17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டின் `உலக அழகி' என மகுடம் சூட்டியுள்ளார் மனுஷி சில்லர். பலர் பெருமிதம்கொள்ளும் இந்த வேளையில், சிலர் `உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதன் பின்னால் உலகமயமாக்கலின் சந்தை நோக்கம் இருக்கிறது' என்றும் விமர்சிக்கிறார்கள். பல விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், `உலக அழகி'ப் போட்டி தொடங்கியதன் நோக்கமும், அதனால் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றமும் பற்றிப் பார்ப்போமா?
முதன்முதலில் `உலக அழகி' எனும் சர்வதேச அலங்கார அணிவகுப்பு, 1951-ம் ஆண்டில் எரிக் மோர்லி என்பவரால் லண்டனில் தொடங்கப்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற `பிரிட்டன் திருவிழா' எனும் மாபெரும் கண்காட்சியைக் காண, பல்வேறு தேசங்களிலிருந்து மக்கள் திரண்டனர். இந்தத் திருவிழாவின் ஓர் அங்கமாக `நீச்சல் உடைப் போட்டி' மோர்லியால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு மிகவும் பிரபலமானதால், ஊடகங்கள் இதை `மிஸ் வேர்ல்டு' எனக் குறிப்பிட ஆரம்பித்தனர். பின்னாளில் மோர்லி, `உலக அழகி' எனும் சொல்லையே அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதில் பங்குபெற்று வென்ற கெர்ஸ்டின் ஹகான்சன் (Kerstin Hakansson), தான் அணிந்திருந்த நீச்சல் உடையிலேயே கிரீடத்தைச் சூட்டிக்கொண்டது மேலும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்தப் போட்டியின் கரு `பிகினி' (bikini) எனும் நீச்சல் உடையை அறிமுகம்செய்து, அதன் விற்பனையை மேம்படுத்துவதே. இது, தனது பொருள்களை விற்பதற்காக மோர்லி சந்தைப்படுத்திய உத்தி.
இதைத் தொடர்ந்து மோர்லி ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக `உலக அழகி'ப் போட்டியை அறிவித்தார். தற்போது எளிதாகிவிட்ட அரை நிர்வாண உடைகளை மக்களால் ஏற்கப்படாத காலகட்டத்தில் `பிகினி' அறிமுகப்படுத்தியதால், `தங்களின் பாரம்பர்யத்துக்கு மாறாக உள்ளது' என பல நாடுகளிலிருந்து எதிர்ப்பு வந்தவண்ணம் இருந்தது. இதனால் 1976-ம் ஆண்டு முதல், அழகிகளுக்கு மகுடம் சூடும் நேரத்தில் `ஈவினிங் கவுன்' அணியப்பட்டது. நாளடைவில் இதற்கென சங்கம் அமைக்கப்பட்டு, பல போட்டிகள் வைத்து, அதற்காக அதிக ஆதரவாளர்களைத் திரட்டுவது உலகின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது.
இதில் பங்குபெறுவதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன. உடல் எடை, வயது, உடல் அங்கங்களின் அளவு, எலும்புகளின் நீளம், நடை, உடை என இவை அனைத்துக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. தனித்திறமை மற்றும் அறிவாற்றலைச் சோதிக்கும் போட்டிகள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. மற்றொரு மிக முக்கியமான விதிமுறை, திருமணம் ஆகியிருந்தால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தடா. அதேபோல் ஒரு நாட்டிலிருந்து ஒரு போட்டியாளர் மட்டுமே பங்குபெற முடியும். இவை அனைத்தும் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றதால், `கார்ப்பரேட்'களின் ஆதிக்கமும் அதிகரித்தது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைவைத்து தங்களின் பொருள்களை சந்தைப்படுத்தும் முறை ஒரு வணிகத் தந்திரம்தான்.
நம் முன்னோர்கள் காலத்தில் அழகு சாதனப் பொருள்கள் ஏதுமில்லை. `கறுப்பு' என்பது நமக்கே உரித்தான நிறம். அந்த அடையாளத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அழகு சாதனப் பொருள்களுக்காக எடுக்கப்படும் விளம்பரங்களைப் பற்றி என்றைக்காவது நாம் சிந்தித்ததுண்டா? கறுப்பாக இருந்ததால் தோல்விகளை மட்டும் சந்திக்கும் விளம்பரத்தில் வரும் தோழி / தோழன், அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தியப் பிறகு வெளிர் நிறம் பெற்று நடப்பவை யாவும் `சக்சஸ்' எனக் காட்சிப்படுத்துவது நம் இனத்தை அவமதிப்பதுப்போல உள்ளதல்லவா.
அழகு என்பது, நிறத்திலோ உடையிலோ இல்லை. நாம் செய்யும் செயலில் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டாலே, இதுபோல் கார்ப்பரேட் சூழ்ச்சிகளுக்கு இரையாக மாட்டோம். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என சந்தையில் உலாவந்த அழகு சாதனப் பொருள்கள், தற்போது பன்மடங்காகியுள்ளன. இதற்குக் காரணம் நாம்தான்!