Published:Updated:

``யூஸ் பண்ண நாப்கினைகூட அப்படியே வெளிய வெச்சுட்டுப் போயிருவாங்க..." |ஜன்னலோரக் கதைகள்- 2

கழிப்பறையின் உட்பக்கம்
News
கழிப்பறையின் உட்பக்கம்

``பிள்ளைங்ககிட்ட ஹவுஸ் கீப்பிங் வேலைனு சொல்லாம, ஆபீஸ்ல போன் பேசுற வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு வேலைக்கு வருவேன். நம்ம அம்மா ஆபீஸ்ல வேலை பார்க்குறாங்கனு என் புள்ளைங்களும் நினைச்சுக்கிட்டு இருக்குதுங்க. இந்த அலங்காரம் எல்லாம் ஆபீஸ் போற வரைக்கும்தான்...”

Published:Updated:

``யூஸ் பண்ண நாப்கினைகூட அப்படியே வெளிய வெச்சுட்டுப் போயிருவாங்க..." |ஜன்னலோரக் கதைகள்- 2

``பிள்ளைங்ககிட்ட ஹவுஸ் கீப்பிங் வேலைனு சொல்லாம, ஆபீஸ்ல போன் பேசுற வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு வேலைக்கு வருவேன். நம்ம அம்மா ஆபீஸ்ல வேலை பார்க்குறாங்கனு என் புள்ளைங்களும் நினைச்சுக்கிட்டு இருக்குதுங்க. இந்த அலங்காரம் எல்லாம் ஆபீஸ் போற வரைக்கும்தான்...”

கழிப்பறையின் உட்பக்கம்
News
கழிப்பறையின் உட்பக்கம்

பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத சென்னை எழும்பூர் ரயில் நிலையம். மின்சார ரயிலுக்கு டிக்கெட் வாங்க கவுன்ட்டரில் பெருங்கூட்டம் வரிசையில் நின்றது. அவர்களுள் கடைசியாக நானும் இணைந்துகொண்டேன். கையில் கட்டியிருந்த கடிகாரத்தை நொடிக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன். எனக்கு அடுத்தபடியாக இன்னும் சிலரும் வரிசையில் சேர்ந்தனர். ஆமை வேகத்தில் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் கவுன்ட்டரில் டிக்கெட் வழங்கும் பெண்மணி. தன் குரலையும் உயர்த்தி, `சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்குங்க' என்று கடிந்துகொண்டிருந்தார். வரிசைக்கு அருகில் தானியங்கி டிக்கெட் விநியோகம் ஒன்று, எந்தச் செயல்பாடும் இல்லாமல், அதுவும் தன் பங்குக்கு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு இருந்தது.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

டி-ஷர்ட் ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி வந்தாள். எனக்கு முன் நின்றுகொண்டிருந்த ஆணிடம், `அண்ணா செங்கல்பட்டுக்கு ஒரு டிக்கெட் வாங்கித்தாங்க' என உரிமையுடன் கேட்டு சில்லறையை நீட்டினாள். எனக்கு கோபம் வந்தாலும், அமைதியாக இருந்தேன். வரிசையில் எனக்கு அடுத்து நின்ற பெண் `ஏம்மா, உனக்கு வரிசையில நிக்கணும்னு தெரியாதா? எங்களுக்கும் நேரம் ஆகுது. போய் வரிசையில நில்லு' என்று சொல்ல... பதில் பேசாமல் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக வரிசையில் நின்றுகொண்டாள் அந்தப் பெண். தன் உரிமைக்காக வெடித்த பெண்ணின் குரல் என் கவனத்தை அவரின் பக்கமாகத் திருப்பியது.

வகிடு எடுத்துப் பின்னிய கூந்தல், பூப்போட்ட சேலை, கையில் பழைய ஹேண்ட் பேக், ரப்பர் செருப்பு என அவரின் தோற்றம் மனதில் பதிந்துபோனது. `எங்க போணும்? ' என்ற குரல், என் கவனத்தை டிக்கெட் கவுன்ட்டர் பக்கம் திசைதிருப்பவே, ஊரப்பாக்கம் வரை டிக்கெட் எடுத்துக்கொண்டேன். ரயிலில் ஏறிய அடுத்த சில நொடிகளில் அந்தப் பெண்ணும் ரயிலில் ஏறி எனக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்துகொண்டார்.

அமர்ந்தவரின் கைகள் அடுத்த சில விநாடிகளில், கவரில் பூக்களைக் கட்டத் தொடங்கியது. ரயிலில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தலை கவிழ்ந்து, போனை பார்த்துக் கொண்டிருக்க, கண்களைத் திருப்ப மனதில்லாமல், பரதம் ஆடும் அவரின் விரல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதைப் புரிந்துகொண்டவர், நிமிர்ந்து பார்த்து, ``ஆபீஸ்ல ஒரு பொண்ணு பூ வாங்கிட்டு வரச் சொல்லுச்சு. அதான் வாங்கிட்டுப் போறேன். இந்தாம்மா நீ கொஞ்சம் பூ வெச்சிக்கோ" என, பூ கட்டிக்கொண்டிருந்த நூலை, ரயில் சீட்டின் நுனியில் தேய்த்து அறுத்துக் கைகளில் திணித்தார்.

