என்னுடன் பணியாற்றும் தோழி அவள். எப்போதும் அலுவலகத்துக்கு தாமதமாக வருவாள். அடிக்கடி விடுமுறை எடுப்பாள். அன்றைய தினம் சென்னையில் மழை. வண்டியை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு ரயிலில் சென்று விடலாம் என சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தோம். வரும் வழியில் பிராட்வே நிலையத்தில், கூறுகளாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த காய்கறிப் பொட்டலங்களை வாங்கி பையில் திணித்துக் கொண்டாள். ஆட்டோ எழும்பூர் வந்து சேர்ந்தது. பயணத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு 11-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரத்தில் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை பயணிக்கும் ரயில் வந்து சேர்ந்தது. கூட்டம் குறைவாக இருந்த பெட்டியில் ஏறி, ஆளுக்கொரு ஜன்னல் சீட்டைப் பிடித்துக் கொண்டோம்.

ரயில் நகர்ந்தது. எல்லாரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். ஆளுக்கொரு போனில் மும்முரமாக இருந்தார்கள். என் தோழி, தான் வாங்கிய காய்கறிப் பொட்டலத்தைப் பிரித்தாள். தன்னுடைய லஞ்ச் பாக்ஸை திறந்து வைத்துக்கொண்டாள். என்ன செய்யப்போகிறாள் என்று பார்த்தேன். பையில் இருந்த மினி கத்தியை எடுத்து, காய்கறிகளை நறுக்கத் தொடங்கினாள். `வீட்ல போய் பண்ணலாம்ல' என்ற என் கேள்விக்கு, `பண்ணலாம்தான், ஆனா, இங்கேயே கட் பண்ணிட்டா நாளைக்கு காலையில எனக்கு ஒரு பத்து நிமிஷம் மிச்சம் ஆகும். அந்த நேரத்துல என் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணிப் போட்டுட்டு வருவேன்' என்றாள். `வீட்ல யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்களா?' எனக் கேட்டேன்.
புருவத்தை உயர்ந்த்தியவள், ``எதிர்பார்க்கிறது இல்ல. பார்த்தாலும் ஏமாற்றம்தான். நான் ஆபீஸுக்கு லேட்டா வர்றேன், அடிக்கடி லீவ் போடுறேன்னு எல்லாரும் சொல்றாங்க. அதுக்கெல்லாம் நான் நின்னு பதில் சொன்னதே இல்ல. சொல்லணும்னா என் ஒட்டுமொத்த குடும்பத்தைப் பத்தியும் சொல்ல வேண்டியிருக்கும். எத்தனை பேர்கிட்ட சொல்லி விளக்கம் கொடுக்க முடியும்? அதனால அமைதியா இருந்திருவேன். மாமனார் - மாமியார், குழந்தைங்கன்னு என் வீட்ல ஆறு பேர் இருக்காங்க. மாமியார் உடம்பு முடியாதவங்க. அவங்க எந்த வேலையும் செய்ய மாட்டாங்க. ஆனா, மக வீட்டுக்கு போனா முழு ஆரோக்கியத்தோட ஓடி ஆடி வேலை செய்வாங்க. அதை நான் பெருசா எடுத்துக்கிறது இல்ல. ஆனா, ஒரு பொண்ணா, என்னை அவங்க புரிஞ்சுக்கலாம்னு நிறைய நாள் யோசிச்சு அழுதுருக்கேன். அந்த வகையில என்னோட மாமனார் என் பிள்ளைங்களை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போறது, டியூஷன் கூட்டிட்டுப் போறதுனு அவரால முடிஞ்ச உதவிகளைச் செய்வார்.

