Published:Updated:

``பூ வெச்சுட்டு வந்தா ஒத்த ரோசானு கிண்டல் பண்றாங்க" | ஜன்னலோரக் கதைகள் - 5

 கிராமத்துப் பெண்
News
கிராமத்துப் பெண் ( மாதிரி படம் )

``கிராமத்துல இருந்து இங்கு வந்த எனக்கு சென்னை வேற்றுக் கிரகம் மாதிரி இருக்கு. போற இடத்துல எல்லாம் அவமானப்படுறேன். அந்த அவமானத்துல நிறைய விஷயங்களைக் கத்துக்கிறேன். ஆனா, பேச்சு, டிரெஸ்ஸை வெச்சு என்னை 'பட்டிக்காடு'னு கிண்டல் பண்றாங்க. அதைத் தாங்க முடியல...”

Published:Updated:

``பூ வெச்சுட்டு வந்தா ஒத்த ரோசானு கிண்டல் பண்றாங்க" | ஜன்னலோரக் கதைகள் - 5

``கிராமத்துல இருந்து இங்கு வந்த எனக்கு சென்னை வேற்றுக் கிரகம் மாதிரி இருக்கு. போற இடத்துல எல்லாம் அவமானப்படுறேன். அந்த அவமானத்துல நிறைய விஷயங்களைக் கத்துக்கிறேன். ஆனா, பேச்சு, டிரெஸ்ஸை வெச்சு என்னை 'பட்டிக்காடு'னு கிண்டல் பண்றாங்க. அதைத் தாங்க முடியல...”

 கிராமத்துப் பெண்
News
கிராமத்துப் பெண் ( மாதிரி படம் )

சென்னை ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம். சோதனை செய்ய நின்றுகொண்டிருந்த நபர்களிடம், பயணிகள் ஒவ்வொருவரும் பல்வேறு முகபாவனைகளால் அவர்களின் எரிச்சல்களை வெளிப்படுத்தி நகர்ந்தனர். அறிவிப்பு பலகையைப் பார்த்து நான்கு நிமிடங்களுக்கு ஒரு ரயில் இருப்பதை அறிந்துகொண்டேன். ரயில் நிலையத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே என்னுடன் ஒரு பெண் நடந்து வந்தார். 

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

``அக்கா டிக்கெட் எங்க வாங்கணும்?" என்று கேட்டார். அவருக்கு டிக்கெட் எடுக்கும் இடத்தைக் காண்பித்தேன். விம்கோ நகர் செல்லும் ரயில் வர, இன்னும் 2 நிமிடங்கள் இருந்தன.

நான், பெண்கள் பெட்டி வந்து நிற்கும் இடத்துக்கு நேராக நின்று கொண்டேன். அந்தப் பெண்ணும் என் அருகில் வந்து நின்று கொண்டார். ரயில் வந்தது. கூட்டத்தில் எங்களையும் இணைத்துக் கொண்டோம். ரயிலில் காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள்.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

ஒவ்வொருவருக்கும் தங்களின் தோழிகளிடம் பேச ஒரு கதை இருந்தது. என்னைப் போன்று தனியே பயணிப்பவர்கள், குனிந்த தலை நிமிராமல் போனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அறிவிப்பு சத்தத்துடன் ரயிலின் கதவுகள் மூடப்பட்டதும் ரயில் வேகமெடுத்தது.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் வரை உட்கார இடம் இல்லாமல் நின்றுகொண்டிருந்தோம். சென்ட்ரலில் உட்கார இடம் கிடைத்தது. நான் ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு அருகில் இருந்த சீட்டில், என் பையை வைத்து இடம் பிடித்து, என்னுடன் ரயில் ஏற வந்த பெண்ணை உட்கார அழைத்தேன். `தேங்க்ஸ்க்கா' என்று சொல்லி சீட்டில் அமர்ந்துகொண்டார். அவரின் கண்கள், ரயிலில் இருந்த பெண்களை மேலும், கீழுமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. ரயில் பூமிக்கு அடியில் செல்லும் என்பதால் போனில் சிக்னல் கட் ஆகியது. போனை பையில் வைத்துவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

ஜன்னலோரக் கதைகள்
ஜன்னலோரக் கதைகள்

``நீங்க சென்னைக்குப் புதுசா?’’ என்றேன். ``ஆமாக்கா" என்று சொல்லிவிட்டு அமைதியாக போனை பார்த்தார். ``எங்க வேலை பார்க்குறீங்க?’’ என்றேன். ``இங்கதான் ஐ.டி கம்பெனியில" என்றாள். அவள் போனிலும் சிக்னல் கட் ஆனதால் நிமிர்ந்து பார்த்து பேசத் தொடங்கினார். ``நீங்க எங்க வேலை பார்க்குறீங்க?" என்ற கேள்வியை என்னிடம் முன்வைத்தார். பணிபுரியும்  நிறுவனத்தின் பெயரை நான் சொன்னதும், அந்தப் பெண்ணின் ஆச்சர்யத்தை, அவரின் கண்களே காட்டின. ``மீடியாவுல வேலை பார்த்தா மாடர்ன் டிரெஸ் போட்டுருப்பாங்கனு கேள்விப்பட்டுருக்கேன். அப்படித்தான் சிலரை பார்த்தும் இருக்கேன். இப்படி சுடிதார்கூட  போடுவாங்களா?'' என்றார். ``வேலைக்கும் டிரெஸ்ஸுக்கும்  என்னம்மா சம்பந்தம் இருக்கு” என்று கேட்டேன்.

