Election bannerElection banner
Published:Updated:

வேலு பேசறேன் தாயி..! - 2

ஓவியம்: கண்ணா

நகைச்சுவை புயலின் நவரச தொடர்

வேலு பேசறேன் தாயி..! - 2

டுக்கி வுழுந்த எடத்தில தங்கம் எடுத்த கத தெரியுமா ஒங்களுக்கு..?! நம்ம வாழ்க்கையில நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும். எது நடந்தாலும், அது நம்மளோட அனுபவத்துக்குக் கெடச்ச லாபம்னுதேன் எடுத்துக்கணும். 'இப்புடி நடந்துடுச்சே’னு உச்சந்தலையில கைய வெச்சுக்கிட்டு ஒக்காந்தோம்னா, எந்த வேலயும் நடக்காது.

அப்போ எனக்கு 15 வயசு. கயித்துக்கும் கண்டங் கருவாளப் பாம்புக்கும் வித்தியாசம் தெரியாத வயசும்பாய்ங்களே... அதே வயசு. சைக்கிளு ஓட்ட அம்புட்டு ஆசையா இருக்கும். ஆனா, வீட்ல சைக்கிளுக்கு வழியில்ல. அந்தக் காலத்துல எல்லாம் தெருவுக்குத் தெரு வாடகை சைக்கிளு கடைக இருக்கும். மதுரையில மாநகராட்சி கக்கூஸ ஒட்டி இருக்குற 'எம்.கே.எஸ்’ஸுங்கிற சைக்கிளு கடையில, ஒரு சைக்கிள வாடகைக்கு எடுத்தேன். ''கரெக்டா கொண்டாந்து வுட்ருவியாப்பா? பத்து நிமிஷம் ஆனாலும், அர மணி நேரத்துக்கு வாடகை வாங்கிடுவேன்''னு ஏகப்பட்ட மிரட்டல் வேற.

சைக்கிளு கடைக்காரர் இப்புடி ஆயிரம் என்கொயரியப் போட்டு, நாம சரினு சொன்னாலும், அவரு கொடுக்குற வண்டியை அவசரப்பட்டு எடுத்திட்டு வந்துற மாட்டோம் நாம. நமக்கு ராசியான நம்பர் உள்ள வண்டியத்தேன் எடுப்போம். ஆனா, அன்னிக்குனு பார்த்து ராசியான நம்பரு உள்ள வண்டி இல்ல. ''நாப்பத்தி ஒண்ணாம் நம்பருதேன் இருக்கு'’னு ஒரு டகடா வண்டிய தள்ளிவுட்டாரு கடைக்காரரு.

வேலு பேசறேன் தாயி..! - 2

சரியா சைக்கிளு கத்துக்காத நேரம். ஏறி ஒக்காந்தா... வண்டி நல்லபாம்பு மாதிரி நெளிஞ்சு நெளிஞ்சு போகுது. பிரேக்கு எது, பெடலு எதுனு தெரியாம மேலயும் கீழயுமா பார்த்தா, அதுக்குள்ள வண்டி ஒரு கீரக்கார ஆத்தா மேல மோதிருச்சு. ''அகத்திக் கீரே...''னு ராகம் போட்டு வித்துக்கிட்டு இருந்த அந்த ஆத்தாவோட குறுக்கெலும்பப் பதம் பாத்துடுச்சு சைக்கிளு. கருப்பண்ணசாமி கணக்கா அப்படியே ஆங்காரமா ஆத்தா ஒரு பார்வை வீசுச்சே பாக்கணும்... ஆத்தி, என்னைய ஒண்ணும் பண்ணிடாதேனு கைகாலு ஆடிப்போயி நிக்குறேன். பயத்துல ஒண்ணுக்குப் போகாததுதேன் பாக்கி. கையில ஒரு கீரக்கட்ட எடுத்த அந்த ஆத்தா, நடு முதுவ வளைச்சு வெச்சு பிரியப் பிரிய அடிக்க ஆரம்பிச்சிருச்சு. எந்தலைமுடியில பாதி ஆத்தா கையோட போயிருச்சு.

''ஆத்தா, ஒன் ஆங்காரத்தக் கொறை... இந்த அப்பாவிப்புள்ளய மன்னிச்சு வுட்டுடு தாயி!''னு கைய ஒசத்திக் கும்புட்டேன். நின்னு நெலச்சு ஒரு பார்வை பார்த்த அந்த ஆத்தா, கீழ கெடந்த சைக்கிளத் தூக்கி, கேரியருல கீரக் கூடைய வெச்சுக்கிட்டு, ''கீர வாங்கலியோ கீர... ஆளுக்கும் பேருக்கும் அகத்திக் கீர வாங்கலியோ...''னு கூவிக்கிட்டே சைக்கிள தள்ளிக்கிட்டுப் போக ஆரம்பிச்சிருச்சு.

நா ஒன்பதர மணிக்குச் சைக்கிள எடுத்தவன். பத்தரை மணிக்கு வுட்டாகணும். ஆனா, என்னோட அவசரம் அந்த ஆத்தாவுக்கு எப்புடிப் புரியும்? லேசா தைரியத்தை வரவச்சுகிட்டு, ''இவ்வளவு அடி அடிச்சதுக்கு அப்புறமும் ஒம்மனசு எறங்கலியா தாயி..? இன்னும் ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சுக்க. தயவு பண்ணி அந்த சைக்கிள கொடுத்திடு''னு தயங்கிக்கிட்டே கேட்டேன்.

''கீரக்கட்ட எடுத்தேனாப் பாரு! இடுப்பெழும்ப ஒடச்சு போட்டுட்டு பேச்சா பேசுற பேச்சு... எடுபட்ட பயலே. எங்கடா கொண்டாந்து வுடுற வண்டிய..?''னு நாக்கை மடக்கி மெரட்ட ஆரம்பிச்சிடுச்சு ஆத்தா.

