`எங்கு காணினும் சக்தியடா’ என்பதற்கேற்ப எல்லா துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் 2022-ல் உலகில் உள்ள பல பெண்களின் தனித் திறமைகளையும் கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது. 2022-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற பெண்கள் இங்கே!
ஒரு மணி நேரத்தில் 249 கப் டீ…
நாளின் தொடக்கமும், முடிவும் பலருக்கும் டீ இல்லாமல் நிறைவடையாது. ஆனால் அந்த டீயை வைத்தே கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின். ஒரு மணி நேரத்தில், சுமார் 249 கப் டீ தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் அஸ்பாலதஸ் லினேரிஸ் தாவரத்தில் இருந்து, ரூய்போஸ் (Rooibos tea) எனப்படும் ரெட் ஹெர்பல் டீயைத் தேர்ந்தெடுத்து, வெனிலா, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட 3 வகையான சுவையில் டீயைத் தயாரித்து அசத்தியுள்ளார். முந்தைய சாதனையை முறியடிக்க 150 கப் டீயை மட்டும் தயாரித்தால் போதும் என்ற நிலையில், இவரோ 249 கப் டீ தயாரித்தார்.
65 ஆண்டுகளாக ஒரே வேலை...
வேலை என்பது சிலருக்கு சலிப்பூட்டுவதாக இருக்கலாம், வயதாக வயதாக மனம் ஓய்வை நாடலாம். ஆனால், தன்னுடைய பணியின் மீது கொண்ட விருப்பத்தால் 65 ஆண்டுகளாக விமானச் சேவைப் பணியாளராக (flight attendant) பணிபுரிந்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த பெட்டி நாஷ் என்பவரை கின்னஸ் உலக சாதனை அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

`அமெரிக்கன் ஏர்’ரில் நீண்ட காலமாக விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருவதற்காக வயது முதிர்ந்த இவரை அங்கீகரிப்பதாக, கின்னஸ் உலக சாதனைகளைப் பதிவு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
முடியில் ஒரு கிறிஸ்துமஸ் மரம்…
தினமும் வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி, பள்ளி செல்லும் சிறுமிகளும் சரி... அந்தத் தலை முடியை இழுத்து வளைத்து ஒரு சடை பின்னி முடிப்பதற்குள் அப்பாடா என ஆகிவிடும்.

ஆனால், சிரியாவைச் சேர்ந்த டேனி ஹிஸ்வானி என்ற ஹேர் ஸ்டைலிஸ்ட், ஒரு பெண்ணுக்கு 9 அடி 6.5 இன்ச் உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் போன்ற சிகை அலங்காரத்தை செப்டம்பர் 16-ல் செய்துள்ளார். இவ்வளவு உயரமான ஹேர் ஸ்டைல் செய்ததற்காக டேனி ஹிஸ்வானி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகள்…
ஒரு டிகிரியை வாங்குவதற்கே பலரும் படாத பாடுபடும் நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ரெஹனா ஷாஜஹான், கோவிட் தொற்று நேரத்தில் ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகள் முடித்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இவர் `ஜாமியா மில்லியா இஸ்லாமியா' என்ற மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் எம்.காம் நுழைவுத் தேர்வில், 0.5 மதிப்பெண் குறைவாகப் பெற்றதால், அவருக்கு பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சற்றும் மனம் தளராமல், தொலைதூரக் கல்வியில் இரண்டு முதுகலை பயிற்சிகளை ஒரே நேரத்தில் முடித்துள்ளார். ஒரு வருடத்துக்குப் பிறகு ஜாமியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்துள்ளார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் நிதி சார்ந்த ஆன்லைன் படிப்புகளைப் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுத்து, ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
`ஆண்களின் காலணிகளையே அணிவேன்…’
காலணிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், மனதெல்லாம் காலைச் சுற்றிக்கொண்டே இருக்கும். எனவே, சரியான காலணிக்காக பத்துக் கடை ஏறி இறங்கினாலும் சரி என்று இருப்போம். ஆனால், எந்தக் கடையிலும் உங்களுக்கு காலணிகளே கிடைக்கவில்லை என்றால் எப்படி இருக்கும்?
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த தான்யா ஹெர்பர்ட் என்பவர், உலகின் மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இவரின் வலது பாதம் 13.03 அங்குலமுடையது (33.1 செ.மீ), இடது பாதம் 12.79 அங்குலமுடையது (32.5 செ.மீ). அதோடு இவர் உலகின் உயரமான பெண்ணைவிட 3 அங்குலமே உயரம் குறைந்தவர் என, கின்னஸ் உலக சாதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து தான்யா கூறுகையில், ``என் பாதங்கள் 33 செ.மீ நீளமுடையவை. நான் 16, 17 அளவுள்ள ஆண்களின் காலணிகளையும், 18 அளவுள்ள பெண்களின் காலணிகளையும் அணிவேன். நான் 6.9 அடி உயரம்.
ஆச்சர்யமாக, நான் உலகின் மிக உயரமான பெண்ணைவிட 3 இன்ச் மட்டுமே குறைவு. நான் எப்போதும் ஆண்களின் டென்னிஸ் ஷூ மற்றும் லோஃபர்ஸ்களை அணிவேன். கடைகளிலும் எனக்கேற்ற காலணிகள் கிடைப்பதில்லை. என்னுடைய காலணிகளை எப்போதும் ஆன்லைனில்தான் வாங்குவேன். வளரும் போதும் சுற்றியுள்ள அனைவரையும்விட, நானே உயரமானவளாக இருப்பேன்.
என்னுடைய அம்மா 6.5 அடி, அப்பா 6.4 அடி, அதனால் நான் உயரமாய் இருப்பதைவிட வேறு வழியில்லை. என்னுடைய பெற்றோர்கள் எனக்கு மிகப்பெரிய ஆரோக்கியமான தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் நான் உயரமாய் இருப்பது குறித்து எப்போதும் வருந்தியதில்லை.

எனக்கு நினைவிருக்கும் வரை என்னுடைய உயரத்தால், நான் கேலி கிண்டலுக்கு உள்ளானதில்லை; என்னுடைய நண்பர்கள் என்னை நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள். நான் வளர்கையில் எங்கு சென்றாலும், அனைவரும் என்னை நேசித்தார்கள், அன்பு செலுத்தினார்கள். என்னால் முன்னர் நுழைய முடியாத கதவுகள், தற்போது கின்னஸ் சாதனை படைத்ததனால் திறக்கப்படலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் வருடங்களிலும் இன்னும் பல சாதனைகளை பெண்கள் நிகழ்த்த வாழ்த்துகள்!