Published:Updated:

ராஜா வீட்டுக் கல்யாணம்!

ராஜா வீட்டுக் கல்யாணம்!

'என் பிள்ளை கல்யாணத்தை ஒரு ராஜா வீட்டுக் கல்யாணத்தை போல் நடத்துவேன்!’ என பெற்றோர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே ஒரு ராஜாவின் வீட்டுக் கல்யாணம் எப்படி நடக்கும்..? பண்டைய இந்தியாவின் இறுதி காலகட்டமான கி.பி 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தது 'வர்தனா’ வம்சம். இந்த வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர் ஹர்ஷர். இவரது வாழ்க்கை சரிதத்தை விவரிப்பது 'ஹர்ஷ சரிதா’. இதை அம்மன்னரின் அவைப்புலவராக இருந்த பாணபட்டர் சம்ஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இவர் மூலம் ஹர்ஷரின் தங்கையான ராஜ்யஸ்ரீயின் திருமண நிகழ்வுகளை உங்களுக்குப் படம் பிடிக்கிறேன். 

மன்னர் பிரபாகரவர்தனாவுக்கு, ராஜ்யவர்தனா, ஹர்ஷவர்தனா என இரு மகன்களும் ராஜ்யஸ்ரீ என ஒரு மகளும் இருந்தனர். இளவரசி ராஜ்யஸ்ரீக்கு, மௌகாரி அரசகுலத்தை சேர்ந்த அவந்திவர்மனின் மகனான கிரகவர்மனை மணமுடிக்க முடிவெடுக்கிறார் மன்னர். ஒரு முகூர்த்த நாளில் உற்றார், உறவினரைக் கூட்டி நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. பாணபட்டர், திருமணத்தை முன்னிட்டு அரண்மனையில் மேற்கொள்ளப்பட்ட ஐம்பது நிகழ்வுகளை ஆழமாகவும், மிக அழகாகவும் விவரிக்கிறார். அதில், முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

திருமணநாள் நெருங்க, நெருங்க அரண்மனையில் கல்யாணக்களை கட்டுகிறது. அழைக்கப்பட்ட உறவினர்கள் வந்து குவிகின்றனர். இவர்களைக் கவனிக்க அமர்த்தப்பட்ட பணியாட்கள், பணிவிடையில் திணறுகின்றனர். பல்வேறு மன்னர்களின் தூதுவர்கள் கொண்டு வரும் பரிசுப் பொருட்களை தக்க மரியாதையுடன் பெற்று பத்திரப்படுத்துகிறார் அரண்மனையின் மூத்த அதிகாரி. நெய், எண்ணெய், சர்க்கரை, கோதுமை மாவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கிராமங்களிலிருந்து பெற்று வர, அரசு அதிகாரிகளுக்கு ஆணைகள் பறக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் திறமையான கலைஞர்கள் முறையாக அழைக்கப்பட்டனர். தோல் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் 'மது’ ஸ்பெஷலாக விநியோகிக்கப்பட, அவர்களின் தாரை, தப்பட்டைகளின் ஒலி விண்னை முட்டுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராஜா வீட்டுக் கல்யாணம்!

உரல், உலக்கை, அம்மி, குழவி போன்ற கல் அரவை சாதனங்கள் உட்பட பல்வேறு வகையான சமையல் சாதனங்கள் மீது அரிசி மாவில் நனைத்த 'கை’ அச்சுகளாகப் பதிக்கப்பட்டன. இந்தச் சடங்கு இன்றும் நம் நாட்டின் பல பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருமண சடங்குகளின் முக்கிய தெய்வமாகக் கருதப்பட்ட இந்திராணி சிலை ஒரு அறையில் வைக்கப்படுகிறது. அதே அறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாடகர்களின் கூட்டமும் தங்குகிறது. அரண்மனை கட்டடக் கலைஞர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு வெள்ளை மலர்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆடை ஆபரணங்கள் கொடுத்து மரியாதை நடக்கிறது. அவர்கள் பின்னர் திருமண மேடையின் நிழற்பட தயாரிப்பில் இறங்குகின்றனர்.

மாளிகை, கோபுரம், நாட்டின் வாயிற் கதவுகள், சுற்றுச்சுவர்கள் என அனைத்தும் வெள்ளையடிக்கப்பட்டு அவற்றின் மீது சுபசின்னங்கள் வரையப்படுகின்றன. அரண்மனைக்குள் வருவோர், போவோரின் பாதங்களைக் கழுவ நறுமண நீரூற்றுகள் செயல்படுத்தப்பட்டன. அரண்மனையின் அத்தனை குளங் களிலும், வாசனை ஏற்றப்பட்ட நீர் நிரப்பப்பட்டது. அரண்மனையின் தரை பாலீஷ் செய்யப்பட்டது. திருமண மண்ட பத்தில் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் எழுப்பப்பட்டன. அரிசி மாவினாலான கை உருவ பதிப்புகள், சிவப்பு அரக்கி னால் அலங்கரிக்கப்பட்ட துணி மற் றும் மாவிலையுடன் அசோகமர இலைகளும் தூண்களில் தோரணமாக அலங்கரிக்கப்பட்டன.

