Published:Updated:

``காசைத் தாண்டி எத்தனையோ விஷயம் இருக்குங்க..." | ஜன்னலோரக் கதைகள் - 1

மாதிரிப்படம்
News
மாதிரிப்படம்

ஒரு பொண்ணு வேலைக்குப் போவதால் திமிர் அதிகரிக்கும், வீட்டை மதிக்க மாட்டாள் என்ற பழைய எண்ணங்களைக் குப்பையில் போட்டுவிட்டு, அவளின் நம்பிக்கையை அதிகரிக்க பக்கபலமாக இருங்கள். பெண் இனம் சிறகு விரித்துப் பறக்க, வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுங்கள்!

Published:Updated:

``காசைத் தாண்டி எத்தனையோ விஷயம் இருக்குங்க..." | ஜன்னலோரக் கதைகள் - 1

ஒரு பொண்ணு வேலைக்குப் போவதால் திமிர் அதிகரிக்கும், வீட்டை மதிக்க மாட்டாள் என்ற பழைய எண்ணங்களைக் குப்பையில் போட்டுவிட்டு, அவளின் நம்பிக்கையை அதிகரிக்க பக்கபலமாக இருங்கள். பெண் இனம் சிறகு விரித்துப் பறக்க, வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுங்கள்!

மாதிரிப்படம்
News
மாதிரிப்படம்

மரங்களின் செழிப்பை மெச்சும் மனங்கள், அவற்றின் வாழ்வாதாரமாக இயங்கும் வேர்களைப் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை, அந்த வேர்களைப் போன்றவர்கள்தான் பெண்கள். குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கும்  பெண்களுக்குள் பல ஆசைகளும் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் புதைந்து கிடக்கும். கால ஓட்டத்தில் அவற்றை மறந்திருப்பார்கள், கடந்திருப்பார்கள்.

நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ பெண்களைப் பார்த்திருப்போம். சண்டைக்காரிகளாகவோ, வாயாடிகளாகவோ, உம்முணாமூஞ்சிகளாகவோ, கோபக்காரிகளாகவோ, பொறுமைசாலிகளாகவோ நம்முடன் பயணித்திருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையைப் பகிரும் மினி தொடர்  இது. வாருங்கள் வாரம் ஒரு சகோதரியுடன் பயணிப்போம்...

பெண்
பெண்

வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லோருக்குள்ளும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையைவிட, தேவையைவிட தனக்கென ஓர் அடையாளம் உருவாக்கிக்கொள்ளும் கனவு இருக்கும். அப்படி ஒரு பெண்ணுடன் மேற்கொண்ட பயணத்தை பகிர்ந்துகொள்கிறேன்...

சூரியன் தலைகாட்டத் தொடங்கிய ஒரு காலைப் பொழுது. 8.30 மணி பஸ்ஸுக்காக 8.15-க்கே பேருந்து நிலையம் சென்று காத்திருந்தேன். டாஸ்மாக்கிலிருந்து வெளியே வந்த `குடி'மகன் போல தள்ளாடி சாய்ந்தபடியே வந்து நின்றது 44-c பேருந்து. முண்டியடித்துக்கொண்டு ஏறி ஜன்னல் சீட்டில் அமர்ந்தேன். பேருந்தின் நகர்வில் ஜன்னலுடன் சண்டையிட்டுக் கொண்டு வந்த காற்று, ஒழுகும் வியர்வையைக் குறைத்திருந்தாலும், களைப்பை குறைக்கவில்லை. ஒரு மணிநேரம் பயணம், அதன் பின் 8 மணி நேர அலுவலக வேலை, மீண்டும் பயணம், வீட்டு வேலை இவற்றையெல்லாம் நினைக்கும்போதே அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

