சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

கலகல பெங்காலி கல்யாணம்!

பெங்காலி வெடிங்

பெங்காலி பெண்கள்... இயல்பிலேயே அழகு! அதுவும் திருமண நாளில் நெற்றியில் பெரிய பொட்டு, வண்ணப் பட்டு, கைநிறைய வளையல் என்று வந்து நிற்கும்போது அவர்கள் அழகை என்னவென்று சொல்வது! அப்படி ஒரு சூப்பர் பெங்காலி வெடிங் வைபவத்தை நமக்காக விவரிக்கிறார், வங்காளத்தைச் சேர்ந்த ரிமா.

‘‘பொதுவாக பெங்காலி திருமணங்கள் எல்லாமே மாலையில்தான் நடக்கும். புதுவாழ்க்கையில் தடம் பதிக்கும் மணமக்கள் விடியலில் இருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நேர முகூர்த்தம்.

கலகல பெங்காலி கல்யாணம்!

திருமணத்துக்கு முன்! 

திருமணத்தின் முதல் நிகழ்வு, ‘ஐ புரோ பாத்’ என்ற விருந்து. பெண்ணின் உறவினர்கள் அனைவரும் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தங்கள் வீட்டுக்குப் பெண்ணுக்குப் பிடித்ததை சமைத்துப்போட ஆரம்பிப்பார்கள். அதன் நிறைவாக, மாலை திருமணம் என்றால், அந்த முகூர்த்த நாளின் காலையில் தன் மகளுக்குப் பிடித்த பருப்பு, காய்கறிகள், அசைவ உணவு, இனிப்பு என அனைத்தையும் பிறந்தவீட்டார் சமைத்துப்போட்டு சாப்பிடவைப்பதுதான், ‘ஐ புரோ பாத்’.
          
அடுத்ததாக, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டினரின் முன்னோர்களுக்கு அவர்களுக்கு இஷ்டமானதை வைத்துப் படைத்து, மணமக்களை வாழ்த்துமாறு வேண்டுதல் நடத்தும் மதிய விருந்து. இந்த வழிபாட்டின் பெயர், ‘நந்தி முக்’.

மணப்பெண்ணுக்கு மஞ்சள் குளியல்!

கலகல பெங்காலி கல்யாணம்!விருந்து முடிந்தாயிற்று. அடுத்து..? கல்யாணச் சேட்டை ஆரம்பம். சாப்பிட்டுத் தெம்பாக இருக்கும் மணப்பெண்ணை அழைத்துவந்து, அவளுக்கு, அவளுடைய சுமங்கலி உறவுப் பெண்கள் இணைந்து, உச்சி முதல் உள்ளங்கால் வரை மஞ்சள் பூசிக் குளிப்பாட்டுவார்கள். மங்களகரமான இந்த ‘கயா ஹோலுட்’ சடங்கின் சிறப்பம்சம், பெண்ணின் மீது பூசப்படும் இந்த மஞ்சள், அவள் கைப்பிடிக்கப் போகும் கணவனின் உடலில் பூசியதன் மிச்சம். ஆம், மணமக்களின் முதல் ஸ்பரிசம் இப்படி மங்களகரமாக அமைய, பையன் மீது பூசிய மிச்ச மஞ்சளை பெண் வீட்டுக்குத் தந்தனுப்புவார்கள் மாப்பிள்ளை வீட்டினர்.

மாப்பிள்ளைஅழைப்பு!

பெங்காலி திருமணங்கள் பெண் வீட்டினரால் நடத்தப்படுவதால், மாப்பிள்ளையை இவர்கள்தான் அழைத்துவர வேண்டும். மாப்பிள்ளையை அழைக்க மணமகள் வீட்டின் சார்பாக வயதான ஓர் ஆண் செல்ல, தன் வீட்டின் வயதான ஓர் ஆண், மற்றும் மாப்பிள்ளைபோல ஜோடிக்கப்பட்ட தன் குடும்பத்து வாண்டு ஒன்றையும் அழைத்துக்கொண்டு, மாப்பிள்ளை கிளம்புவார் மண்டபத்துக்கு.

கலகல பெங்காலி கல்யாணம்!

செருப்பை ஒளித்துத் திருமணம்!

‘ஜோதா சோர்’ எனும் பெங்காலி திருமண நிகழ்வு, ரொம்பவே சுவாரஸ்யம். வழக்கப்படி பெண் வீட்டினர் வாங்கித் தந்த செருப்பை அணிந்துதான் மாப்பிள்ளை மணமேடை ஏறவேண்டும். ஆனால், அந்தச் செருப்பை பெண் வீட்டுக்காரர்கள் நைஸாகத் திருடிவிடுவார்கள். அதைத் திரும்ப வாங்க, மாப்பிள்ளை பெண் வீட்டினரிடம் பேரம் பேசவேண்டும். பேரம் என்ற பெயரில் கல்யாணப் பையன் செய்யும் கொஞ்சலும் கெஞ்சலும், அழகு!

