Published:Updated:

வேலு பேசறேன் தாயி...! - புதிய தொடர்

வேலு பேசறேன் தாயி...! - புதிய தொடர்

வேலு பேசறேன் தாயி...! - புதிய தொடர்
வேலு பேசறேன் தாயி...! - புதிய தொடர்
வேலு பேசறேன் தாயி...! - புதிய தொடர்

பெத்தவுக, பெரியவுக, பொறந்தவுக, தாயா புள்ளையா, அக்கா தங்கச்சிக, ரத்த பாசங்க... எல்லாருக்கும் வணக்கம்! செத்த நேரம் இருங்க தாயி... ஒரு தடவை என்னோட உள்ளங்கையைக் கிள்ளிப் பாத்துக்குறேன். 'அவள் விகடன்’ல நான் தொடர் எழுதப் போறேனா..?! ஆமா, நெசந்தேன்! 

எளந்தாரி வயசுல இருந்தே ஊருல ஆத்தா, அக்காமாருககூட தாயா, மக்களா பழகுன பாசம் கொஞ்சநஞ்சமில்ல. எனக்கும் பொண்ணாப் பொறந்தவுகளுக்கும் பூர்வஜென்ம பந்தமே உண்டாத்தா. ஊரைச் சுத்தி எங்கே திருவிழா, கச்சேரி நடந்தாலும், பொண்டு புள்ளைகளோட சேந்து நின்னு கும்மி கொட்டிப் பாடறது, பச்சப் புள்ளையில இருந்தே இந்த வடிவேலுக்குப் பழக்கம். கூத்தும் கும்மாளமுந்தேன் முழுநேரப் பொழப்பே.

கோயிலுக அதிகமா இருக்குற ஊரு கும்பகோணம்னு சொல்லுவாக. ஆனா, மாசத்துக்கு நாலு திருவிழா, தெருவுக்கு நாலு கச்சேரினு இந்த மதுர படுற அமர்க்களம் இருக்கே... மார்கழித் திருவிழா, பங்குனித் திருவிழானு மாசா மாச திருவிழாக்க ஒரு பக்கம்னா, அடுத்தாப்புல, அழகர் ஆத்துல இறங்குற வைபோகம், திருக்கல்யாண திருவிழா, அங்கிட்டுப் பாத்தீகன்னா தாயமங்கலம் திருவிழானு... எப்பவுமே மதுர களைகட்டும்; அடுத்த ஊருக வரைக்கும் அணை கட்டும்.

வேலு பேசறேன் தாயி...! - புதிய தொடர்

எங்கூரு பக்கம் திருவிழா வந்துட்டாலே மொளப்பாரி தூக்குறது, தானானே கொட்டுறதுனு பொண்டு புள்ளைக பிசியாகிடுவாக. அவுகளோட சேந்து நானும் தானானே கொட்டுவேன். அவுளுக்கு எம்பாட்டு மேலயும், ஆட்டம் மேலயும் அம்புட்டுப் பிரியம். தானானே கொட்டக் கௌம்புனாலே, 'நீயும் வாடா வடிவேலு’னு ஆசையா அழச்சுக்கிட்டுப் போயிடுவாக.

போன வருசம் எங்க குல சாமி அய்யனார் கோயிலுக்கு கும்பாபிசேகம். டி.வி-க்காரங்க எல்லாம் சுத்திச் சுத்திப் படம் பிடிக்க, தானானே கொட்டி நான் ஆடுனேன் பாருங்க... பொண்டுக தோத்தாங்க போங்க. அத்தனை டி.வி-க்காரங்களும் ஆச்சர்யப்பட்டுப் பேசுனாக. எங்க ஊரு தாயி. புள்ளைகளோட சேர்ந்து ஆடிப்பாடி கத்துக்கிட்டதுதேன்யா அத்தனையும். அதை வெச்சுத்தான் சினிமாவுல நம்ம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.

17 வயசு வரைக்கும் எங்கூரு சினிமா தியேட்டருல பொம்பள கவுன்ட்டர்ல டிக்கெட் வாங்கி படம் பார்த்த ஒரே ஆளு, நானாத்தேன் இருப்பேன். ரோமக்கட்டுள்ள ஆளுக்கு பொறந்த பய மாதிரி, எனக்குத் தடிச்ச மீசை இருக்காது. பென்சில்ல கோடு போட்ட மாதிரி பட்டும் படாம மெல்லிசா இருக்கும். அதனால எங்கம்மா, அத்தை எல்லாரும் என்னையுங் கூட்டிக்கிட்டுத்தேன் சினிமாவுக்குப் போவாக. எங்கம்மாவோட பொம்பள கவுன்ட்டர் வழியா போறப்போ, டிக்கெட் கிழிக்கிற அக்கா உள்ள விடாம அலும்பு பண்ணும்.

'ஆளப் பாத்தா எருமை மாதிரி இருக்கான். இவனைப் பொம்பளைங்க பக்கம் எப்புடி விட முடியும்?’னு அந்த அக்கா கோபப்பட, எங்கம்மாவோ, 'வயசு கம்மிதான்; திடீர்னு வளந்துட்டான்’னு விளக்கம் சொல்லும். இங்கிட்டு எங்க அத்தை சப்போட்டுக்கு. 'எம் மருமவனை எங்ககூட உட்கார வெச்சுக்க சட்டம் போட வந்துட்டாளுக’ன்னு சவுண்டு வுடும். 'எருமைப்பய, எங்க உக்காந்தாலும் சரி’னு அந்த அக்கா உள்ள விட்டுரும்.