``சரிதான். ஆனா, சம்பந்தப்படுத்தி, அவமானப்படுத்துறாங்களே"  என்றவர், தன் கதையைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். ``எனக்கு சொந்த ஊர்  திருநெல்வேலி பக்கம் ஒரு கிராமம். இப்போதான் காலேஜ் முடிச்சேன். எங்க அப்பா ஒரு மெக்கானிக்.  எனக்கு ரெண்டு தம்பிங்க. அவங்கள நான்தான் படிக்க வைக்கணும். அதுக்காகவே வேலைக்கு வந்துட்டேன். நான் சென்னைக்கு வேலைக்கு வந்ததுல எங்க அப்பாக்கு அவ்வளவு பெருமை. இங்க ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறேன்.  எங்க மாமா வீட்ல தங்கி வேலைக்குப் போயிட்டிருக்கேன். கிராமத்துல இருந்து வந்த எனக்கு சென்னை வேற்றுக்கிரகம் மாதிரி இருக்கு. 

பெண்
பெண்

போன் பே, கூகுள் பே, ஓலா, ஸ்விக்கி இப்படி நிறைய விஷயங்களை இங்க வந்துதான் கத்துக்கிட்டேன். இன்னமும்  சென்னையில் பழக்கத்துல இருக்குற நிறைய விஷயம் எனக்கு தெரியல. போற இடத்துல எல்லாம் அவமானப்படுறேன். அந்த அவமானத்துல நிறைய விஷயங்களைக் கத்துக்கிறேன். ஆனா, என்னோட பேச்சு, டிரெஸ்ஸை வெச்சு `பட்டிக்காடு'னு கிண்டல் பண்றாங்க. அதைத்தான் தாங்க முடியல.

நான் வேலை பார்க்குற கம்பெனியில எல்லாருமே மாடர்ன் டிரெஸ்தான் போடுறாங்க. எனக்கு மாடர்ன் டிரெஸ் பிடிக்கல. வசதியாவும் இல்ல. அதனால சல்வார் போடுறேன். அதுக்கு பட்டிக்காடுனு கிண்டல் பண்றாங்க. பூ வெச்சுட்டு போனா, `ஒத்த ரோசா'னு கிண்டல் பண்றாங்க. நான் கிராமத்துல கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்ச பொண்ணு, என்னால பசங்க கூட இயல்பா பேச முடியல. இங்க இருக்கறவங்க பசங்களோட சேர்ந்து அவுட்டிங்னு வெளிய போறாங்க. எனக்கு அதுவும் செட் ஆகல. நான் வரல நீங்க போயிட்டு வாங்கனு சொன்னாலோ, இல்ல அங்க போய் அமைதியா இருந்தாலோ அதுக்கும் கிண்டல் பண்றாங்க. 

ஜன்னலோரக் கதைகள்
ஜன்னலோரக் கதைகள்

ஹேர் ஸ்டைல் பண்ணிக்கோ, மேக்கப் பண்ணிக்கோ, டிரெஸ் இப்படி வாங்கு, இங்க வாங்குனு எதையோ என் மேல திணிக்க முயற்சி பண்ற மாதிரி இருக்குக்கா. ஒரு கட்டத்துல மன அழுத்தம் அதிகமாகி ஊருக்கே போயிராலாம்னு நினைச்சேன். படிப்புக்காக நான் வாங்குன கடனை அடைக்கணும். தம்பிங்களைப் படிக்க வைக்கணுங்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. பாதியில ஊருக்குப் போனா, தோத்துட்டுப் போற மாதிரிதான் இருக்கும்" என்று அவள் கண்கள் கலங்கியபோது காலடிப்பேட்டை ரயில் நிலையம் வந்திருந்தது. ரயிலில் கூட்டம் குறைந்து அங்கொன்றும். இங்கொன்றுமாய் ஆள்கள் அமர்ந்திருந்தார்கள்.

