Published:Updated:

கல்யாண ஜோடிகளின் கனிவான கவனத்துக்கு..!

கல்யாண ஜோடிகளின் கனிவான கவனத்துக்கு..!

ண்டுக்கணக்கில் உருகி உருகிக் காதலித்துக் கரம் பற்றும் ஜோடியானாலும் சரி... பெற்றோர்கள் பத்துப் பொருத்தம் பார்த்து நடத்தி வைக்கும் திருமண ஜோடியானாலும் சரி... கல்யாணம் முடிந்த சில நாட்கள் அல்லது மாதங்களில் ‘கசமுசா’ என்பது இப்போது பரவலாகிவிட்டது. இதைத் தவிர்க்க, கணவனுக்கும் மனைவிக்கும் பிராக்டில் டிப்ஸ் வழங்குகிறார், பிரபல மனநல ஆலோசனை நிபுணர் பிருந்தா ஜெயராமன்.

‘‘ஆண், பெண் இருவருமே திருமண உறவு என்னும் பந்தத்துக்குள் நுழையும்போது, சில விஷயங்களை எதிர்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் தங்களை மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால், சில ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வரும். மாப்பிள்ளை, மணப்பெண் இருவரும் திருமணத்துக்குப் பின் புதிய பாத்திரங்களை (role) ஏற்கிறார்கள். ஆண், ‘கணவன், மருமகன்’ என்றும், பெண் ‘மனைவி, மருமகள்’ என்றும் புது பொறுப்புகளுக்குள் வருகிறார்கள். இந்தப் புதிய பாத்திரங்களில் சிக்கல் இல்லாமல் பரிணமிக்க, எப்படி அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு, இதோ... இருவருக்குமான சில ஆலோசனைகள்!

முக்கியமான 4 பகுதிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கணவன் - மனைவி உறவில் உணர்வு பூர்வமான பந்தம், படுக்கையறை உறவு, குடும்பம் சார்ந்த பந்தம் மற்றும் செலவு, சேமிப்பு போன்ற பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்கள் என, இந்த நான்கு விஷயங்களிலும் நல்லதொரு புரிதல் வந்தாலே... மணவாழ்க்கை வெற்றிதான்!

கல்யாண ஜோடிகளின் கனிவான கவனத்துக்கு..!

உணர்வுபூர்வமான பந்தம்!

‘நான் உன்னை நேசிக்கிறேன்; நீ எனக்கு முக்கியமானவள்/முக்கிய மானவன்’ என்பதை கணவன், மனைவி ஒருவருக்கொருவர் உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த உணர்த்துதல், வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவர் அடுத்தவர் மீது காட்டும் அக்கறை அல்லது அன்புமிக்க செயல்களாகக்கூட  இருக்கலாம். முகம் வாடியிருந்தால், ‘தலை வலிக்குதாம்மா?’ என்று கேட்பது, ‘இன்னிக்கு உன் டிரெஸ் நல்லாயிருக்கு!’ என்று பாராட்டுவது என, தன் இணை எதிர்பார்க்கும் விதத்தில் அன்பைக் காட்டினால், கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சில ஆண்கள் எல்லா விஷயங்களுக்கும் தன் பெற்றோரிடம் மட்டும் ஆலோசனை பெற்றுவிட்டு, மனைவியைக் கண்டுகொள்ளாமல் விடு வார்கள். மனைவியிடமும் ஒரு வார்த்தை கேட்பது, அவர் அந்தக் குடும்பத்தில் முக்கியமானவர் என்பதை உணர்த்தும் செயல்.

பெண்களுக்கு, கணவன் தன் பாசத்தை வெளிப்படையாகக் காண்பிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனால், ஒவ்வொருவருடைய ‘நேச மொழி’ (Love Language)  ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு மனைவி, தன் கணவனின் நேச மொழி எப்படி இருந்தாலும் அதைப் புரிந்துகொண்டு அதை அப்படியே தொடர அனுமதிக்கலாம். போகிறபோக்கில் ஒரு கண்ணடிப்பு, கிச்சனுக்குள் வருகிற சாக்கில் ஒரு முத்தம் இவையும் நேச மொழிதான். உடம்பு சரியில்லை எனில் துடிதுடித்து மருந்து கொடுப்பதும் நேச மொழிதான்.

படுக்கையறை பந்தம்!

