லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

10 வீலர் ட்ரக்... தினமும் 400 கிமீ - சட்டம் டு சாலை... திசைமாறிய யோகிதா!

யோகிதா
பிரீமியம் ஸ்டோரி
News
யோகிதா

#Motivation

முதல் பெண்கள் எப்போதும் கவனத்துக் குரியவர்கள். யோகிதா ரகுவம்சியும் அப்படித்தான். அவரது கதையைக் கேட்டால் முதல் பெண்களில் முக்கியமானவரும்கூட என்பது விளங்கும். மத்தியப்பிரதேசம் போபாலைச் சேர்ந்த யோகிதா, இந்தியாவின் முதல் பெண் ட்ரக் டிரைவர்.

பரபரப்பான சாலைப் பயணத்தில் பறக்கும் வாகனங்களின் இரைச்சலுக்கிடையில், யோகிதாவின் ட்ரக்கில் மெலிதாக ஒலிக்கிறது ராஜ்கபூரின் இந்திப் பாடல் ‘ஏக் தின் பிக் ஜாயேகா மாட்டி கே மோல்...’ இசையைவிட இனிமையாக இருக்கிறது யோகிதாவின் பேச்சு. மெலிந்த தேகத்துக்கும் மென்குரலுக்கும் செய்யும் வேலையோடு தொடர்பில்லை என்பதற்கு யோகிதாவே சாட்சி.

10 வீலர் ட்ரக்... தினமும் 400 கிமீ - சட்டம் டு சாலை... 
திசைமாறிய யோகிதா!

‘‘நான் ட்ரக் டிரைவர்னா யாருமே நம்ப மாட்டேங்குறாங்க. ஸ்கூட்டிக்கோ, காருக்கோ பங்க்ச்சர் போட வர்ற பெண்களை எதிர் பார்த்துக் காத்திருக்குற மெக்கானிக்குகளுக்கு 10 வீலரோடு பிரமாண்ட வண்டியோட நான் போய் நிற்கிறதைப் பார்க்க கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருக்கும். ஹைவேஸ்ல தாபாவுக்கு சாப்பிட வர்றவங்ககூட நான் டிரைவருடன் வந்திருக்கேன்னுதான் நினைப்பாங்க. அப்புறம் வண்டிக்குள்ள ஏறி உட்கார்ந்து ஸ்டீயரிங்கை பிடிச்சு ஓட்ட ஆரம்பிச்சதும் மிரண்டு போய் ஆச்சர்யமா பார்ப்பாங்க’’

- அதிரடியாக ஆரம்பிக்கும் யோகிதா, அடுத்தடுத்தும் ஆச்சர்யங்களை அடுக்குகிறார்... ‘‘மத்தியப்பிரதேசம் போபால்தான் என் பூர்வீகம். அம்மாவும் அப்பாவும் மகாராஷ்டிராவில் இருக்காங்க. என் அப்பா கிராம பஞ்சாயத்துல இன்ஜினீயர். யாஷிகா, யஷ்வின்னு எனக்கு ரெண்டு பிள்ளைங்க. பொண்ணு படிப்பை முடிச்சிட்டு ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறா. பையன் இப்பதான் காலேஜ் முடிச்சிருக்கான். நான் பி.காம் எல்.எல்.பி முடிச்சிருக்கேன். ‘எல்.எல்.பி முடிச்சிட்டு உனக்கெதுக்கு ட்ரக் ஓட்டுற வேலை...’ - இதானே உங்க அடுத்த கேள்வி... அதுக்கு நீங்க என் கடந்த காலத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்’’ என்றபடி ஃப்ளாஷ்பேக்கினுள் அழைத்துச் செல்கிறார்.

10 வீலர் ட்ரக்... தினமும் 400 கிமீ - சட்டம் டு சாலை... 
திசைமாறிய யோகிதா!

‘‘என் கணவர் ராஜ்பகதூர் ரகுவம்சியும் லா படிச்சவர்தான். கூடவே டிரான்ஸ்போர்ட் பிசினஸும் பார்த்திட்டிருந்தார். அவரும் ட்ரக் ஓட்டுவார். எங்களுடையது பக்கா அரேன்ஜ்டு மேரேஜ். கல்யாணத்துக்குப் பிறகுதான் நான் எல்.எல்.பியே படிச்சேன். என்ன கொடுமைன்னா அவர் இருந்தவரை ஒரு நாள்கூட நான் ஸ்டீயரிங்கைத் தொட்டது இல்லை. ஆனா, இன்னிக்கு அதுதான் எனக்கு சோறு போடுது.

