Published:Updated:

செல்வி டு திருமதி டு அம்மா ...

படம்: அஷோக் அர்ஸ்

''திருமண நாள் நெருங்க நெருங்க, பார்லர், ஜிம், ஃப்ரூட் ஜூஸ் என்று தங்களை மெருகேற்றும் பெண்கள், திருமணத்துக்குப் பின் அதையெல்லாம் அடியோடு மறந்துவிடுவார்கள். ஆனால், கல்யாணத்துக்குப் பின்னும் கணவரின் ரொமான்ஸ் குறையாமல் இருக்க அதே அழகுடன் இருக்க வேண்டும் என்பதுடன், அம்மாவாகப் போகும் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்!'' என்று வலியுறுத்தும் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன், டாக்டர் ஷைனி, அதற்கான ஆலோசனைகள் தந்தார்! 

புதுப்பெண் திருமணத்துக்குப் பின் பொலிவிழப்பது ஏன்?

''திருமணமான சில வாரங்களில் புதுப்பெண் பொலிவு குறைவதற்கான காரணங்கள் இவைதான்... பொதுவாக, ஹனிமூன் செல்லும் தம்பதிகள் தேர்ந்தெடுப்பது குளிர்ப்பிரதேசங்களாக இருக்கும் என்பதால், அது சருமத்தை வறட்சியாக்கி கருக்கச் செய்யும். திருமணத்துக்கு அடுத்து வரும் நாட்களில் விருந்து என்னும் பெயரில் அதிகமாக உண்பது, இனிப்பு வகைகள் அதிகம் எடுத்துக்கொள்வது, சூழல் மாற்றம்... இவையெல்லாம் உடல் எடையைக் கூட்டும் காரணிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருமதி ஆன பின்னும் 'ஸ்லிம்மி’யாகவே இருக்க..!

'நானும் கல்யாணத்தப்போ இப்படித்தான் ஸ்லிம் பியூட்டியா இருந்தேன். ஒரே வருஷத்துல குண்டு ஆன்ட்டியா ஆயிட்டேன். நீயும் பாரு வெயிட் போட்டுருவ..!’ என்று ஆன்ட்டிகள் பயமுறுத்துகிறார்களா? சொல்லப்போனால், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதிகமான பெண்கள் எடை அதிகரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதைத் தவிர்க்கலாம்... சில முயற்சிகளின் மூலம்! வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது, 30  45 நிமிடங்கள் வரை கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யுங்கள். காலை எழுந்ததும் யோகா செய்யலாம், அல்லது வாக்கிங் போகலாம். காலை உணவை படுக்கையை விட்டு எழுந்த 2 மணி நேரத்துக்குள் முடித்துவிடுங்கள். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் குறைந்தது 4 மணி நேரம்தான் இடைவெளி இருக்க வேண்டும். இரவு உணவை 7  9 மணிக்குள், அதாவது உறங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே முடித்து விடுங்கள்.

இதையெல்லாம் செய்தால், ஆன்ட்டி ஆக வேண்டாம்... ’ஸ்லிம்மி’யாகவே இருக்கலாம்!

செல்வி டு திருமதி டு அம்மா ...

முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்காதீர்கள்..!

'கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய சாப்பிடணும்’ என்ற அறிவுரைகளை எல்லாம் நம்பாதீர்கள். அதிகமாக வேண்டாம், சத்தாகச் சாப்பிடுவதுதான் முக்கியம். முட்டை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதற்காக சிலர் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து, இரண்டு வெள்ளைக் கருக்களை சாப்பிடுவார்கள். மஞ்சள் கருவில்தான் பயோடின் என்னும் முடிவளர்ச்சிக்கான சத்துக்கள் கிடைக்கும். வெறும் வெள்ளைக் கருவை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் முடி உதிர்வதுடன் விரைவில் நரைத்தும்விடும். எனவே, அளவாக முட்டை சாப்பிடுங்கள்; மஞ்சள் கருவுடன் சேர்த்தே சாப்பிடுங்கள்.

குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கும் புதுமணப்பெண்ணுக்கு..!

மனைவியில் இருந்து அம்மா ஸ்தானத்துக்கு உயரும்போது, உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வேண்டுமல்லவா? வாரத்தில் இரண்டு நாட்கள் கீரை வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை சாப்பிடுங்கள். அசைவப் பிரியர்கள் மட்டன் அல்லது மீன் வகைகளை வாரத்துக்கு இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள். மதிய உணவில் சாதம், காய்கறிகளை 1:2 என்னும் விகிதத்தில் சாப்பிடுங்கள். காய்கறிகளை எண்ணையில் பொரிக்காமல் கூட்டு, பொரியலாகச் சாப்பிடுங்கள். தினமும் முளைகட்டிய பயறு சாப்பிடுவது, கருமுட்டையின் ஆரோக்கியத்துக்கு உதவும். ஆப்பிள், பேரிக்காய், பாதாம் மற்றும் பிளாஸி சீட் பவுடர் கலந்த ஜூஸ் அருந்தலாம்!''