எந்தப் பரபரப்பும் இல்லாமல், சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் என் அருகில் அமர்ந்திருந்த நீலநிறச் சேலை அணிந்த அந்தப் பெண். நான் பார்த்ததைப் புரிந்துகொண்டவராக `வீட்டுல சாப்பிட எங்கம்மா நேரம் இருக்கு' என்றார் . `முடியலம்மா ஓடி ஓடி உடம்பு வலிக்குது' என்றவரிடம், `உங்க வீட்டுக்காரர் என்னக்கா பண்றாரு' என்றேன். `நல்ல வேலைதான் பார்க்கிறாரு. ஆனாலும் நமக்கு வேலை முக்கியம்லம்மா. அதான் நானும் ஒரு பிரைவேட் கம்பெனியில வேலைக்குப் போறேன். எங்க ஊரு மதுர பக்கத்துல ஒரு கிராமம். சின்ன வயசுலேருந்தே ஏரோப்ளேனை அண்ணாந்து பார்த்து கைதட்டி ஆச்சர்யப்பட்டு, அத மூணு நாளைக்கு பெருமையடிச்சுக் கொண்டாடுன கிராமத்துப் பொண்ணு. என்ன படிக்கணும்... எப்படி நடந்துக்கணும்... யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாத்தையுமே வீட்ல இருக்கவங்கதான் முடிவு பண்ணாங்க. அப்பா சொல்றது சரிதான்னு நான் தலையதான் ஆட்டுனேன். ஆனா, என்னோட மவ அப்படி இல்லம்மா" என்று சொல்லும்போதே அவரின் வார்த்தைகளில் சின்ன கர்வம்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

``இப்போதான் ரெண்டு வருஷமா வேலைக்குப் போறேன். கல்யாணம் ஆகி 4 வருஷம் வீட்டுலதான் இருந்தேன். நான் வாங்குன டிகிரி சர்ட்டிஃபிகேட்டை பார்க்குறப்பவும், ஃப்ரெண்ட்ஸ்களோட வாட்ஸ்அப் குரூப்ல சாட் பண்றப்பவும் தான், நானும் படிச்சிருக்கேன்னு ஞாபகமே வரும். கல்யாணத்துக்கு முன்னாடி, படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போகணும்னு வீட்டுல சண்டை போட்டப்போ, `நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சுர்றோம்.. அப்புறம் வேலைக்குப் போ'னு சொன்னாங்க, கல்யாணம் ஆன பிறகு குழந்தை பெத்துக்கணும்னு கண்டிஷன். அதுக்கு அப்புறம் குழந்தைகளை வளர்க்குற கடமைனு அடுத்தவங்களோட எதிர்பார்ப்புதான் என் வாழ்க்கைனு மாறிப்போச்சு.

என் குழந்தைகளுக்கு அதுக ஆசைப்படும் பொருள்களை நானே வாங்கிக் கொடுக்கணும். நாப்கின்ல இருந்து எனக்குத் தேவையான பொருள்களை நானே வாங்கிக்கணும். என் அம்மா, அப்பாக்கு சின்னச் சின்ன சர்ப்ரைஸ் கொடுக்கணும். மருந்து செலவை பத்தி கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கிறேன்னு சொல்லணும், கணவர் இ.எம்.ஐ பத்தி கவலைப்படும் போதெல்லாம் நான் இருக்கேன்னு கைகோத்துக்கணும். பொம்பளப் புள்ளையும் பெத்தவங்கள பார்த்துக்க முடியும்னு நிரூபிக்கணும் இப்படி சின்னச் சின்ன ஆசைகளுக்காகத்தான் வேலைக்குப் போகும் எண்ணம் வந்துச்சு. இது எல்லாத்துக்கும் மேல நான் படிச்ச படிப்பு என் கல்யாண பத்திரிகையில பெயருக்கு பின்னாடி போட்டதைத் தாண்டி வேற எங்கேயாச்சும் பயன்படணும்னு ஆசை.

பெண்
பெண்

நான் வேலைக்குப் போறேன்னு பேச்சை எடுக்குறப்பலாம், காசுக்கு என்ன குறைச்சல்? கூழோ, கஞ்சியோ ஓர் ஆள் சம்பாத்தியத்துல பார்த்துக்கலாம், குழந்தைகளை யார் பார்க்கிறது? குழந்தைகள் படிப்பு வீணாயிடும்னு காரணங்களை அடுக்கி, நான் யோசிச்சது தவறாங்கிற குற்ற உணர்வுக்கு என்ன தள்ளிடுவாங்க. ஆனால், என் தேவைக்காக ஏதாவது கேட்கும் போதோ, வெளியில் போகணும்னு சொல்லும்போதோ, `காசோட அருமை சம்பாதிக்கிறவனுக்குத்தான் தெரியும். வேலைக்குப் போயி பாரு அப்ப தெரியும் மனுஷன் படுற கஷ்டம்' னு பதில் வரும். அப்பா வீட்ல ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு நான். இந்த வார்த்தையெல்லாம் கேட்கும்போது நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்கும்.

