Published:Updated:

உணவுகளில் ஒளிந்திருக்கும் பொலிவு!

உணவுகளில் ஒளிந்திருக்கும் பொலிவு!
உணவுகளில் ஒளிந்திருக்கும் பொலிவு!

சருமப் பளபளப்புக்கு, வைட்டமின்-ஈ எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘‘திருமணம் என்றதும், மணமக்கள் தன் தோற்றப் பொலிவுக்காக அதிகம் மெனக்கெடுவர். ஆனால். சரும அழகைப் பெற, பார்லர் சிட்டிங்குகள் மட்டும் கைகொடுக்காது; அது நிரந்தரமானதும் அல்ல. முகூர்த்த மேக்கப், அன்றே கலைந்துவிடும். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற பின்னும், தங்களின் வசீகரத்தைத் தக்கவைக்க, தினம் தினம் பார்லர் செல்ல முடியாதல்லவா? எனவே, சருமப் பொலிவுக்கு நிரந்தர தீர்வை உணவு மூலம் பெறும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்!’’

- கல்யாண தம்பதிகளுக்கான முக்கிய ஆலோ சனையைக் கையில் எடுத்தார், சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஹேமமாலினி.

உணவுகளில் ஒளிந்திருக்கும் பொலிவு!

‘‘உடலின் உள்ளே செல்லும் சத்துக்கள்தான் வெளிப்புறத்தை மெருகூட்டும். இதற்கு பெரும் மெனக்கெடல்கள் எல்லாம் தேவையில்லை. அன்றாட உணவுப் பழக்கத்தை முறைப்படுத்தினாலே போதும். ஆனால், ஒரே வாரத்தில் பலனை எதிர்பார்க்கக் கூடாது. திருமணத்துக்கு முன் குறைந்தது மூன்று மாதங்களில் இருந்து, ஆறு மாதங்கள் வரை கீழே சொல்லும் உணவுப் பரிந்துரையைப் பின்பற்றிப் பாருங்கள். தேக அழகு, நிரந்தரமாக மெருகு கூடி, மணமேடையிலும், புகுந்த வீட்டிலும் தேஜஸ்வினியாகச் ஜொலிப்பீர்கள், என்றென்றும்!

• எப்போதும் ஐந்து வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவை தானியம், பருப்பு, கீரை - காய்கறிகள், பழ வகைகள் மற்றும் பால் - பால் சார்ந்த பொருட்களை உள்ளடக்கியது.

• சாப்பிடும் நேரத்தில் முறையான அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். காலை 8 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட், மதியம் 1 மணிக்கு லஞ்ச், இரவு 8.30-க்குள் டின்னர் என்பதை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு உணவு வேளைக்குமான இடைவெளியில் நொறுக்குத் தீனி கூடாது. அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் முட்டையின் வெள்ளைக் கரு எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கரு, வாரம் ஒருமுறை எடுத்துக்கொண்டால் போதுமானது. இவையெல்லாம் உள் உறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், சருமத்துக்கும் ஊட்டம் கொடுக்கும்.

• சருமப் பளபளப்புக்கு, வைட்டமின்-ஈ எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சத்து, பழங்கள் மற்றும் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்களிலும் அதிகம் கிடைக்கும். மாலை நேரங்களில் இவற்றை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். வைட்டமின்-ஈ சத்து அதிகம் உள்ள கோதுமைக் குருணையையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உணவுகளில் ஒளிந்திருக்கும் பொலிவு!

• இளம் பெண்களின் கவனிக்கப்பட வேண் டிய பிரச்னை, அனீமியா. ஹீமோகுளோபின் குறைவால் ஏற்படும் இந்த ரத்தசோகை பிரச்னை உடலை பலவீனமாக்குவதுடன், பிள்ளைப் பேற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் உடல் சோர்வு, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற விளைவுகள், ஆரம்பித்திருக்கும் புது இல்லறத்திலும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க, ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டும். ஹீமோகுளோபின் என்பதில் ஹீமோ என்றால் இரும்புச்சத்து, குளோபின் என்றால் புரதச்சத்து. எனவே, இரும்புச்சத்துடன் சேர்த்து, புரதச்சத்து உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கீரை, கேழ்வரகு, கம்பு, குதிரை வாலி, பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் நிரம்பியிருக்கும். புரதச்சத்து பருப்பு வகைகளில் கிடைக்கும். இரும்புச்சத்தை கிரகித்துக்கொள்ள வைட்டமின்-சி தேவை என்பதால், அந்தச் சத்து நிறைந்துள்ள ஆரஞ்சுப் பழம், நெல்லிக்காய், எலுமிச்சை ஜூஸ், முளைகட்டிய பயறு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

• ‘சன் டேன்’ எனப்படும் வெயிலினால் சருமம் கறுத்துப் போகும் பிரச்னைக்கு பயந்து, பலர் வெளியே தலை காட்டுவதில்லை. ஆனால், சரும செல்களுக்கு சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி மிக அவசியம் என்பதால், காலை நேரத்தில் ‘வாக்’ செல்லலாம். கூடுதல் பலனாக சோர்வு நீங்கி சுறுசுறுப்பு கிடைப்பதுடன், உடல் எடை குறைப்புக்கும் வழி வகுக்கும்.

• மாய்ஸ்ச்சரைஸிங் க்ரீம், பாடி லோஷனை எல்லாம்விட சருமப் பொலிவுக்கு அதிகமாகத் துணை புரிவது... தண்ணீர். ஒரு நாளில் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதை ஒரே நேரத்தில் மூச்சு முட்ட முட்டக் குடிக்காமல், நாள் முழுமைக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் கிடைக்க கிடைக்க, சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதுடன், பொலிவும் தரும். வயதான தோற்றத்தை தள்ளிப்போட்டு, இளமையையும் நீட்டிக்கும்.

அமைதியான மனதுக்கும் அழகான முகத்துக்கும், தினமும் ஏழு மணி நேர தொந்தரவில்லாத தூக்கம் மிகமிக அவசியம். எதிர்கால இணையுடன் மொபைலில் ராத்திரி முழுக்க சாட் செய்தால், நேரில் பார்க்கும் நாளில் கண்களில் கருவளையம், முகத்தில் சோர்வு என்று அழகைத் தொலைத்து நிற்க வேண்டியிருக்கும் ஜாக்கிரதை!’’ 

-  ந.ஆஷிகா

படங்கள்: க.பாலாஜி, ர.சதானந்த், கு.கார்முகில்வண்ணன்

அடுத்த கட்டுரைக்கு