Published:Updated:

வெடிங் பிளானர்ஸ் !

வெடிங் பிளானர்ஸ் !

'கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்!’ என்று இந்த இரண்டு வேலைகளையுமே மிகப்பெரிய மலைப்பான விஷயங் களாகப் பேசிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. ''எத்தனை கல்யாணம் பண்ணணும், சொல் லுங்க? விரல் சொடுக்கும் நேரத்தில் விறுவிறுவென வேலையை ஆரம்பிச்சுப் பார்த்து, ஜாம்ஜாம்னு முடிச்சிடலாம்!'' என்று வரிந்துகட்டிக்கொண்டு தயாராக நிற்கிறார்கள் 'வெடிங் பிளானர்ஸ்’ என்று அழைக்கப்படும் திருமணத்தை திட்டமிட்டு நடத்தும் ஏற்பாட்டாளர்கள். 

''பல கல்யாணங்களில் முக்கியமான சடங்குகளின்போது அதைப் பார்த்து ரசிக்க முடியாமல் ஏதாவது வேலையாக ஓடிக்கொண்டிருப்பார்கள் பெற்றோர்கள். எங்ககிட்ட வேலையை ஒப்படைச்சிட்டா, பிள்ளையைப் பெத்தவங்க எந்தக் கவலையும் இல்லாம, ஜம்முனு உக்காந்து, பிள்ளையின் கல்யாணத்தை ரசிக்கலாம்!'' என்று சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள், சென்னையின் பிரபல 'எபிக் வெடிங் பிளானர்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் உதயகுமார்  சித்ரா தம்பதி. மற்றவர்கள் எல்லோரும் தனிமனிதராகவோ, ஒரு சிறு குழுவாகவோ திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க... இதற்கென்றே நூற்றுக்கணக்கில் ஊழியர்களை அமர்த்தி, கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்துவதுதான் இவர்களின் சிறப்பம்சம். வி.ஜி.பி.,கெவின்கேர், 'நக்கீரன்’ கோபால், கிரானைட் அதிபர் தேவி நாராயண் போன்ற பிரபலங்களின் இல்லத் திருமணங்களில் இவர்களின் திறமை பளிச்சிட்டிருக்கிறது.

வெடிங் பிளானர்ஸ் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெடிங் பிளானர்ஸ் !

'வெடிங் பிளானர்’ ஏன் அவசியம்? ஒரு திருமணத்தில் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் விஷயங்கள் என்ன?

''இந்த அவசர யுகத்தில் திருமண வேலைகளை எடுத்துச் செய்ய ஆட்களோ, நேரமோ பலருக்கும் இருக்கிறதில்லை. ஒரு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதுமே, எங்ககிட்டே அந்த க்ளையன்ட் வந்தாங்கன்னா, முதலில் அவங்களுக்கு மண்டபம் தேடும் வேலையும் அலைச்சலும் மிச்சம். ஏன்னா, எங்க டேட்டா பேஸ்ல எல்லா மண்டபத்தின் புக்கிங் ஸ்டேட்டஸும் இருக்கும். எங்க க்ளையன்ட் வெச்சிருக்கிற முகூர்த்தத்தில் புக் ஆகியிருக்கிற மண்டபங்களை சுலபமா தவிர்த்துட்டு, இருக்கிற மண்டபங்களில் ரெண்டு, மூணை செலக்ட் பண்ணி, அதுக்கான வாடகை, கரன்ட் பில், எவ்வளவு பேர் உட்காரலாம், எத்தனை கார் பார்க் பண்ணலாம்னு எல்லாத்தையும் சொல்லிடுவோம். அதை மட்டும் நேரில் போய்ப் பார்த்தா போதும். அரை மணி நேரத்தில் மண்டபம் புக்கிங் ஓவர்; அலைச்சலும் மிச்சம். அடுத்ததா, பத்திரிகை அடிக்கிறதுக்கான விவரங்கள், அவங்க விருப்பம், டிசைன் செலக்ட் பண்ணிக் கொடுத்துட்டாங்கன்னா, நாங்களே ப்ரின்ட் பண்ணி வாங்கிடறோம். சில கல்யாணங்களில் அட்ரஸ் லிஸ்ட் வாங்கி நாங்களே கொரியர்லயும் அனுப்பிடறோம்.  