கொஞ்சநஞ்ச வெளிச்சத்துல தள்ளிமுள்ளிப் போயி உக்காந்தா, பக்கத்துல இருக்குற பெரியம்மா அங்கிட்டும் இங்குட்டுமா நகரும்போது நம்மளப் பார்த்துடும். 'யாருப்பா நீ, செத்த தள்ளி உக்காரு’னு மொறைக்கும். எங்க அம்மா, அத்தை சும்மா இருப்பாகளா? 'அவன் பாட்டுக்கு செவனேன்னு உக்காந்திருக்கான். உன்னைய என்ன பண்ணுனான்..?’னு பாய்வாக. வாயி வளர வளர, அந்தம்மா தலைமுடிய இவுகளும், இவுக தலைமுடிய அந்தம்மாவும் பிடிச்சுச் சண்ட போடுவாக. ஸ்க்ரீன்ல ஓடுற சண்டையை எல்லாம் அந்தச் சண்டை தூக்கிச் சாப்புட்டுரும். கடைசில ரெண்டு பேர் தலையிலயும் பாதி பாதி சவுரி போயிருக்கும். பூவும், பொட்டுமா தியேட்டருக்குள்ள வந்தவுக, சவுரி முடி யாவாரத்துக்கு பொறப்பட்ட மாதிரி கொத்துக் கொத்தா முடியப் புடுச்சுக்கிட்டுக் கௌம்புவாக.

இப்புடித்தேன் சின்ன வயசுல இருந்து பக்குவம் பழகுற வரைக்கும் தாயி புள்ளைகளோட ஒண்ணுமண்ணா திரிஞ்சவன் நானு. சினிமாவுல மூச்சுவிடக்கூட நேரம் இல்லாம பிசியா இருந்த காலத்துலகூட, மாசத்துக்கு ரெண்டு வாட்டி மதுரைக்குப் போயி அம்மாவப் பார்த்து ஆசி வாங்கிட்டு வந்திருவேன். அம்மாதேன் எனக்குப் பேட்டரி மாதிரி. அங்க போய் ஜார்ச் ஏத்திக்கிட்டு வந்தாத்தேன் மத்த வேலைக மட்டுப்படும்!

வேலு பேசறேன் தாயி...! - புதிய தொடர்

ஏழைக் குடிசையில பொறந்து, இன்னிக்கு இம்புட்டு ஒசரம் வளந்தவனாச் சொல்றேன்... பெத்தவுக பெரியவுக இல்லாம வீடும் இல்ல; நாடும் இல்ல. ஒரு படத்துல 'பொட்டப்புள்ள மாதிரி அழுவுறியேடா’னு ஒருத்தன் திட்டுறப்ப, தங்கவேலு அண்ணன் சொல்வாரு... 'அம்மா வயித்துல இருந்து பொறந்த நாம பொட்டப்புள்ள மாதிரிதாண்டா அழணும். ஆம்பள மாதிரி அழுதாதான் தப்பு’னு! பாதி ஆணு, பாதி பொண்ணாத்தேன் இருக்கும். ஒடம்பையும் உசுரையும் பங்கு போட்டுக்கிட்ட பார்வதி பரமசிவத்த கும்புடுற ஆளுகதானே நாம?!

'அவள் விகடன்’ல இருந்து பேசினதும், மகராசி மக்ககிட்ட என்ன சொல்லப் போறோம்னு ஒரு நிமிஷம் மனசுக்குள்ளத் தயக்கம். ஆனா, வாயில வெரலை வெச்சு வானத்தப் பாத்து யோசிச்சா, சின்ன வயசுல பழகுன அத்தனை ஆத்தாக்களும் சடுதியில மனசுக்குள்ள வந்துட்டுப் போறாக.

மதுரயில பிளாட்பாரத்தை ஒட்டித்தான் வீடு. பொழுதுபட்டுச்சுனா, வாசல்ல தண்ணி தெளிச்சு ஆளாளுக்கு இடம் புடிச்சு படுக்கையப் போட்டுருவோம். அக்கம்பக்கத்து அப்பத்தாக்க காலை நீட்டிப் போட்டு, ஊரு ஒலகத்து கதை அவ்வளவையும் ஒருமுச்சூட பேசுவாக. ஒரு நா நான் இல்லனாலும், 'எங்க இந்த வேலுப் பயலக் காணோம்?’னு நினைச்சு, 'ஏ வேலு...’னு ஏலம் போட ஆரம்பிச்சுடுவாக. அவுக சொல்ற கதைகளுக்கு தலையாட்டி ராகம் போட நாந்தேன் சரியான ஆளு.

அந்த மாதிரி... வீட்ல பார்த்தது தொடங்கி ரோட்ல பார்த்தது வரைக்கும், கருவுல பார்த்தது தொடங்கி தெருவுல பார்த்தது வரைக்கும் மனசுக்குள்ள இருக்குற எல்லா கதைகளையும் உங்ககிட்ட கொட்டப் போறேன். இனிப் பாருங்க ஆயா... இந்த வடிவேலு உங்க வூட்டு வாலா மாதிரி சேட்டையும் சேதியுமா கொடுக்கப்போற அலப்பறைய!

- நெறய்ய பேசுவோம்...  

அடுத்த கட்டுரைக்கு