Published:Updated:

இளமை இதோ...இதோ..!

இளமை இதோ...இதோ..!

உங்களை மெருகேற்றும் மேக்னெட் தொடர்

வயது நிர்ணய நிர்வாக நிபுணர் கௌசல்யா நாதன் 
படம்: பொன்.காசிராஜன்

'எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’

- இந்தக் கேள்வியை உங்களுக்குள்  திரும்பத் திரும்ப கேட்டுப் பாருங்கள்.

இளமையின் விசையை உணர ஆரம்பிப்பீர்கள். இதை உணர்ந்தால், பொலிவின் திசையைத் தேடி ஓடுவீர்கள்.  இவைதான் மேற்சொன்ன கேள்விக்குப் பதிலாக இருக்கும்!

இளமை இதோ...இதோ..!

'என்றும் 16’ என்பார்கள் அல்லவா! அந்த 16 வயதுதான், பொலிவின் எனர்ஜி லெவலை நம்முள் தொடங்கி வைக்கிறது. ஆம்... இதுதான் இளமை நம்மிடம் பிறக்கும் வயது. அதனாலேயே தான் அந்த வயதுக்கு பெருமை. ஆனால், அந்த இளமையை முறையாக வளர்த்தெடுக்கிறோமா?

சரி, எப்படி வளர்ப்பது?

ஆரோக்கியமே இளமைக்குச் சரியான உணவு. பள்ளிப் பருவத்தில் அறிவைச் சேகரிப்பதுபோல, பெண்கள் அந்தப் பருவ வயதில் இருந்தே ஆரோக்கியத்தையும் சேகரிக்கத் தொடங்க வேண்டும். ஹார்மோன், சருமம், கேசம் என உடம்பில் பல பொலிவு மாற்றங்கள் ஏற்படும் இந்த வயதில், அத்தகைய வளர்ச்சிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை தவறாமல் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் கட்டிக் காப்பாற்ற நினைக்கும் இளமைக்கு இயந்திரமாகச் செயல்படப் போகும் இந்தக் காரணிகளுக்கு, வலுவான, வளமான அஸ்திவாரம் அமைத்துக் கொடுப்பது, ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுகள்தான். முகத்தில் புதிதாகத் தோன்றும் பருக்களைப் பற்றிக் கவலைகொள்ளும் இந்த வய தில், 'இதைவிட மிக முக்கியம்... மொத்த உடம் புக்குமான சத்து' என்பதை உணர வேண்டும்.

அவரை, வெண்டை, புடலை, பீன்ஸ், முருங்கைக்காய் என பச்சை நிற காய்களை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. தினமும் ஏதாவது ஒரு ஃப்ரூட் ஜூஸ் சாப்பிடுவது அவ சியம். ஆப்பிள், கீரை, கோவைக்காய், பேரீச்சை போன்றவற்றில் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், இரும்புச் சத்து தேவையைப் பூர்த்தியடையும்.வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் குளியல்

இளமை இதோ...இதோ..!

என்பதையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். டீன் ஏஜ் பருவம் என்பது மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கக் கூடியது என்பதால், உடற்சூடு அதிகரிப்பதற்கான காரணிகள் நிறையவே இருக்கும். அதை எண்ணெய் குளியல் சமப்படுத்திவிடும்.

உடம்புக்கு அடுத்தபடியாக அழகாக்க வேண்டியது, மனது. 'உன் ஹேர்ஸ்டைல் சூப்பர்’, 'இந்த ரிங் உன் விரலுக்கு அவ்வளவு அழகா இருக்கு’ என்று ஒவ்வொரு அலங்காரத்தையும், மற்றவர்களின் பாராட்டை எதிர்பார்த்தே செய்துகொள்ளும் வயது இது. ஆனால், அத்தகைய எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறியுங்கள். காரணம், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே உண்மையான, தரமான ரசனை யாளர்கள் என்று சொல்வதற்கில்லையே! உண்மையற்ற, தரமற்ற விமர்சனங்கள் உங்கள் மனதைக் காயமாக்கிவிடக்கூடும்! மாறாக, 'இது எனக்கு அழகா இருக்கு, கண்ணியமா இருக்கு, வசதியாவும் இருக்கு!’ என்று உங்கள் மனதின் திருப்திக்கு, உங்களை அலங்கரித்துக் கொள்ளுங் கள். அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தத் தன்னம்பிக்கையைக் கொண்டாடுங்கள். அது தான் இளமையின் ஊற்று.

இந்தப் பருவத்தில்தான், மற்றவர்களைப் பார்த்து அலங்கரித்துக் கொள்ளும் ஆசையும் மனதெல்லாம் கொதித்துக் கிடக்கும். டி.வி-யில் பார்க்கும் சிவப்பழகு க்ரீம் விளம்பரத்தில் இருந்து, பக்கத்து வீட்டு காலேஜ் படிக்கும் அக்காவின் சுடிதார் மாடல் வரை, அத்தனையையும் தானும் செய்து பார்க்கத் துடிக்கும். அப்படி அலைபாயும் மனதை கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். அதை எல்லாம் முயற்சிப்பதற்கான வயது இதுவல்ல. 'அதற்கான வயது வரும்போதும், நாமும் ஐப்ரோ டிரிம் செய்து, நெயில் ஷேப் செய்து கொள்ளலாம். இப்போது அதற்குச் செலவழிக்கும் நேரத்தில் கெமிஸ்ட்ரியில் இரண்டு பாடங்கள் முடித்துவிடலாம்' என்கிற புரிதலை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இனிக்க பேசுவது, கோபத்தைக் குறைப்பது, நெகட்டிவ் எண்ணங்களை அப்புறப்படுத்துவது... இதெல்லாம்தான் இந்தப் பருவத்தில் நம்மை அழகாக்கிக் கொள்ளும் வழிகள்.

இப்போது மனதில் ஓட்டிப் பாருங்கள்... ஊட்டச்சத்து உணவு, மிளிரும் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, பக்குவம், இவற்றுடன் புதிதாகப் பிறந்திருக்கும் இளமை... இதை எல்லாம் அணிந்திருக்கும் பருவப்பெண்ணைவிட, யார் இந்த உலகில் அழகு?

இந்த ஆரோக்கிய அஸ்திவாரம்தான், ஆயுள் முழுவதும் அழகு சுரக்க வைக்கும் மந்திரம்!

- இளமை வளரும்...

அடுத்த கட்டுரைக்கு