ரயில்
ரயில்

`உங்க பேரு என்னக்கா? எங்க வேலை பார்க்கிறீங்க?' என்று உரையாடலைத் தொடங்கினேன், ``பேரு சுந்தரி, ஒரு பிரைவேட் கம்பெனியில ஹவுஸ் கீப்பிங் வேலை செய்றேன்" என ஒரு வரியில் நிறுத்திக்கொண்டார். `சொந்த ஊரு'? என்ற கேள்விக்கு,`மதுர' என்று ஒரு வார்த்தையில் பதில் வந்தது. ``அக்கா நான் பூவை ரெண்டு ரெண்டா எடுத்து வைக்கிறேன். பூ கட்ட ஈஸியா இருக்கும்ல'' என்று பூக்களை நான் அடுக்கத் தொடங்கியவுடன் என்னிடம் பேசத் தொடங்கினார் சுந்தரி அக்கா.

``சொந்த ஊரு மதுர. ஆனா சென்னைக்கு வந்து 25 வருஷத்துக்கு மேல ஆகுது. 16 வயசுல கல்யாணம் பண்ணி வெச்சாங்க. மதுரயில இருந்து பொழப்பு தேடி சென்னைக்கு வந்துட்டோம். வீட்டுக்காரரு காய்கறிக்கடை வெச்சு இருந்தாரு. ஆண் ஒண்ணு, பொண்ணு ஒண்ணுனு ரெண்டு புள்ளைங்க. மஞ்சள் காமாலை வந்து வீட்டுக்காரரு இறந்துட்டாரு. சொந்த, பந்தம் ஒருத்தரும் ஆதரவுக்கு வரல. தெருவுல இருந்த ஜனங்கதான் உதவிக்கு ஓடி வந்தாங்க. 22 வயசுல மொத்த வாழ்க்கையும் முடிஞ்சுபோச்சு. மறுகல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நிறைய பேர் சொன்னாங்க. வர்றவங்க என் புள்ளைங்களை எப்படி பார்த்துப்பாங்களோங்கிற பயத்துல கல்யாணம் பண்ணிக்கல. அவரு செத்து 18 வருஷம் ஆச்சு. பிள்ளைகளுக்காக வாழுறதுல கூட சந்தோஷம் இருக்குமா" என்றவர், சட்டென்று நிமிர்ந்து பார்த்து,

``ஆனா, ரொம்ப கஷ்டமான வாழ்க்கைம்மா. இத்தனை வருஷத்துல ஆசைப்பட்ட ஒரு பொருளைக்கூட என்னால வாங்க முடிஞ்சது இல்ல. ஒரு கட்டத்துல ஆசைப்படுறதையே விட்டுட்டேன்'' என்றார்.

துப்புரவு பணியாளர்
துப்புரவு பணியாளர்

``அவரு தவறிப் போனதுக்கு அப்புறம், கடன் வாங்கி, காய்கறிக்கடை நடத்துனேன். நிரந்தர வருமானம் இல்ல. வியாபாரம் மூலமா கிடைக்கிற காசு சாப்பாட்டுக்கு மட்டும்தான் சரியா இருந்துச்சு. பெரியளவுல வியாபாரம் பாக்குற அளவுக்கு முதலீடு செய்ய என்கிட்ட காசும் இல்ல. அதான் வேலைக்குப் போகலாம்னு வேலை தேட ஆரம்பிச்சேன். எட்டாப்பு படிச்சவளுக்கு என்ன வேலை கிடைக்கும்?

எங்க தெருவுல இருந்த ஒரு அம்மா, அவங்க கம்பெனியில ஹவுஸ் கீப்பிங் வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். பிள்ளைங்ககிட்ட ஹவுஸ் கீப்பிங் வேலைனு சொல்லாம, ஆபீஸ்ல போன் பேசுற வேலைக்குப்போறேன்னு சொல்லிட்டு வேலைக்கு வருவேன். நம்ம அம்மா ஆபீஸ்ல வேலை பார்க்குறாங்கனு என் புள்ளைங்களும் நினைச்சுக்கிட்டு இருக்குதுங்க. இந்த அலங்காரம் எல்லாம் ஆபீஸ் போற வரைக்கும்தான். அங்கே போனதும் யூனிஃபார்ம் போட்டுப்பேன் " என்றார்.

``ஹவுஸ் கீப்பிங் வேலை செய்றீங்கனு சொன்னா பசங்க ஏத்துக்க மாட்டாங்களா?' என்று கேட்டேன். ``இந்த வேலைதான் அவங்களுக்கு 15 வருஷமா சோறு போட்டுருக்கு. அதுனால அசிங்கப்பட எதுவும் இல்ல. ஆனா, என்னை நினைச்சு கஷ்டப்படுவாங்க. அதான் உண்மைய சொல்றது இல்ல” என்றார்.

