சிலரை பார்த்ததும் பேச வேண்டும் என்று தோன்றும். நம்மை அறியாமலே அவர்களின் குணநலன்களால் நாம் ஈர்க்கப்பட்டு விடுவோம். தயக்கம், பேசுவதைத் தடுத்திருக்கும். அப்படி சமீபத்தில் சந்தித்த தோழி அவள். என் அலுவலகத்தில் என் குழுவில் அவள் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்கள் இருக்கும். எட்டு ஆண்டுகளுக்கு முன், ஊர்க்கார பெண்ணாக சென்னையில் தஞ்சம் அடைந்து, சென்னையைப் பழகிக் கொள்ள நான் சந்தித்த அத்தனை அவமானங்களையும், அவள் சமீப காலத்தில் சந்திப்பதை, சில தருணங்களில் என்னால் உணர முடிந்தது. பல நேரங்களில் என் இயல்பும் அவள் இயல்பும் ஒன்றாக இருப்பதையும் கவனித்து இருக்கிறேன். அவ்வப்போது சின்ன சிரிப்பை பகிர்ந்திருக்கிறோம்... பேசியது இல்லை.
அலுவலக வேலையாக சென்னை விமான நிலையம் வரை இருவரும் ஒன்றாகப் பயணிக்கும் சூழல் வந்தது. சென்னை ஆயிரம் விளக்கு மெட்ரோவில் ஏறினோம். கிண்டி மெட்ரோவிற்கு பிறகு ரயிலில் கூட்டம் குறைந்தது. இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டோம். `நீங்க எந்த ஊருக்கா' என்றாள். சொந்த ஊரின் பெயரைச் சொல்லிவிட்டு, `நீங்க?' என்றேன். அவளின் வட்டார வழக்கை வைத்து அவள் கோவையை சேர்ந்தவளாக இருப்பாள் என நான் கணித்து இருந்தது சரியாக இருந்தது. தயக்கம் நீங்கி இருவரும் பேசத் தொடங்கினோம்.

கல்லூரி, படிப்பு என வழக்கமான டாப்பிக் கடந்து குடும்பம் பற்றிய பேச்சு வந்தது. நான் பேசும்போது என் குடும்பத்தைப் பற்றி ஆர்வமாகக் கேட்டவள், முகத்தில் சின்ன சோகத்துடன் பேசத் தொடங்கினாள். ``எங்க வீட்டுல, நான், அக்கானு ரெண்டு பொண்ணுங்க. அப்பா தனியார் கம்பெனில வேலை பார்த்தாரு. எங்க வீட்டுக்கு வர்றவங்க எங்களைப் பார்த்ததும் `ரெண்டும் பொண்ணா'னுதான் முதல்ல கேட்பாங்க. சொந்தபந்தத்துல யாராவது லவ் மேரேஜ் பண்ணிட்டா, உடனே, `நீ ரெண்டு பொண்ண பெத்து வெச்சுருக்க... காலகாலத்துல அதுங்களுக்கு கல்யாணம் பண்ற வழிய பாரு'னு அப்பாக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. `புள்ளைகள எதுக்கு காலேஜ்க்கு அனுப்புற; அதுவும் பசங்க படிக்கிற காலேஜுக்கு'னு கேட்டிருக்காங்க. இப்படியான கேள்விகளால மனவருத்தம் இருந்தாலும், அதையெல்லாம் அப்பா, அம்மா எங்ககிட்ட காண்பிச்சதே கிடையாது.
எங்க ஊர்லதான் ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சேன். காலேஜுக்கு காலேஜ் பஸ்ல போயிட்டு வருவேன். பெருசா ஃபிரெண்ட்ஸும் கிடையாது. வெளிப்பழக்க வழக்கங்களும் இல்ல. என்னைப் பொறுத்தவரை வீடு தான் உலகம். என்னோட அக்கா அப்படித்தான் இருந்தா. அவளைப் பார்த்து வளர்ந்ததுனால நானும் அப்படித் தான் இருந்தேன். காலேஜ் முடிச்சதும் அக்காக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டா. ஆனா, அதுக்குள்ள பிரெக்னென்ஸி வந்துருச்சு. அப்புறம் குடும்பம், குழந்தைனு வீட்டோட இருந்துட்டா.