மரப்பல்லக்கில் பெண்!

மணமகன் செருப்புப் பேரம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், பையன் வீட்டில் இருந்து தரப்பட்ட நகைகளை அணிந்து மணப்பெண் மரப்பல்லக்கில் அமர, அவள் சகோதரர்கள் அவளை மண்டபத்துக்குத் தூக்கி வருவார்கள். வந்ததும் மாப்பிள்ளையும் பெண்ணும் பார்த்துக்கொள்ள முடியாது. மணமகள் தன் முகத்தை இரண்டு வெற்றிலைகளால் மறைத்துக் கொள்ள வேண்டும். அப்படியே மனைப்பலகையில் உள்ள தன் வருங்காலக் கணவனை ஏழு முறை சுற்றிவர வேண்டும்.

கலகல பெங்காலி கல்யாணம்!

முகூர்த்தம்!

மாப்பிள்ளை, பெண்ணின் முகத்தை மறைத்திருக்கும் வெற்றிலையை விலக்க, இருவரின் கண்களும் முதன் முதலில் மணவறையில் சந்தித்துக்கொள்ளும் அழகிய தருணம், ‘ஷுபோதிரிஷ்’. அடுத்ததாக டும் டும் டும். மாப்பிள்ளை, பெண்ணின் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்ட அந்த நொடியே, இருவரும் சம்பிரதாயப்படி ஒன்றாகிவிடுகிறார்கள். பின்னர் மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ள, பையனுடைய தலைப்பாகைக்கும் பெண்ணின் முந்தானைக்கும் முடிச்சிட, ஒருவர் கையை ஒருவர் பிடித்து அக்னியை ஏழு முறை வலம் வருகிறார்கள்.

ஆட்டம் பாட்டம்!

திருமண வைபவங்கள் முடிய, அடுத்தது ‘பாஷ்ஹோர்கார்’. அதாவது, ரிசப்ஷன். புதுமணத் தம்பதிக்கு இடையே இணக்கத்தை இன்னும் அதிகரிக்கும் இந்நிகழ்வு, இளைய தலைமுறைக்கான சந்தோஷக் களமும்கூட. ஆட்டம் பாட்டமென அட்டகாசமாகக் கழியும் இரவு.

கலகல பெங்காலி கல்யாணம்!

ஆரத்தி!

மாறுநாள் காலை, தன் புது மனைவியை, கணவன் தன் வீட்டுக்கு அழைத்துச்செல்லும் சம்பிரதாயம், ‘விதாய்’. மாப்பிள்ளையின் அம்மா தன் மருமகளின் வரவுக்காக வீட்டு வாசலிலேயே கையில் தண்ணீருடன் காத்திருப்பார். மணப்பெண் வந்ததும், அவள் வந்த வண்டியின் சக்கரங்களை அந்தத் தண்ணீரால் கழுவுவார். அனைத்துத் துன்பங்களும் கரைந்துபோக, தங்கள் வீட்டு லட்சுமியை வரவேற்பதாக அர்த்தம்.

உள்ளே தரைமுழுக்க வெள்ளைத் துணி விரிக்கப்பட்டிருக்க, நிலைவாசல் அருகே உள்ள சொம்பில் இருக்கும் அரிசியை மணப்பெண் தன் வலது காலால் தட்டிவிட வேண்டும். இதில் ஒரு அரிசிகூட வீட்டுக்கு வெளியே சென்றுவிடக்கூடாது. தன் புகுந்தவீட்டு ரகசியங்களை அதேபோல வெளியே சென்றுவிடாமல் மணப்பெண் காப்பதற்கான குறியீடு இது. பின் இடது காலை சிவப்புநிறச் சாயத்தில் வைக்கும் மணமகள், தொடர்ந்து வலது காலையும் வைத்து, விரித்த வெள்ளைத்துணியில் நடப்பாள். அந்த சிவப்புப் பாதங்கள் பதிந்த வெள்ளைத் துணியை, அவ்வீட்டின் ‘லஷ்மி பாதமா’க காலாகாலத்துக்கும் பாதுகாத்து வைப்பார்கள்!’’

- க.தனலட்சுமி, த.நந்திதா

படம்: அமர் ரமேஷ் போட்டோகிராஃபி