படுக்கையறையில் கணவன், மனைவி இறுக்கமான சூழலில் இருக்கக் கூடாது. அங்கே ஆணின் தேவைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே முக்கியத்துவம் பெண்ணின் தேவை களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். இருவருக்குமே பரஸ்பரம் திருப்தி ஏற்படும் வகையில் உறவு நிகழ வேண்டும். படுக்கையறை பந்தம் இனிமையாக அமைந்துவிட்டாலே, தாம்பத்ய உறவு இணக்கமாக இருந்தாலே போதும்... வேறு எந்தப் பிரச்னையும் பெரிதாக வராது.

பொதுவாக, பெண்கள் கூச்ச சுபாவம் மிக்கவர்கள். அவர்கள் முதலில் படுக்கை அறையில் ‘கம்ஃபர்ட்’ ஆக இருக்க வேண்டும். ‘செக்ஸ்’ பற்றி கூச்சப்படாமல் வெளிப்படையாகக் கணவரிடம் பேச வேண்டும். கடமையே என்று நினைத்து ஈடுபடாமல், உணர்வோடு ஈடுபட்டு ரசித்து உறவாட வேண்டும். திருமணத்துக்கு முன் ஒரு மகளிர் மருத்துவரைப் பார்த்து, செக்ஸ் மற்றும் தாம்பத்ய உறவு குறித்தும், குழந்தைக்குத் திட்டமிடல் குறித்தும் கேட்டு அறிந்து கொள்ளுதல் ஆரோக்கியமானது. படுக்கையறைக்குள் போவதற்கு முன்... பெண், ஆண் இருவருமே உடல் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது மற்றவர் அவரைக் கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

குடும்பம் சார்ந்த பந்தம்!

நம் நாட்டு கலாசாரத்துக்கு, இந்த பந்தம் மிக முக்கியம். ஒரு வீட்டுக்குப் புதிதாக ஒரு பெண் வருவதென்பது, ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி, வேறு இடத்தில் நடுவதற்குச் சமம். புதிய இடத்தில் வேர் பிடிக்க, கொஞ்சம் காலம் பிடிக்கும். அதுவரை, கணவனின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. அதற்காக, மனைவிக்குப் பரிந்து அம்மாவிடம் சண்டை போட வேண்டுமென்பது இல்லை. ஏதேனும் பிரச்னை எனில், ‘நான் உன்னைப் புரிஞ்சுக்கிட்டேன்... சரியான சமயம் பார்த்து அம்மாவிடம் பக்குவமாகச் சொல்றேன்’ என்பது போன்ற ஆதரவான வார்த்தைகள் போதும். குடும்ப வேலைகளில் மனைவியுடன் பங்கேற்பது, அவளுடைய பெற்றோர் வீட்டுக்குப் போவதற்கும் பார்ப்பதற்கும் மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பது போன்ற சின்னச் சின்ன அக்கறை குடும்பத்தை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும்.

பொருளாதார பந்தம்!

பணிக்குச் செல்லும் பெண் என்றால், திருமணத்துக்குப் பிறகு போக வேண்டுமா... வேண்டாமா, சம்பளத்தை பிறந்த வீட்டுக்குக் கொடுக்க வேண்டுமா போன்றவற்றை கல்யாணத்துக்கு முன்னரே பேசி முடிவெடுக்க வேண்டும். ஆண், தன்னுடைய பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பொருளாதார உதவிகள் (தங்கை - தம்பியின் படிப்பு, கல்யாணம் போன்றவை), பெண், தன் பிறந்த வீட்டுக்கு பொருளாதார ரீதியாக சப்போர்ட் செய்ய வேண்டிய சூழல் போன்றவற்றை முன்னரே பேசி, இருவரும் ஒப்புதலுக்கு வந்துவிட வேண்டும். பண விஷயத்தில் ஒளிவுமறைவு இல்லாத ‘டிரான்ஸ்பரன்ஸி’ தேவை. இருவரின் சம்பளம், பிடித்தம், இன்ஷூரன்ஸ், கடன்கள், இ.எம்.ஐ., போன்ற விஷயங்களை இருவருமே பரஸ்பரம் தெரிந்துகொள்வது நல்லது. இருவருக்கும் வங்கிக் கணக்கு ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இருவருடைய வங்கிக் கணக்குகளைப் பற்றியும் இருவரும் அறிதல் அவசியம்.

கல்யாண ஜோடிகளின் கனிவான கவனத்துக்கு..!