சில நேரத்துல எங்க அக்காவைப் பார்க்கும்போது எனக்கு கோபம் வரும். அவ உலகம், குடும்பங்கிற சின்னக் கூட்டுக்குள்ள சுருங்கிருச்சு. வீட்டுக்குள்ளயே இருக்கிறதுனால பேங்க் போகணும்னாகூட யாரையாவது துணைக்குக் கூப்பிடுவா. போனுக்கு ரீசார்ஜ் பண்ணணும்னா எனக்கு கால் பண்ணி சொல்லுவா. எதையும் கத்துக்கணும்னு நினைக்கிற எண்ணமே இல்லாம போயிருச்சு. நிறைய முறை அக்கா மீது வருத்தம்கூட வந்திருக்கு. `உனக்கு தேவையான சின்னச் சின்ன விஷயத்தை நீயே பண்ணுக்கா'னு சொல்லுவேன். ஆனா, `பிள்ளைகளை வெச்சுக்கிட்டு முடியலை'னு சிம்பிளா சொல்லி முடிச்சிருவா.
ஒரு சின்ன முடிவு எடுக்ககூட நிறைய தடுமாற்றம் இருக்கு அவளுக்கு. அதுக்காக கல்யாணமான பொண்ணுங்க எல்லாரும் எங்க அக்கா மாதிரி இருக்காங்கனு சொல்ல வரல. ஆனா, இருக்காங்க. இதெல்லாம் பக்கத்துல இருந்து பார்த்ததுனால அக்கா பண்ண தப்பை நான் பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணேன். வெளியுலகம் என்னன்னு பார்க்கணும். அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கணும். எல்லா சூழலையும் சுயமா எதிர்கொள்ள நான் தயாரா இருக்கணும். இதுக்கெல்லாம் எனக்கு ஒரு வேலை வேணும். வேலைக்குப் போன பிறகுதான் கல்யாணம்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன்.

படிப்பு முடிஞ்சதும் என் அக்காவுக்கு பண்ண மாதிரியே எனக்கும் ஜாதகம் பார்க்கப் போனாங்க. அந்த ஜோசியக்காரர், `இந்த ஜாதகக்காரருக்கு திருமண யோகம் இப்போ இருக்கு, இப்போ கல்யாணம் பண்ணலைனா இன்னும் அஞ்சு வருஷத்துக்கு கல்யாணம் பண்ன முடியாது'னு அக்காவுக்கு சொன்ன அதே டயலாக்கை சொல்லி அனுப்பிருக்காரு. நம்ம வாழ்க்கை எப்படி இருக்கணும்னு நாம முடிவு பண்றதைவிட இந்த ஜோசியக்காரங்கதான் முடிவு பண்றாங்க" என்றவள், பார்வையை நிலைகுத்தி எதையோ யோசித்தாள்.
``ஆனா, என் வாழ்க்கையை நான்தான் முடிவு பண்ணணும். லின்க்டுஇன் மூலமா வேலை தேட ஆரம்பிச்சேன். நம்ம கம்பெனியில வேலை கிடைச்சுது. நான் அதைச் சொல்றதுக்கு முன்னாடி கல்யாணத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. எனக்கு வேலை கிடைச்சிருக்கு. நான் வேலைக்குப் போகணும்னு சொன்னதும், வீட்ல ரெண்டு நாள் ஒரேபிரச்னை. `காசுக்கு என்ன குறைச்சல்; கல்யாணம் முடிச்சிட்டு வேலைக்குப் போகட்டும். யாரு வேணாம்னு சொன்னா; வேலைக்குப் போகாத பிள்ளைகளுக்கு கல்யாணமே ஆகலையா'னு ஆயிரம் கேள்விகள். ஆனா, என்னோட பதில் ஒண்ணுதான். நான் சம்பாதிக்கணும். என் சம்பாத்தியத்துல என்னையும் என் குடும்பத்தையும் நான் பார்த்துக்கணும்னு நினைச்சேன். அதுல உறுதியாகவும் நின்னேன். வீட்ல சண்டை போட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன்.