``உங்களைப் பார்க்கும்போது  மனசளவுல அஞ்சு வருஷத்துக்கு முன் என்னைப் பார்த்தது போல இருக்கு. இங்க இருக்கறவங்க எல்லாரும் சென்னையோட பூர்வகுடிகள் கிடையாது. நம்மள மாதிரி பிழைக்க வந்தவங்கதான். சிலர் நிர்ப்பந்தத்தாலும், சிலர் ஆசைப்பட்டும், சிலர் ஒரு கூட்டுக்குள் இருந்து சுதந்திரம் கிடைச்ச உணர்வாலும் மாறியிருப்பாங்க. அப்படி மாறுனவங்கள்ல சிலர் தான் நம்மையும் மாத்த டிரை பண்றாங்க, அவ்ளோதான். உங்களுக்கு எல்லாத்தையும் மாத்திக்கணும்னு தோணுச்சுனா மாத்திக்கோங்க. இல்லைனா உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருங்க’’ என்று சொன்னேன்.

``கிண்டல் பண்ணும்போது கஷ்டமாதான் இருக்கு. ஆனா, நான் ஏன் இவங்களுக்காக மாறணும்? வீட்டு கஷ்டத்துக்காக வேலைக்கு வந்தேன். பழைய சோறு சாப்பிட்டு வளர்ந்த நான், பீட்சாதான் சாப்பிடுவேன்னு எதுக்குப் பொய் சொல்லணும். சென்னை என்னை அறிவுரீதியா மெருகேத்துனா போதும். தோற்றம் அப்படியே, பழக்கமும் அப்படியேதான்  இருக்கணும்னு நினைக்கிறேன்க்கா... சுடிதார் போட்டு, தலையில் பின்னல் போட்ட பொண்னுங்க வேலைக்கு வரக்கூடாதுனு எந்த கம்பெனியும் ரூல்ஸ் வைக்காதப்போ நாம ஏன் வருத்தப்படணும் உண்மையைச் சொல்லணும்னா, சென்னையில் இருக்குறவங்களோட டிரெஸ்ஸிங் சென்ஸ் எனக்குப் புதுசா இருக்கு. ஹீல்ஸ் போட்டுட்டு எப்படி மிடுக்கா நடக்குறாங்கனு ஆச்சர்யமா இருக்கு. இதையெல்லாம் கிராமத்துல இருந்து வந்த ஒரு பொண்ணு இயல்பா கடக்கும்போது, சிட்டியில இருக்கறவங்க ஏன் நம்ளோட டிரெஸ்ஸிங்கை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கணும். தாழ்வு மனப்பான்மைக்குள்ள தள்ளணும்?'' என்று படபடத்தார். அவரின் வார்த்தை ஒவ்வொன்றும் காயங்களின் வெளிப்பாடாய் இருந்ததை உணர முடிந்தது.

``சாரிக்கா, ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன். அவ்ளோ கஷ்டமா இருக்கு'' என்று நிதானித்தார். ``இப்போ இவ்வளவு பேசுற நானே, என் வேலைக்காக நாளைக்கு என்னோட டிரெஸ்ஸிங்கை மாத்தணும்னு அவசியம் இருந்தாலோ, அவசியம்னு என் மனசுக்கு தோணுச்சுனாலோ கண்டிப்பா மாத்திப்பேன். ஆனா, இப்போ இருக்கும் என் இயல்பை ஏன் கேலி பண்றாங்க? இந்த டிரெஸ் இப்படி பண்ணலாம், இதுக்கு மேட்ச்சிங் இப்படிப் பண்ணலாம்னு ஒரு அக்கறையோட சொன்னாகூட ஏத்துக்கலாம். இளக்காரமான பார்வைலேயே நம்முடைய மொத்த நம்பிக்கையையும் உடைச்சுடுறாங்க. இது என்னை மாதிரி கிராமத்துல இருந்து வரும் பெண்களுக்கு எவ்வளவு மிரட்சியைக் கொடுக்கும், எவ்வளவு பயத்தைக் கொடுக்கும்னு அவங்க யோசிக்கிறதே இல்லக்கா! ஆனாலும், எல்லாத்தையும் கடந்து இப்போ வரை என் இயல்பிலேயே நான் இருக்கேன்னு என்னை நானே தேத்திப்பேன்" என்று அவள் முடித்தாள்.

ரயில் பெட்டி
ரயில் பெட்டி
பெ. ராகேஷ்

உண்மைதான். நாம் ஒன்றைப் பழகி அதை மற்றவர்களிடம் திணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்தான். நம்முடைய கேலிப்பேச்சுகளும், ஏளனப் பார்வைகளும் எத்தனை பேரை தோல்வி பயத்தை நோக்கித் தள்ளுகின்றன என்பதை நாம் உணர்வதே இல்லை என்பது மீண்டும் ஒருமுறை ஆழமாக மனதில் பதிந்தது. சக மனிதர்களின் உணர்வுகளை மதிப்பதே உண்மையில் நாகரிகம். அதைக் கடைப்பிடித்து மனிதம் காப்போம்!