குடும்பச் செலவுக்கு, சேமிப்புக்கு என்று எவ்வளவு ஒதுக்க வேண்டும், மற்ற செலவுகள் என்னென்ன, எவ்வளவு தேவைப்படும் என்பது பற்றியும் பேசி முடிவுசெய்தல் நல்லது. இருவருமே வேலைக்குப் போகும்பட்சத்தில் ஒருவர் செலவுகளையும் மற்றவர் சேமிப்புகளையும் பொறுப்பேற்கலாம்.  இருவருக்குமே பொருளாதார ரீதியாக செலவழிக்க, வாங்க, கொடுக்க ஓரளவு சுதந்திரம் இருக்க வேண்டும். ஒரு காபி குடிக்கவோ, தோழிக்கு திருமணப் பரிசு கொடுக்கவோ மற்றவரின் அனுமதியையோ, கையையோ எதிர் பார்க்கும் நிலை இருக்கக்கூடாது. வரவு, செலவு, தேவைகள் பற்றி வெளிப் படையான பேச்சு இருக்க வேண்டும். முக்கிய பிரச்னைகளின்போது பணம், கொடுக்கல், வாங்கல், பிரயாணம், குழந்தைகள் படிப்பு போன்றவற்றில் யார் எந்த விஷயத்தில் திறமைசாலியோ, அந்த விஷயத்தில் அவர் முடிவெடுக்கலாம்.

கணவன் - மனைவிக்கு இடையே ஆழமான அடிப்படை அன்பு, பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை (கம்யூனிகேஷன்) என்ற நான்கும் அதிமுக்கியம். இந்த நான்கிலும்  மணமான முதல் வருடத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டு நங்கூரம் போட்டுவிட்டால்... பிறகு என்ன புயல் அடித்தாலும் மணவாழ்வு நிலைத்து நிற்கும்!’’

- அக்கறையுடன் சொல்லி முடித்தார் பிருந்தா ஜெயராமன்.

- பிரேமா நாராயணன்


சில அட்வைஸ்!

பெண்ணுக்கு...

தன் கணவனின் குடும்பத்தை ‘இது என் குடும்பம்’ என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். புகுந்த வீட்டு விஷயங்களை எல்லாம் பிறந்த வீட்டில் சொல்லக் கூடாது. தேவையில்லாத மனக்கசப்பு உருவாகலாம். பிறந்த வீட்டுப் பெருமையை புகுந்த வீட்டில் அடக்கியே வாசிப்பது நல்லது.

திருமணத்துக்கு முன்னால் நடந்த விஷயங்கள், இருந்த உறவுகள் பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா என்ற குழப்பம் எல்லாப் பெண்களுக்கும் வரும். மிக ஆழமான காதலாக இல்லாமல், மேலோட்டமான நட்பாக இருந்தால் சொல்லலாம். ஆனால் அது உணர்வுபூர்வமான காதலோ, சிநேகமோ என்றால், சொல்லாமல் இருப்பதே நல்லது. தேவையற்ற பிரச்னைகளைத்  தவிர்க்கலாம்.

ஆணுக்கு...

மனைவிக்கும் தனக்கும் இடையிலான குடும்ப விஷயங்கள், தீர்மானங்களை முதலில் மனைவியிடம் கலந்து ஆலோசித்த பிறகு, அப்பா, அம்மாவிடம் போவது, பிரச்னைகளைத் தவிர்க்கும். மனைவியைவிட உயர்ந்த இடத்தில் அல்லது மனைவிக்கு இணையாக அம்மா என்று அன்பின் அளவுகோல் வைத்திருக்கும் ஆணுக்கு, தன் அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையேயான உறவை ‘பாலன்ஸ்’ செய்து போவது சவாலாக இருக்கும். இருவரின் மனமும் புண்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். புது மனைவியுடன் சச்சரவில்லாமல் இருக்க, பெரிதாக ஒன்றும் மெனக்கெட வேண்டாம். அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே போதும். மனைவி சொல்வதைப் பொறுமையோடு கேட்பது, பகிர்வது, விட்டுக் கொடுப்பது... இவை மூன்றும் ஆதார சுருதிகள்.

காதல் திருமணத் தம்பதிக்கு!

காதல் தம்பதிகள் எதிர்நோக்கும் பெரிய பிரச்னை, திருமணத்துக்குப் பிறகு இருவருமே மாறிவிடுவது போல உணர்வு வருவதுதான். கணவன் - மனைவியாக 24 மணி நேரமும் சேர்ந்து வாழும்போதுதான் குறைகள் தெரியவரும். மனநிலை மாற்றங்கள் (மூட் ஸ்விங்ஸ்) புரியவரும். அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். பொதுவாக, கணவன் - மனைவி உறவில், ஒருவர் இன்னொரு வரை சந்தோஷப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். காதலிப்பவர்கள், கல்யாணத் துக்குப் பிறகு இம்முயற்சியைக் கைவிட்டு விடுவதால்தான், திருமணமும் பாதியில் தோல்வியுறுகிறது.