சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

ட்ரெண்டி, ஸ்டைலிஷ் வெடிங் கார்ட்ஸ்!

ட்ரெண்டி, ஸ்டைலிஷ்  வெடிங் கார்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரெண்டி, ஸ்டைலிஷ் வெடிங் கார்ட்ஸ்!

இன்விடேஷன்

திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது வேண்டுமானால் சொர்க்கத்தில் இருக்கலாம். ஆனால், திருமணங்களுக்கு நண்பர்களை அழைப்பது தொடங்கி `தீம்டு’ திருமணங்கள் ஏற்பாடு செய்வது வரை எல்லாமே இன்று வாட்ஸ்அப், பேஸ்புக் ஸ்டைல்தான். குறிப்பாக, திருமணத்துக்கும் இல்லற வாழ்க்கைக்கும் பிள்ளையார் சுழி போடும் கல்யாண பத்திரிகைகளை ட்ரெண்டியாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர், இன்றைய தலைமுறையினர்.

அப்படி புதுமையாக என்னென்ன மாடல்களில் திருமணப் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்பதை அறிய ஒரு ரவுண்ட் வந்தோம். அந்த லிஸ்ட்டில் டாப் ஹிட்ஸ் சில...

ட்ரெண்டி, ஸ்டைலிஷ்  வெடிங் கார்ட்ஸ்!

வாட்ஸ்அப் கார்டு

தங்கள் திருமண செய்தியை ஸ்டேட்டஸாக போட்டு நிச்சயதார்த்த படத்தை புரொஃபைல் படமாக மாற்றி, `லைப் டைம் வேலிடிட்டியோடு’ வாட்ஸ்அப் மாடலில் நண்பர்களை செல்லமாக அழைக்க பெஸ்ட் சாய்ஸ் இந்த வாட்ஸ்அப் கார்டு. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பின் அத்தனை அம்சங்களையும் பயன்படுத்தி திருமணத்தை குறித்த தகவல்களோடு புதுமையாக இருக்கும் இந்த மாடல் பலரது விருப்பமாக இருக்கிறது.

விலை : Single card, both side printed -  ரூ 2,700 (100 cards)

பாஸ்போர்ட் மாடல்

தங்கள் வாழ்கைப் பயணம்  இனிதே தொடங்க ஆரம்பமாயிருக்கும் திருமணத்துக்கு நம்மையும் விமானப் பயணம் செய்யும் விருந்தினர்களாக பாவித்து வரவேற்கிறது  பாஸ்போர்ட்  ஸ்டைல் பத்திரிகை. ஒவ்வொரு பத்திரிகையிலும் தனித்தனியாக நம் விருந்தாளிகளின் பெயரையும் அச்சடித்துக்கொள்ளலாம். அசல் பாஸ்போர்ட் விசா போலவே இருக்கும் இது ஸீட் நம்பரோடு ராயலாக `ஸ்பெஷல் பேசஞ்சர்’ அந்தஸ்தோடு உங்களை திருமணத்துக்கு அழைத்து அசத்துகிறது!

விலை: ரூ 5,000 (100 cards minimum)

கிரிக்கெட் கார்டு

சென்னை சூப்பர் கிங்க்ஸும் மும்பை இந்தியன்ஸும் ஒன்றானால்...? ஆம்... கிரிகெட் சேனல் ஸ்டைலில் வடிவமைக்கபட்டு ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பது போலவே அசரடிக்குது இந்த மாடல். இரண்டு அணிகள் போட்டியில் மோதுவது போல் தேதி, நேரம் கூறி சேனலில் அறிவிக்கும் ஸ்க்ரீன்ஷாட் மாடலில் இந்த கிரிக்கெட் கார்டும் மாப்பிள்ளைகள் பலரின் பேவரைட்டாம்.

விலை: ரூ 5,000 (100 Cards)

ஃபேஸ்புக் மாடல்

ஃபேஸ்புக்கின் முகப்பில் கேட்கும் யூசர் நேம், பாஸ்வோர்டிலே மணமக்கள் அறிமுகமாகிறார்கள். நேரம், இடமும்கூட ஃபேஸ்புக் ஐகானிலே சொல்லப்படுகிறது. வாழ்வின் அன்றாடங்களில் ஒன்றாகிவிட்ட முகநூலில் ஒரு ஈவென்ட் உருவாக்குவது போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஃபேஸ்புக் பத்திரிகைக்கும் இளசுகள் மத்தியில் அள்ளுது லைக்ஸ்.