மத்தபடி காலையில கேட் ஓப்பன் பண்றதுல இருந்து, வாசல் தெளிக்கிறது, காபி போடுறது, சாப்பாடு ரெடி பண்றது, குழந்தைகளைப் பார்த்துக்குறதுன்னு பம்பரமா சுத்தணும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல வீடு துடைக்கிறது, விளக்கு ஏத்துறதுனு கூடுதலா ஒரு அஞ்சு நிமிஷம் தேவைப்படும். இதுக்கு நடுவுல காப்பியில சர்க்கரை இல்ல, நேத்து குழம்புல உப்பு இல்ல, காய் சரியா வேகலன்னு ஆயிரத்து எட்டு கமென்ட்ஸ் வரும். அதுக்கு எந்த எக்ஸ்பிரஷனும் கொடுக்காம அமைதியா இருக்கணும். அப்படிக் கொடுத்தா, வாக்குவாதம் வந்து கூடுதலா ஒரு அஞ்சு நிமிஷம் தாமதம் ஆகும்.
குழந்தை சாப்பிட தாமதம் ஆச்சுனா, ஆபீஸுக்கும் தாமதமாகும். எத்தனையோ நாள் என் மகளை `சாப்பிட மாட்டேங்குற' , `டக்குனு முழுங்க மாட்டேங்குற', `உன்னாலதான் எனக்கு டெய்லி லேட் ஆகுது'னு திட்டியிருக்கேன். ஆனா, அந்த சின்ன வாயில எவ்வளவு சாப்பாட்டைத் திணிக்க முடியும்? நிதர்சனம் புரிஞ்சும் குழந்தையைத் திட்டிருக்கேன். ஏன்னா வீட்ல இருக்க மத்தவங்ககிட்ட நம்ம கோபத்தைக் காட்ட முடியாதுல. குளிச்சும் குளிக்காமலும், தலை சீவியும் சீவாமலும் ஓடி வந்து டிரெயின் ஏறுவேன். அடுத்த 10 நிமிஷம் சொர்க்கம் மாதிரி இருக்கும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு எந்திரிச்சு, சாப்பிடுறது, தலை சீவி ரெடி ஆகுறது எல்லாம் டிரெயின்லதான்.

வீட்டுப் பரபரப்பையெல்லாம் முடிச்சு ஆபீஸுக்கு வந்தா டெய்லி லேட்டா வர்றீங்க?'னு பாஸ் திட்டுவாரு. இங்க ஓடியாடி வேலை செஞ்சு டிரெயின்ல உட்கார இடம்கூட கிடைக்காம ஒரு மணிநேரம் நின்னு டிராவல் பண்ணி, சோர்ந்து போய் வீட்டுக்குப் போனா, பாத்திரக்குழி நிறைய பாத்திரம் இருக்கும். காலையில காய வெச்சுட்டு வந்த துணி, பாதி கீழ விழுந்து கிடக்கும். அதையெல்லாம் ஏறக்கட்டி, சாப்பாடு செஞ்சு, பரிமாறி, பாத்திரம் கழுவி, அக்கடான்னு உட்காருவேன். குழந்தைங்க ஹோம் வொர்க் நோட்டை தூக்கிட்டு வருவாங்க. இதுக்கெல்லாம் பீரியட்ஸ் டைம்லகூட எனக்கு விலக்கு கிடையாது. இதுக்கு நடுவுல தாம்பத்தியம் வேற...'' என்று கண்களை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் அப்படி ஒரு சலிப்பு.
``வேலை நாள்தான் இப்படியிருக்கு. விடுமுறை நாள்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சா, அன்னைக்கு தான் எல்லாரும் நான்வெஜ் வேணும்னு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. மாவு அரைக்கிறது, பாத்ரூம் கழுவுறது, காய்கறி வாங்கி ஸ்டோர் பண்றது, ரூம் சுத்தப்படுத்துறதுன்னு எல்லா வேலைகளையும் செஞ்சு முடிக்கும்போது ராத்திரி 7 மணி ஆகிரும். அவ்ளோதான் என் சண்டே. `நாங்க கூப்பிட்டா அம்மா எங்கேயும் வர மாட்டாங்க'னு குழந்தைங்க எத்தனையோ நாள் என்கிட்ட சண்டை போட்டுருக்காங்க. எனக்கும் ஆசைதான். ஓடுற மெஷினுக்கு ஒரு மணி நேரமாவது ஓய்வு வேணும்ல. நான் கண்ணாடி முன்னாடி நின்னு, எனக்குப் பிடிச்ச படத்தைப் பார்த்து, நல்லா மேக்கப் பண்ணி, பிடிச்சதை ரசிச்சு சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு' என்றவரிடம்,
`உங்க கணவர் உதவி எல்லாம் செய்ய மாட்டாரா?' என்றேன்.