2003-ம் வருஷம், கணவர் ரோடு ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டார். அவர் இருந்த வரை வாழ்க்கை சுமுகமா போயிட்டிருந்தது. அவருடைய திடீர் இழப்புக்குப் பிறகு, ஒரே நாள்ல எல்லாம் நிலைகுலைஞ்சு போச்சு. அவர் இறந்தபோது எனக்கு 33 வயசு. என் மகளுக்கு எட்டு வயசு. மகனுக்கு நாலு வயசு. ஒரே ஒரு ட்ரக்கை தவிர அவர் எதையும் விட்டுட்டுப் போகலை. வாழ்க்கையே சூன்யமா தெரிஞ்சது. போனவர் போனது தான். அழுது புலம்புறதாலயோ, துக்கப்பட்டு முடங்குறதாலயோ அவர் திரும்பி வந்துடப் போறதில்லை. அவர் இறந்த மூணாவது நாள் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். படிச்ச படிப்பு கைகொடுக்கும்னு நினைச்சு, லா பிராக்டிஸ் பண்ணினேன். ஆனா, அதுல வந்த வருமானம் எங்களுக்குப் போதலை.

10 வீலர் ட்ரக்... தினமும் 400 கிமீ - சட்டம் டு சாலை... 
திசைமாறிய யோகிதா!

என் கணவரோட ட்ரக் சும்மாதானே இருக்குனு ஒரு டிரைவரை வேலைக்குப் போட்டேன். ஆறே மாசம்தான், ட்ரக்கை ஹைதராபாத்ல ஒரு வயலுக் குள்ள ஓட்டினதோடு இல்லாம வேலையை விட்டுட்டுப் போயிட்டார். ஒரு மெக்கானிக்கைக் கூட்டிட்டுப் போய் அந்த ட்ரக்கை ரிப்பேர் பண்ணி, மீட்டு எடுத்துட்டு வர எனக்கு நாலு நாளாச்சு. அப்பதான் அந்த முடிவை எடுத்தேன். நானே ஏன் டிரைவராயிடக் கூடாதுங்கிற என் கேள்விக்கு வீட்டுல யாரும் சப்போர்ட் பண்ணலை. என் அப்பாவும் தம்பியும் அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப் படாது, வேண்டாம்னு தடுத்தாங்க. ரெண்டும் சின்ன குழந்தைங்க. வீட்டுல காசுக்கு வேற வழியில்லை. மாமனார், மாமியார்கிட்ட எந்த உதவியும் கேட்கலை. அதனால யார் பேச்சையும் நான் பொருட்படுத்தலை. டிரை விங் கிளாஸுக்கெல்லாம் போகாம, ஒரு டிரைவரை வெச்சு டிரைவிங் கத்துக் கிட்டேன். அதுவரை நான் வேற வண்டிகள் ஓட்டின தில்லை. ஏதோ ஒரு துணிச்சல்ல நேரடியா ட்ரக் ஓட்டப் பழகி ஹெவி மோட்டார் வாகனத்துக்கான லைசென்ஸ் வாங்கினேன். சொந்த வண்டி, டிரைவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம். இந்த ரெண்டு செலவையும் மிச்சப்படுத்தினாலே வீட்டு வறுமையை சமாளிச்சிடலாம்னு தோணுச்சு. போபால்லேருந்து அகமதாபாத்துக்கு போன அந்த முதல் நாள் ட்ரிப்பை இன்னும் மறக்கலை. லோடு ஏத்திக் கிட்டு வண்டியை எடுத்தேன். போக வேண்டிய இடத்துக்கு வழி தெரியாது. எந்த ரோடு எங்கே போகும்னு தெரியாது. விசாரிச்சுகிட்டே போய்ச் சேர்ந்துட்டேன். இன்னிக்கு வரைக்கும் நானும் என் வண்டியும் நிற்காம ஓடிட்டிருக்கோம்’’

- பிரமிக்க வைக்கிறது யோகிதாவின் வாழ்க்கை. லாரி, ட்ரக் டிவைர்களைப் பற்றிய பொதுக் கருத்துகள் நிறைய உண்டு. ஆண்களே அப்படி ஜட்ஜ் செய்யப்படுகிற நிலையில் பெண் ஓட்டுநராக யோகிதாவுக்கும் அப்படிப்பட்ட சவால்கள் அதிகம். மாதாந்தர உடல் அவதி முதல் அசதியில் வரும் குட்டித் தூக்கம் வரை எப்படிச் சமாளிக்கிறார் இவர்?