பொழுது போக்குக்காக சீரியல் பார்க்கத் தொடங்கி அதுக்கு அடிமையாகிட்டேன். மணிக்கணக்குல போன்லபேசுறதைத் தவிர வேறு ஆறுதல் கிடையாது உலகமே நாலு சுவத்துக்குள்ள சுருங்கிப்போச்சு. சின்னச் சின்ன விஷயங்கள்லகூட நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். படிச்சிருந்தாலும் மூளை துருப்பிடிச்சுப் போன மாதிரியான உணர்வு இருந்துகிட்டே இருந்துச்சு. குழந்தைகளுக்காக தான் வேலைக்குப் போகாம வீட்ல இருந்தேன். ஆனா, அந்தக் குழந்தைகளே சில நேரத்துல என்னை மதிக்காம இருந்தாங்க. அதெல்லாம் எனக்கு என் மீதே கோவத்தை வரவெச்சது... வீட்லேருந்தே ஏதாவது பிசினஸ் செய்து முன்னுக்கு வரலாம்னு ஐடியா பண்ணி வீட்டுல சொன்னா, அதை யாரும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கல. `உனக்கு எதுக்கு வேண்டாத வேலை'னு ஒரு வரியில முடிச்சிக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லிதான் இந்த வேலை கிடைச்சது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

நான் மட்டுமல்ல வொர்க்கிங்வுமன் ஒவ்வொருத்தரும் இந்த மாதிரி பல அழுத்தங்களைக் கடந்துதான் வந்திருப்பாங்க. குடும்பத்தையும் அலுவலகத்தையும் பேலன்ஸ் செஞ்சுற முடியும்னு முடிவு பண்ணி, களத்துல குதிச்சுருப்பாங்க. இப்போ என் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி ராத்திரி 11 மணிக்கு முடியுது. ரெஸ்ட் எடுக்கவோ, எனக்கான வேலைகளை செஞ்சுக்கவோ, ரிலாக்ஸ்க்கு சீரியல் பார்க்கவோ நேரம் இல்லை. குறிப்பா, என்கிட்ட பேச யாருக்கு நேரம் இருக்குனு நான் புலம்புறதில்ல.

ஆனாலும் பஸ்ல கிடைக்குற ஜன்னல் சீட், பயணத்துல பாட்டுக் கேட்டுக்கிட்டே போடுற குட்டித் தூக்கம், `ஆபீஸ் விட்டு வரும்போது அதை வாங்கிட்டு வாம்மா, இதை வாங்கிட்டு வாம்மா'னு என் பிள்ளைகள் கொடுக்குற லிஸ்ட், `ரொம்ப களைப்பா இருந்தா இன்னைக்கு எல்லாரும் டின்னர், வெளியில சாப்பிட்டுக்கலாம்'னு கணவர் சொல்ற வார்த்தைகள். இதுல எல்லாம் நிரம்பிடுது என் சந்தோஷம். குறிப்பா, என்னைப் பெத்தவங்களை நான் பார்த்துக்க முடியும்ங்கிற நம்பிக்கை . இது தான் என் சந்தோஷம். இதுதான் நான் தேடின அடையாளம்...

குடும்பம்ங்கிறது உறவு. நான் என்பதே என் அடையாளம். மூணு வயசுல, `நீ என்ன ஆகப்போற'?னு அப்பா கேட்ட கேள்விக்கு, என் 36 வயசுல பதிலைக் கொடுத்திருக்கேன்...' தன் வாழ்க்கையைப் இயல்பாகப் பேசியவரிடம், `அக்கா உங்க பேரு' என கேட்டேன். `செல்லம்மா' என்று புன்னகைத்தார். `ஹை கோர்ட் ஸ்டாப் இறங்குறவங்க வாங்க'னு நடத்துநர் சொல்ல, தண்ணீர் பாட்டிலை பைக்குள் திணித்துக்கொண்டு, கீழே இறங்கினார் செல்லம்மா அக்கா!

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

என் மனதில் ஒரு புதுத்தெம்பு பிறந்திருந்தது. வேலைங்கிறது எனக்கான விஷயம்னு மனசை திடப்படுத்தி மூச்சை இழுத்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கினேன். ஒரு பொண்ணு வேலைக்குப் போவதால் திமிர் அதிகரிக்கும், வீட்டை மதிக்க மாட்டாள் என்ற பழைய எண்ணங்களைக் குப்பையில் போட்டுவிட்டு, அவளின் நம்பிக்கையை அதிகரிக்க பக்கபலமாக இருங்கள். அடை காத்தது போதும், அடக்கமாய் வாழ்ந்தது போதும்... பெண் இனம் சிறகு விரித்துப் பறக்க, வீட்டின் கதவுகளைத் திறந்து விடுங்கள்!

மாற்றம் ஒன்றே மாறாதது.