அரண்மனைபுகு மண்டபத்தின் முதல் அறையில் கொல்லர்களின் ஓசை காதை அடைத்தது. காரணம், அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் தங்க நகைகளையும், பாத்திரங்களையும் செய்துகொண்டிருந்தனர். ஒருபுறம் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்த ஜோதிடர்கள், திருமண சடங்குகளுக்கான முகூர்த்த காலநேரத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்தனர்.

சிற்றரசர்களின் ராணிமார்களும், மற்ற உயர்குடியில் பிறந்த அழகான பெண்களும் தங்கள் ஆடை, ஆபரணங்களால் மேலும் அழகூட்டப்பட்டு, நெற்றியில் இடப்பட்ட குங்குமத்துடன் காட்சியளித்தனர். இவர்கள் அதிகாலையிலேயே அரண்மனைக்கு வந்து தங்களை பற்பல மணவேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டனர். வெண்நிறம் ஏற்றப்பட்ட மட்பாண்டங்கள் மீது மாதர்கள் பல ஓவியங்களைத் தீட்டினர். இந்த மட்பாண்டங்களில்தான் பெண்வீட்டுச் சீதனப் பொருட்கள், முக்கியமாக உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இந்த வழக்கம் வட மாநிலங்களின் சில பகுதிகளில் இன்றும் நிலவுகிறது.

மூங்கில் கூடைகளை பலவண்ணம் ஏற்றிய பருத்தியால் அலங்கரிக்கும் பணி நடைபெறுகிறது. மூங்கில் குச்சிகளில் பூ கோத்தல், கம்பளி இழைகளுக்கு சாயம் ஏற்றுதலும் தொடர்கிறது. இப்படிப்பட்ட வண்ணமிகு கூடைகளில்தான் மணமக்களையும், காதுகுத்துதல் விழாவின் போது குழந்தைகளையும் அமர வைக்கும் பழக்கம் இன்றும் உபி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ளது. எலுமிச்சைச் சாறு, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் சேர்த்து ஒருவகையான வாசனை பூச்சு தயாரிக்கப்பட்டு மணமக்களின் உடல் முழுவதும் பூசப்படும். இது போன்ற ஒரு பூச்சை 'சிக்சா’ என அழைக்கும் தென் இந்திய முஸ்லிம்கள் இன்றும் மணமக்களுக்கு மணமான ஐந்து வெள்ளிக்கிழமைகள் வரை பூசுகின்றனர். திருமணத்துக்கு ஐந்தாறு நாட்களுக்கு முன்னதாக துவங்கப்படும் இந்தச் சடங்கை 'மஞ்சள் ஏற்றுதல்’ என வட மாநிலங்களிலும், 'நலுங்கு வைப்பது’ என தென் மாநிலங்களிலும் கூறி செய்து வருகிறோம்.

''அரண்மனையின் ஒருபுறம் பலவகை திருமண ஆடைகள் தயாரிக்கப்பட்டன. நூல், சீனத்துப்பட்டு உட்பட பலவகையான பட்டுத்துணிகள், துணிகளுக்கு நிறம் ஏற்றுதல், டிசைன்கள் வரைதல், முத்து மற்றும் மாணிக்க கற்கள் கொண்டு வடிவமைத்தல் போன்ற பலகட்ட பணிகள் நடந்தன. இன்றைய ஷாமியானா போல் மணப்பந்தலின் மேற்கூரையை 'ஸ்தவரகா’ எனும் மிக விலை உயர்ந்த துணியால் அமைத்திருந்தனர். இது ஈரானில் தயாரிக்கப்பட்ட மிக தடிமனான உயர்தர பட்டுத்துணி. துணியில் முத்தாலும், மரகதக் கற்களாலும் வடிவமைக்கப்பட்டு நீள் பாவாடை அணிந்த பெண்களையும் இதே அலங்காரங்களுடன் முழுக்கை சட்டை அணிந்த ஆண்களையும் கி.பி மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டின் குப்தர்கால சிலைகளில் பார்க்கலாம்.  

