Published:Updated:

இளமை இதோ...இதோ...!

உங்களை மெருகேற்றும் மேக்னெட் தொடர்

இளமை இதோ...இதோ...!
இளமை இதோ...இதோ...!

''அக்கானு கூப்பிட்ட குழந்தைங்க... இப்போ சந்தேகமே இல்லாம ஆன்ட்டினு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க!''

- '30 ப்ளஸ்’ பெண்களின் வருத்தம்.

''என்னதான் உடம்பை ஃபிட்டா வெச்சுக்கிட்டாலும், இந்த நரை முடியும், சுருக்கம், வறட்சினு சருமமும் வயசைக் காட்டிக் கொடுத்துடுது!''

- 40 ப்ளஸ் பெண்களின் ஆற்றாமை.

''எங்க பாட்டியெல்லாம் 60 வயசுலயும் அழகா இருந்தாங்க. என் பேரப்புள்ளைங்களோ இப்போவே என்னைக் 'கிழவி’னு கேலி பண்ணுதுங்க!''

- 50 ப்ளஸ் பெண்களின் கவலை.

ஆம்... தாங்கள் வளர வளர பெண்களுக்கு தங்கள் வயதைப் பற்றிய கவலையும் வளர்கிறது. 'இப்படியே நீளாதா..?’ என்று தங்கள் இளமையை தக்க வைத்துக்கொள்ள, அவர்கள் மனம் ஏங்குகிறது. க்ரீம்களிலும், ஹேர் டைகளிலும் அதை சாத்தியப்படுத்தும் நம்பிக்கையில், மெனக்கெடுகிறார்கள் பெண்கள்!

''கவலையே வேண்டாம். பெண்களோட அழகுக்கு வயது ஃபுல்ஸ்டாப் வைக்க முடியாது. வயது ஏற ஏற, நம் அழகிலும், ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொண்டோம் என்றால், சிக்ஸ்டியிலும் நாம் பியூட்டிதான்!''

இளமை இதோ...இதோ...!

- வார்த்தைகளுடன் புன்னகை கோத்துச் சொல்கிறார் சென்னையின் பிரபல 'வயது நிர்ணய நிர்வாக நிபுணர்' டாக்டர் கௌசல்யா நாதன்.

'' இளமை வரம் 'அவள்’ வாசகிகளுக்கு கிடைப்பதற்கான தவத்தை... நான் சொல்லிக் கொடுக்கிறேன்!'' என உற்சாகத்துடன் இந்த 'இளமை இதோ... இதோ..!’ தொடருக்குப் பொறுப்பேற்றிருக்கும் கௌசல்யா, இனி உங்களுடன்...

'' வயது நிர்ணய நிர்வாக நிபுணர் என்று போர்டு மாட்டி அமர்ந்திருக்கும் நான், இந்த வயதிலேயே தளர்ந்துபோய் உட்கார்ந்து கொண்டு, என்னிடம் வரும் பேஷன்ட்களுக்கு அட்வைஸ் கொடுத்தால், அதை அவர்கள் எவ்வளவு தூரம் நம்புவார்கள்..? நாம் சொல்வதில் நம்பிக்கை வரவேண்டும் என்றால், நாமே அதுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். நான் உதாரணமாக இருக்கிறேன்தானே..?! ஆனால், என் இந்த இளமை திட்டமிட்டு அதிரடியாக ஏற்படுத்திக் கொண்டது அல்ல.

சிறு வயதில் இருந்தே நான் கடைப்பிடித்து வருகிற பல்வேறு பழக்கங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். அதேபோல்... வயது என்பது உடம்பை மட்டும் பொறுத்த விஷயமில்ல... மனசையும் சார்ந்தது. நேர்மறை எண்ணங்களும், தன்னம்பிக்கையும்தான் ஒரு பொண்ணுக்கு முதல் அழகு!

உங்கள் இளமையைப் பேணிப் பாதுகாக்கும் வழிமுறைகளை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..?! உடற்பயிற்சிக் கூடம்..? அழகுக்கலை நிலையங்கள்..? மருத்துவ ஆலோசனைகள்..? இவை எதுவும் இல்லை. உங்கள் வீட்டுக் கிச்சனில் இருந்தே, அவை துவங்குகின்றன.

உங்களின் உணவுப் பழக்கமே... உங்கள் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் வேர். அதில் கவனமாக இருந்தாலே, உங்கள் இளமைக்கு எந்தச் சிரமங்களும் இருக்காது. முக்கியமாக, 'எமோஷனல் ஈட்டிங்’, அதாவது யார் மேலாவது இருக்கிற கோபத்தைக்காட்ட அதிகமாகச் சாப்பிடுவது, வீணாகிவிடுமென்று மீந்து போன சாப்பாட்டை எல்லாம் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது... இதெல்லாம் கூடாது. மாறாக, ஆரோக்கியமான, சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தது, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, யோகா... நீங்கள் கட்டியெழுப்பி இருக்கும் உங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் உருக்குலையாமல் காக்கும் கவசம்தான் இவை. தினமும் அல்லது வாரத்துக்கு குறைந்தது மூன்று நாட்களாவது இவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

தினமும் சரியான நேரத்தில் எழுந்து, உறங்கி என... அன்றாட அட்டவணை நேர்த்தியாக இருப்பதுடன், இந்த உடற்பயிற்சிகளும் கைகோத்தால்... '30 வயசுலயே இப்படி ஆயிட்டியே..!’ என்று பிறர் கேட்கும் அளவுக்கு உங்கள் வயதும் இளமையும் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடாது.

இறுதியாக, முகத்துக்கு, கேசத்துக்கு என்று வெளிப்புறக் காரணிகளும் அவசியம்தான். ஆனால், கெமிக்கல்களில் கரைந்துவிடாமல், அதில் கவனம் தேவை.

பொதுவாக, நம் நாட்டில் 60% பெண்கள் திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலும் தங்கள் மேல் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வது இல்லை. அதனாலேயே அவர்களுக்கு முன்கூட்டியே வயது முதிர்ந்த தோற்றம் வந்துவிடுகிறது. இதை 'ப்ரீ மெச்சூர் ஏஜிங்’ என்பார்கள்.

வீட்டில் எவ்வளவு வேலை இருந்தாலும், சரி வாரத்தில் மூன்று நாளாவது, குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது, ஒவ்வொரு வயதினரும் தங்களின் இளமையைப் பாதுக்காக, தனக்காகச் சில விஷயங்களைச் செய்துகொள்ள வேண்டும்.

என்ன எல்லாம் செய்ய வேண்டும்.?!

- இளமை வளரும்...

இளமை இதோ...இதோ...!
அடுத்த கட்டுரைக்கு