடி நின்னு ரசிப்பேன். குழந்தைகளைப் பார்த்ததும் அவங்களைத் தூக்கணும், அவங்க கூட விளையாடணும், கொஞ்சணும்னு ஆசை வருது. ஆனா, அந்தக் குழந்தைகளோட அம்மாக்கள் என்கிட்ட நடந்துக்கிற முறையைப் பார்த்துட்டு குழந்தைகளைப் பார்த்ததும் நானே அமைதி யாகிறேன். உங்க குழந்தையையும் பார்த்ததும் தூக்கணும்னு தோணுச்சு. ஆனா, நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு பயத்துலதான் அப்படி நடந்துகிட்டேன்'' என்றவர், ``ஐ.வி.எஃப் முறைகூட டிரை பண்ணிட்டோம். காசு செலவானதும், ஊசிகளால உடம்பு மரத்துப் போனதும்தான் மிச்சம்..!" - வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்க முற்பட்டு தோற்றுப்போய் அமைதியானார்.

``ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு ரொம்ப நம்பிக்கையோட போவேன். பதினைஞ்சு நாள், ஒரு மாசம்னு ஆஸ்பத்திரிலேயே தங்கி ட்ரீட்மென்ட் பண்ணியிருக்கேன். டாக்டர் சொல்ற `பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' வார்த்தையைக் கேட்டுக்கேட்டு மனசு உடைஞ்சு போனதுதான் மிச்சம். ஒவ்வொரு மாசமும் பிரீயட்ஸ் ஆகும்போது, எதுக்கு பொம்பளையா பொறந்தேன்னு தனியா உட்கார்ந்து மணிக்கணக்கா அழுதுருக்கேன். நானே மறந்து இயல்பா இருக்கணும்னு நினைச்சாலும், சுத்தி இருக்கவங்க சும்மா இருக்கவிடுறதில்ல.

`எதுவும் விஷேசம் இருக்கா'னு கேட்டு கஷ்டப்படுத்துறாங்க. அந்தக் கோயில் போங்க, இந்தப் பரிகாரம் பண்ணுங்கன்னு ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. இதையெல்லாம் எதிர்கொள்ள பயந்துகிட்டே வெளியிடங்களுக்குப் போறதையே விட்டுட்டேன்.

இவ்ளோ வலியிலேயும் ஓர் ஆறுதலான விஷயம், என் கணவரோட சப்போர்ட். இதுவரை ஒரு டைம்கூட குழந்தையில்லைனு குத்திக்காட்டினது இல்ல. நான் அழும்போதுகூட, `குழந்தையில்லைனா நமக்குள்ள இருக்க காதல் குறைஞ்சா போயிரும்'னு என்னை அரவணைச்சுப்பாரு. `எங்க ரெண்டு பேருல யாருக்கு குறை இருக்குனே தெரியாது. எது பேசுனாலும் என்னையும் சேர்த்துப்பேசுங்க'னு எனக்காக நிறைய இடத்துல சண்டை போட்டுருக்காரு..." - கணவனைப் பற்றி பேசும்போது அவ்வளவு சந்தோஷம் அந்தப் பெண்ணின் முகத்தில்.

குழந்தை
குழந்தை

`சிகிச்சையும் எடுத்தும் பலனில்லை. குழந்தையில்லாம நாம ஏங்குற மாதிரி எத்தனையோ குழந்தைங்க, அம்மா, அப்பா இல்லாம ஏங்குறாங்க... அவங்கள்ல ஒருத்தரை தத்தெடுத்து எங்க வாழ்க்கையில இணைச்சுக்கணும்னு முடிவுக்கு வந்தோம். வீட்ல இருக்கிறவங்க இப்போவரை சம்மதிக்கல. அதுல என்ன தப்பு இருக்கு? ஏன் ஏதுக்கலனு புரியல. ஆனா, குழந்தையை தத்து எடுக்குற முடிவில் நானும் என் கணவரும் உறுதியா இருக்கோம். நான்பட்ட காயங்களுக்கெல்லாம், அம்மாவோட அன்பைத்தேடும் அந்தக் குழந்தையோட பாசம், மருந்தா இருக்கும்னு நம்புறேன். அடுத்த முறை நாம பார்த்தால் நிச்சயம் நானும் கையில் ஒரு பாப்பாவை பிடிச்சுக்கிட்டு, சாப்பாடு ஊட்டிட்டு இருப்பேன்' என்றார் கண்களில் ஏக்கத்துடன்.

திருமண பந்தத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமாக நாம் குழந்தையை மட்டும்தான் பார்க்கிறோம். குழந்தை என்பது கணவன் - மனைவியின் தனிப்பட்ட விஷயம், அவர்களின் உரிமை. அதில் மற்றவர்களின் கேள்விகள் எப்போதும் ஆறுதலாகவோ, அக்கறையாகவோ நிச்சயம் இருக்காது என்பதை உணர்வது அவசியம். இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளாக செயற்கை முறை கருத்தரிப்பு தொடங்கி, வாடகைத்தாய்வரை எத்தனையோ வளர்ச்சிகள் மருத்துவத்தில் வந்துவிட்டன. ஆனால், நாம்தான் இன்னும் பார்வையை விரிவுபடுத்தாமல், கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். குழந்தையின்மையை ஒரு குறையாக எண்ணி நாள்களைக் கடத்துவதைவிட, ஆதரவற்ற ஒரு குழந்தைக்கு வாழ்க்கை கொடுத்து அரவணைப்பது, கூடுதல் ஆரோக்கியமான விஷயம். அதை சமூக மாற்றமாக நிச்சயம் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையில் கருத்துக் கூறவோ, அடக்கி வைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. வாழ எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. அதனை நம்முடைய ஏளனங்களால் முடக்கப்பார்க்காமல், முடிந்தவரை தோள் கொடுப்போம். பல நேரங்களில் நம்முடைய அமைதி கூட அடுத்தவருக்கான ஆறுதலாக இருக்கும்!