மகாராணியே ஆனாலும் மகளின் திருமணம் எனில் தலைசுற்றும் அளவுக்குப் பணி இருக்கத்தான் செய்தது. இதைத்தான் பாணபட்டர், ’மகாராணி யசோவதி பல அவதாரங்களை எடுத்து திருமண வேலைகளை மேற்பார்வையிட்டார்’ என வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். மன்னன் பிரபாகரவர்தன் தனது பங்குக்கு, மருமகனை மகிழ்விக்க தேவையான பரிசுப் பொருட்களையும், தனிப்பயிற்சி பெற்ற அரேபிய ஒட்டகப் பரிவாரத்தையும் அனுப்பி வைத்தார். ஒருவழியாக திருமண நாளும் வந்து சேர்ந்தது.

மணமகன் ஊர்வலம் துவங்கிவிட்டது. கையில் ஏந்திய செந்நிற சாமரங்களை வீசியபடி காலாட்படையினர் ஊர்வலத்தை முன்நடத்தினர். இதைத் தொடர்ந்தது குதிரைப்படை, அதன் பின் அலங்கரிக்கப்பட்ட யானைப்படை. இந்த யானைகளின் மீது வண்ண வண்ண உயர்தர ஆடைகள் போர்த்தப்பட்டிருந்தன. அடிக்கடி அழகாக அசையும் யானைகளின் காதுகளில் விசிறிகள் இதமான காற்றுக்காக மாட்டப்பட்

டிருந்தன. தலையில் நட்சத்திர மாலை அணிவிக்கப்பட்ட பெண் யானையின் மீதான பல்லக்கில் மணமகன் கிரகவர் மன் அமர்ந்து ஊர்வலம் வந்தான். இனிமையான பாடல்களைப் பாடிக்கொண்டும், கைதட்டி தாளம் இசைத்தும் பாடகர் படை ஒன்று மணமகனின் யானை முன் சென்றுகொண்டிருந்தது.

ஊர்வலம் அரண்மனை வாயிலை எட்டியதும் மன்னரும் அவருடைய மகன்கள் மற்றும் பரிவாரங்களும் நடந்து வந்து காத்திருந்தனர். யானைப் பல்லக்கில் இருந்து மணமகன் இறங்கியதும், மன்னர் நீட்டிய தன் இருகரங்களால் அன்புடன் அணைத்துக்கொண்டார். பின்னர் கிரகவர்மன் தனது இரு மைத்துனர்களையும் அணைத்துக்கொண்டார். கிரகவர்மனை மன்னர் கைப்பிடித்து மாளிகைக்குள் இட்டுச் சென்றார். தனக்குசமமான ஒரு ஆசனைத்தையும் பரிவாரங்களுடன் கொடுத்து மருமகனை மரியாதை படுத்தினார்.

கிரகவர்மன் மணப்பெண்னை நோட்டம் பார்த்தார். ராஜ்யஸ்ரீ  காதில் அணிந்திருந்த மரகதப்பதக்கம் கொண்ட முத்தாலான காதணியும், அவள் தலையின் மீது போர்த்தப்பட்டிருந்த 'அம்சுகா’ எனும் உயர்தர செந்நிற பட்டுத்துணியும் முகத்தை முழுமையாக பார்க்காதபடி கிரகவர்மனுக்கு தொல்லை தந்தன. மணமகன் செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளும் நடைபெற்றன. பின்னர், மணமகளின் கைப்பிடித்து திருமண மண்டபத்தை விட்டு வெளியே வந்தார் கிரகவர்மன். அங்கு வெந்நிற மேடை ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் திருமண அழைப்பை ஏற்ற பலநாட்டு மன்னர்கள் குழுமி இருந்தனர். அந்த மேடையின் மையத்

தில் இருந்த நெருப்பை இருவரும் வலம் வர அட்சதை தூவப்படுகிறது. ராஜ்யஸ்ரீயின் கன்னங்களில் கண்ணீர் துளிகள் உருண்டோட, குழுமியிருந்த பெண்கள் அனைவரின் கண்களிலும் நீர் எட்டிப் பார்க்க, மணமக்கள் தங்களது பெற்றோரின் ஆசி பெற்று முதலிரவு அறைக்குள் நுழைகின்றனர். அந்தக்கால அரண்மனை திருமணத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் பாணபட்டர்.

இளவரசி திருமணமே ஆனாலும், பெற்றோரை பிரியும் மணப்பெண்ணின் விழிகள் மழைபொழியத்தானே செய்யும்!

டாக்டர் எஸ்.சாந்தினிபீ

ஓவியம்: சங்கர்லீ

ராஜா வீட்டுக் கல்யாணம்!

க்கட்டுரையை எழுதியிருக்கும் எஸ்.சாந்தினிபீ முனைவர் பட்டம் பெற்றவர். இவர், உத்தரப்பிரதேத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர். பண்டைய வரலாறு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளைப் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ள இவர், ஒரு தமிழர்.