வெடிங் பிளானர்ஸ் !
வெடிங் பிளானர்ஸ் !

அடுத்ததா, மண்டபம், மேடை அலங்காரம். க்ளையன்ட்டின் விருப்பத்துக்கேற்ப கிராண்டாவோ, 'தீம்’ அடிப்படையிலோ பண்றோம். பிரபல கிரானைட் தொழிலதிபர் தேவி நாராயண் வீட்டுக் கல்யாணத்தில் 'மயில்’ கான்செப்ட் வெச்சு பண்ணச் சொன்னாங்க. மேடை அலங்காரத்திலிருந்து, வாசல் கதவு, டைனிங், தண்ணீர் பாட்டில், தாம்பூலப்பைன்னு எல்லாத்திலும் மயில் கான்செப்டைக் கொண்டு வந்திருந்தோம். இப்போ, நாங்க ஒவ்வொரு தம்பதிக்குமே அவங்க பெயரின் முதல் எழுத்துக்களை வெச்சு ஒரு லோகோ உருவாக்கிடறோம். இன்விடேஷனிலிருந்து பொண்ணு, மாப்பிள்ளை வர்ற கார் வரை அந்த லோகோ இருக்கும். அது அவங்களுக்கான 'எக்ஸ்க்ளூஸிவ்’ லோகோ என்கிறதால, அதை அவங்க பின்னால எந்த விசேஷத் துக்கும் உபயோகிக்கலாம்.

திருமணத்துக்கு வர்றவங்களுக்கு போக, வர ரயில், ஃப்ளைட் டிக்கெட்கூட நாங்களே போட்டுக் கொடுத்திடுவோம். வர்றவங்களை அழைச்சிட்டு வர கார் அனுப்புறது, அவங்களைத் தங்க வைக்கிறது, மண்டபத்துக்கு அழைச்சிட்டு வர்றது, கல்யாணம் முடிஞ்சு திரும்ப ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட்ல டிராப் பண்றதுனு எல்லாமே நாங்க பார்த்துக்குவோம்.

வெடிங் பிளானர்ஸ் !

அப்புறம்... சாப்பாடு! எங்க க்ளையன்ட் எந்த சமூகம்னு தெரிஞ்சுகிட்டு, அவங்க பக்க சமையல், அவங்களுக்கான ஸ்பெஷல் அயிட்டங்கள்னு முதல் நாளில் இருந்தே ஏற்பாடு செய்திடுவோம். சில பேர், முதல் நாள் காலையில் வீட்டுக்கு ரெண்டு சமையல்காரர், ரெண்டு ஹவுஸ் கீப்பிங் ஆட்களை அனுப்பி வைக்கச் சொல்வாங்க. கல்யாணம் முடிஞ்சதும், பொண்ணு மாப்பிள்ளைக்குக் கொடுக்கிற பால், பழம் வரைக்கும் அரேஞ்ச் பண்ணிடுவோம். வீட்டுக்குக் கிளம்பும்போது நைட் டின்னர் கூட தயாரிச்சு அனுப்பி வெச்சுடுவோம்.

இது மட்டுமில்ல... அவங்க சமூகம் சார்ந்த ஒரு சடங்கைக்கூட மிஸ் பண்ணாம செய்திடுவோம். அதுக்கான சாமான்களை நாங்களே வாங்கி வெச்சிடுவோம். பொதுவாகக் கல்யாணங்களில் மறந்து போயிடற அட்சதைக்கான அரிசி, கற்பூரம், தீப்பெட்டி, பானை, பாலிகை, முளைப்பாரின்னு சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மறக்காம சேகரிச்சு, எங்க டீம்ல ஒருத்தர் வெச்சுக்கிட்டு ரெடியாக இருப்பார். என்ன தேவைன்னாலும் எடுத்துக் கொடுப்பார்.