அவசியமான ஆலோசனைகளை அக்கறையுடன் சொல்லிமுடித்தார் ஷைனி! செல்வி டு திருமதி டு அம்மா... எல்லா நிலைகளிலும் அழகையும் ஆரோக்கியத்தையும் வசப்படுத்துங்கள்!

திருமணமான பெண்கள் தினமும் 20 நிமிடங்களாவது தங்கள் சருமத்துக்கும் கூந்தலுக்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம். இதற்காக அடிக்கடி பார்லர் செல்ல வேண்டியதில்லை மாறாக, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே நமது அழகைப் பராமரிக்கலாம், என அதற்கான டிப்ஸ்களை வழங்குகிறார் ’தி விசிபிள் டிஃபரன்ஸ்’ பியூட்டி சலூனின் உரிமையாளர் வசுந்த்ரா.

செல்வி டு திருமதி டு அம்மா ...

வெயிலால் கருத்த உடலுக்கு...

கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சைப் பயறு மாவு இந்த இரண்டையும் தண்ணீரில் அல்லது தயிரில் கலந்து உடல் முழுக்க தேய்த்து 10 நிமிடத்துக்குப் பிறகு குளித்தால் உடல் கருமை நீங்கும்.

பாடி ஸ்க்ரப்!

சர்க்கரை மற்றும் தேனை  1:2 என்னும் விகிதத்தில் கலந்து கொண்டு உடல் முழுக்க வாரம் இருமுறை தேய்த்து வந்தால் உடல்பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

மில்க் பாத் !

குளித்து முடித்ததும், ஒரு பக்கெட் தண்ணீரில் 1 கப் காய்ச்சாத பால் கலந்து குளித்து வந்தால், உடல் முழுக்க கிரீம் தடவியது போல வழவழப்பாக இருக்கும்.

சருமம், கூந்தல் பளபளக்க..!  

பாதாம் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சற்று வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும் .

அதை தலை மூடியிலும், உச்சந்தலை யிலும் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பிறகு அரைத்த வெந்தய விழுதைக் கொண்டு தலையை நன்றாக  தேய்த்து  அலசவும். இப்படி வாரம் ஒரு முறையாவது  செய்தால் பொடுகு நீங்கி, கூந்தல் பளபளக்கும்.

பாதாம் எண்ணெயை உடல் முழுக்க தேய்த்து 20 நிமிடத்துக்கு ஊறவிடவும். பிறகு கடலை மாவினால் உடலை மசாஜ் செய்து குளிக்கவும்.

எண்ணெய்க் குளியல்!

அரிசி, வெந்தயம், கருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை தலா 10 கிராம் எடுத்துகொண்டு, கடாயில் மிதமான சூட்டில் வறுத்து, 20 மில்லி தூய தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு சீயக்காய் அல்லது மிருதுவான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இதை வாரம் இரண்டு முறை செய்யவும்.

ஹேர் பேக்!

ஆம்லா பவுடர், செம்பருத்தி இலை, செம்பருத்தி பொடி மற்றும் கறிவேப்பிலை தலா 100 கிராம் எடுத்து, சுடுநீரில் 15 நிமிடம் ஊறவைத்து, அத்துடன் ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை தலையில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு அலசவும்.

பலன்கள்: முடி கருமையாகும்; முடி உதிர்வதை தடுக்கும் .

கண்களுக்கு குளுகுளு பேக்!

வெள்ளரிக்காய் மற்றும் தோல் சீவிய உருளைக்கிழங்கு சம அளவு எடுத்து அரைத்து அதில் பஞ்சை நினைத்து கண்களில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் கருமை நீங்கி, பிரகாசமாக  இருக்கும். கண்களின் கருவளையத்தை கவனிக்கத் தவறினால் அது நாளடைவில் இன்னும் கருமையாக்கும்; அதை அகற்றுவது மிகவும் சிரமம். கண்களின் ஆரோக்கியத்துக்கு 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம் .

ஃப்ளவர் பேக்!

காய்ந்த ரோஜா, மல்லிகை மற்றும் சாமந்தி பூக்களை சம அளவு எடுத்து  நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியை தேவையான அளவு எடுத்து 2 ஸ்பூன் பாலுடன் கலந்து முகம் கழுத்து முழுக்க பூசி, காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

பலன்கள்: வாரம் ஒரு முறை செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளி மறையும்..

ஃப்ரூட் பேக்!

பேண்டேஜ் துணியை ஈரத்தில் நனைத்து முகத்தில் போர்த்தியது போல வைக்கவும். ஒரு ஆப்பிளை வேகவைத்து தோல்நீக்கி மைபோல் அரைத்துக்கொள்ளவும். அதை முகத்தில் பரப்பிய பேண்டேஜ் துணி மீது பூசவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, பழுத்த பப்பாளியை அரைத்து அதன் மீது பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரால் கழுவவும். இது சருமத்தை பளபளப்பாகுவதுடன் சிறந்த ஊட்டத்தையும் அளிக்கும்.

சிந்தூரி