10 வீலர் ட்ரக்... தினமும் 400 கிமீ - சட்டம் டு சாலை... 
திசைமாறிய யோகிதா!

‘‘நான் ரொம்ப பாசிட்டிவ்வான மனுஷி. எனக்குத் தைரியம் அதிகம். எதையுமே பிரச்னையா பார்க்க மாட்டேன். வந்தா சமாளிச்சிடுவேன். பீரியட்ஸ் டைமுக்கும், டாய்லெட்டுக்கும் பெட்ரோல் பங்க்கும், டோல் பிளாஸாவும் இருக்கும் இடமா பார்த்து வண்டியை நிறுத்துவேன். அசதியா இருந்தாலும் என் வண்டிக்குள்ளேயே குட்டித்தூக்கம் போட்டு எழுந்திருப்பேன். இதுவரை பெருசா எந்தப் பிரச்னையையும் சந்திச்சதில்லை. நைட்டுல வண்டி ஓட்டும்போது பல தடவை ரேடியேட்டர் ஹீட்டாகி பாதி வழியில வண்டி நின்னுருக்கு. அப்பல்லாம் அக்கம்பக்கத்துல உள்ள யார் வீட்டுக் கதவையாவது தட்டி, தண்ணீர் கேட்பேன். என்னை உள்ளே கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து அன்பு செலுத் திட்டு அப்புறம்தான் ரேடியேட்டருக்கு தண்ணீர் கொடுப்பாங்க. அந்த அளவுக்கு என்னைச் சுத்தி நிறைய அன்பு இருக்கு’’

- அன்பால் ஆசீர்வதிக்கப்பட்ட யோகிதா, ஒரு நாளைக்கு 400 கிலோமீட்டர் வரை வண்டி ஓட்டுகிறார். இந்தியாவில் இவரது ட்ரக் நுழையாத மாநிலமே இல்லை.

‘‘ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா... பபிதானு ஒரு பெண்ணுக்கு இப்போ ட்ரக் ஓட்டக் கத்துக் கொடுத்திட்டிருக்கேன். அவளுக்கும் என்னை மாதிரியே குடும்பத்துல கஷ்டம். ரெண்டு, மூணு ட்ரிப்பா அவளையும் என் கூட கூட்டிட்டுப் போய் சொல்லிக்கொடுத்திட்டிருக்கேன். சீக்கிரமே நீங்க அவகிட்டயும் பேசலாம்’’ என்று நிஜமான நல்ல சேதி சொன்னவர், எல்லோருக்குமான இன்னொரு சேதியும் சொல்கிறார்.

‘‘உங்களைப் பத்தி உலகம் என்ன வேணா நினைச் சுட்டுப் போகட்டும். நீங்க உங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்கன்றதுதான் முக்கியம். நான் என்னை நம்பினேன். ‘பொம்பளைக்கு இதெல்லாம் தேவையா... கஷ்டப்படப்போறே...’னு சொன்னவங்களுக்கு முன்னாடி இன்னிக்கு உதாரண மனுஷியா நிற்குறேன். ரோடுதான் எனக்கு ஆசான். எனக்கு தினம் தினம் சவால்களைச் சந்திக்கிறது பிடிக்கும். அந்தச் சவால்கள் தான் என் தன்னம்பிக்கையை அதிகரிக்குதுனு சொல்வேன். முடியாதுங்கிற வார்த்தையில எனக்கு நம்பிக்கையில்லை. முயற்சியில் முதல் அடியை எடுத்து வெச்ச யாரும் முடியாதுனு பின்வாங்க மாட்டாங்க...’’

வானம் வசப்படட்டும் யோகிதா!