சோஷியல் மீடியால, என் போட்டோவை பார்த்துட்டு அம்மா, அப்பாகிட்ட சொந்த பந்தங்கள் இல்லாததையெல்லாம் சொல்லிருக்காங்க. ஹாஸ்டலில் தங்குனது, என் டிரெஸ்ஸிங் சென்ஸை மாத்திக்கிட்டது, ஹேர்ஸ்டைல் மாத்துனதுனு எனக்காக நான் பண்ண சின்னச் சின்ன விஷயத்தில்கூட பிரச்னை பண்ணாங்க. ஆரம்பத்தில் சென்னை எனக்கு மிரட்சியாத்தான் இருந்துச்சு. எதுவுமே தெரியல. ஆனா, இப்போ பழகிட்டேன். தனியா எல்லா இடத்துக்கும் டிராவல் பண்றேன். சுயமரியாதை முக்கியம்னு எல்லா இடத்துலையும் ரியாக்ட் பண்ணக் கத்துக்கிட்டேன். மொத்தத்தில் சுயமா வாழுறேன்.
ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி அம்மா போன் பண்ணாங்க. `ஒரு வரன் வந்துருக்கு'னு சொன்னாங்க. நான், `இப்போ என்ன அவசரம்'னு கேட்டேன். `அப்போ யாரையாவது லவ் பண்றியா'னு கேட்டாங்க. `அதெல்லாம் இல்லை'னு சொன்னேன். என்னைப் பெத்தவங்க என்னை வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னாலும், என்னைத் தடுக்கல... வற்புறுத்தல... சென்னைக்கு வந்த அடுத்த நாளே போன் பண்ணி, சாப்பாடு, தங்குற இடமெல்லாம் எப்படி இருக்குனு கேட்டாங்க. இதெல்லாம் யோசிச்சுப் பார்த்து என் திருமண வாழ்க்கையை டிசைட் பண்ற உரிமையை அவங்களுக்குக் கொடுத்துட்டேன்'' என்றதும் எனக்கு கொஞ்சம் பதற்றமாகியது.``... அது எப்படி செட் ஆகும்? உங்களுக்குப் பிடிக்கணும்ல” என்றேன். `அட, இருங்கக்கா... சில கண்டிஷன் போட்டுருக்கேன். அதுக்கு ஓ.கே சொல்ற மாப்பிள்ளை எனக்கு ஓ.கே தான்' என்று லிஸ்ட் சொல்ல ஆரம்பித்தாள்.

``கல்யாணத்துக்குப் பின்னாடியும் நான் வேலைக்குப் போவேன். பையன் தன்னோட அப்பா- அம்மாவைப் பார்த்துக்குற மாதிரி, நானும் என் அம்மா - அப்பாவை பார்த்துப்பேன். என் சம்பள காசுல இருந்து என் வீட்டுச் செலவுக்கு நான் ரூபா கொடுப்பேன். என் அம்மா - அப்பாவைப் பார்க்கப் போறதுக்கு நான் பர்மிஷன் கேட்குற சூழல் எப்பவும் வரக்கூடாது. சுயமரியாதை குறைவா நடத்தக்கூடாது. இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நான் மாப்பிள்ளைகிட்ட சொல்லி ஓ.கே வாங்கிட்டுத்தான் கல்யாணம் பண்ணுவேன்''னு வீட்ல சொல்லிருக்கேன். இதுக்கெல்லாம் ஓ.கே சொல்லாத மாப்பிள்ளை எனக்கு பார்ட்னரா வரவேண்டாம். கல்யாணமே நடக்கலைனாலும் பரவாயில்ல'' என்றாள்.
கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த ஆச்சர்யம் தப்புதான். ஓர் ஆண் இதைச் சொன்னால் நாம் இயல்பாகத்தானே எடுத்துக் கொள்கிறோம். ஆனால், ஒரு பெண் சொன்னால் மட்டும் எதற்கு இத்தனை எதிர்ப்புகள்... கேள்விகள்... ஆச்சரியங்கள்..!
திருமணம் என்பது வாழ்க்கையில் ஓர் அங்கம்தான். ஆனால், வாழ்க்கையே திருமணம் அல்ல. இதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் திருமணம் முடிந்தால் வாழ்க்கையே முடிந்தது என்று அர்த்தம் இல்லை என்பதை வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்களும் யோசிக்க வேண்டும். நம்முடைய கைகளை யாரும் கட்டிப் போடவில்லை. உங்களுக்கான கனவை நீங்கள்தான் காண வேண்டும். உங்களுக்கான முயற்சிகளை நீங்கள்தான் எடுக்க வேண்டும்.

குழந்தைக்காக, குடும்பத்துக்காக என்று ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால், இன்னும் சில வருடம் கழித்து, உங்கள் உலகம் என நீங்கள் கட்டமைத்தவர்கள் எல்லாருக்கும் சிறகு முளைத்துப் பறக்க ஆரம்பித்து இருப்பார்கள்.
நீங்கள் மட்டும் கூட்டிற்குள் இருப்பீர்கள். அப்போது வருத்தப்பட்டு, சுயமரியாதையை இழந்து இருப்பதைவிட, இப்போதே உங்கள் முயற்சிக்கு சிறகு பூட்டுங்கள். வானமும் தொட்டுவிடும் தூரம்தான்.