சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

திருமண வரம் தரும் அபிராமி அம்பாள்!

திருமண வரம் தரும்  அபிராமி அம்பாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருமண வரம் தரும் அபிராமி அம்பாள்!

கோவில்

திருமணம் தாமதமாகும் பெண்களுக்கு சீக்கிரமே வரன் தகையவைக்கிறாள்; திருமணம் நிச்சயமானவர்களின் வேண்டுதலின்படி, தங்கு தடை யின்றி அவர்களின் திரு மணத்தை நடத்தி முடிக்கிறாள்... கீழையூர் அபிராமி அம்பாள்!

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடு துறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் அமைந்துள்ளது, இந்தத் திருமண வரம் தரும் தலம். அதைப் பற்றிய தலவரலாற்றைச் சொன்னார், கோயில் குருக்கள் சந்தானம்...

திருமண வரம் தரும்  அபிராமி அம்பாள்!
திருமண வரம் தரும்  அபிராமி அம்பாள்!

திருத்தல வரலாறு

சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா, அதிலிருந்து மீள மண்ணுலகில் உள்ள திருக்கடைமுடி எனும் இத்தலத்தின் (இது கீழையூரின் புராணப்பெயர்) சிறப்பினை உணர்ந்து, இவ்வூரில் கர்ணா தீர்த்தம் என்றொரு தீர்த்தத்தையும் லிங்கத்தையும் உருவாக்கி வழிபாடு செய்துவந்தார். அவருடைய வேண்டுதலுக்குச்

திருமண வரம் தரும்  அபிராமி அம்பாள்!

செவிசாய்த்த சிவபெருமான், அங்கிருந்த கிளுவை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாகக் காட்சிகொடுத்தார். அதனால், அந்தப் பிராகாரத்தில் அருள்பாலிக்கும் ஆதிநாதருக்கு ‘கிளுவை நாதர்’ எனும் திருநாமம் அமையப்பெற்றது. பின்னர் பிரம்மாவின் பக்திக்கு இணங்கி, சிவனார் இங்கேயே தன் உமையாளுடன் காட்சிகொடுத்து அருளினார். இப்படி சாபத்தால் அழிவின் நிலைக்குச் சென்ற பிரம்மனே சிவனைப்பற்றி வழிபட்டதால், இங்குள்ள சிவனாருக்கு இறுதிக்காலத்தில் காப்பாற்றுபவர் எனும் பொருள்கொண்ட ‘கடைமுடிநாதர்’ எனும் திருநாமம் வாய்க்கப்பெற்றது. இங்கு வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம், அபிராமி. இத்திருத்தலத்துக்கு அருகிலேயே மேற்கிலிருந்து வடக்கு நோக்கி காவிரி செல்வதால் கங்கைக்கு இணையான திருத்தலமாக அமைகிறது இக்கோயில்.

16 பேறுகள் கிட்டும்!

இந்த ஆலயத்தின் மூலவரான கடைமுடிநாதர், 16 பட்டைகளுடன் ஷோடஷ லிங்கமாக மேற்குநோக்கி அழகுடன் காட்சியளிக்கிறார். இத்தகைய தரிசனத்தைக்கண்டு வணங்கினால் 16 பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிராகாரத்தில் இருக்கும் நவகிரகங்கள் வரிசையாக இல்லாமல் மாறி முன்னும் பின்னுமாக காட்சி கொடுப்பதும் எங்குமில்லாத சிறப்பு!

திருமண வரம் தரும்  அபிராமி அம்பாள்!

திருமணம் வரம் தரும் அபிராமி!

திருமணமாகாத கன்னிப்பெண்கள், மஞ்சள் கயிறு  ஒன்றை இங்கிருக்கும் அம்பாளின் பொற்பாதங்களில் வைத்து வணங்கி, வீட்டில் 48 நாட்கள் வைத்து  பூஜை செய்து வழிபட வேண்டும். அந்த நாட்களுக்குள் அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அவ்வாறு வரன் அமைந்த கன்னிப்பெண்கள் தாங்கள் வழிபட்ட மஞ்சள் கயிற்றை  கோயிலுக்குக் கொண்டுவந்து, அபிராமி அம்பாளிடம் சமர்ப்பித்து, தங்கள் திருமணம் தடையின்றி நடக்க வேண்டும் என வேண்டிச் செல்வர். அதேபோல அம்பாளும் சீரும் சிறப்புமாக அவர்கள் முகூர்த்தத்தை முடித்துவைப்பாள். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆலயத்தில் அபிராமி அம்பாளுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வேண்டுதல் நிறைவேறிய பெண்களின் திருமணத்தையும், வளைகாப்பையும் இந்த ஆலயத்திலேயே நடத்தும் பக்த குடும்பங்கள் பலர்!’’ என்றார் குருக்கள் பரவசத்துடன்.

திருமண வரம் தரும்  அபிராமி அம்பாள்!

இத்திருக்கோயிலுக்கு வந்து தன் மகளின் திருமண வேண்டுதல் நிறைவேறிய சேகர் கூறும்போது, ‘‘எனக்கு இரண்டு பொண்ணுங்க. மூத்த பொண்ணுக்கு வரன் அமையுறது தள்ளிப்போயிட்டே இருந்தது. நாங்க வாராவாரம் வியாழக்கிழமை எங்க மகளை இங்க அழைச்சுட்டு வந்து அபிராமி அம்பாளை வேண்டிக்கிட்டோம். குருக்கள் சொன்னமாதிரி அம்பாள் பாதத்தில் வைத்த மஞ்சள் கயிற்றை வீட்டுக்குக் கொண்டுபோய், பூஜை அறையில் வைத்து வழிபாடு பண்ணினோம். ஒரே மாசத்துல என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைஞ்சது. கொஞ்சநாள்லயே கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது. அடுத்த ஆறாவது மாசத்துல என் ரெண்டாவது பொண்ணு கல்யாணமும் முடிஞ்சிருச்சு. இப்போ ரெண்டு பொண்ணுங்களும் எங்களைத் தாத்தா, பாட்டி ஆக்கிட்டாங்க!’’ என்றார் அளவில்லாத சந்தோஷத்துடன்!

தாலிவரம் தருபவளை தரிசித்து வருவோம்!

- ம.மாரிமுத்து

படங்கள்: க.சதீஷ்குமார்