``நானும் இந்த வேலையை நினைச்சு அசிங்கப்படுறதோ, அவமானப்படுறதோ இல்ல. மனுஷங்க எங்கள நடத்துற விதம் தான் கஷ்டமா இருக்கும். நீங்க உங்க ஆபீஸ்ல ஹவுஸ் கீப்பிங் வேலை பண்றவங்கள நேரம் ஒதுக்கி கவனிச்சிருக்கீங்களா? ரொம்ப கஷ்டமான வேலைம்மா. நிறைய பேர் டாய்லெட்டை சரியா யூஸ் பண்ண மாட்டாங்க. யூஸ் பண்ண நாப்கினை கூட அப்படியே வெளியவே வெச்சுட்டுப் போயிருவாங்க. டாய்லெட்ட தண்ணி ஊத்தாமப் போயிருவாங்க. டிஸ்யூ பேப்பர குப்பைத் தொட்டியில போடமாட்டாங்க. பீரியட்ஸ் ஆயிருந்தா, ரெஸ்ட்ரூம்ல ரத்தக்கறை படுற இடத்தைத் துடைக்க மாட்டாங்க. இதையெல்லாம் நாங்கதான் சரி பண்ணணும். யாரும் ஆபீஸ் ரெஸ்ட்ரூம வீட்டு ரெஸ்ட்ரூம் மாதிரி யூஸ் பண்றது இல்ல. எங்கள மனுஷங்களாகவும் நினைக்கிறது இல்ல. சில நேரம் சில பெண்கள்கிட்ட நாங்களே சுத்தமா பயன்படுத்துங்கனு சொல்லுவோம். அதுக்கு அவங்க , `பாத்ரூம சுத்தம் செய்யதானே நீங்க சம்பளம் வாங்குறீங்க'னு சொல்லி மனசை காயப்படுத்து வாங்க. பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறதுக்கு மனசாலும் நிறைய அவமானப்படுறோம்.

துப்புரவு தொழிலாளர்கள்.
துப்புரவு தொழிலாளர்கள்.

இந்த வேலைகளைப் பார்த்துட்டு எப்படிம்மா சாப்பிட முடியும்? சாப்பாட்டை பார்த்தாலே குமட்டும். நான் மதிய நேரம் சாப்பிடுறத விட்டு 10 வருஷம் ஆச்சு. எல்லாத்துக்கும் மேல, அப்போதான் டாய்லெட்டை சுத்தம் பண்ணிட்டு வெளிய போயிருப்போம், யாராவது சரியா யூஸ் பண்ணாம போயிருப்பாங்க. அடுத்து வர்றவங்க எங்களைதான் புகார் சொல்லிட்டுப் போவாங்க. ஆனா, ஆபீஸ்ல வேலை செய்யுற எல்லாரும் அப்படி கிடையாது. சிலர், டாய்லெட்டை ரொம்ப சுத்தமா யூஸ் பண்ணுவாங்க. ஆறுதலா பேசிட்டும் போவாங்க" என்று சொல்லும்போதே பூ கட்டுவதை கைகள் நிறுத்தியிருந்தன.

கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஜன்னல்களின் வழியே வெளியே பார்த்தவர், ``என் கஷ்டம் என்னோட போகட்டும்னு என் பசங்கள நல்லா படிக்க வெச்சிட்டேன்ம்மா. ரெண்டு பேரும் டிகிரி முடிச்சிட்டாங்க. தெரிஞ்சவங்ககிட்ட வேலைக்கு கேட்டுருக்கேன். அதுங்க வாழ்க்கை நல்லா இருக்கட்டும்...'' என்று பேசிக்கொண்டே பூக்களை உள்ளங்கையில் வைத்து அழகாகச் சுற்றி டப்பாவில் வைத்துக்கொண்டார். அதற்குள் ஊரப்பாக்கம் வரவே ரயிலில் இருந்து நான் விடைபெற்றேன்.

வெளி வேலைகளை முடித்து அலுவலகம் சென்றதும், கழிவறையைப் பயன்படுத்த நுழைந்தேன். அங்கு ஓர் அக்கா, வாஷ் பேசினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். சுந்தரி அக்கா பேசியது மனதில் ஓடியது. வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு வெளியே வந்தேன். ஹவுஸ் கீப்பிங் செய்துகொண்டிருந்த அக்காவிடம் , `சாப்டீங்களா?’ என்று கேட்டேன். `இன்னும் இல்லடா. இனிமேதான். மணி நாலு ஆச்சு. வீட்டுக்குப் போய் பாத்துக்க வேண்டியதுதான்'என்று முடித்தார்.

கழிப்பறை
கழிப்பறை

மனதில் பலவித நெருடல்கள்... வருத்தப்படுவதில் என்ன பயன் இருக்கிறது... தனிமனித மாற்றத்தால்தான் இவர்களின் வாழ்க்கை மாறும். கழிவறையை எங்கு பயன்படுத்தினாலும் சுத்தமாகப் பயன்படுத்துவது நமது கடமை. கழிவறையை சுத்தம் செய்பவர்களும் மனிதர்கள்தான் என்பதை நினைவில் கொள்வோம்.

மனிதம் மதிப்போம்!