பொண்ணு, மாப்பிள்ளை மேக்கப் பேக்கேஜை அவங்களே செய்துகிட்டாலும் கூட, மூணு மாசத்துக்கு முன்னால இருந்தே பார்லர் போனாங்களா, ஃபேஷியல் பண்ணாங்களான்னு கேட்டு, நினைவுபடுத்துறதும் எங்க டீமின் வேலைதான். இவ்வளவு ஏன்... மெஹந்தி நிகழ்ச்சி முடிஞ்சு மறுநாள், மெஹந்தி நல்லா சிவந்திருக்கானு போன் போட்டுக் கேட்டுக்குவோம்னா பார்த்துக்குங்க!'' என்று சிரிக்கிறார் சித்ரா. இந்த அணுகுமுறையால் பல வீடுகளில் இவர் 'அத்தை’யாகவும் 'சித்தி’யாகவும் உறவாகவே ஆகிவிட்டதில் பெருமை அவருக்கு.  

வெடிங் பிளானர்ஸ் !

''போட்டோகிராஃபில இப்போ 'கேண்டிட்’ போட்டோகிராஃபி மூலமா கேஷுவல் ஸ்நாப்ஸ் எடுக்கிறது டிரெண்டா இருக்கு. இன்னொரு புது டெக்னிக், 'டிரோன்’! மேலே ஹெலிகாப்டர் கேமரா மூலமா ஏரியல் வியூவில் போட்டோஸ் எடுக்கிறது. கிளையன்ட்டின் விருப்பம், வசதிக்கு ஏத்த மாதிரி ஏற்பாடு செஞ்சுக்கலாம். ஆர்க்கெஸ்ட்ரா, தாம்பூலப் பையில் போடும் பரிசுப் பொருள்... எல்லாமே கிளையன்ட் சாய்ஸ்தான்'' என்கிற சித்ரா,

''ஒவ்வொரு கல்யாணத்துக்கும், எங்களிடம் புக் பண்ணினதுமே ஒரு ரிலேஷன்ஷிப் மேனேஜரை நியமிச்சிடுவோம். அந்த கிளையன்ட் சார்ந்த எல்லா விஷயங்களையும் அவர் பார்த்துக்குவார். அவங்களுக்கு கல்யாணம் சம்பந்தமா என்ன வேணும்னாலும் அவருக்கு போன் செய்து சொல்லிட்டு, அவங்க ஹாயாக 'என்ஜாய்’ பண்ணலாம். மணடபத்தின் சாவி வாங்கி, மீட்டர் ரீடிங் பார்த்து எழுதிக்கிறது முதல் நாங்க எங்க பொறுப்பில் எடுத்துடுவோம். ஒரு சில கல்யாணங்களில், முதல் நாள் மாப்பிள்ளை, பொண்ணு வந்து இறங்குறப்போ ஆரத்தி எடுக்கக்கூட ஆள் இருக்காது. நாங்களே ஆரத்தி கரைச்சு எடுத்திடுவோம். எங்க டீம்ல பத்து பேர் மண்டபத்தில் ரெடியா இருப்பாங்க. யார் யாருக்கு என்னென்ன வேலைன்னு முதல் நாளே திட்டமிட்டு, பிரிச்சுக் கொடுத்திடுவோம். ஒருத்தர் ஒரு வேலையைச் செய்யத் தவறிட்டாலும், அதுக்கு அடுத்த ஆள் அந்த வேலையைக் கச்சிதமா செய்ற அளவுக்கு 'கோஆர்டினேஷன்’ இருக்கும். 5,000 பேர் வர்ற திருமணத்தைக்கூட கார் பார்க்கிங், பாதுகாப்புன்னு எந்தச் சிக்கலும் இல்லாம அழகா நடத்திக் கொடுத்திருக்கோம்! அதுதான் எங்க பலமே!'' என்று புன்னகைக்கிறார் சித்ரா.

இனி, 'வெடிங் பிளானர்’களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, மணமக்கள் வீட்டினர் கையை வீசிக்கொண்டு வந்து, தங்கள் பிள்ளைகளின் கல்யாண வைபோகத்தின் ஒவ்வொரு விநாடியையும் தவறவிடாமல் கண்ணாரக் கண்டு ரசிக்கலாம்!  

பிரேமா நாராயணன்