விலை: ரூ 4,000 (100 cards)

சாக்லேட் பத்திரிகை

`ஸ்வீட் எடு கொண்டாடு’ பாணியில் தங்கள் திருமணத்தைக் கொண்டாடுபவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல் உள்ளது இந்த சாக்லேட் பத்திரிக்கை. டைரி மில்க் சாக்லேட் போலவே இருக்கும் இதில் சாக்லேட் இருக்கும் என நினைத்து பிரித்தால் உள்ளே இருப்பது என்னவோ `உறவினர்கள், நண்பர்களின் அன்பாலும் அக்கறையாலும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட’ திருமணத்தின் அழைப்பிதழ். யாரேனும் சாக்லேட் போலவே ஏதாவது கொடுத்தால், அடுத்த தடவை உஷாராக பிரித்துப் பாருங்கள் பாஸ்!

விலை: ரூ 2,800 - 3,500 (100 cards)

இ-மெயில் பத்திரிகை

`சப்ஜெக்ட் - திருமணம், அனுப்புநர்- மணமக்கள், பெறுநர்- விருந்தாளிகள்’ என கார்ப்பரேட் கலாசாரத்தில் அசத்தி அழைக்கிறது இ-மெயில் பத்திரிகை. கடிதம் எழுதி உறவினர்களுக்கு அனுப்புவது போல பெர்சனலைஸ்டாக உங்கள் செய்தியைக்கூட பத்திரிகையில் போட்டுக் கொள்ளலாம். இந்த மாதிரியான ஸ்டைலில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்... அந்தக் காலத்தில் அடிக்கும் மஞ்சள் நிற பத்திரிகைகள் போல் காலம், நேரம், மணமக்கள் பெயர் இவற்றை மட்டும்தான் அச்சிட வேண்டும் என்றில்லாமல், மணமக்கள் மேலும் கூற விரும்புவற்றை பத்தி பத்தியாகக்கூட பிரின்ட் அடித்துக்கொள்ளலாம் என்பது!

விலை: ரூ 4,000 (100 cards)

மேப் பத்திரிகை

பத்திரிகைகளில் கூகுள் மேப் பாணியில் மண்டபம் அமைந்திருக்கும் இடத்தைச் சுட்டி காட்டி அழைப்பது இன்னொரு சூப்பர் ஸ்டைல். செம ஐடியாவாக இருப்பது மட்டுமில்லாமல், யாரும் வழி தெரியாமல் தடுமாறாமல் இருப்பதற்கும் உதவியாகிறது

விலை: ரூ 4,000 (100 cards).

கதை சொல்லும் பத்திரிகைகள்

“இவர போய் அரவிந்த் சாமி மாறி இருக்கார்னு சொல்றாங்க பாருங்களேன். ஐயோ, ஒருவேள நான் ஏமாந்துதான் போய்ட்டேனோ!”

“இதோ சொல்லிடாங்க பாருங்க உலக அழகி!”

- இப்படி கான்வர்சேஷன் ஸ்டைலில் மாப்பிள்ளையும் பொண்ணும் தங்கள் கதைகளையும், கலாய்களையும் ஊருக்கு சொல்வதும் ஒரு புது ஸ்டைல். மாறி மாறி பரஸ்பரம் கலாய்த்துக்கொண்டு, இறுதியில் தங்கள் காதலை அனைவருக்கும் சொல்லி தங்கள் திருமணத்துக்கு அழைத்து முடித்துவிடுகின்றனர். காமிக் ஸ்டைலில் வடிவமைக்கப்படும் இந்தப் பத்திரிகைகளும் இன்று லிஸ்ட்டில் டாப்பாக உள்ளன.

விலை: ரூ 4,000 (100 cards)

- கோ.இராகவிஜயா, பி.நிர்மல்

படங்கள்: க.பாலாஜி

உதவி: ஒலிம்பிக் கார்ட்ஸ் லிமிடெட்,

பாரிமுனை, சென்னை