``ஆரம்பத்துல நாங்க தனியா இருந்தபோது சில உதவிகள் செஞ்சுட்டுதான் இருந்தாரு. இப்போ அவங்க அம்மாக்கு பயம். எனக்கு எதாவது சின்ன வேலை செஞ்சாகூட, `நீ ஏன்டா இதையெல்லாம் செய்யுறே'ன்னு குரல் வரும். அடுத்தகட்டமா, நானே செய்யுறேன்னு சொல்லிட்டு உள்ள வருவாங்க. வந்துட்டு, `வயசான காலத்துல உடம்பு முடியாத என்னை இப்படி படுத்துறா'னு புலம்புவாங்க. இதுக்கு பயந்து நான் எந்த உதவியும் கேட்குறது இல்ல. என்னால டிராவல் பண்ண முடியல, வீட்டு வேலைகளையும் கவனிச்சு, ஆபீஸுக்கும் போயிட்டு வர முடியலைனு சொல்லி வீட்டு வேலைக்கு ஆள் போட்டேன். ஆனா, அவங்களைக் குறை சொல்லியே அனுப்பி விட்டுட்டாங்க. இப்போ எனக்கு முடியலனு புலம்புனா, வேலையை விட்டுருன்னு ஈஸியா சொல்லிருவாங்க.
நம்மளோட கனவுகளைப் பத்தியோ ஆசைகளைப் பத்தியோ, அப்பா - அம்மாவைப் பார்த்துக்கணும்னு நினைக்கிறது பத்தியோ, நாப்கின் தொடங்கி நமக்கான அடிப்படை விஷயங்களுக்கு அடுத்தவங்களை எதிர்பார்த்து வாழாம இருக்கணும்னு நினைக்கிறது பத்தியோ இங்க யாருக்கும் கவலையில்ல. ஆம்பளையா பொறந்தவங்க இங்க எத்தனையோ பேரு பிடிக்காத வேலையை குடும்பத்துக்காக பண்றேன்னு சொல்றாங்க. ஆனா, பொம்பளையா பொறந்தவங்க பிடிச்ச வேலையை செய்யக்கூட கஷ்டப்பட வேண்டியிருக்கு. நமக்குனு கரியர், சுயமரியாதை இதெல்லாம் இருக்கவே கூடாதுனு நினைக்கிறவங்ககிட்ட அடங்கி ஒடுங்கி, வீட்ல இருக்கிறதவிட வேலைக்கு வந்து நமக்குப் பிடிச்ச மாதிரி வாழலாம்னுதான் வேலைக்கு வர்றேன்” என்று சொல்லி முடிக்கும்போது, அவளின் கண்களில் ஏதோ ஒரு கோபத்தைப் பார்க்க முடிந்தது.

உத்தியோகம் என்பதை புருஷ லட்சணம் என்று கொண்டாடும் சமூகத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு வீட்டில் இருந்து ஓர் ஆண் வேலைக்குக் கிளம்பும்போது, அணிந்து கொள்ளும் ஆடை தொடங்கி, ஷூ வரை அனைத்தும் தயாராக இருக்கும். ஒரு போர்க்களத்துக்குச் செல்வதுபோல் பெருமையுடன் ஆண் மகனை வேலைக்கு அனுப்பும் குடும்பம், ஆணுக்கு சமமான அதே ஊதியத்தை அந்த வீட்டில் இருக்கும் பெண் வாங்கினால் அவளையும், அவள் உணர்வுகளையும் மதிப்பதே இல்லை என்பதே உண்மை. கூடுதலாக குடும்ப பொறுப்பு என்ற வட்டத்துக்குள் தள்ளி, கனவுகளையும், அவள் உழைப்பையும் நசுக்குகிறார்கள். வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லும் குடும்பம், பல சிரமங்களுக்குப் பின் அவள் கொண்டு வரும் ஊதியத்தை வேண்டாம் என்றும் ஒருபோதும் மறுப்பதில்லை. ஊதியம் வேண்டும். ஆனால், ஒத்துழைக்க மாட்டோம் என்பது என்ன நியாயம்?
அன்பு சகோதர்களே, உங்களுக்காக சமைக்கும் கைகள் அலுவலகத்தில் கணிப்பொறியில் இயங்கிய கைகள் என்றோ, உங்களுக்காக ஓடும் கால்களுக்கு, தனக்கென்ற பாதை அமைக்கும் ஆசை இருக்கும் என்பதை இதுவரை நீங்கள் சிந்திக்க தவறி இருக்கலாம். பெண் என்பவள் இயந்திரம் அல்ல, நிற்காமல் சுழல்வதற்கு... அவளுக்கும் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் இருக்கும். அம்மா, மகள், சகோதரி, மனைவி என உங்கள் வாழ்க்கையில் பயணிக்கும் பெண்களின் கனவுகளை மட்டுமல்ல கஷ்டங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள். பணிகளில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். உறவு என்பது எல்லா தருணத்திலும் கைகோத்து சமமாய் சேர்ந்து நடப்பதே. கைகளைப் பிடித்து புன்னைகையை சிந்திப் பாருங்கள், இன்னும் புயலாய் புறப்பட உங்கள் இணை தயாராக இருப்பாள்.
உணர்வுகளுக்கு எப்போதும் உயிர் உண்டு!