மொத்தக் கீர யாவாரத்தையும் முடிச்சிட்டு ஆத்தத் தாண்டிப் போன... ஆத்தா, அவுக வீட்டு வாசல்ல சைக்கிள நிப்பாட்டுச்சு. 'யப்பாடா’னு நா பெருமூச்சு வுட்டா, சைக்கிளை பூட்டி சாவிய எடுத்துக்குட்டு வீட்டுக்குள்ள போயிடுச்சு.

வேலு பேசறேன் தாயி..! - 2

''ஆத்தா, அந்த சைக்கிளு...''னு இழுத்தா, ''கிட்ட வந்தே, மீன அரிஞ்சு கொளம்பு வெக்கிற மாதிரி அரிஞ்சுபுடுவேன்''னு வெரட்டுச்சு. இதுக்கு மேலயும் அந்த ஆத்தா எறங்காதுனு, சைக்கிள் கடைகாரர்கிட்ட வந்தேன். 'எங்கடா சைக்கிளு'னு தூக்கிப்போட்டு மிதி மிதினு மிதிக்க ஆரம்புச்சுட்டார். நடந்த கதயச் சொல்லி, கையோட கூட்டிக்கிட்டு அந்த ஆத்தா வூட்டுக்குப் போனேன்.

''ஏம்மா, சின்னப்பய தெரியாம சைக்கிள வுட்டுட்டான்னா, நீயும் அதை பூட்டி வெச்சு வறண்டு காட்டுறியே..?''னு அவர் நியாயம் கேட்க... அதுக்கெல்லாம் அசங்காத அந்த ஆத்தா, ''அந்தப் பய இடுப்பெழும்ப முறிச்சுப்புட்டான். ஐம்பது ரூபா பணம் இருந்தாத்தேன் நான் ஆசுபத்திரிக்குப் போக முடியும். அத எடுத்து வெச்சாத்தேன் சைக்கிளக் கொடுப்பேன்''னு ஒரே போடா போட்டுச்சு. மறுபடியும் என்னயத் தூக்கிப்போட்டு மிதிக்க ஆரம்பிச்சவரு... ஒரு வழியா அம்பது ரூபா கொடுத்துட்டுத்தேன் சைக்கிள மீட்டார்.

சொந்தமா சைக்கிள் வெச்சுக்கக்கூட வழி இல்லாம அல்லாடின நானு, இன்னிக்கு சர்ருபுர்ருனு காருல போற அளவுக்கு வளந்திருக்கேன். அன்னிக்கு அந்த ஆத்தா மேல எனக்கு அம்புட்டுக் கோவம். ஆனா, 'வெற்றிக்கொடிகட்டு’னு ஒரு படத்துல நடிச்சப்ப, ''ஏ பாத்து ஓட்டு... எங்க கொண்டாந்து வுடுற எடுபட்ட பயலே''னு பொம்பள வேசத்துல இருக்குற நா, பார்த்திபனைப் பார்த்து ஒரு டயலாக் பேசுவேன். 'டைமிங்க்ல பின்றீங்களே’னு யூனிட்டே கைதட்டுச்சு. எனக்கும் ரொம்பப் பெருமையா போச்சு. அதுக்குக் காரணம், அந்தக் கீரக்கார ஆத்தாதேன்.

இந்த மாதிரி... மனுசப் பயலுக வாழ்க்கையில எத்தனையோ அவமானங்க வரும். தோல்விக தொரத்தும். பிரச்னைக பிய்ச்சுக்க வைக்கும். ஆனா, சில வருசங்கள் கழிச்சுப் பாத்தீகன்னா, ஒங்களுக்கே சிப்பு வந்திடும் சிப்பு.

சமீபத்துல மதுரையில இருந்து மொத்தச் சொந்தக்காரய்ங்களும் வீட்டுக்கு வந்திருந்தாய்ங்க. நா டி.வி. பாத்துக்கிட்டு இருந்தேன். செனாய் வாத்தியக் கலைஞரு ஒருத்தர், தலைமுடியே நட்டுக்கிட்டு நிக்குற மாதிரி உசுரக் கொடுத்து ஊதிக்கிட்டு இருந்தாரு. நா ரொம்ப ரசிச்சுப் பாத்துக்கிட்டு இருந்தேன். எங்க ஒறவுக்கார தாயி ஒருத்தவுக, அத ஊச்சுவனையா (ரொம்ப கவனிச்சு) பாத்தாக. ''யப்பா... போதுமப்பா... நல்லா ஊதுற ஒரேயடியா!’னு சொன்னாக பாருங்க... வயித்தையே கிழிச்சுவுட்ட கணக்கா எனக்கு சிரிப்புத் தாங்கல.  எந்த ஒரு விஷயத்தையும் கிராமத்துக்காரய்ங்க டீல் பண்ற விதமே வேற மாதிரிதான இருக்கு?! உசுரக் கொடுத்து ஊதுற ஒருத்தரை போற போக்குல அந்தம்மா கலாய்ச்சுட்டுப் போனாக. அன்னிக்கு முழுக்க அத நெனச்சே நா சிரிச்சுக்கிட்டு கெடந்தேன். சொந்தஞ்சொடுசுகளப் பாக்குறப்பதேன் இந்த மாதிரி மனசு விட்டுச் சிரிக்க முடியுது.

'என் மாமியா நாகம்மா மேல சத்தியம்!’னு ஒரு படத்துல செம சவுண்டு வுடுவேன். அந்த நாகம்மா கத தெரியுமா ஒங்களுக்கு?!

- நெறய்ய பேசுவோம்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு